செளந்தர்யலஹரி 75 & 76



தவ ஸ்தந்யம் மந்யே தரணிதரகந்யே ஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வதமிவ
தயாவத்யா தத்தம் த்ரவிடசிசுராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரெளடானாம் அஜநி கமநீய: கவயிதா

அம்பிகே!, உன்னுடைய ஸ்தன்யமானது ஹ்ருதயத்திலிருந்து உண்டான க்ஷீர ஸமுத்ரம் போலவும், ஸாரஸ்வத ப்ரவாஹம் போலவும் பெருகுகின்றது என்று நினைக்கிறேன். ஏனென்றால் உன்னால் கருணையுடன் கொடுக்கப்பட்ட அந்தப் பாலைப் பருகிய த்ராவிட தேசத்து சிசு ஒருவன் ப்ரஸித்தர்களான கவிகளும் மெச்சும்படியான கவியாக ஆகிவிட்டானன்றோ!.

பால் வெண்மையாக இருப்பதால் அதற்கு ஸரஸ்வதி சம்பந்தமென்றும், மதுரமாக/இனிமையாக இருப்பதால் அம்ருதத்துடன் சம்பந்தமும் சொல்லப்பட்டிருக்கிறது. த்ராவிட தேசத்தில் பிறந்த ஒருவருக்கு அம்பிகையின் ஸ்தன்யத்தின் பானத்தால் ஸரஸ்வதீ கடாக்ஷம் ஏற்பட்டு எல்லோருடனும் கொண்டாடப்படும் அளவில் மிகப் பெரிய கவிஞன் ஆனான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் சொல்லப்பட்ட த்ராவிட சிசு யார் என்பது நிச்சயமாகச் சொல்ல இயலவில்லை. சங்கரர் தம்மைத் தானே அப்படிக் கூறியுள்ளார் என்று சிலரும், இன்னும் சிலர் திருஞான சம்பந்தரைச் சொல்லியிருப்பதாகவும் கூறுகின்றனர்.

விநயம் என்பதின் பொருளான ஆசார்யாள்,தம்மைத் தாமே இப்படி சிறந்த கவியாகிவிட்டேன் என்று சொல்லிக் கொள்வாரா என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. அதே சமயத்தில் இந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருப்பது திருஞான சம்பந்தர் என்றால் அவரதுகாலத்திற்குப் பிறகு சங்கரர் காலம் என்றாகிறது. இதிலும் குழப்பமே மிஞ்சுகிறது. இது பற்றி சங்கர விஜயங்களிலும் ஏதும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பல்வேறு காலகட்டத்தில் செளந்தர்ய லஹரிக்கு பாஷ்யம் எழுதிய பலரும் பலவிதகேள்விகளை எழுப்பி அதற்கு பதிலும் சொல்லியிருக்கிறார்கள். அவற்றை எல்லாம் தொகுத்துத் தனியாக மதுரையம்பதியில் இடுவதாக இருக்கிறேன்.

தரணிதரகந்யே - பார்வதி தேவியே; தவ ஸ்தந்யம் - உன் ஸ்தனங்களில்; ஹ்ருதயத: ஹ்ருதயத்திலிருந்து உண்டான; பய: பாராவார: க்ஷீர ஸமுத்ரம் போன்ற; ஸாரஸ்வதமிவ - ஸரஸ்வதீ மயமான; பரிவஹதி - பெருகுகின்றது; மந்யே - நினைக்கிறேன்;யத் - ஏனெனில்; தயாவத்யா - கருணையுடன் கூடிய உன்னால்; தத்தம் - கொடுக்கப்பட்ட; தவ (ஸ்தந்யம்) - உன்னுடைய பாலை; த்ரவிட சிசு: த்ராவிட தேசத்துக் குழந்தை; ஆஸ்வாத்ய - சாப்பிட்டு; ப்ரெளடானாம் கவீனாம் - பிரசித்தி பெற்ற கவிகளுக்கிணையாக; கமநீய: கவயிதா- அழகிய கவிதைகளைச் செய்பவனாக; அஜநி: - ஆகியிருக்கிறான்.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே:

தருண மங்கலை உனது சிந்தை
தழைந்த பாலமு தூறினால்
அருண கொங்கையி லதுபெ ருங்கவி
அலைநெ டுங்கட லாகுமே
வருன நன்குறு கவுணி யன்சிறு
மதலை அம்புயல் பருகியே
பொருள்ந யம்பெறு கவிதை யென்றொரு
புனித மாரிபொ ழிந்ததே.

--------------------------------------------------------------------------------------------

ஹரக்ரோதஜ்வாலா-வலிபி ரவலீடேன வபுஷா
கபீரே தே நாபீஸரஸி க்ருதஸங்கோ மனஸிஜா
ஸமுத்தஸ்தெள தஸ்மாத் அசலதநயே தூமலதிகா
ஜநஸ்தாம் ஜாநீதே தவ ஜநநி ரோமாவளிரிதி

பார்வதி!, பரமசிவனின் நேத்ராக்னியால் எரிக்கப்பட்ட மன்மதன், அதிலிருந்து தன்னை காத்துக் கொள்வதற்காக உனது நாபியாகிய மடுவில் குதித்த போது, அதிலிருந்து உண்டான புகையை உன்னுடைய ரோமாவளிகள் என்று ஜனங்கள் வர்ணித்துச் சொல்கின்றனர்.

உடலில் நாபியும் மன்மத ஸ்தானமாகச் சொல்வது வழக்கம். ஆகவே, உடல் எரிகையில் மன்மதன் அந்த பேராபத்தில் இருந்து தப்பித்து தன்னுடலைக் காக்க குளம் போன்ற அன்னையின் நாபியில் விழுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சாதாரணமாக எரியும் தணலில்/கங்கு போன்றவற்றில்நீரை தெளிக்கையில் புகை கிளம்பும். அந்த புகையை அன்னையின் ரோமங்களாக வர்ணிப்பதாகச் சொல்கிறார்.

அசலதநயே - பார்வதி தேவியே; மநஸிஜ: மன்மதன்; ஹரக்ரோத ஜ்வாலாவலிபி: - பரமசிவனது கோபாக்னி ஜ்வாலையினால்; - அவலீடேந் வபுஷா - சூழப்பட்ட உடலுடன்; கபீரே - ஆழமான; தே நாபீஸரஸி - உன்னுடைய நாபியாகும் மடுவில்; க்ருதஸங்க: - முழுகினான்;தஸ்மாத் - எரிகின்ற அவனது உடல் உனது நாபி என்னும் ஸரஸில் விழுந்தவுடன்; தூம லதிகா - புகையானது கொடிபோல; ஸமுத்தஸ்தெள - கிளம்பியது; தாம் - அதை; ஜநநி - தாயே; தவ ரோமாவளிரிதி - உன்னுடைய ரோமாவளியாக; ஜாநீதே - வர்ணிக்கிறார்கள்.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே:

மூல மேநின் மகிழ்நர் கோப
முதுக னற்பொ ருதுவேள்
கோல நாபி மடுவி னிற்கு
எரிப்ப வந்த வெம்மையான்
மேல வாவு தூம ரேகை
வேரே ழுங்கொ ழுந்தையோ
நீல ரோம ரேகை யென்று
நீள்நி லங்கு றிப்பதே.

2 comments:

குமரன் (Kumaran) said...

த்ரவிடசிசு யார் என்பதைப் பற்றி விரைவில் தொகுத்து இடுங்கள் மௌலி. நீங்கள் சொல்லும் குழப்பங்களைப் பற்றி படித்திருக்கிறேன். கவிராச பண்டிதர் திருஞானசம்பந்தரைத் தான் அந்தச் சொற்றொடர் குறிக்கிறது என்று பொருள் கொண்டிருக்கிறார் போலும் - கவுணியன் சிறு மதலை என்கிறார் தன் மொழிபெயர்ப்பில்.

குமரன் (Kumaran) said...

கவிராசரது பாடல்களும் பொருளுரையும்:

தருண மங்கலை உனது சிந்தை
தழைந்த பாலமுது ஊறினால்
அருண கொங்கையில் அது பெருங்கவி
அலை நெடுங்கடல் ஆகுமே
வருன நன்குறு கவுணியன் சிறு
மதலை அம்புயல் பருகியே
பொருள் நயம் பெறு கவிதை என்று ஒரு
புனித மாரி பொழிந்ததே

இளமையும் (அழகும்) மங்கலமும் பொருந்திய உனது சிந்தையிலிருந்து ஊறும் அன்பு போன்றது உனது சூரியனை ஒத்த கொங்கையில் ஊறும் பாலமுது. அந்த அன்பினைப் பருகும் பாக்கியம் பெற்றவர்கள் பெருங்கவிகளாய் மாறி அலைவீசும் நெடுங்கடலைப் போல் கவிதைக் கடல் ஆக்குவார்கள்.

உன் அருளை நன்கு அடைந்த கவுணியர் (கௌண்டின்ய கோத்திரத்தில் பிறந்த) சிறு குழந்தையான சம்பந்தன் அந்த பாலமுதைப் பருகியே பொருள் நயம் நிரம்பிய கவிதை என்றொரு புனித மழையைப் பொழிந்தது.

மூலமே நின் மகிழ்நர் கோப
முதுகனல் பொருது வேள்
கோல நாபி மடுவினிற்கு
எரிப்ப வந்த வெம்மையான்
மேல் அவாவு தூம ரேகை
வேர் எழும் கொழுந்து ஐயோ
நீல ரோம ரேகை என்று
நீள் நிலம் குறிப்பதே

ஆதிமூலம் ஆகிய அன்னையே! உனது மகிழ்நரான சிவபெருமானது சினமென்னும் பெருந்தீயில் வெந்து கொண்டிருக்கும் மதனவேள் உனது அழகிய நாபி என்னும் மடுவில் குதித்த போது தோன்றிய வெம்மையால் மேல் எழுந்த புகை வரியே, ஆகா, அந்த நாபியில் இருந்து கொழுந்து போல் எழும் கருநிற முடிகளால் ஆன வரி என்று நீள் நிலத்தவர் குறிக்கின்றார்களே.