செளந்தர்யலஹரி 99 & 100



ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதிஹரி ஸபத்னோ விஹரதே
ரதே: பாதிவ்ரத்யம் சிதிலயதி ரம்யேண வபுஷா
சிரம் ஜீவந்நேவ க்ஷபித பசுபாசவ்யதிகர:
பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத் பஜநவாந்


அம்மா!, உன்னை பூஜிப்பவன் பிரம்மாவும், விஷ்ணுவும் கூட பொறாமைப்படக் கூடிய அளவில் கல்வியிலும், செல்வத்திலும், இன்பத்திலும் சிறந்து விளங்குகிறான். உன்னை பூஜிப்பவனது அழகு மன்மதனுக்கு ஒப்பாக இருப்பதால் ரதி தேவியையும் தடுமாறச் செய்யக் கூடியதாக இருப்பதால் மன்மதனும் கலங்குகிறான். உன் பக்தன் சிரஞ்சிவியாக இருந்து கொண்டு பசு, பாச ஸம்பந்தங்களிலிருந்து விடுபட்டவனாக ப்ரஹ்மானந்த ஸுகத்தை அனுபவிக்கிறான்.


பராசக்தியை வழிபடுவதன் மூலமாக அவளது கருணாகடாக்ஷத்தில் பக்தனுக்கு ஞானம், செல்வம், செளந்தர்யம் ஆகிய மூன்றும் தாமாகவே கிடைத்துவிடுகிறது என்கிறார் பகவத் பாதர். இவ்வாறு இந்த மூன்றையும் பெற்ற பக்தன் லோக சுகங்களை அனுபவித்து சிரஞ்சிவியாக இருந்து கொண்டே பரலோக செளக்கியத்திற்கு முடிவான பிரம்மானந்தத்தை இங்கேயே அடைந்துவிடுகிறானாம். பசு என்பது ஜீவன், பாசம் என்பது மாயை, அவித்யை. பாசத்தில் பாதிக்கப்பட்ட ஜீவனான பக்தன் பஞ்சபூதத்தால் ஆன உடலை தான் என்று எண்ணாது, தனக்கும் பிரம்மத்திற்கும் உள்ள ஐக்யத்தை உணர்ந்து பாசத்தில் இருந்து விலகி பசு நிலையிலிருந்து பசுபதியின் ஜ்யோதி ஸ்வரூபத்தில் மனதை லயிக்கச் செய்து ப்ரம்மானந்ததை அடைகிறான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையே ஜீவன் -முக்தி நிலை என்றழக்கப்படும்.


த்வத் பஜநவாந் - உன்னை உபாசிக்கிறவன்; ஸரஸ்வத்யா - சரஸ்வதியிருப்பதால்; லக்ஷ்ம்யா - லக்ஷ்மியிருப்பதால்; விதிஹரி ஸபத்ன - ப்ரம்ஹா, விஷ்ணு இவர்களுடைய அஸுயைக்கு இடமாக இருந்து கொண்டு; விஹரதே - ஆனந்தமாக காலம் கழிக்கிறான்; ரம்யேண வபுஷா - ஸுந்தரமான ரூபத்தால்; ரதே பாதிவ்ரத்யம் - ரதீ தேவியின் பதிவிரதத்தை; சிதிலயதி - தளரச் செய்திடுவான்; சிரம் ஜீவன்நேவ - சிரஞ்சீவியாக இருந்து கொண்டு;க்ஷபித பசுபாச வ்யாதிகர; - பசு-பாசம் ஆகியவற்றின் ஸம்பந்தத்தை போக்கியவனாக; பராநந்தாபிக்யம் - பிரம்மானந்தம் என்னும் ஸுகத்தை; ரஸயதி - அனுபவிக்கிறான்.


கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!


சுந்தரிநின் தொண்டர்தமைத் தோய்வதற்கு நாமகளும்
இந்திரையு மலரயன்மா லிடருழப்ப இரதியின்கண்
அந்தமில்பே ரழ்கொடுகற் பழித்துநெடு நாள்கழியச்
சிந்தையுறு பாசம்போய்ச் சிவமயத்தைச் சேர்குவரால்.



*********************************************************************************






ப்ரதீப ஜ்வாலாபி: திவஸகர நீராஜந விதி:
ஸுதாஸூதே: சந்த்ரோபலஜல லவைராக்யரசனா
ஸ்வகீயை ரம்போபி: ஸலில நிதி ஸெள்ஹித்யகரணம்
த்வதீயாபிர் வாக்பிஸ்தவ ஜநநி வாசாம் ஸ்துதிரியம்



தாயே!, உன்னுடைய வாக்குகளால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்ரத்தினால் நான் உன்னைத் துதிப்பது கை தீவட்டிகளின் ஜ்வாலையால் ஸுரியனுக்கு ஹாரத்தி செய்வது போலும், அம்ருதத்தை வர்ஷிக்கும் கிரணங்களையுடைய சந்திரனுக்கு சந்திர காந்த கல்லின் ஜலத் துளிகளால் அர்க்ய ப்ரதானம் செய்வதாகவும், ஜப நிதியாகிய ஸமுத்திர ராஜனுக்கு அவனுடையதான ஜலங்களாலேயே தர்ப்பணம் செய்வது போல இருக்கிறது.


இந்த கடைசி ஸ்லோகத்தில் ஆசார்யார் தாம் இந்த ஸ்லோகத்தை அம்பாளுடைய அனுக்ரஹத்தினாலேயே செய்ததாகவும், அதில் தாம் ஒரு கெளரவமும் கொள்ளவில்லை என்று தனது விநயத்தை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். ஸ்வகீயை: என்கிற பதத்தை ஸுர்யன், சந்திரன், ஸமுத்ரம் ஆகிய மூன்று இடத்திலும் சேர்த்தாலேயே இங்கே பொருள் வருகிறது. தீவட்டி ஜ்வாலையும் சூர்யனே; சந்திர காந்த கல்லின் ஜலத்திற்கு ஆதாரம் சந்திரனுடைய கதிர்களே; எல்லா நீர்கும் ஆதாரம் ஸமுத்ரமே; இதே போல சகல வாக்குகளுக்கும் அம்பிகையே ஜனனி என்று கூறுகிறார்.


ப்ரதீப ஜ்வாலாபி: - கைத் தீவட்டிகளின் ஜ்வாலையால்; திவஸகர நீராஜன விதி: - ஸுர்யனுக்கு ஹாரத்தி செய்வதுபோலும்; ஸுதாஸூதே: அம்ருதம் வர்ஷிக்கும் கிரணங்களிடைய சந்திரனுக்கு; சந்த்ரோபல ஜலவை: - சந்திர காந்த கல்லில் (சந்திர ஒளியால் ஏற்படும்) இருக்கும் நீர் போலவும்; ஸ்வகீயை: அம்போபி: தன்னுடைய ஜலத்தாலேயே; ஸலிலநிதி - நீருக்கு அதிபதியாகிய சமுத்திரத்துக்கு; ஸெளஹித்யகரணம் - தர்பணம் முதலியவைகளால் த்ருப்தி செய்வது போல;வாசாம் ஜநநி - வாக்குக்களுக்கு உத்பத்தி ஸ்தானமான தாயே; த்வதீயாபி - உன்னுடையதான; வாக்பி: வாக்குகளால் செய்யப்பட்ட; தவ இயம் ஸ்துதி: உன் பற்றிய இந்த ஸ்துதி;


கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!


ஆதவனுக் கவன்கிரணத் தங்கியைக்கொண்
டாலத்தி சுழற்ற லென்கோ
சீதமதிக் கவன்நிலவி னொழுகுசிலைப்
புனல்கொடுப சரிப்ப தென்கோ
மோதியமைக் கடல்வேந்தை அவன்புனலால்
முழுக்காட்டும் முறைமை யென்கோ
நீதருசொற் கவிகொடுனைப் பாடியனது
அருள்பெறுமென் நீதி அம்மே.



*****************************************************************************
ஸ்ரீ ஜகத்குரு சங்கர பகவத்பாத சரணாரவிந்தாப்யாம் நம:
ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுரஸுந்தர்யை நம:

******************************************************************************

2 வருஷங்கள் முன்பு ஆரம்பித்த வலைப்பூ இது. அம்பிகையை சரந்நவராத்ரிக்கு ஆவாஹனம் செய்யும் இன்றைய தினம் முடிவுக்கு வந்திருக்கிறது. தொடர்ந்து இங்கு வந்து பதிவுகளைப் படித்தவர்கள் எல்லோருக்கும், குறிப்பாக ஒவ்வொரு பதிவுகளுக்கும் வந்து வாழ்த்திய குமரன் மற்றும் சகோதரி கவிநயா ஆகியோருக்கு எனது நன்றிகள். கவிராஜரது மொழிபெயர்ப்புக்களை வெளியிட ஆரம்பித்தபின் குமரன் அவற்றை சந்தி பிரித்து பொருள் சொல்கிறார், அதற்கும் எனது நன்றிகள்.


அம்பிகை எல்லோருக்கும் அவரவர் மனோபிஷ்டங்களை அருள பிரார்த்திக்கிறேன்.


சுபமஸ்து

9 comments:

Kavinaya said...

//இந்த கடைசி ஸ்லோகத்தில் ஆசார்யார் தாம் இந்த ஸ்லோகத்தை அம்பாளுடைய அனுக்ரஹத்தினாலேயே செய்ததாகவும், அதில் தாம் ஒரு கெளரவமும் கொள்ளவில்லை என்று தனது விநயத்தை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்.//

அருமை, மௌலி. எல்லாம் அவள் செயல். அனைத்தையும் இயக்குபவள் அவளே. அன்னை பராசக்தியின் திருப்பதங்கள் சரணம் சரணம்.

சௌந்தர்யலஹரியின் சௌந்தர்யத்தை என்னை போன்றவர்களும் அனுபவிக்க வாய்ப்பு தந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள். அன்னையின் அருள் உங்களுக்கும் உங்களை சேர்ந்தவர்களுக்கும் நிறைந்திட வாழ்த்துகள்.

கிருஷ்ண மூர்த்தி S said...

மௌலி, அப்படியே பாவன உபநிஷத்தையும் தொடர்ந்து எழுத முயற்சி செய்யுங்கள்! அம்பிகையை இந்த சரீரத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் எப்படிக் கண்டு எப்படித் தொழுவது என்பதையும் அனுபவிக்கிற ஆனந்த அனுபவம் நம் எல்லோருக்கும் வாய்க்கட்டும்!

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி கவிக்கா. எல்லா பதிவுகளுக்கும் கூடவே வந்து ஊக்குவித்தமைக்கு நன்றிகள்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கிருஷ்ண மூர்த்தி சார். பாவனோபநிஷத் எழுதலாமே!...அதற்கும் அம்பிகை அருளட்டும்.

குமரன் (Kumaran) said...

கவிராசரின் மொழிபெயர்ப்பும் பொருளும்:

சுந்தரி நின் தொண்டர் தமைத் தோய்வதற்கு நாமளும்
இந்திரையும் மலரயன் மால் இடர் உழப்ப இரதியின் கண்
அந்தம் இல் பேரழகோடு கற்பழித்து நெடுநாள் கழியச்
சிந்தையுறு பாசம் போய் சிவமயத்தைச் சேர்குவரால்.

அழகியே உன் அடியவரை மலரில் வாழும் பிரமனும் மாலவனும் வருந்துமாறு நாமகளும் திருமகளும் வந்து அடைகின்றனர்; இரதிதேவியின் கற்பழியுமாறு முடிவில்லாத பேரழகை உன் அடியவர்கள் பெறுகின்றார்கள். வெகு நாள் வாழ்ந்து பாசத்தொடரெல்லாம் நீங்கி சிவமயமாக ஆகிறார்கள்.

பலஷ்ருதி போல் இருக்கிறது இந்தப் பாடல். :-)

ஆதவனுக்கு அவன் கிரணத்து அங்கியைக் கொண்டு
ஆலத்தி சுழற்றல் என்கோ
சீதமதிக்கு அவன் நிலவின் ஒழுகு சிலைப் புனல்
கொடு உபசரிப்பது என்கோ
மோதி அமைக் கடல் வேந்தை அவன் புனலால்
முழுக்காட்டும் முறைமை என்கோ
நீ தரு சொற்கவி கொடு உனைப் பாடி உனது
அருள் பெறும் என் நீதி அம்மே

அம்மா. நீ தரும் சொல்லினைக் கொண்டு கவி பாடி உனது அருளினைப் பெறும் என் முயற்சி (அதில் கிடைத்த வெற்றி), ஆதவனுக்கு அவன் கிரணத்தில் தோன்றிய அக்கினியைக் கொண்டு ஆலத்தி சுழற்றுவது போல என்று சொல்லவா? குளிர்ந்த மதிக்கு அவன் நிலவொளியால் ஒழுகுகின்ற கல்லின் (சந்திரகாந்தக் கல்லின்) நீர்த்துளிகளைக் கொண்டு உபசரிப்பது போல என்று சொல்லவா? அலைகள் எப்போதும் மோதிக் கொண்டிருந்தால் தன் நிலை கூடாமல் குறையாமல் இருக்கும் கடல் வேந்தனை அவனுடைய நீரினைக் கொண்டே திருமுழுக்கு செய்யும் வழிமுறையைப் போன்றதா? என் சொல்லுவேன்.

அடியேனை ஒரு அணிலாக இந்தத் திருப்பணியில் சேர்த்துக் கொண்டதற்கு நன்றி மௌலி.

மெளலி (மதுரையம்பதி) said...

நன்றி குமரன். கூடவே வந்து எல்லாவற்றையும் பொருளுடன் விளக்கியமைக்கு.

உங்களது விநயம், நீங்கள் உங்களை அணிலாகச் சொல்லிக்கொண்டது. என்னளவில் பொறுமையாக எல்லாப் பாடல்களுக்கும் பொருள் சொன்னது மிகப் பெரிய காரியம்...அம்பிகையருள் உங்களுக்கு எப்போதும் உடனிருக்க வாழ்த்துக்கள்.

N.R.Jayaraman said...

ஐயா
உங்கள் வலைப்பூவில் வெளியாகி உள்ள செளந்தர்யலஹரி - கவிதை பிறந்த கதை - 1 மற்றும் 2 என்ற இரண்டையும் நான் என்னுடைய இணையதளத்தில் - http://santhipriyaspages.blogspot.com - வெளியிட்டுக் கொள்ளலாமா? எழுதியது நீங்கள் என்பதற்கான " நன்றி: வலைபூ இணையத்தளம்" முகவரியோடு வெளியிடுகிறேன். அனுமதிப்பீர்களா? என்னுடைய E மெயில் முகவரி nrj_1945@yahoo.com--------------
Thanks
சாந்திப்பிரியா எனும் ஜெயராமன்

மதுரையம்பதி said...

Jayaraman Sir,

You may please use the first 2 posts in your blog, as you mentioned.

N.R.Jayaraman said...

Sir,
Kindly see my blogger http://santhipriyaspages.blogspot.com . I have given acknt to the use of some material from your site. If you have reservation on the way I have used kindly inform me so that I can delete your portions. Shall be thankful for reply.
thanks
Jayaram