செளந்தர்யலஹரி 43 & 44துநோது த்வாந்தம் ந: துலித தளிதேந்தீவர வநம்
கந ஸ்நிக்த ச்லக்ஷணம் சிகுர நிகுரும்பம் தவ சிவே
யதீயம் ஸெளரப்யம் ஸஹஜம் உபலப்தும் ஸுமநஸோ
வஸந்த்யஸ்மிந் மந்யே வலமதநவாடீ விடபிநாம்


ஹே! பார்வதி! மலர்ந்த நீலோத்பல புஷ்பங்களின் வனம் போன்றதும், அடர்த்தியானதும், வழவழப்பானதுமான உன் கேசமானது எங்களது மனதிலிருக்கும் அஞ்ஞான இருட்டைப் போக்கட்டும். அங்கே உன் கூந்தலில் இருக்கும் மலர்களானது கூந்தலில் உள்ள இயற்கையான பரிமள சுகந்தத்தை தாங்களும் அடைய்வதற்காக வந்திருக்கின்றன போலும்.

அன்னையின் கரிய கூந்தலானது நமது மனத்தில் இருக்கும் அஞ்ஞான இருட்டுக்கு உவமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பெண்கள் தங்களது கேசத்தில் மணம் சேர்வதற்கு பூ முடிப்பார்கள், ஆனால் அன்னையின் கூந்தலில் இருப்பதால்தான் இந்திரனது உத்யான வனத்துப் புஷ்பங்கள் கூட மணம் பெற்றது என்பது வர்ணனை. இவ்வாறாக, முந்திய பாடலில் பார்த்த கிரீட வர்ணனை முடிந்து இப்போது கூந்தல் வர்ணனை பண்ணியிருக்கார். இதற்கு தகுந்த சஹஸ்ர நாமம் 'புன்னாக செளந்திக லஸ்த்கசா' என்பது. இதற்கு பாஷ்யம் பண்ணின பாஸ்கர ராயர் இயற்கையான மணமுள்ள கூந்தலில் இம்மலர்கள் அலங்காரத்திற்கு மட்டுமேயன்றி, சாதாரண மனிதர்கள் போல் கேசத்திற்கு மணம் சேர்க்க அல்ல என்று கூறுகிறார்.

துலித தளிதேந்தீவர - மலர்ந்த புஷ்பங்களீன் வனத்திற்குச் சமமான; கந ஸ்நிக்த ச்லக்ஷ்ணம் - அடர்த்தியான, வழவழப்பான; தவ- உன்னுடைய; சிருர நிருகும்பம் - கேச அலங்காரம்; த்வாந்தம் - அஞ்ஞானம்; துனோது - போக்கடிக்கும்; யதீயம் - எவற்றின்; ஸஹஜம் - இயற்கையான; ஸெளரப்யம் - வாசனை; உபலப்தும் - அடைவதற்காக; வலமதந - வலன் என்ற அசுரனை வதைத்த இந்திரன்; வாடீ விடபினாம் - உத்தியான வனத்தில்; ஸுமநஸ: - புஷ்பங்கள்; மந்யே - நினைக்கிறேன்.

கிழே இருப்பது இதன் தமிழாக்கம் வீரை கவிராஜர் செய்தது:


அலர்ந்தகரு நெய்தலங் காடெனக் கடைகுழன்று
அறநெய்த் திருண்டு செறிவோடு
இலங்குறு மியற்கைமணம் எண்திசை யளப்பவதில்
இதழ்மூழ்கு நறைவி ழைவினாற்
பொலன்கொண்முடி யாகண்ட லேசற்பொற் றுணர்விரி
பொதும்பர்மது மலர்ப் டிவதோர்
சிலம்பளி பரந்தஉன் தோதியென் மனத்திருட்
செறிவுதெற அருள்க மலையே!

----------------------------------------------------------------------------------------

தநோது க்ஷேமம் நஸ்தவ செளந்தர்ய லஹரி-
பரீவாஹ ஸ்ரோத: ஸரணிரிவ ஸீமந்த ஸரணி:
வஹந்தி ஸிந்தூரம் ப்ரபல கபரீ பாரதிமிர-
த்விஷாம் ப்ருந்தை: பந்தீ க்ருதமிவ நவீநார்க்க கிரணம்

அம்மா!, அடர்ந்த இருள் சூழ்ந்த இடத்தில் சிறைவைக்கப்பட்ட பால சூர்யனது ஒளி போன்று சிந்தூரத்தை தரித்துக் கொண்டு இருப்பதும், உன் முக அழகானன் வெள்ளத்திற்கு கால்வாய் போன்றதான உனது கேசத்தின் வகிடானது எங்களுக்கு சகலவிதமான க்ஷேமங்களையும்/நன்மைகளையும் தரட்டும்.

பெண்கள் தமது கூந்தலை இரண்டு பாகமாக பிரித்துக் கொள்ளுதல் வழக்கம். அவ்வாறு பிரித்துக் கொள்ளும் போது நடுவில் கோடு மாதிரி வருவதை வகிடு என்போம். [கிராப் வைத்த ஆண்களுக்கும் இப்போது வகிடு இருக்கிறது] இந்த வகிட்டினை ஸீமந்தம் என்பர் சம்ஸ்கிருதத்தில். சுமங்கலிகள் இவ்வாறு வகிட்டில் குங்குமம் தரிப்பது வழக்கம். பதிவிரதைகளின் ஸீமந்தப் பிரதேசமானது லக்ஷ்மி வாசம் செய்யும் இடங்களில் ஒன்று என்பர். இளஞ்சூரியனது கிரணங்கள் சிவப்பு நிறத்தில் இருப்பதை பார்த்திருக்கிறோம். அது போன்ற நிறத்தில் அன்னை தனது அழகு வெள்ளத்திற்க்கான கால்வாய் போன்ற வகிட்டில் சிந்தூரம் வைத்திருக்கிறாளாம்.

வதந - முகத்தின்; செளந்தர்ய - அழகிய; லஹரி - வெள்ளம்; பரீவாஹ - ப்ரவாஹம்; ஸ்ரோத: - வழியும்; ஸரணிரவ - கால்வாய் போன்ற; ஸீமந்த ஸரணி - வகிடாக இருக்கும் ரேகை; கபரீபார - கேச பாரம்; திமிர - கருப்பான; த்விஷாம் ப்ருந்தை: எதிரிக் கூட்டம்; பந்தீக்ருதம் - சிறை செய்யும்; நவிநார்க்க கிரணமிவ - இளஞ்சூரியனது கதிர்கள் போல்; சிந்தூரம் - குங்குமம்; வஹந்தி - தரித்த; தனோது - கொடுக்கட்டும்.

அடுத்து கவிராஜர் சொன்னது;

மோதிய வெங்கதிர் மீளவெ ருண்டிருள்
மூடஓ துங்கிய வாறேயோ
சோதிமு கங்கவி னேறி வழிந்தன
சோரவி டுங்கவர் காலேயோ
ஒதிபி ணைந்து பின்வீழவ கிர்ந்ததன்
ஊடெழு தும்பரப்பை யாதேயோ
கோதறு சிந்துர ரேகைவ ளம்பிறர்
கூறுவ தன்றிது மாதாவே

6 comments:

கவிநயா said...

//வழவழப்பானதுமான உன் கேசமானது எங்களது மனதிலிருக்கும் அஞ்ஞான இருட்டைப் போக்கட்டும். அங்கே உன் கூந்தலில் இருக்கும் மலர்களானது கூந்தலில் உள்ள இயற்கையான பரிமள சுகந்தத்தை தாங்களும் அடைவதற்காக வந்திருக்கின்றன போலும்.//

அருமை அருமை!

//அடர்ந்த இருள் சூழ்ந்த இடத்தில் சிறைவைக்கப்பட்ட பால சூர்யனது ஒளி போன்று சிந்தூரத்தை தரித்துக் கொண்டு இருப்பதும், //

ரொம்ப அழகா இருக்கு.

நீங்க எழுதலைன்னா இதெல்லாம் படிக்க, தெரிஞ்சுக்க முடியாமலேயே போயிருக்கும். உங்கள் பணி தொடர, சிறக்க, அன்னை அருளட்டும்.

குமரன் (Kumaran) said...

இந்தப் பாடலை நக்கீரரோ நக்கீரருக்காக திருவிளையாடல் வசனங்களை எழுதியவரோ படிக்கவில்லை போலும். படித்திருந்தால் ஈசனின் தேவியின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்று அனுபவபூர்வமாக உணர்ந்து எழுதிய இறையனாரின் பாடலை மறுத்து சொற்குற்றம் கண்டுபிடித்திருப்பாரா? :-)

கவிராஜரின் பாடலை பதம் பிரித்து எழுத முடியுமா? அப்படி எழுதினால் இன்னும் நன்றாகப் புரியும் என்று நினைக்கிறேன்.

இரண்டு பாடல்களும் இருமொழிகளிலும் சொற்சுவை பொருட்சுவைகளில் சிறந்து விளங்குகின்றன. சாக்தர்களின் தியானத்திற்கு மிகவும் உகந்த பாடல்கள்.

மதுரையம்பதி said...

வாங்க குமரன்.

//கவிராஜரின் பாடலை பதம் பிரித்து எழுத முடியுமா? அப்படி எழுதினால் இன்னும் நன்றாகப் புரியும் //

எழுத எனக்கு தெரியாதே, ஏதாச்சும் தப்பாகிடுமோன்னு ஒரு யோசனை.

மதுரையம்பதி said...

வாங்க கவிக்கா. நன்றி.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இந்தாங்கண்ணா பதம் பிரிப்பு:

அலர்ந்த கரு நெய்தல் அங் காடு எனக் கடை குழன்று,
அற நெய்த் திருண்டு செறிவோடு
இலங்குறும் இயற்கை மணம்
எண்திசை அளப்ப, அதில்

இதழ் மூழ்கு நறை விழைவினால்
பொலன் கொள் முடியா கண்டலே
சற் பொற்றுணர் விரி
பொதும்பர் மது மலர்ப் படிவதோர்
சிலம்பு அளி பரந்த உன் தோதி
என் மனத்து இருள் செறிவு தெற அருள்க மலையே!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

மோதிய வெங்கதிர் மீள வெருண்டு இருள்
மூட ஓதுங்கிய வாறேயோ

சோதி முகம் கவின் ஏறி வழிந்தன
சோர விடும் கவர் காலேயோ

ஓதி பிணைந்து பின் வீழ வகிர்ந்தது அதன்
ஊடு எழுதும் பரப்பை யாதேயோ
கோது அறு சிந்துர ரேகை வளம் பிறர்
கூறுவது அன்று இது மாதாவே!