செளந்தர்யலஹரி - கவிதை பிறந்த கதை-1

குமரன், கே.ஆர்.எஸ், கண்ணன் ஆகியோருக்கு எனது முதற்கண் நன்றிகள். அவர்களது ஊக்குவிப்பே இந்த வலைப்பூவுக்கு மூலம். அவர்களைப் போன்ற எழுத்தாற்றல் எனக்கு இல்லை எனினும், அவர்கள் அவ்வப்போது வந்து செம்மைப்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்புடனும், மற்ற ஆன்மிக பந்துக்களான கீதாம்மா, வல்லியம்மா, திராச போன்ற பெரியோர்கள் வழிகாட்டுதலும் கிடைக்கும் என்ற நினைவுடனே, இதனைத் தொடங்குகிறேன். குமரனின் சொல்படி இதனை தனி வலைப்பூவாக கொண்டு செல்ல இருக்கிறேன்.


இங்கு இந்த பதிவுகளுக்கு ஆதாரமாக ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துப் பதிப்பாக திரு.அண்ணா அவர்கள் எழுதிய புத்தகமும், பாஸ்கர ராயரின் வழித்தொன்றலான கிருஷ்ண தீக்ஷதரின் புத்தகமும், பரமாச்சாரியாரின் மொழிகளும் எடுத்தாள உத்தேசித்துள்ளேன்.


பிறைதவழும் எழில்தோன்றப் பிறங்குகதிர் வெண்கோட்டான்

செறிகதிர்செய் தடங்குடுமிச் செம்பொன்மால்வரை வாய்ப்ப

மறைபுகழும் சவுந்தரிய லகரியினை வகுத்தெழுதும்

விறல்கெழுமு வேழமுகன் விரைமலர்த்தாளினை தொழுவாம்.

இங்கு நான் கவிதை பிறந்த கதை என்று இப்பதிவிற்கு பெயரிட்டாலும் செளந்தர்யலஹரி வெறும் கவிதையல்ல. இது சிறந்த மந்திர சாஸ்திரமாக நாடெங்கிலும் போற்றப்படுகிறது. லிங்க புராணத்தில்விநாயகர் வாழ்த்தில் இது மகாமேரு மலையில் விநாயகரால் எழுதப்பட்டதென்று கூறப்படுகிறது.
மேருமலையில் எழுதிவைத்தவர் புஷ்பதந்தர் என்றும், ஆனால் அதற்கு முன்பே கையிலையில் சிவாலயத்தின் மதிற்சுவரில் எழுதப்பட்டிருந்ததாகவும் மேருமலையில் இருந்ததை கெளட பாதர்கிரகித்துப் பின்பு ஆதிசங்கரருக்கு உபதேசம் செய்ததாகவும் செளந்தர்ய லகரியினை தமிழாக்கிய வீரை கவிராஜ பண்டிதர் கூறியுள்ளார்.


ஆனால் இன்னுமொரு கருத்தென்னவென்றால், ஆதிசங்கரரே இதனை கைலாசத்திலிருந்து இதனை கொண்டு வந்தார் என்றும் ஆனால் அவருக்கு கிடைத்தது முதல் 41 ஸ்லோகங்கள் (ஆனந்த லஹரி)மட்டுமே என்றும், எஞ்சிய 59 ஸ்லோகங்களையும் சங்கரர் தாமே எழுதி பூர்த்தி செய்த்தாக சொல்வர். எப்படியாகினும், இது ஆதிசங்கரரால் உலகிற்கு தந்தருளப்பட்டதென்பதில் எந்த மாறுபட்ட கருத்துக்களும் இல்லை. இவ்வாறாக 41 ஸ்லோகங்களை கையிலை சங்கரனும், 59 ஸ்லோகங்களை காலடி சங்கரனும் தந்தமகோன்னதம் மிக்கது இந்த செளந்தர்யலஹரி.


முதல் 41 மந்திர சாஸ்த்திரீயமானது. இதனை கொஞ்சம் பேர்தான் ரொம்பவும் கடுமையான நியமங்களுடன்அனுஸந்தானம் செய்ய முடியும். இந்த 41ல் மந்திர யோகம், குண்டலினி யோகம், ஸ்ரீ சக்ர ஆராதனை போன்றவை தரப்பட்டுள்ளது. ஆனால் பாராயணம் செய்யும் போது இரண்டையும் சேர்த்து 100 ஸ்லோகங்களையும் செய்வதேமுறை.


சரி, ஆச்சாரியாருக்கு இது எப்படிக்கிடைத்தது, ஏன் அவர் 59 ஸ்லோகங்களை தானே செய்ய வேண்டியதாயிற்று என்பதைஅடுத்த பதிவில் பார்க்கலாமா?