செளந்தர்யலஹரி 63 & 64


ஸ்மித ஜ்யோத்ஸ்நா ஜாலம் தவ வதன சந்த்ரஸ்ய பிபதாம்
சகோராணாம் ஆஸீத் அதிரஸதயா சஞ்சுஜடிமா
அதஸ்தே சீதாம்சோ: அம்ருதலஹரீம் ஆம்லருசய:
பிபந்தி ஸ்வச்சந்தம் நிசி நிசி ப்ருசம் காஞ்ஜிகதியா

நீ, புன்சிரிப்புடன் இருக்கும் சமயம் உன்னுடைய வதன சந்திரனிடமிருந்து பெருகும் நிலவைப் போன்ற கிரணங்களை அதிகமாகச் சாப்பிட்ட சகோர பக்ஷிகளுக்கு அதன் இனிமையில் மூக்குத் திகட்டி மறத்துப் போனது. அவ்வாறு மறத்துப் போனதை மாற்றிக் கொள்ள அவை சந்திரனது அம்ருதமயமான கிரணங்களைப் புளித்த கஞ்சியாக நினைத்து அதை இரவுகளில் வேண்டிய அளவு குடிக்கின்றன.

இந்த ஸ்லோகத்தில் அன்னையின் புன்சிரிப்பினைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். ஸ்மிதம் என்றாலேயே புன்சிரிப்பு என்று பொருள். அம்பிகையின் புன்சிரிப்பானது இன்னொரு சந்திரன் போன்று தோற்றம் தருகிறதாம். சகோர பக்ஷிகள் சந்திரனுடைய நிலாவையே பானம் பண்ணுவதாகச் சொல்வர். இதே சகோர பக்ஷியை "இங்கேயும்" பகவத் பாதர் உபயோகம் பண்ணியிருக்கிறார். அதாவது அன்னையின் ஸ்மிதமான வதனமானது சந்திரனைவிட அதிக மதுரமாக இருக்கிறது என்றும், அம்பிகையின் வதனாரவிந்தமாகிய சந்திரனுடன் ஒப்பிடும் போது, சந்திரன் புளித்த கஞ்சி மாதிரி இருப்பதாக ஒப்பீடு செய்கிறார்.


தவ வதந சந்த்ரஸ்ய - உன்னுடைய முகமாகிற சந்த்ரனுடைய; ஸ்மித ஜ்யோத்ஸ்னா ஜாலம் - புன்சிரிப்பாகிய நிலவுக் கூட்டத்தை; பிபதாம் - குடிக்கிற; சகோராணாம் - சகோர பக்ஷிகளுக்கு; அதிரஸதயா - அதிக இனிமையாக இருப்பதால்; சஞ்சு ஜடிமா ஆஸீத் - மூக்கு திகட்டி மறத்துப் போதல்; அத: ஆகவே; தே - அவை; ஆம்லருசய: - புளிப்பில் ஆசையுடையதாக; சீதாம்சோ: சந்திரனுடைய; அம்ருத லஹரீம் - கிரணங்களாகிய அம்ருத கலையை; காஞ்ஜிகதியா - கஞ்சி என்றெண்ணி; ஸ்வச்சந்தம் - யதேஷ்டமாக; நிசி நிசி - ஒவ்வொரு இரவிலும்; ப்ருசம் பிபந்தி - நிறையக் குடிக்கின்றன.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்:

அன்பு முற்றிவடி வாய அம்மைநின்
தான னத்துமதி நகைநிலா
நன்பு றத்தமுத மொழுகு மாமதுர
நறைகொள் சீதளம யின்றவாய்
இன்பு ளிப்பலது உவட்டு றாதினியெ
நத்தெ விட்டியச கோரம்வான்
முன்ப ரப்புநில வுண்ணு மாலுனது
மூர லுக்குநிகர் மூரலே.


-----------------------------------------------------------------------------------------
அவிச்ராந்தம் பத்யு: குணகண கதாம்ரேடநஜபாஜபா
புஷ்பச்சாயா தவ ஜநநி ஜிஹ்வா ஜயதி ஸா
யதக்ராஸீநாயா: ஸ்படிகத்ருஷதச்சச்சவிமயீ
ஸரஸ்வத்யா மூர்த்தி: பரிணமதி மாணிக்யவபுஷா

தாயே!, பதிவிரதையான நீ, உன் புருஷனுடைய லீலைகளை எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பதால் உனது நாக்கானது செம்பரத்தைப் புஷ்பம் போன்று சிவப்பாக இருக்கிறது. அவ்வாறான உனது நாக்கில் குடிகொண்டிருக்கும் சரஸ்வதி தேவியின் சுத்த ஸ்படிக நிறமானது உனது நாவில் இருக்கும் சிவப்பின் காரணமாக பத்மராகக் கல்லின் காந்தியோடு கூடினதாக மாறியிருக்கிறது.

அன்னையின் நாக்கில் சரஸ்வதி தேவி எப்போதும் இருப்பதாகச் சொல்வது வழக்கம். அவளுடைய நிறம் ஸ்படிகம் போன்ற வெளுப்பு. அப்படியிருந்தாலும் அவள் வாசம் செய்யும் அன்னையின் நாக்கு ரக்த வரணமாக இருப்பதால் சரஸ்வதி தேவியும் நிறம் மாறி பத்மராகக் கல்லின் ஒளியுடன் இருப்பதாகச் சொல்கிறார். அன்னை எப்போதும் தனது புருஷனது லீலைகளைப் பேசிக்கொண்டே இருப்பதாகச் சொல்லி அவளது நாக்கைச் சிறப்பித்துக் கூறும்போதே அவளது பாதிவிரந்தத்தையும் விசேஷமாகச் சொல்கிறார்.

தவ ஸா ஜிஹ்வா - உன் நாக்கானது; அவிச்ராந்தம் - எப்போதும்/இடைவிடாது; பத்யு: - உன் புருஷனான பரமசிவத்திடம்; குணகண கதாம்ரேடந ஜபா - ஈசனின் கல்யாண குணங்களைச் சொல்லும் கதைகளை மீண்டும் மீண்டும் மந்திர ஜபம் போல; ஜபா புஷ்ப - செம்பரத்தைப் பூ; சாயா -
நிறத்துடன்; ஜயதி - விளங்குகிறது; யதக்ராஸீநாயா - யத் அக்ராஸீனாயா: - எந்த நாக்கின் நுணியில்; ஸரஸ்வதியா - சரஸ்வதி தேவியின்; ஸ்படிக- த்ருஷத்-அச்சவிமயீ - ஸ்படிகம் போன்ற வெண்மையான ஒளியுடைய; மூர்த்தி: - ரூபமானது; மாணிக்க வபுஷா - பத்மராகத்தின் ரூபமாக; பரிணமதி - மாறுதல் ஆகிறதோ?.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்:

விள்ள நாவுரை எழுந்தொ றுந்தலைவர்
வீரமும் புகழும் அழகுமே
தெள்ளு பாடல்மது ரம்ப ழுத்தனைய
செய்ய கேழொளிவ னப்பினால்
அள்ளல் மாமலரை விட்டு வாணியுனது
அருண நாவுறைய வெள்ளையாய்
உள்ள மேனியுமே னம்மை நீயருள
உன்நி றம்பெறுவ தொத்ததே.

2 comments:

கவிநயா said...

//அம்பிகையின் வதனாரவிந்தமாகிய சந்திரனுடன் ஒப்பிடும் போது, சந்திரன் புளித்த கஞ்சி மாதிரி இருப்பதாக ஒப்பீடு செய்கிறார்//

அருமை, அருமை.

நாவழகும் தான் :)

துர்கா தேவி படம் ரொம்ப அழகா இருக்கு :) மிக்க நன்றி மௌலி.

Anonymous said...

Present sir.....:)

Thambi