செளந்தர்யலஹரி 57 & 58த்ருவா த்ராகீயஸ்யா தரதளித நீலோத் பலருசா
தவீயாம்ஸம் தீநம் ஸ்நபய க்ருபயா மாமபி சிவே
அநேநாயம் தந்யோ பவதி ந ச தே ஹாநிரியதா
வநே வா ஹர்ம்யே வா ஸமகர நிபாதோ ஹிமகர:

மங்களங்களை அருள்பவளே!, சந்திரன் வனம் மற்றும் மாளிகை என்ற பேதம் இல்லாது எங்கும் சமமாகத் தன் கிரணங்களை வீசுவது போல, தீர்க்கமானதும், அன்றலர்ந்த நீலோத்பல புஷ்பத்தைப் போன்ற காந்தியுடையதுமான உன் கண்களின் கடாக்ஷ த்ருஷ்டியானது உன்னிலிருந்து விலகி தூரத்தில் இருப்பவனும், பாக்கியமில்லாதவனுமான என் மேலும் விழும்படி செய்வாயாக. இவ்வாறு செய்வதால் உனக்கு எந்த குறைவும் ஏற்படாது.


சந்திரனது கிரணங்கள் எப்படி எந்த வேற்றுமையும் பாராட்டாது எல்லா இடங்களிலும் குளிர்ச்சியுடைய ஒளியைப் பரவச் செய்கிறதோ அப்படியாக அன்னையவள் கருணை எவ்வித வித்தியாசமும் இல்லாது எல்லோருக்கும் அருள் தரக் கூடியது என்று கூறுகிறார் சங்கரர்.


சிவே - மங்களங்களை அருள்பவளே; த்ராகீயஸ்யா - அதிக நீளமுள்ள; தரதளித கொஞமாக மலர்ந்த; நீலோத்பல ருச - காந்தியுடைய நீலோத்பல மலர்; த்ருசா - கடாக்ஷ தீக்ஷண்யத்தால்; மாம் அபி - என்னையும்; க்ருபயா - கருணையால்; ஸ்நபய - ஸாநம் செய்தல்; அநேந - செய்வதால்; அயம் - அடியேன்; தந்யோ பவதி - க்ருதார்த்தனாக/உருப்படியாக ஆவான்; இயதா - இதனால்; தே - உனக்கு; ஹாநிர் ந ச - ஒருவித நஷ்டமும் இல்லை; ஹிமகர - சந்திரன்; வநே வா - காட்டிலும் சரி; ஹர்ம்யே வா - மாளிகையிலும் சரி; ஸமகர நிபாத: - கிரணங்களால் எங்கும் வியாபித்தல்


கவிராஜரது தமிழாக்கம் கீழே!

நெடியகண் கரிய நெய்தல்
நிறையருட் சலதி யெய்தாக்
கொடியனேன் பிறவித் துன்பக்
குறைகடல் கடந்து மூழ்க
விடினதிற் குறைவது உண்டோ
மெய்த்தவர்க் கொழிந்து றாதோ
கடிநகர் நிலவ காட்டிற்
காயுமே கருணை வாழ்வே.
-------------------------------------------------------------------------------------------அராளம் தே பாலீயுகளம் அக்ராஜந்யதநயே
ந கேஷாம் ஆதத்தே குஸுமசர கோதண்ட குதுகம்
திரச்சீநோ யத்ர ச்ரவணபதம் உல்லங்க்ய விலஸத்
அபாங்கவ்யாஸங்கோ திசதி சரஸந்தாந திஷணாம்

மலையரசன் மகளே!, வளைவுடன் கூடிய உனது கண்களூக்கும் காதுக்கும் இடைப்பட்ட பிரதேசங்கள் இரண்டும், உனது காதுகள் வரையில் நீண்ட கண்களையே பாணங்களாகப் பூட்டிய மன்மதனுடைய வில் போன்று இருப்பதாக யாருக்குத்தான் தோன்றாது?.

முன்பே இங்கே அன்னையின் கண்கள், நாசி பகுதியை மன்மதனது வில்லுக்குச் சமமாக வர்ணித்தார். அதே போல் இப்பாடலில் அன்னையின் கண்கள், காது போன்றவற்றுடன் சொல்லியிருக்கிறார் ஆசார்யார். அன்னையின் கண்கள் நீண்டு, அகன்று இருக்கிறது என்பதை ச்ரவணபதம் உல்லங்க்ய என்று கூறுகிறார்.

அக்ராஜந்யதநயே - அக்ராஜந்ய தநயே - மலையரசன் மகளே; தே - உன்னுடைய; பாலீயுகளம் - கண்களுக்கும் காதுகளுக்கும் இடைப்பட்ட பிரதேசம் (பொட்டு என்று கூறும் இடம்); அராளம் - வளைந்த; குசுமசர - மன்மதனுடைய; கோதண்ட குதுகம் - வில்லின் அழகை; கேஷாம் - யாருக்கும்; ந ஆதத்தே - தோன்றச் செய்வதில்லை; யத்ர - அப்பகுதியில்; திரச்சீந: - கோணலாக; விலஸத் - தெரியும்; அபாங்கவ்யா - நீண்ட கடைக்கண் பார்வை; ச்ரவணபதம் - காதுகள்; உல்லங்க்ய - ஸமீபத்தில்; சர ஸ்ந்தாந திக்ஷணாம் - பாணம் பூட்டியது போன்ற; திசதி - தோன்றுதல்


கவிராஜரது தமிழாக்கம் கீழே!

கருங்குழல் நுதஏகட் பின்னற்
கவின்கடைக் கபோலந் தாழ்ந்த
அருகுழை கடந்த கண்ணின்
அயிற்கடை அனங்க சாப
நெருங்குறத் தொடுத்த ஏவின்
நிமிர்தலை யேய்க்கு மென்றால்
மருங்கில்பொற் றிருவே யாருன்
மதர்விழி பரவ வல்லார்.

8 comments:

கவிநயா said...

சந்திர ஒளி உவமை அழகு.

//உனது காதுகள் வரையில் நீண்ட கண்களையே பாணங்களாகப் பூட்டிய மன்மதனுடைய வில் போன்று இருப்பதாக யாருக்குத்தான் தோன்றாது?.//

உண்மைதான். எனக்கும் அப்படித்தான் தோணும். :)

நன்றி மௌலி.

குமரன் (Kumaran) said...

படிச்சேன்; உள்ளேனையா சொல்லிட்டுப் போகலாம்ன்னு தான் இருந்தேன். ஆனா கவிராஜரது பாட்டுக்களுக்குப் பொருள் சொல்லுன்னு கவிநயா அக்கா கட்டளை போட்டதால கூட நாலு வரி. :-)

நீண்ட நெடிய கண்கள் நெய்தல் பூக்கள் போன்றவை; அதன் நிறைய அருள் கடலைப் போல் இருக்கின்றது. அதனை நானாக எய்த முடியாது. கொடியவன் நான். பிறவித் துன்பக்கடலில் மூழ்கிக் கிடக்கிறேன். அந்த பிறவித் துன்பக்கடல் என்னும் குறைக்கடலில் / சிறிய கடலில் இருந்து தப்பித்து உன் திருக்கண்களின் அருட்கடலில் என்னை மூழ்க விட்டால் அதில் உனக்கு குறையாக ஆவதும் ஒன்றுண்டோ? ஒன்றும் இல்லை. காவல் நிறைந்த நகரத்தில் வீசும் நிலவு காட்டிலும் காயுமே கருணையே வடிவானவளே.

உன்னுடைய அழகிய பின்னலுடைய கருங்குழல், அழகிய நெற்றி, நெற்றியின் அருகில் இருக்கும் கரிய திருக்கண்கள், அந்தக் கண்களின் நுனி (கடைக்கண்) இவையெல்லாம் அனங்கனின் வில்லில் நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட வண்டுகளின் தொடரைப் போல் (மன்மத வில்லின் நாண் வண்டுகளால் ஆனது) இருக்கின்றது என்றால் ஈடில்லாத (மருங்கு இல்லாத) பொற்றிருவே யார் உனது அழகிய திருவிழிகளின் பெருமைகளைப் பாடிப் பரவ வல்லவர்?

மதுரையம்பதி said...

வருகைக்கு நன்றி குமரன்.

நானே அந்த இடுகையை எழுதிட்டு அவ்வளவாக திருப்தி வராததால் சில நாட்களாகப் டிராப்ட்ல வச்சு இருந்தேன். பிறகு ஏதோ சில மாற்றங்கள் செய்தபின் நேற்று வெளியிட்டேன்.

உங்கள் பின்னூட்டம் படித்த பின்னர் அந்த குறை நீங்கினார் போல் தோன்றுகிறது. மிக்க நன்றி.

அக்கா, தனி மெயிலில் உங்களிடம் கேட்டார்கள் போல, நல்லது. :-)

மதுரையம்பதி said...

வாங்க கவிக்கா..

நீங்களும் கவிஞர் அல்லவா?...உங்களுக்கு அப்படித் தோன்றாதிருந்தால் தான் வியக்க வேண்டும். :-)

கவிநயா said...

மிக்க நன்றி குமரா. படிக்க இனிமையா இருக்கு.

//நீண்ட நெடிய கண்கள் நெய்தல் பூக்கள் போன்றவை;//

//உன்னுடைய அழகிய பின்னலுடைய கருங்குழல், அழகிய நெற்றி, நெற்றியின் அருகில் இருக்கும் கரிய திருக்கண்கள், அந்தக் கண்களின் நுனி (கடைக்கண்) இவையெல்லாம் அனங்கனின் வில்லில் நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட வண்டுகளின் தொடரைப் போல் (மன்மத வில்லின் நாண் வண்டுகளால் ஆனது) இருக்கின்றது //

அழகா சொல்லியிருக்கீங்க. அன்னையின் கண்ணழகு கண்முன்னே விரிகிறது.

//அக்கா, தனி மெயிலில் உங்களிடம் கேட்டார்கள் போல, நல்லது. :-)//

என்ன சிரிப்பு? :) அவர்கிட்ட கவிராஜருடைய எல்லா பாடல்களுக்குமே பொருள் விரிச்சு எழுதணும்னு கேட்டுக்கிட்டேன். இதுக்கு மட்டும் எழுதிட்டு தப்பிச்சிக்க மாட்டார்னு நம்பறேன் :)

மதுரையம்பதி said...

//என்ன சிரிப்பு? :) //

சரி, சிரிக்கல்ல...


//அவர்கிட்ட கவிராஜருடைய எல்லா பாடல்களுக்குமே பொருள் விரிச்சு எழுதணும்னு கேட்டுக்கிட்டேன்.//

நன்றிக்கா... :-)
நானும் குமரனுக்கு அந்தக் கோரிக்கையை விடுக்கிறேன் :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

சந்திரனது கிரணங்கள் எப்படி எந்த வேற்றுமையும் பாராட்டாது எல்லா இடங்களிலும் குளிர்ச்சியுடைய ஒளியைப் பரவச் செய்கிறதோ அப்படியாக அன்னையவள் கருணை எவ்வித வித்தியாசமும் இல்லாது எல்லோருக்கும் அருள் தரக் கூடியது

ஆஹா.அற்புதமான வர்ணனை. சூரியன் அப்படியில்லை ஒரு இடத்தில் காயும் ஒரு இடத்தில் காயாது. ஆனால் சந்திரன் அப்படி யில்லை எப்போதும் குளிர்ச்சி அம்பாளைப் போல.ஆனல் அந்த சந்திரனுடைய குளிர்ச்சியையே தன் முகமாக வைத்துள்ள அம்பாளைப் பற்றி கேட்கவேண்டுமா? மூககவியே சொல்லுகிறான் ""ராகா சமான காந்தி வதனா மூக்காதி ரஜஸ்துதா. சந்திராபீடாம் சதுர வதனாம் சஞ்சலா பாங்க லீலாம்"" சஞ்சலமே இல்லாதவள்

மதுரையம்பதி said...

வருகைக்கும் கருத்துப் பகிர்தலுக்கும் நன்றி திராச ஐயா.