ஆனந்த லஹரி - 17 & 18
ஸவித்ரீபிர்-வாசாம் சசிமணி-சிலா-பங்க-ருசிபிர்

வசின்யாத்யாபிஸ்-த்வாம் ஸஹ ஜனனி ஸஞ்சிந்தயதி ய:

ஸ கர்த்தா காவ்யானாம் பவதி மஹதாம் பன்கிருசிபிர்

வசோபிர்-வாக்தேவீ-வதன கமலா மோத மதுரை:

அன்னையே!, நீ வசினி முதலிய எண்வகையான சக்திகளுடன் கூடியவள். அந்த சக்தி தேவிகள் நவரசஸங்கள் நிரம்பிய சொல் நயத்தை அளிப்பவர்கள். உடைந்த சந்திர காந்த கல்லின் உள் பகுதிபோல் வெண்மையான ஒளி நிறைந்தவர்கள். அவர்களையும், உன்னையும் உபாசிப்பவன், மிகுந்த மணமுள்ள தாமரை போன்ற முகமுடைய உன் முகம் போன்ற இனிமையான வார்த்தைகளமைத்து, மஹாகவிகளின் படைப்புக்களைப்போல் காவியங்கள் எழுத வல்லவனாவான்.


இங்கு கூறப்பட்டுள்ள வசினி தேவதைகளே அன்னையின் சஹஸ்ரநாமத்தை உலகிற்கு அளித்தவர்கள். இந்த வசினி தேவதைகள் எண்மர். அவர்களாவது, வசினீ, காமேஸ்வரீ, மோதினீ, விமலா, அருணா, ஜயினீ, ஸர்வேஸ்வரீ, கெளலினீ. இந்த தேவதைகளே வாக்கைப் பிறப்பிக்கும் அன்னையர். ஆகவேதான் ஸவித்ரீபி: வாசாம் என ஆரம்பிக்கிறார். இவர்கள் எந்த வர்ணத்தவர் என்றால், சந்திர காந்த கல்லின் உள்புறம் போன்ற வெண்மை நிறைந்தவர்களாம். ஒரு இடத்தில் 'சரத் ஜ்யோத்ஸ்நா சுத்தாம்' என்பதாகவும், இன்னொரு இடத்தில் அருணா என்றும் கூறியவர் இப்போது சரத் ஜ்யோத்ஸ்நா போன்ற வாக்தேவதைகள் சூழ அருணாவாக வீற்றிருக்கிறாள் அன்னை என்கிறார். இந்த முறையில் அன்னையை உபாசிப்பவர்கள் சிருங்கார ரஸம் மிகுந்த கவித்திறன் உடையவர்களாக விளங்குவார்கள் என்பதற்கு காளிதாஸனே உதாரணம்.


வாசாம் - வாக்கு/வாக்கின்; ஸவித்ரீபி: - பிரவர்த்தகர்களும்; சசி-மணி-சிலா-பங்க-ருசிபி: - சந்திரகாந்த கல்லை உடைத்தாற்போன்ற காந்தி உடைய ; வாக்தேவி-வதன-கமலா-மோத-மதுரை: - சரஸ்வதி தேவியின் முககமலத்தின் பரிமளம் போன்ற மதுரமான ; காவ்யானாம் - காவியங்கள்; கர்தா - உடையவன்; பவதி - ஆகிறான்; மஹதாம் - மகான்களுடைய ;தனுச்சாயாபிஸ்-தே தருண-தரணி ஸ்ரீ ஸரணிபிர்

திவம் ஸர்வா-முர்வீ-மருணிமனி மக்னாம் ஸ்மரதி ய:

பவந்த்யஸ்ய த்ரஸ்யத்-வன-ஹரிண சாலீன நயனா

ஸஹோர்வச்யா வச்யா: கதிகதி ந கீர்வாண கணிகா:


எவன் ஒருவன் இளஞ்சூரியனுடைய வெயிலைப்போன்ற வர்ணமுள்ள அன்னை ஜகன்மாதாவின் உடலின் ஒளியில் ஈரேழு உலகங்களும் மூழ்கியதாக தியானிக்கிறானோ அவனுக்கு மானின் கண்கள் போன்ற மருண்ட கண்களையுடைய ஊர்வசி போன்ற தேவகன்னிகளும் வசியமாவார்களாம்.


தருண-தரணி - உதய சூரியன் (உதிக்கின்ற செங்கதிர்?); ஸ்ரீ-ஸ்ரணிபி: - அழகு வெள்ளம் போன்ற; தனு-ச்சாயாபி - தேக ஒளி; திவம் - தேவலோகம்; உர்வீம் - பூலோகம்; அருணிமனி - இளஞ்சிவப்பு; மக்னாம் - மூழ்கிய; ஸ்மரதி - தியானிக்கிறவன்; வன-ஹரிண - காட்டு மான்; சாலீன நயனா - அழகிய கண்கள்; கீர்வாண கணிகா - அப்ஸ்ரஸ்திரீகள்; கதி கதி - எத்தனை எத்தனை; வச்யா - வசப்பட்டவர்கள்; ந பவந்தி - ஆக மாட்டார்கள்.

8 comments:

குமரன் (Kumaran) said...

சிறு வயதில் வாக்விலாசம் ஏற்பட 17வது சுலோகத்தைச் சொன்ன நினைவு இருக்கிறது மௌலி. இன்று அதன் பொருளை முழுவதும் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.

18வது சுலோகத்தை பதின்ம வயதில் படித்திருக்கலாம். பயன் கிட்டியிருக்கும். :-) இப்போது படித்தால் தெய்வீக சக்திகள் என்னும் கணிகையர் வசமாவார்கள் போலும்.

கீதா சாம்பசிவம் said...

//இங்கு கூறப்பட்டுள்ள வசினி தேவதைகளே அன்னையின் சஹஸ்ரநாமத்தை உலகிற்கு அளித்தவர்கள். இந்த வசினி தேவதைகள் எண்மர். அவர்களாவது, வசினீ, காமேஸ்வரீ, மோதினீ, விமலா, அருணா, ஜயினீ, ஸர்வேஸ்வரீ, கெளலினீ. //

ம்ம்ம்ம்???? ஹயக்ரீவர் வாக்கில் வசினி தேவதைகள் அமர்ந்து, அகஸ்தியருக்கு அருளியது என்று ஒரு கருத்து உண்டு இல்லை?

மதுரையம்பதி said...

வாங்க கீதா மேடம்....

/ஹயக்ரீவர் வாக்கில் வசினி தேவதைகள் அமர்ந்து, அகஸ்தியருக்கு அருளியது //

மேல நீங்க சொன்னது த்ரிசதி.....

மதுரையம்பதி said...

வருக குமரன் காரு...

இப்பத்தான் தெரியுது உங்க எழுத்தாற்றலின் காரணம்.... நல்லது...இறையருள் நிலைக்கட்டும்.

கீதா சாம்பசிவம் said...

மேல நீங்க சொன்னது த்ரிசதி.....

பார்க்கிறேன், இல்லைனு தோணுது!

கவிநயா said...

அன்னையைப் பற்றி அருமையாக எழுதி வருகிறீர்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

கவிநயா said...

நான் இப்பதான் புதுசா ஒரு வலைப்பூ ஆரம்பிச்சேன் - உங்கள் வலைப்பூ இணைப்பை அதில் சேர்த்துக்கலாமா? (http://kavinaya.blogspot.com)
நன்றி!

மதுரையம்பதி said...

வாங்க கவிநயா....உங்கள் முதல் வரவுக்கு நன்றி. அடிக்கடி வாங்க...:-)

இந்த வலைப்பக்கத்தை தாராளமா இணைச்சுக்கங்க....