செளந்தர்யலஹரி 49 & 50


விசாலா கல்யாணீ ஸ்புடருசியோத்யா குவலையை:
க்ருபாதாராதாரா கிமபி மதுரா போகவதிகா
அவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹுநகர விஸ்தார விஜயா
த்ருவம் தத்தன் நாம வ்யவஹரண யோக்யா விஜயதே


அம்பிகே!, உன் கண்கள் விசாலமாக இருப்பதால் விசாலா என்றும், மங்களகரமானதால் கல்யாணி என்றும், இந்தீவர புஷ்பங்களாலும் ஜெயிக்க முடியாத அழகுடையதால் அயோத்யா என்றும், கருணையினை தாரையாக பொழிய ஆதாரமாக இருப்பதால் தாரா என்றும், வர்ணிக்கமுடியாத மாதுர்யத்துடன் இருப்பதால் மதுரா என்றும், ஆழ்ந்த உணர்வினைத் தருவதால் போகவதீ என்றும், சகல உலகங்களையும் காப்பதால் அவந்தீ என்றும் கூறத்தக்கவாறு அந்த நகரங்களில் விஜயம் செய்து கொண்டு விளங்குகின்றன.


இந்தப் ஸ்லோகத்தில் அம்பாளின் எட்டு விதமான த்ருஷ்டிகளுக்கு (பார்வைகளுக்கு), 8 நகரங்கள் உதாரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சாதாரணமாக சாமுத்ரிகா லக்ஷணங்களுடைய பெண்களின் பார்வையை இவ்வாறு பிரித்துச் சொல்வது வழக்கமாம். இந்த 8 விதமான பார்வைகளாவன; உள்ளார்ந்த, ஆச்சர்யமான, முழுதாக மலர்ந்த, களைப்போடு கூடிய, சஞ்சலமான, ப்ரியத்துடன் கூடிய, மயங்கிய நிலையில், மற்றும் பாதி மூடிய நிலையிலானதாம். இவை எல்லா பெண்களிடத்தும் இருந்தாலும், அன்னையிடத்து இவை இருப்பது, ஸம்க்ஷோபண, ஆகர்ஷண, த்ராவண, உன்மாதன, வச்ய, உச்சாடன, வித்வேஷண, மாரண சக்திகளைக் கூறிப்பதாக தேதியூரார் தமது விளக்கத்தில் சொல்லியிருக்கிறார்.

ஸம்க்ஷோபணம் - குழப்பம்; த்ருவம் விஜயதே - நிச்சயமாக விளங்குகிறது; தத் தத் - அந்தந்த; நாம வ்யவஹரண யோக்யா - பெயர்களால் அழைக்கும் யோக்கியதை உடைய; பஹுநகர - அநேக நகரங்கள்; விஸ்தார விஜயா - விஸ்தாரமாக விஜயம் செய்ய; அவந்தீ - காப்பாற்றுகின்ற; ஆபோகவதிகா - ஆழ்ந்த; கிமபி மதுரா - வர்ணிக்க முடியாத மாதூர்யமான; க்ருபா - கருணை; தாராதாரா - ப்ரவாஹத்துக்கு ஆதாரமான; குவலையை: - இந்தீவர புஷ்பம்; அயோத்யா - ஜெயிக்க முடியாத; ஸ்புடருசி - விரிந்த காந்தியுடையது; கல்யாணி - மங்களமான; தே திருஷ்டி - உன் பார்வை.

கோலநகர் விசாலையாய் நிரந்தரக் கல்யாணியாய்க்
குவலயத்தால் அயோத்தியாய்க் குலமதிரை தானாய்
சாலஒளிர் போகவதியாய் அமுத தாரையாய்த்
தண்ணளியால் அவந்தியாய்ச் சகவிசையை எனலாய்
நிலவிழி புடைபரந்து நெடுநகரப் பெயர்கவர்ந்து
நீண்டு சேந்தரிபரந்து நிகரொழிக்கும் என்றால்
ஆலவிடம் அமுதெனக்கொண்டு அருந்திய உன்மத்தர் புரம்
அதனில் ஒருபுறம் கவர்தல் அதிசயமோ தாயே!

-------------------------------------------------------------------------------------------------
கவீனாம் ஸந்தர்பஸ்தபக மகரந்தைக ரஸிகம்
கடாக்ஷ வ்யோக்ஷேப ப்ரமர கலபெள கர்ணயுகளம்
அமுஞ்சந்தெள த்ருஷ்ட்வா தவ நவரஸாஸ்வாத தரளெள
அஸுயாஸம்ஸ்ர்காத் அளிகநயனம் கிஞ்சித் அருணம்

கவிஞர்களது க்ரந்தங்களான புஷ்பங்களில் இருக்கும் மகரந்தத்தை பருகுவது போல உனது காதுகள் அமைந்திருக்கிறது. அந்த க்ரந்தங்களில் சொல்லப்பட்ட நவரசங்களையும் பார்க்க உனது இரு கண்களும் தேனிக்கள் போல சுற்றிச் சுற்றி வருகின்றது. உனது இரு கண்களைப் பார்த்த நெற்றிக் கண்ணானது பொறாமையால் சிவந்து காணப்படுகிறது என்கிறார்.

அதாவது, அன்னையின் காதுகள் நீண்டு இருப்பதும், அவளை துதிக்கும் பக்தர்களது கோரிக்கைகளை எப்போதும் அக்காதுகள் கேட்டுக் கொண்டு இருப்பதையும், அவளது கண்கள் பக்தர்களுக்கு கருணை மழை பொழிந்த வண்ணம் இருப்பதாகவும், அக்னி ரூபமான நெற்றிக் கண் தூர்-மதியுடையவர்களை சுட்டெரிக்க ஏதுவாக சிவந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கிஞ்சித் அருணம் - கொஞ்சம் சிவப்பாக; அளிக நயனம் - நெற்றிக்கண்; அஸுயாஸம்ஸ்ர்காத் - பொறாமையால்; கடாக்ஷ வ்யக்ஷேப - கடாக்ஷிக்கும் கண்களாகிய; ப்ரமர கலபெள - தேனிக் குஞ்சுகள்; தவ கர்ணயுகளம் - உன்னிரு காதுகளும்; மகரந்தைக ரஸிகம் - மகரந்தத்திலிருக்கும் தேனைப் பருக விரும்பும்; ஸந்தர்பஸ்தபக - மலர்ச் செண்டினைப் போன்ற கர்ந்தங்கள்; கவீனாம் - கவிகள்

அடுத்து வருவது கவிராஜர் சொன்னது.

இருசெவியுண் பலகவிதை
இரரொழுகு பசுந்தேனிற்
பெருகுநவ ரதமருந்திப்
பிறழ்ந்திடுமுன் பிணைவிழியாங்
கருநிறவண்டினைக் களிப்பக்
கண்டு பொறாதென்னையோ
வரிநுதற்கண் அளிசிவந்த
வளம்பாராய் மலர்க்கொடியே.

7 comments:

கவிநயா said...

//இந்தீவர புஷ்பங்களாலும்//

அப்படின்னா?

இரண்டு பாடல்களும் கொள்ளை அழகு. படிச்சிக்கிட்டே இருக்கலாம் போல. 8 த்ருஷ்டிகள் பத்தி இப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன்.

//கவிஞர்களது க்ரந்தங்களான புஷ்பங்களில் இருக்கும் மகரந்தத்தை பருகுவது போல உனது காதுகள் அமைந்திருக்கிறது. அந்த க்ரந்தங்களில் சொல்லப்பட்ட நவரசங்களையும் பார்க்க உனது இரு கண்களும் தேனிக்கள் போல சுற்றிச் சுற்றி வருகின்றது. உனது இரு கண்களைப் பார்த்த நெற்றிக் கண்ணானது பொறாமையால் சிவந்து காணப்படுகிறது என்கிறார்.//

அடடா, என்ன சொல்றதுன்னே தெரியல... வேற மாதிரி சொல்ல கத்துக்கிட்டு வரணும் போலருக்கு :)

நன்றி மௌலி.

குமரன் (Kumaran) said...

நல்ல பாடல்கள் மௌலி.

அந்த எட்டு சக்திகளின் பெயர்களைத் தமிழிலும் சொல்லுங்கள்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//உனது இரு கண்களைப் பார்த்த நெற்றிக் கண்ணானது பொறாமையால் சிவந்து காணப்படுகிறது என்கிறார்//

கண்களுக்கு உள்ளேயே அழகுப் போட்டியா? அருமை!

//ஜெயிக்க முடியாத அழகுடையதால் அயோத்யா//

இதான் அயோத்திக்குப் பொருளா? சூப்பர்!

//இருசெவியுண் பலகவிதை
இரரொழுகு பசுந்தேனிற்//

இரர் ஒழுகு? அப்படின்னா?
வேறு ஏதோ இருக்கணும்-னு நினைக்கிறேண்ணா! அச்சுப் பிழையோ?

//வரிநுதற்கண் அளிசிவந்த
வளம்பாராய் மலர்க்கொடியே//

தமிழாக்கம் அவ்வளவு அருமையா வந்திருக்கு!
வரி=வரிகள் கொண்ட (திருநீற்று வரிகளாவும் இருக்கலாம்)
நுதற்=நெற்றி
கண்=கண்
அளி சிவந்த = கருணையோடு சிவந்த! அடடா! அடடா! மறம் செய்து அறம் செய்யும் போது, கருணையாவும் இருக்கு! சிவக்கவும் சிவக்கு! அருமை!

மதுரையம்பதி said...

வருகைக்கு நன்றிங்க கே.ஆர்.எஸ். நீங்க சொன்ன தவறை மூலத்துடன் சரி பார்க்கிறேன்.

மதுரையம்பதி said...

வாங்க குமரன். நீங்களே சொல்லுங்களேன்....சரி நான் அப்பறமா முயற்சிக்கிறேன்...தெரியல்லன்னா உங்க கிட்டத்தான் வருவேன். :)

மதுரையம்பதி said...

இந்தீவரத்துக்கு தமிழ்ல என்ன பெயர்?....நல்ல கேள்வி கவிக்கா...சரியா நினைவில்லை....பார்த்துட்டு சொல்றேன்.

கவிநயா said...

குவலயம்னா கருங்குவளையாம் -

http://www.thamizham.net/super/nikandu04.htm

தமிங்கலீஷ் அகராதில "இந்திரவம்" னா கருங்குவளைன்னு போட்டிருக்கு.