ஆனந்த லஹரி - 11 & 12



சதுர்ப்பி: ஸ்ரீகண்டை: சிவ யுவதிபி: பஞ்சபிரபி
ப்ரபின்னாபி: சம்போர்-நவபிரபி மூலப்ரக்ருதிபி:
சதுச்சத்வாரிம்சத்-வஸுதல-கலாச்ர-த்ரிவலய
த்ரிரேகாபி: சார்த்தம் தவ சரணகோணா: பரிணதா:


பல தெய்வங்களுக்கும் யந்த்ரங்கள் உள்ளது, உதாரணமாக சுதர்ஸன யந்த்ரம், சிவசக்ரம், ஷடாக்ஷர யந்த்ரம் என்றெல்லாம் பெயர் இருக்கிறது. ஆனால் அன்னையின் யந்த்ரத்திற்கோ ஸ்ரீ என்ற அடைமொழி மட்டுமே. யந்த்ரம் என்றாலே அது ஸ்ரீ யந்த்ரம் தான் என்பதால் அதனை லலிதா சக்ரம் என்றோ இல்லை மாஹா த்ரிபுரசுந்தரி சக்ரம் என்றோ பெயரில்லை. மற்ற யந்த்ரங்களெல்லாம் அந்த தெய்வங்களின் சக்தியினை பெருக்கும்ஸ்தானங்களாக இருக்க, சக்ரராஜம் எனப்படும் ஸ்ரீசக்ரமோ பராம்பிகையின் வாசஸ்தலம் மட்டுமல்லாது அதுவே அன்னையாக போற்றப்படுகிறது.

இதுபோல் அன்னையின் வழிபாடுமுறை/ தந்த்ரத்திற்கும் ஸ்ரீவித்யை என்றே பெயர். உபாசனாமுறை அல்லது தந்த்ரம் என்பதையே "வித்யை" என்ற சொல் குறிக்கிறது. மற்ற தெய்வங்களுடையதை சொல்லும்போது அத்தெய்வத்தின் பெயருடன் சேர்த்து வித்யை என்றுசொல்வோம் ஆனால் ஸ்ரீவித்யை என்பதில் ஸ்ரீ என்ற சொல் ஸ்ரீதேவி எனப்படும் அன்னை மஹாலக்ஷ்மியை குறிப்பதில்லை, அது லலிதா த்ரிபுர ஸுந்தரியின் வித்யை என்றே பொருள் கொள்ளப்படுகிறது. இந்த ஸ்ரீவித்யையில் சில-பல வித்யாசங்களுடன் பல விதமானமந்த்ரங்கள் இருக்கிறது. அந்த வித்யாசங்களை காட்டும்படி அதன் ப்ரவர்த்தக/உபதேசித்த ரிஷிகளின் பெயர் சேர்த்து லோபாமுத்ரா வித்யா,துர்வாச வித்யா என்றும், மந்த்ரத்தின் முதலெழுத்தை வைத்து காதிவித்யா, ஹாதிவித்யா என்றும் கூறப்படுகிறது.

பரந்தாமனுக்கு பாற்கடல், சிவனுக்கு கயிலாயம், சரி அன்னையின் இடம்?, அதன் பெயர் ஸ்ரீபுரம். அவளுடைய ராஜ்ய ப்ரதேசத்திற்கும்தனி பெயர் கிடையாது. புரம், நகரம் என்றால் ஊர் என்று அர்த்தம். ஸ்ரீநகரம், ஸ்ரீபுரம் என்றால் அது ஜகஜெனனியான லலிதையின் தலைநகரையே குறிக்கும். அதனால்தான் அழியாத ஆத்மானந்தத்தை தரும் அன்னையை "ஸ்ரீ மாதா" என்கிறார்கள் சஹஸ்ர நாமத்தில்.

சதுர்ப்பி: - சதுர் என்றால் நான்கு; ஸ்ரீகண்டை: - சிவ சக்ரங்கள். அதாவது சிவசக்ரமான நான்கும், (பஞ்சபிரபி) - பஞ்ச - ஐந்து சக்தி சக்ரங்களும் சேர்ந்து ஒன்பதாக உள்ள பிரபஞ்சத்தின் (மூலப்ரக்ருதிபி:) மூலகாரணமான தத்வங்களுடன் கூடிய உன் இருப்பிடமான ஸ்ரீயந்த்ரம், எட்டுதளம் (வஸீதல), பதினாறு தளம் (கலாச்ர), மூன்று வட்டங்கள் (த்ரிவலய), மூன்று கோடுகள் (த்ரி-ரோகாபி:) ஆகியவற்றுடன் (சார்த்தம்) கூடி பரிணமிக்கும் (பரிணத) நாற்பத்து நான்காக (சது: சத்வாரிம்சத்) இருக்கிறது.
இந்த ஸ்லோகம் முழுவதும் ஸ்ரீசக்ரத்தின் ரூப விளக்கமே. இதற்கும் மேலாக யாருக்கேனும் தகவல் வேண்டியிருப்பின் தெரிந்தவற்றை தனி மின்னஞ்சலில் தருகிறேன்.




த்வீதீயம் ஸெளந்தர்யம் துஹினகிரிகன்யே துலயிதும்
கவீந்த்ரா: கல்பந்தே கதமபி விருஞ்சி-ப்ரப்ருதய:
யதாலோகெளத்ஸீக்யா அமரலலனா யாந்தி மனஸா
தபோபிர்-துஷ்ப்ராபாமபி கிரிச-ஸாயுஜ்யபதவீம்.

பனிமலையரசன் கன்னிகையே/மகளே! உன் அழகை வர்ணிப்பதற்கு பிரம்மன் முதலான மஹாகவிகளாலும் இயலாது. ரம்பை, ஊர்வசி முதலிய தேவதைகள் உன் அழகை பார்க்க வேண்டுமென்ற ஆவலால், விரதங்களைஅனுஷ்டித்து, சிவஸாயுஜ்யத்தை மனத்தால் அடைகின்றனர். ஏன் சிவ சாயுஜ்யத்தை அடைகிறார்கள் என்றால், அவர்கள் சாயுஜ்யத்தின் மூலம் சிவனில் கலந்து, சிவன் மூலமாக அன்னையின் அழகினை காண முயல்கிறார்களாம்.

அமரலலனா - தேவ ஸ்தீரிகள் ; யதாலோகெளத்ஸீக்யா - யத் ஆலோக ஓளத்ஸுக்யாத் - எந்த செளந்தர்யத்தை காணும் ஆசையால்;தபோபி: துஷ்ப்ராபாமபி - எவ்வளவு தவம் செய்தாலும் கிடைக்கப் பெறாதது; கவீந்த்ரா - கவி ஸ்ரேஷ்டர்கள்; கல்பந்தே - கற்பனையில்; கதமபி - எப்படியெல்லாமோ.

ஆனந்த லஹரி - 9 & 10


மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹீதவஹம்
ஸ்த்திதம் ஸ்வாதிஷ்ட்டானே ஹ்ருதி மருத-மாகாச-முபரி
மனோஸ்பி ப்ருமத்யே ஸகலமபி பித்வா குலபதம்
ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே


தாயே, மூலாதாரத்திலிருக்கும் பூமி தத்துவத்தையும், மணிபூரகத்திலுள்ள ஜலதத்துவத்தையும். அநாகத சக்ரத்திலுள்ள வாயுதத்துவத்தையும், விசுத்தி சக்ரத்திலுள்ள ஆகாச தத்துவத்தையும் புருவங்களிடையே ஆஜ்ஞாசக்ரத்தில் உள்ள மனஸ் தத்துவத்தையும் பிளந்து கொண்டுபோய்,மேலே ஆயிரம் தளங்களுள்ள ஸஹஸ்ராரமென்னும் தாமரை மலரில் நீ உன் கணவனுடன் வீற்றிருக்கிறாய்.

மூலாதாரே - முலாதாரத்தில்; மஹிம் - பிருதிவி தத்துவம்; மணிபூரே - மணிபூரத்தில் ஜலதத்துவத்தையும்; ஸ்வாதிஷ்டானே - ஸ்வாதிஷ்டானத்தில்இருக்கும் ஹிதவஹம் - அக்னி தத்துவத்தையும் ஹ்ருதி - ஹ்ருதயத்தில் இருக்கும் அனாகதத்தில் வாயுவையும், மேலே விசுக்தியில் ஆகாசத்தையும்,(ப்ருமத்யே) புருவமத்தியில் ஆக்ஞையில் மனஸ்ஸும் ஆக எல்லாச் சக்ரங்களையும் பித்வா - ஊடுருவிச் சென்று ஸஹஸ்ராரே பத்மம் எனப்படும் கமலத்தில் (பத்யா ஸ்ஹ) உனது பதியுடன் (விஹரஸமாக) கூடியிருக்கிறாய்.

ஸீதா-தாராஸாரைச் சரணயுகலாந்தர்-விகலிதை:
ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புனரபி ரஸாம்னாய-மஹ்ஸ:
அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகநிப-மத்த்யுஷ்ட-வலயம்
ஸ்வமாத்மானம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி
தாயே, உன் திருவடிகளிலிருந்து பெருகுகின்ற அமிர்தத்தின் பிரவாகத்தால், உடலிலுள்ள எழுபத்திரண்டாயிரம் நாடிகளை நனைக்கிறாய். பிறகுசந்திர மண்டலத்திலிருந்து உன் இருப்பிடமான ஆதார சக்ரத்தை அடைந்து தன் உருவத்தைச் சர்ப்பம் போல வட்டமாக அமைத்துக் கொண்டு சிறிய துவாரமுள்ளதும், தாமரைக் கிழங்கு போன்றதுமான மூலாதார சக்ரத்தில் யோக நித்திரையில் அமர்ந்திருக்கிறாய்.
(சரண-யுகள-அந்தர்-விகலிதை:) திருவடிகளிரண்டின் வழியே பெருகும் (ஸீதா-
தாரா-ஆஸாரை:) அம்ருத தாரையின் பிரவாகத்தால் (ப்ரபஞ்சம்)
ஐம்பூதங்களால் ஆன உடலில்லுள்ள நாடிகள் எல்லாவற்றையும் (ஸிஞ்சந்தி) நனைப்பவளாய் (ரஸ-ஆம்னாய-மஹஸ்:) அம்ருத கிரணங்களைப்
பொழியும் சந்த்ர மண்டலத்தில் இருந்து (ஸ்வாம்) உனது (பூமிம்) இயற்கையான இருப்பிடமாகிய மூலாதாரத்தி (புன: அபி) மறுபடியும் அடைந்து(புஜக-நிபம்) பாம்பைப் போல் (ஸ்வபிஷி) உறங்குகிறாய்; ஸ்வம் - உன்னுடைய; அத்யுஷ்ட-வலயம் - குண்டலவடிவு

ஆனந்த லஹரி - 7 & 8




க்வணத் காஞ்சி-தாமா கரிகலப-கும்ப-ஸ்தன-நதா

பரிக்ஷீணா மத்த்யே பரிணத-சரச்சந்த்ர-வதனா

தனுர் பாணாந் பாசம் ஸ்ருணி-மபி ததானா கரதலை:

புரஸ்தா-தாஸ்தாம் ந: புரமதிது-ராஹோ-புரிஷிகா


அன்னை சிறிய மணிகள் ஒலிக்கும் ஒட்டியாணத்தை அணிந்தவள்; யானையின் மத்தகம் போன்ற பெருத்த ஸ்தனங்களால் சற்று வளைந்தவள்;சிறிய இடையுடையவள்; சரத்காலத்துப் பூர்ணசந்திரன் போன்ற திருமுகமுள்ளவள்; வில், பாணம், பாசக்கயிறு, அங்குசம் ஆகியவற்றை தரித்தவள்;இத்தகைய, சிவ-சக்தி ஸ்வரூபியான பரதேவதை எங்கள் எதிரில் நின்று காட்சியளிக்கட்டும். மணிபூரகச் சக்ரத்தில் தேவி எப்படி பிரகாசிக்கிறாளோ அது இங்கே வர்ணிக்கப்படுகிறது.


க்வணத் சலங்கைகள் கிலுகிலுக்கும் (காஞ்சி தாமா) தங்க ஒட்டியாணம் பூண்டவளும் (கரி-கலப-கும்ப) யானையின் மஸ்தகம் போன்ற (ஸ்தன-நதா)ஸ்தனங்களால் சற்று வளைந்த உருவுடன், மத்த்யே - இடையில் (பரீக்ஷிணா) மெலிந்த; சரத்-சந்த்ரவதனா - சரத்கால பூர்ண சந்திரனையொட்டிய முகம்; கரதலை: - கரங்களால்; தனுர் பாணாந் பாசம் ஸ்ருணி-மபி - கரும்புவில் புஷ்ப பாணம், பாசம், அங்குசம் ஆகியவை; ததானா - தரித்த; புரமதிது: - முப்புரத்தை எரித்த சிவன்; ஆஹோ-புருஷிகா ஆச்சரியமான குணமுடைய பராசக்தி (ந:) எங்கள் (புரஸ்தாத்) எதிரில் (ஆஸ்தாம்) எழுந்தருளட்டும்.



ஸிதா ஸிந்தோர்-மத்த்யே ஸிரவிடபி-வாடீ-ப்ரிவ்ருதே
மணித்வீபே நீபோபவனவதி சிந்தாமணி க்ருஹே
சிவாகாரே மஞ்சே பரமசிவ-பர்யங்க-நிலையாம்
பஜந்தி த்வாம் தன்யா: கதிசன சிதானந்த-லஹரீம்

தாயே, அமுதக் கடலின் நடுவில், கற்பகத் தருக்களால் சூழப்பட்ட ரத்தினமயமான தீவில், கதம்ப மரங்கள் நிறைந்ததும், சிந்தாமணிகளால் அமைந்ததுமான அரண்மனையில், அதிவிசேஷமான மஞ்சத்தில் சதாசிவன் மடியில் அமர்ந்தவளும், ஞான-ஆனந்த அலை போன்றவளுமான உன்னை ஒரு சில புண்ணியசாலிகளே தியானம் செய்ய முடிகிறது.

ஸீதாஸிந்த்தோர்; - அமிர்தகடலின்; மத்த்யே - நடுவில் ; ஸிரவிடபி-வாடீ-ப்ரிவ்ருதே - கல்பவிருக்ஷத் தோப்புக்களால் சூழப்பட்ட; மணித்வீபே
எனப்படும் ரத்ன தீவீல் (நீப-உபவனவதி) கதம்ப மரங்கள் நிறைந்த உத்தியான வனத்துடன் கூடிய சிந்தாமணி க்ருஹத்தில் (சிவாகாரே மஞ்சே)மங்களகரமான சிம்மாஸனத்தில் பரமசிவனின் மடியில் (பரமசிவ-பர்யங்க நிலையாம்) சிதானந்தலஹரியாக (ஞானகடலலையாக) இருக்கும் உன்னை(தன்யா) புண்ணியவான்களான (கதிசன்) சிலரே பஜந்தி செய்ய முடிகிறது.

ஆனந்த லஹரி - 5 & 6


ஹரிஸ்-த்வா-மாராத்த்ய ப்ரணத-ஜன ஸெளபாக்ய ஜனனீம்
புரா நாரீ பூத்வா புரரிபுமபி க்ஷோப-மனயத்
ஸ்மரோபி த்வாம் நத்வா ரதி நயந-லேஹ்யேந வபுஷா
முனீனா-மப்-யந்த: ப்ரபவதி ஹி மோஹாய மஹதாம்


(ப்ரணத-ஜன-ஸெளபாக்ய-ஜனனீம்) வணங்கும் ஜனங்களுக்கு ஸகல ஸெளபாக்கியத்தையும் தரும் உன்னை (ஹரி:) விஷ்ணு பூஜித்து (புரா) முன்னொரு சமயம் (நாரீ பூத்வா) பெண் உருவம் கொண்டு (புரரிபும் அபி) முப்புரம் எரித்த பரமசிவனையுங் கூட (க்ஷோபம்) மனம் சலிக்கும்படி(அனயத்) கவர்ந்தார். (ஸ்மர: அபி) மன்மதனும் (த்வாம்) உன்னை (நத்வா) வணங்கி (ரதி-நயன-லேஹ்யேன-வபுஷா) ரதிதேவி கண்கொண்டு பருகும் அமுதம் போன்ற வடிவங்கொண்டு (மஹதாம்) மகான்களான (முனீனாம் அபி) முனிவர்களும் கூட (அந்த:) அந்தரங்கத்தில் (மோஹாய) மதிமயக்கம் உண்டாகும்படி (ப்ரபவதி ஹி) செய்கிற சக்தி பெறுகிறான் என்பது நிச்சயம்.

பரமசிவனால் எரிக்கப்பட்ட மன்மதன், தேவியின் கடாஷத்தால் மற்றவர்களுடைய கண்ணுக்குப் புலப்படாமல், தன் மனைவியான ரதியின் கண்களூக்கு மட்டும் புலப்படும்படியான ஸீக்ஷ்ம சரீரத்தை அடைந்ததாக காஞ்சீ மகாத்மீயம் கூறுகிறது. "ஹர-நேத்ராக்னி-ஸ்ந்தக்த-காம-ஸஞ்ஜீவ-நெளஷதி:" என்பது லலிதா ஸஹஸ்ரநாமத்தில் 84ஆவது நாமாவளி, அதாவது சிவபெருமானால் எரிக்கப்பட்ட மன்மதனை பிழைக்கவைத்த சஞ்சீவினி மருந்தே என்று அன்னையை விளிப்பதாகப் பொருள்.


தனு: பெளஷ்பம் மெளர்வீ மதுகரமயீ பஞ்ச விசிகா:
வஸந்த: ஸாமந்தோ மலயமரு-தாயோதன-ரத:
ததாப்யேக: ஸர்வம் ஹிமகிரிஸிதே காமபி க்ருபாம்
அபாங்காத்தே லப்த்வா ஜகதித-மனங்கோ விஜயதே


மன்மதன் தன் கையில் வைத்திருக்கும் வில் புஷ்பத்தால் ஆனது. அந்த வில்லின் நாண் வண்டுகளால் ஆனது. வில்லினால் செலுத்தும் பாணங்கள் எல்லாமும் புஷ்பங்களே (ஐந்து பாணங்கள்). மன்மதனின் மந்திரி வசந்த ருது. மன்மதனின் ரதம் மலைய மாருதம் எனப்படும்தென்றல் காற்று. இவ்வாறாக மன்மதனின் ஆயுதங்கள் எல்லாம் வலிவில்லாதவைதாம், ஆனாலும் மலையரசன் பெண்ணே, உனது கடைக்கண் பார்வையால் பெற்ற அருளால் அன்றோ மன்மதன் தனித்து நின்று இவ்வுலகனைத்தையும் வெற்றி கொள்கின்றான்!.

ஹிமகிரிஸீதே - மலையரசன் பெண்ணே; (தனு:) வில் (பெளஷ்பம்) மலர்களாலானது (விசிகா:) பாணங்கள் (பஞ்ச) ஐந்தும் பூக்களே; (ஸாமந்த:)மந்திரி (வஸந்த) வஸந்த ருது; (ஆயோதனரத:) போர் செய்ய ஏறிவரும் தேர்; (மலயமருத்) மலயத்திலிருந்து வீசும் தென்றல் காற்று (ததா அபி)அப்படியிருந்தும் (அனங்க:) உடலில்லாத மன்மதன் (ஏக:) ஒருவனாகவே (தே) உன்னுடைய (அபாங்காத்) கடைக்கண் பார்வையால் (காம் அபி க்ருபாம்) ஏதோ ஒரு கிருபையை (லப்த்வா) அடைந்து (இதம்) இந்த (ஜகத்) உலகம் (ஸர்வம்) அனைத்தையும் (விஜயதே) ஜெயிக்கிறான்.

மன்மதன் ரூபமற்றவனாக இருந்தாலும், அவன் மிகச் சிறந்த ஸ்ரீவித்யா உபாசகன். இப்படிப்பட்ட மந்த்ரத்ஷ்டாவான ரிஷி (மன்மதன்) பற்றியஞானம் இல்லாதவன் ஸ்ரீசக்கர பூஜையில் ப்ரவேசிக்கக் கூடாது என்று யஜீர்வேதமும் கூறுகிறது.

ஆனந்த லஹரி - 3 & 4




அவித்யானா-மந்தஸ்திமிர-மிஹிர-த்வீப-நகரி
ஜடானாம் சைதன்ய-ஸ்தபக-மகரந்த-ஸ்ருதிஜரி
தரித்ராணாம் சிந்தாமணி-குணநிகா ஜன்மஜலதெள
நிமக்னாம் தம்ஷ்ட்ரா முரரிபு-வராஹஸ்ய பவதி

அம்மா, உன்னுடைய பாததூளி, அஞ்ஞானமாகிய இருளை அகற்றுபவனான பகலவன் தோன்றும் தீவு;மூடர்களுக்கு ஞானமென்னும் மலர்களில் மகரந்தத்துடனான தேன் பிரவாகம்; ஏழைகளுக்குச் சிந்தாமணி; பிறவிக்கடலில் மூழ்கியவர்களுக்கு வராஹப் பெருமானின் பூமியைத் தாங்கிய கோரப் பல்.


சிந்தாமணி என்னும் ரத்னம் நினைத்ததை எல்லாம் தரவல்லது. இதனைப் பற்றி மகாபாரதக் கதையும் உண்டு. அன்னையின் மந்திரங்களில் முக்கியமான ஒரு பீஜாக்ஷரத்திற்கு சிந்தாமணி பீஜம் என்றே பெயர். (இவ்வாறாகசில அக்ஷரங்கள் பற்றி வரும் இடங்களில், அக்ஷரத்தை இங்கு குறிப்பிடுவதாக இல்லை, வேண்டுபவர்கள் தனிமடல் அனுப்பினால் தருகிறேன்)

அந்தஸ்திமிர-மிஹிர-த்வீப-நகரி - மன இருளைப் போக்கும் சூரியன்; மகரந்தஸ்ருதிஜரி - மகரந்தம் கலந்த கால்வாய்,அதாவது தேன்னும், மகரந்தமும் கலந்து கால்வாயாக ஓடுமாம்; முரரிபு: வராஹஸ்ய - முரன் என்ற அசுரனைக் கொன்ற மஹா விஷ்ணுவின் பெயர் முரரிபு;

அதாவது, அன்னையின் பாததூளியானது, ஏழைகளுக்கு வேண்டுவதை தரும், ஞானத்தை தரும், வராஹப் பெருமான் எப்படிமுழ்க இருந்த பூமிப் பந்தை தனது பற்களால் தாங்கிப் பிடித்தாரோ அதுபோல பிறவிக் கடலை நீந்துபவர்களுக்கு மூழ்காது காக்கும் என்கிறார்.
த்வ-தன்ய: பாணிப்ப்யா-மபயவரதோ தைவதகண:
த்வமேகா நைவாஸி ப்ரகடித-வாரபீத்யபிநயா
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்சாஸமதிகம்
சரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணெள
தாயே!, உன்னைத் தவிர மற்ற தேவதைகளெல்லாம் அபய-வரத முத்திரைகளைக் காட்டுகிறார்கள். ஆனால் நீ அந்த முத்திரைகளை காட்டுவதில்லை. ஏனெனில் உன் திருவடிகளே பயத்திலிருந்து காத்து விடுகிறது. அத்திருவடிகளே அவரவர் விரும்புவதற்கு அதிகமாக வரமும் அளித்து விடுகிறது.

த்ரிபுரசுந்தரி தனது கைகளில் பாசம், அங்குசம், புஷ்பபாணம், கரும்புவில் ஆகியவற்றையே தரித்திருக்கிறாள். அபய-வரதம் என்பது அவள் பாதகமலங்களில் அடங்கியிருப்பதால்தான் பிற தேவதைகளும் அவள் பாதாரவிந்தத்தை பூஜிக்கின்றனர்.

த்வ-தன்ய: - உன்னைத் தவிர்த்த; தைவதகண: - தேவர்கள்; பாணிப்யாம் - கைகளால்; அபய-வரத - அபயத்தையும், வரத்தையும்த்வமேகா - நீ மட்டும் ; ப்ரகடித-வாரபீத்யபிநயா - அபிந்யத்தால் அபயத்தையும், வரதத்தையும் பிரகடனம்; நைவாஸி - செய்வதில்லை. பயாத்-த்ராதும் - பயத்திலிருந்து காப்பாற்றவும்; வாஞ்சா-ஸமதிகம் - வேண்டியதற்கு மேலாக; பலம்-பலன்; தாதும் அபி சவ- அளிக்ககூடிய; சரணெள ஏவ - உன் திருவடிகளே; நிபுணெள ஹி - திறமை உடையவை; சரண்யே லோகானாம் - உலகிற்குப் புகலிடமானவளே.

ஆனந்த லஹரி - 1 & 2



ஸிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திது-மபி
அதஸ்-த்வா-மாராத்த்யாம் ஹரி-ஹர-விரிஞ்சாதிபி-ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத-மக்ருத-புண்ய: ப்ரபவதி


சிவன், சக்தியான உன்னூடன் இருப்பதாலேயே (யதி பவதி) ஈஸ்வரனுக்கு பிரபஞ்சத்தை ஆக்கும் சக்தி கிடைக்கிறது. அவ்வாறு உன்னூடன் சிவன் இல்லாவிடில்(ந சேத்) சிவனே சலனமற்று, அசைவற்ற (குசல:) ஜடமாகிடுவான் (ஸ்பந்திது-மபி). ஆகவே ஹரி-ஹர-பிரம்மா ஆகிய மூம்மூர்த்திகளும் பூஜிக்கும் உன்னை புண்ணியம் செய்யாதவன் வணங்குவதற்க்கோ (ப்ரணந்தும்), துதிப்பதற்கோ (ஸ்தோதும் வா) எவ்வாறு தகுதியுடையவனாவான். அதாவது பராசக்தியை வழிபட வேண்டும் என்ற எண்ணம் வருவதற்கே பூர்வபுண்ணியம் செய்திருக்கவேண்டும் என்கிறார்.


மும்மூர்த்திகளையும் இயக்கும்சக்தியே பராசக்தி. அந்த சக்தியின் துணை கொண்டுதான் ப்ரபஞ்ச ஸ்ருஷ்டி-ஸ்திதி-ஸம்ஹாரங்கள் நடக்கிறது.அந்த சக்தியினை பணிந்து போற்றுவதற்கும் நல்ல ஊழ்வினை செய்திருக்க வேண்டும் என்கிறார்.


ஸ்பந்திதும் - அசைவதற்கு; அபி - கூட;
ந கலு குசல: - திராணியில்லாமை; விரிஞ்சாதி - பிரும்மா;

தேவி பாகவதத்தில் "சிவோபிசவதாம் யாதி குண்டலின்யா' என்று ஒரு வரி வரும்.அதாவது குண்டலினி சக்தியிழந்த சிவனும் சவமாகிறான் என்பதாக
அர்த்தம்.


தநீயாம்ஸம் பாம்ஸீம் தவ சரண-பங்கேருஹ-பவம்
விரிஞ்சி: ஸஞ்சின்வன் விரசயதி லோகா-னவிகலம்
வஹத்யேனம் செளரி: கதமபி ஸஹஸ்ரேண சிரஸாம்
ஹர: ஸம்க்ஷித்யைனம் பஜதி பஸிதோத்தூளன-விதிம்


உன்னுடைய திருவடித்தாமரைகளிலுள்ள (சரண-பங்கேருஹ-பவம்) மிக நுட்பமான (பாம்ஸீம்) துகள்களை பிரும்மா (விரிஞ்சி:) சேகரித்து (லோகான்), அதன் மூலமாகவே உலகங்களைப் படைக்கிறார் (விரசயதி). செளரி: என்னும் ஆயிரம் தலையுடைய ஆதிசேஷன் இவ்வுலக வடிவான உன் பாதத் துகள்களை (கதமபி)எப்படியோ (வஹதி) தாங்குகிறார். ஹரனோ, இந்தப் பாதத்துகள்களை இன்னும் நன்றாக துகள்களாக்கி (பஸிதோத்தூளன-விதிம்) விபூதியாக அணியும் முறையை கடைப்பிடிக்கிறார்.


சில சுவாசினி பூஜைகளில் அன்னையாக வரிக்கப்பட்ட பெண்களை வஸ்திரத்தின் மீது நடக்கச் செய்து, அதில் சேர்கின்ற பாததூளிகளை சிரசில்
தரிப்பார்கள் ஸ்ரீ வித்யா உபாசகர்கள்.

செளந்தர்யலஹரி - கவிதை பிறந்த கதை -2

ஆதி சங்கரர் பல ஊர்களுக்கும் சென்று ஆங்காங்கே இருந்த கோவில்களில் இறைவனை தரிசித்து பல்வாறாக போற்றியவாறு கைலாயத்தை அடைகிறார். அங்கு ஈசன் உமையவள் தரிசனமும் கிடைக்கிறது. அப்போது ஈசன் 5 ஸ்படிக லிங்கங்களை சங்கரருக்கு வழங்குகிறார். அப்போது அன்னையவள் ஒரு சுவடுக் கட்டினைத் தன் சார்பாகத் தருகிறார். [அந்த பஞ்சலிங்கங்கள் அனைத்துக்கும் பெயர் சந்திர மெளலி என்றே பெயர். இந்த 5 லிங்கங்கள் இன்று இருக்கும் இடம் பின்வருமாறு. 1 காமகோடி மடத்தில் இருக்கும் யோக லிங்கம், 2 கேதாரத்தில் இருக்கும் முக்தி லிங்கம், 3 நேபாளத்தில் நீலகண்ட க்ஷேத்ரத்தில் இருக்கும் வரலிங்கம், 4 சிருங்கேரியில் இருக்கும் போகலிங்கம், 5 சிதம்பரத்தில் இருக்கும் மோக்ஷலிங்கம்.] ஈசன் தந்த லிங்கங்கள் அருவ-ருபமான ஈஸ்வரன் என்றால், சுவடியில் இருந்ததோ தேவி குறித்த மந்திர சாஸ்திரங்கள். இவற்றைப் பெற்றுக் கொண்ட சங்கரர் கையிலாயத்தை விட்டு வெளிவருகிறார்.



அங்கு அதிகார நந்தி சங்கரர் கையில் இருந்த சுவடிக்கட்டைப் பார்த்த உடன், கையிலையின் மிகப்பெரிய புதையலான மந்திர சாஸ்த்திரம் கையிலையை விட்டுப் போகிறதே என்றுசினம் கொள்கிறார். சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்கவில்லை என்பது போல நந்தி தனது கோபத்துடன் சங்கரர் கையில் இருந்த சுவடிக்கட்டை பிடித்து இழுக்கிறார். ஆனால் ஆச்சாரியரோ அதனை கவனியாது வந்து நகர்ந்து விடுகிறார். நந்திகேஸ்வரன் இழுத்ததால் சில சுவடிகள் மட்டுமே சங்கரர் கையில் மீந்துவிட, மற்றதெல்லாம் கையிலை வாயிலில் விழுந்து விடுகிறது. [இந்த நிகழ்ச்சி மார்க்கண்டேயபுராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது]


இவ்வாறாக ஆதிசங்கரரிடம் கிடைத்த சுவடிகளே முதல் 41 ஸ்லோகங்கள். இதனை உணர்ந்த தேவி, சங்கரர் முன் பிரத்யஷமாகி மீதமுள்ள 59 ஸ்லோகங்களையும் புதிதாகச் செய்ய சங்கரரைப் பணிக்கிறார். உடனடியாக மடை திறந்த வெள்ளம் போல அவர் 59 ஸ்லோகங்களில் அன்னையின் ரூப லாவண்யத்தைப் பாடுகிறார். இவ்வாறாக பாடப்பட்ட 59 ஸ்லோகங்கள் செளந்தர்ய லஹரி என்றும், கையிலையில் அன்னை தந்த சுவடியில் மிஞ்சிய 41 ஆனந்த லஹரி என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் மொத்தமாக செளந்தர்யலஹரிஎன்பது 41+59 சேர்ந்த 100 ஸ்லோகங்களே. இதனால்தான் முதல் 41 ஸ்லோகங்களில் மந்திர சாஸ்திரமும், குண்டலினி சக்தியும், ஸ்ரீவித்யா வழிபாட்டுத் தத்துவங்களும் விளக்கப் பட்டுள்ளது. இந்த 41 சாதகர்களுக்காக என்று கொண்டால், பின் வந்த 59 பக்தி மார்கத்தவருக்காக என்று எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறாக உலகில் உள்ள இலக்கியங்களில் அதிசயமாக ஸ்லோகங்களில் மந்திர சாஸ்திரத்தையும், கவித்துவமான வர்ணனைகளையும் சேர்த்த படைப்பினை வேறெங்கும் காண முடியாது.


சரி, செளந்தர்ய லஹரி என்ற பெயர் ஏன்?. செளந்தர்யம் என்றால் அழகு. சுந்தரமாக இருப்பது செளந்தர்யம். லஹரி என்றால் பிரவாஹம் (அ) அலை என்றும் பொருள். உலகில் உள்ள அத்தனை அழகுகளும் எங்கிருந்து பிறந்ததோ அந்த பரம சக்தியை ஸ்ரீமாதா உருவினை தலையிலிருந்து கால்வரை அங்கம்-அங்கமாக வர்ணிக்கும் ஸ்துதிக்கு செளந்தர்யலஹரி என்ற பெயர் கொடுத்தது மிகச் சரியல்லவா?. இதில் முதல் 41 ஸ்துதிகள் ஈசனே செய்து அன்னையை ஆனந்திக்கச் செய்ததால் ஆனந்த லஹரி என்பதாகச் சொல்வார்கள். எப்படி அழகென்றால் அது அன்னையை மட்டும் குறிக்குமோ அதே போல ஆனந்தம் என்பதும் அவளை அடைந்தால் மட்டுமே கிடைக்கப் பெறுவது, அதனால்தான் அது ஆனந்த பிரவாஹம் என்று பெயர்.



பரமாச்சாரியார் ஆனந்தலஹரி பற்றிச் சொல்லும் போது பின்வருமாறு சொல்வார். ஸத் ஆக இருக்கும் பரமேஸ்வரனின் 'சித்' (அறிவு) ஆன அம்பிகையிடத்தே தான் ஆனந்த அனுபவம் கிடைக்கிறது. எனவே இந்த சித்தால் நமக்குக் கிடைக்கும்ஆனந்தத்தின் முடிவு ஞானமயமான அத்வைத ஆனந்தம். அம்பிகை அந்த ஆனந்தமயத்தில் நிலைத்தவள். எனவேதான் இந்தபூர்வபாகத்திற்கு, கையிலையில் கிடைத்த ஈஸ்வரன் துதித்த பகுதிக்கு ஆனந்த லஹரி என்று பெயரிட்டார்.

செளந்தர்யலஹரி - கவிதை பிறந்த கதை-1

குமரன், கே.ஆர்.எஸ், கண்ணன் ஆகியோருக்கு எனது முதற்கண் நன்றிகள். அவர்களது ஊக்குவிப்பே இந்த வலைப்பூவுக்கு மூலம். அவர்களைப் போன்ற எழுத்தாற்றல் எனக்கு இல்லை எனினும், அவர்கள் அவ்வப்போது வந்து செம்மைப்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்புடனும், மற்ற ஆன்மிக பந்துக்களான கீதாம்மா, வல்லியம்மா, திராச போன்ற பெரியோர்கள் வழிகாட்டுதலும் கிடைக்கும் என்ற நினைவுடனே, இதனைத் தொடங்குகிறேன். குமரனின் சொல்படி இதனை தனி வலைப்பூவாக கொண்டு செல்ல இருக்கிறேன்.


இங்கு இந்த பதிவுகளுக்கு ஆதாரமாக ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துப் பதிப்பாக திரு.அண்ணா அவர்கள் எழுதிய புத்தகமும், பாஸ்கர ராயரின் வழித்தொன்றலான கிருஷ்ண தீக்ஷதரின் புத்தகமும், பரமாச்சாரியாரின் மொழிகளும் எடுத்தாள உத்தேசித்துள்ளேன்.


பிறைதவழும் எழில்தோன்றப் பிறங்குகதிர் வெண்கோட்டான்

செறிகதிர்செய் தடங்குடுமிச் செம்பொன்மால்வரை வாய்ப்ப

மறைபுகழும் சவுந்தரிய லகரியினை வகுத்தெழுதும்

விறல்கெழுமு வேழமுகன் விரைமலர்த்தாளினை தொழுவாம்.

இங்கு நான் கவிதை பிறந்த கதை என்று இப்பதிவிற்கு பெயரிட்டாலும் செளந்தர்யலஹரி வெறும் கவிதையல்ல. இது சிறந்த மந்திர சாஸ்திரமாக நாடெங்கிலும் போற்றப்படுகிறது. லிங்க புராணத்தில்விநாயகர் வாழ்த்தில் இது மகாமேரு மலையில் விநாயகரால் எழுதப்பட்டதென்று கூறப்படுகிறது.
மேருமலையில் எழுதிவைத்தவர் புஷ்பதந்தர் என்றும், ஆனால் அதற்கு முன்பே கையிலையில் சிவாலயத்தின் மதிற்சுவரில் எழுதப்பட்டிருந்ததாகவும் மேருமலையில் இருந்ததை கெளட பாதர்கிரகித்துப் பின்பு ஆதிசங்கரருக்கு உபதேசம் செய்ததாகவும் செளந்தர்ய லகரியினை தமிழாக்கிய வீரை கவிராஜ பண்டிதர் கூறியுள்ளார்.


ஆனால் இன்னுமொரு கருத்தென்னவென்றால், ஆதிசங்கரரே இதனை கைலாசத்திலிருந்து இதனை கொண்டு வந்தார் என்றும் ஆனால் அவருக்கு கிடைத்தது முதல் 41 ஸ்லோகங்கள் (ஆனந்த லஹரி)மட்டுமே என்றும், எஞ்சிய 59 ஸ்லோகங்களையும் சங்கரர் தாமே எழுதி பூர்த்தி செய்த்தாக சொல்வர். எப்படியாகினும், இது ஆதிசங்கரரால் உலகிற்கு தந்தருளப்பட்டதென்பதில் எந்த மாறுபட்ட கருத்துக்களும் இல்லை. இவ்வாறாக 41 ஸ்லோகங்களை கையிலை சங்கரனும், 59 ஸ்லோகங்களை காலடி சங்கரனும் தந்தமகோன்னதம் மிக்கது இந்த செளந்தர்யலஹரி.


முதல் 41 மந்திர சாஸ்த்திரீயமானது. இதனை கொஞ்சம் பேர்தான் ரொம்பவும் கடுமையான நியமங்களுடன்அனுஸந்தானம் செய்ய முடியும். இந்த 41ல் மந்திர யோகம், குண்டலினி யோகம், ஸ்ரீ சக்ர ஆராதனை போன்றவை தரப்பட்டுள்ளது. ஆனால் பாராயணம் செய்யும் போது இரண்டையும் சேர்த்து 100 ஸ்லோகங்களையும் செய்வதேமுறை.


சரி, ஆச்சாரியாருக்கு இது எப்படிக்கிடைத்தது, ஏன் அவர் 59 ஸ்லோகங்களை தானே செய்ய வேண்டியதாயிற்று என்பதைஅடுத்த பதிவில் பார்க்கலாமா?