ஆனந்த லஹரி - 11 & 12



சதுர்ப்பி: ஸ்ரீகண்டை: சிவ யுவதிபி: பஞ்சபிரபி
ப்ரபின்னாபி: சம்போர்-நவபிரபி மூலப்ரக்ருதிபி:
சதுச்சத்வாரிம்சத்-வஸுதல-கலாச்ர-த்ரிவலய
த்ரிரேகாபி: சார்த்தம் தவ சரணகோணா: பரிணதா:


பல தெய்வங்களுக்கும் யந்த்ரங்கள் உள்ளது, உதாரணமாக சுதர்ஸன யந்த்ரம், சிவசக்ரம், ஷடாக்ஷர யந்த்ரம் என்றெல்லாம் பெயர் இருக்கிறது. ஆனால் அன்னையின் யந்த்ரத்திற்கோ ஸ்ரீ என்ற அடைமொழி மட்டுமே. யந்த்ரம் என்றாலே அது ஸ்ரீ யந்த்ரம் தான் என்பதால் அதனை லலிதா சக்ரம் என்றோ இல்லை மாஹா த்ரிபுரசுந்தரி சக்ரம் என்றோ பெயரில்லை. மற்ற யந்த்ரங்களெல்லாம் அந்த தெய்வங்களின் சக்தியினை பெருக்கும்ஸ்தானங்களாக இருக்க, சக்ரராஜம் எனப்படும் ஸ்ரீசக்ரமோ பராம்பிகையின் வாசஸ்தலம் மட்டுமல்லாது அதுவே அன்னையாக போற்றப்படுகிறது.

இதுபோல் அன்னையின் வழிபாடுமுறை/ தந்த்ரத்திற்கும் ஸ்ரீவித்யை என்றே பெயர். உபாசனாமுறை அல்லது தந்த்ரம் என்பதையே "வித்யை" என்ற சொல் குறிக்கிறது. மற்ற தெய்வங்களுடையதை சொல்லும்போது அத்தெய்வத்தின் பெயருடன் சேர்த்து வித்யை என்றுசொல்வோம் ஆனால் ஸ்ரீவித்யை என்பதில் ஸ்ரீ என்ற சொல் ஸ்ரீதேவி எனப்படும் அன்னை மஹாலக்ஷ்மியை குறிப்பதில்லை, அது லலிதா த்ரிபுர ஸுந்தரியின் வித்யை என்றே பொருள் கொள்ளப்படுகிறது. இந்த ஸ்ரீவித்யையில் சில-பல வித்யாசங்களுடன் பல விதமானமந்த்ரங்கள் இருக்கிறது. அந்த வித்யாசங்களை காட்டும்படி அதன் ப்ரவர்த்தக/உபதேசித்த ரிஷிகளின் பெயர் சேர்த்து லோபாமுத்ரா வித்யா,துர்வாச வித்யா என்றும், மந்த்ரத்தின் முதலெழுத்தை வைத்து காதிவித்யா, ஹாதிவித்யா என்றும் கூறப்படுகிறது.

பரந்தாமனுக்கு பாற்கடல், சிவனுக்கு கயிலாயம், சரி அன்னையின் இடம்?, அதன் பெயர் ஸ்ரீபுரம். அவளுடைய ராஜ்ய ப்ரதேசத்திற்கும்தனி பெயர் கிடையாது. புரம், நகரம் என்றால் ஊர் என்று அர்த்தம். ஸ்ரீநகரம், ஸ்ரீபுரம் என்றால் அது ஜகஜெனனியான லலிதையின் தலைநகரையே குறிக்கும். அதனால்தான் அழியாத ஆத்மானந்தத்தை தரும் அன்னையை "ஸ்ரீ மாதா" என்கிறார்கள் சஹஸ்ர நாமத்தில்.

சதுர்ப்பி: - சதுர் என்றால் நான்கு; ஸ்ரீகண்டை: - சிவ சக்ரங்கள். அதாவது சிவசக்ரமான நான்கும், (பஞ்சபிரபி) - பஞ்ச - ஐந்து சக்தி சக்ரங்களும் சேர்ந்து ஒன்பதாக உள்ள பிரபஞ்சத்தின் (மூலப்ரக்ருதிபி:) மூலகாரணமான தத்வங்களுடன் கூடிய உன் இருப்பிடமான ஸ்ரீயந்த்ரம், எட்டுதளம் (வஸீதல), பதினாறு தளம் (கலாச்ர), மூன்று வட்டங்கள் (த்ரிவலய), மூன்று கோடுகள் (த்ரி-ரோகாபி:) ஆகியவற்றுடன் (சார்த்தம்) கூடி பரிணமிக்கும் (பரிணத) நாற்பத்து நான்காக (சது: சத்வாரிம்சத்) இருக்கிறது.
இந்த ஸ்லோகம் முழுவதும் ஸ்ரீசக்ரத்தின் ரூப விளக்கமே. இதற்கும் மேலாக யாருக்கேனும் தகவல் வேண்டியிருப்பின் தெரிந்தவற்றை தனி மின்னஞ்சலில் தருகிறேன்.




த்வீதீயம் ஸெளந்தர்யம் துஹினகிரிகன்யே துலயிதும்
கவீந்த்ரா: கல்பந்தே கதமபி விருஞ்சி-ப்ரப்ருதய:
யதாலோகெளத்ஸீக்யா அமரலலனா யாந்தி மனஸா
தபோபிர்-துஷ்ப்ராபாமபி கிரிச-ஸாயுஜ்யபதவீம்.

பனிமலையரசன் கன்னிகையே/மகளே! உன் அழகை வர்ணிப்பதற்கு பிரம்மன் முதலான மஹாகவிகளாலும் இயலாது. ரம்பை, ஊர்வசி முதலிய தேவதைகள் உன் அழகை பார்க்க வேண்டுமென்ற ஆவலால், விரதங்களைஅனுஷ்டித்து, சிவஸாயுஜ்யத்தை மனத்தால் அடைகின்றனர். ஏன் சிவ சாயுஜ்யத்தை அடைகிறார்கள் என்றால், அவர்கள் சாயுஜ்யத்தின் மூலம் சிவனில் கலந்து, சிவன் மூலமாக அன்னையின் அழகினை காண முயல்கிறார்களாம்.

அமரலலனா - தேவ ஸ்தீரிகள் ; யதாலோகெளத்ஸீக்யா - யத் ஆலோக ஓளத்ஸுக்யாத் - எந்த செளந்தர்யத்தை காணும் ஆசையால்;தபோபி: துஷ்ப்ராபாமபி - எவ்வளவு தவம் செய்தாலும் கிடைக்கப் பெறாதது; கவீந்த்ரா - கவி ஸ்ரேஷ்டர்கள்; கல்பந்தே - கற்பனையில்; கதமபி - எப்படியெல்லாமோ.