செளந்தர்ய லஹரி - 42

போன இடுகையில் சாக்த உபாஸனையில் இருக்கும் இரு பெரும் பிரிவுகளைப் பற்றிய சில விஷயங்களைக் கண்டோம். இவ்விடுகையில் செளந்தர்ய லஹரி பகுதிக்குச் செல்லும் முன் தமிழில் செளந்தர்ய லஹரியை மொழியாக்கம் செய்த கவிராஜ பண்டிதர் என்பவரைப் பற்றிச் சிறிது தெரிந்து கொள்வோம்.

இவர் பாண்டிய நாட்டில் வீரை [இப்போது என்ன பெயர் என தெரியவில்லல] என்ற ஊரில் வசித்தவர். சிறு-பிராயம் முதலே அம்பிகையின் உபாசனையில் ஈடுபட்டு அவளுடைய தரிசனம் கிடைக்கப் பெற்றவர் என்று தெரிகிறது. தக்ஷிணம், வாமம் என்கிற இரண்டு வித உபாசனைகளில், இவர் வாம மார்க்கத்தை அவலம்பித்தவர்/உபாசித்தவர் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அம்பிகையின் திருவருளால் விசேஷமான கவித்துவம் வாய்க்கப் பெற்று விளங்கியிருக்கிறார். இவர் வராஹி-மாலை, ஆனந்த-மாலை போன்ற நூல்களை எழுதியிருக்கிறார்.

இவருடைய செளந்தர்ய லஹரி மொழியாக்கமானது ஏற்கனவே இருக்கும் ஆனந்தலஹரி-செளந்தர்ய லஹரி என்னும் பிரிவினை அனுசரித்தே இருக்கிறது. இம்- மொழியாக்கம் சம்ஸ்கிருதத்தின் மூலத்தை அப்படியே ஒட்டி இருப்பது விசேஷம். இது மிக எளிதாகவும், படிக்கப்படிக்க இன்பமும், அன்னையின் அருளையும் உணரச்செய்கிறது என்றால் மிகையல்ல. இந்த மொழிப் பெயர்ப்புக்கு சைவ எல்லப்ப நாவலர் என்பவர் உரையும் எழுதியிருப்பதாகத் தெரிகிறது.

இனி ஒவ்வொரு செளந்தர்ய லஹரி இடுகையின் முடிவிலும் இந்த தமிழாக்க பாடல்களும் இடம் பெறும். இடுகையின் முடிவில் இந்த தமிழாக்கத்தைச் சொல்வதால் தமிழை பின் தள்ளுவதாக அர்த்தம் கற்பிக்காது, மூலத்தைச் சொல்லி அதன் மொழிப் பெயர்ப்பைச் சொல்லும் மரபாக மட்டுமே பார்க்க வேண்டுமென வேண்டுகிறேன்.

41ஆம் ஸ்லோகம் தனி இடுகையாக இருப்பதால் இவ்விடுகையில் 42ஆம் ஸ்லோகத்தை மட்டும் பார்க்கலாம்.கதைர் மாணிக்யத்வம் ககநமணிபி: ஸாந்த்ரகடி
தம்கிரீடம் தே ஹைமம் ஹிமகிரிஸுதே கீர்த்தயதி ய:
ஸ நீடேயச்சாயாச் சுரணசபளம் சந்த்ரசகலம்
தநு: செள்நாஸீரம் கிமிதி ந நிபத்நாதி தஷணாம்

மலையரசன் மகளே!, த்வாதச ஆதித்யர்களே மாணிக்கங்களாக இழைக்கப்பட்ட உன்னுடைய தங்கக் கிரீடத்தை எந்த பக்தனாவது வர்ணிக்கையில், உன் கிரீடத்தில் பதிந்திருக்கும் ரத்னங்களின் காந்தியால், [அந்த கிரீடத்தில் இருக்கும்] சந்திரன் பல நிறமுடையதாக தோன்றுவதைக் காணும் போது சந்த்ரனை இந்திர தனுஸோ என்று சந்தேகித்து அப்படியே வர்ணிக்கக்கூடும்.

ஈஸ்வரன் தன் தலையில் சந்திரனை அணிந்திருப்பது போல அம்பாளும் அணிந்திருக்கிறாள். ஆக அம்பாளும் சந்த்ரமெளலி தான். அன்னைக்கு "அஷ்டமிச் சந்த்ர விப்ரபா" என்ற நாமம் இருப்பதை நாம் அறிவோம். இவ்வாறாக அன்னையின் கிரீடத்தில் உள்ள சந்த்ரன் வெண்மையாக இருந்தாலும், அவளது கிரீடத்தில் இழைக்கப்பட்டிருக்கும் மற்ற நவரத்னங்களான பன்னிரு ஆதித்யர்களது ஒளியால் பல வர்ணங்களில் ஜகஜ்வலிக்கும் இந்திர தனுசு போன்று காக்ஷியளிக்கிறதாம். இதுவே "ஐந்த்ரஸ்யேவ சராஸனஸ்ய தததீ மத்யேலலாடம் ப்ரபாம்" என்று லகுஸ்துதியில் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கே த்வாதச ஆதித்யர்கள் அம்பாளுக்கு அருகில் இருந்து சேவை செய்கிறார்கள் என்பது குறிப்பு.


ஹிமகிரிஸுதே - மலையரசன் மகளே; மாணிக்யத்வம் - மாணிக்கங்களாக; கதை: - இருக்கும்; ககநமணிபி: - ஆதித்யர்களால்; சாந்த்ர கடிதம் - நெருக்கமாக இழைத்த; தே - உன்னுடைய; ஹைமம் - தங்கம்; நீடேயே - கிரீடத்துக் குவளைப்பகுதியில் இருக்கும் ரத்னக்கள்; ச்சாயா - காந்தி/ஒளி; ச்சுரண - வ்யாபிக்கிறது/பரவுகிறது; சபளம் - பல நிறங்களாக தெரிதல்; சந்த்ர சகலம் - சந்த்ர பிரபை/ரேகை; செளநாஸிரம் தனு: - இந்த்ர வில்; திஷணாம் - யூகம்; ந நிபத்னாதி கிம் - கொள்ளமாட்டானா?.

இனி வருவது கவிராயரது செய்யுள்,

அந்தர மணித்தபனர் பலமணியின் வடிவெடுத்
தமருமுன் தம்பொன் முடிமேல்
இந்துகலை நவமணியி னொழுகுபல நிறமடைந்து
இலகுமதி சயவ டிவினாற்
சந்த்ரகலை நன்றுநன் றென்பர்சிலர் அன்றன்று
சந்த்ரகலை இந்த நிறமோ
இந்த்ரசிலை இந்த்ரசிலை யென்பர்சில ராதலால்
யாதென வழுத்த உமையே.

ஆனந்த லஹரி - 41

தவாதாரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்யபரயா
நவாத்மாநம் மந்யே நவரஸமஹாதாண்டவநடம்
உபாப்யாம் ஏதாப்யாம் உதயவிதிமுத்திச்ய தயயா
ஸநாதாப்யாம் ஜஜ்ஞே ஜநகஜநநீமத் ஜகதிதம்

தாயே!, லாஸ்யத்தில் ப்ரியமுடைய மஹா பைரவியாகிய உன்னுடன் நவரஸங்களுடன் கூடிய மஹாதாண்டவத்தைச் செய்யும் நவாத்மகனான ஆனந்த பைரவராகிய ஸதாசிவனை என்னுடைய மூலாதார சக்ரத்தில் வைத்து தியானித்து நமஸ்கரிக்கிறேன். ப்ரளயகாலத்தில் நாசமடைந்த லோகங்களை உஜ்ஜீவிக்க வேண்டும் என்ற கருணையுடன் நீங்கள் இருவரும் ஸ்ருஷ்டி தாண்டவம் செய்வதால் இந்த உலகானது உங்களிருவரையும் மாதா-பிதாவாக கொண்டது.

ஷட்சக்ரங்கள் மூலாதாரத்திலிருந்து ஆஜ்ஞா வரையிகிருப்பதை சொல்வது க்ரமம், ஆனால் இங்கே கடந்த ஆறு ஸ்லோகங்களில் அவற்றைச் சொல்கையில் ஆஜ்ஞா சக்ரத்திலிருந்து ஆரம்பித்து மூலாதாரத்தில் முடித்ததன் காரணம் என்ன என்று பார்க்க வேண்டும். அந்த சக்ரங்களின் தத்வங்கள் ஆஜ்ஞாவில் ஆரம்பித்துச் சொல்லுகையில் மனஸ், ஆகாசம், வாயு, அக்னி, ஜலம், ப்ருதிவி என்று வரிசை வருகிறது. இந்த வரிசையானது "ஆத்மன ஆகாஸ் ஸம்பூத: ஆகாசாத் வாயு: வாயோரக்னி: அக்னேராப: அத்ப்ய: ப்ருதிவி" என்ற ச்ருதி வாக்கியத்தை ஒட்டி வருகிறது என்பர். அதாவது ப்ருதிவியானது ஜலத்திலிருந்தும், ஜலமானது அக்னியிலிருந்தும், அக்னி வாயுவிலிருந்தும், வாயு ஆகாசத்திலிருந்தும், ஆகாசம் ஆத்ம தத்வத்திலிருந்தும் வந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பஞ்சவிம்சதிகள் ப்ருதிவியிருந்து செல்கையில் ஸ்தூலமாகவும் பின்னர் ஸுக்ஷ்மத்திலும் மாறுகிறது. இதனால்தான் மயிம் மூலாதாரே என்ற 9ஆம் ஸ்லோகத்திலும் மாற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த ஸ்லோகத்தில் மூலாதாரத்தில் அம்பிகையை பரமசிவனுடன் சேர்த்து உபாசிக்கும் முறை சொல்லப்பட்டிருக்கிறது. அம்மூலாதாரத்தில் இருக்கும் சக்திக்கு குண்டலினீ என்று பெயர். அம்பாளை உபாசிக்கும் முறையில் பல விதங்கள் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றில் முக்கியமானவை இரண்டு. அதாவது, தக்ஷிண மார்க்கம், வாம மார்க்கம் என்பன அவ்விரண்டும். இவை முறையே ஸமயமார்க்கம், கெளல மார்க்கம் என்றும் வழங்கப்படுகிறது. கெளல மார்க்கத்தில் பூர்வ கெளலம், உத்தர கெளலம் என்று இருமுறைகள் உண்டு. அம்பாளது பூஜையானது அந்தர்முகமாகவே செய்யப்பட வேண்டும் என்றும், அதிலும் அம்பாளை சஹஸ்ராரகமலத்துக்கு அழைத்து வந்து அங்கே பூஜிக்க வேண்டும் என்றும் ஸமயிகள் கூறுவர். இவ்வாறு செய்ய இயலாதோர், பஹிர்முகமாக ஸ்ரீசக்ரம், மேரு போன்றவற்றில் பாவனையாக பூஜிப்பர்.

கெளல மார்க்கத்தில் ஸ்ரீசக்ரத்தில் த்ரிகோணத்தை மட்டுமே பூஜிப்பர். கெளல மார்கத்தவர் மூலாதாரத்தில் இருக்கும் த்ரிகோணத்தையே பிந்து ஸ்தானமாக பூஜிப்பதால் அங்கிருக்கும் குண்டலினீ சக்தியே ப்ராதான்யம், இதனால்தான் இச்சக்திக்கு கெளலினீ என்றொரு பெயர். குண்டலினீ தனது நித்திரையை விட்டு எழும்பினாலே கெளலர்களுக்கு முக்தி. இதிலிருக்கும் பூர்வ-உத்தர கெளலம் பற்றி பின்னர் விளக்கமாக பார்க்கலாம்.

இவை எல்லாமே ஸ்ரீவித்யை என்று சொல்லப்பட்டாலும் இதனை உணர்ந்து, உபாசித்து உயர்வினை எய்தியவர்கள் 12 பேர். அவர்கள் ஒவ்வொருவரும் மஹிமை வாய்ந்த இவ்வித்யை வேதங்களின் வேவ்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து உபாசித்துள்ளதால் இவ்வித்யை 12 மந்த்ர த்ரஷ்டாகளால்/ரிஷிகளால் வழங்கப்படுகிறது. அவர்கள் அகஸ்தியர், லோபாமுத்ரா, துர்வாசர், மனு, சந்திரன், மன்மதன், குபேரன், அக்னி, சூர்யன், இந்திரன், ஸ்கந்தன், சிவன் ஆகியவர்கள். இவர்கள் சொல்லிய வித்தைகள் இதுவரை வந்த ஸ்லோகங்களில் (32 முதல்) ஆங்காங்கே மறைமுகமாக சொல்லப்பட்டிருக்கிறது.

முன்னர் சொல்லியபடி இதுவரையில் சொல்லப்பட்ட 41 ஸ்லோகங்கள் ஆனந்த லஹரி என்றும் இனி வரும் 59 ஸ்லோகங்கள் செளந்தர்ய லஹரி என்றும் சொல்லப்படுகிறது. இதுவரையில் சொல்லப்பட்டது மந்த்ர சாஸ்திரம், உபாசனா-க்ரமம் போன்றவற்றைச் சொல்லியது. இனி வருவது அம்பாளின் விசேஷ செளந்தர்யத்தை அழகாகச் சொல்லும். இந்த க்ரந்தத்திற்கு செளந்தர்ய லஹரி என்ற பெயர் இனிவரும் பகுதியாலேயே எற்பட்டிருக்கிறது. இந்த இரண்டாம் பாகம் (59 ஸ்லோகங்கள்) தான் ஆதிசங்கர பகவத் பாதாள் பண்ணினது. இந்த பகுதியினை நவராத்திரியில் ஆரம்பிக்கலாம்.

ஆனந்த லஹரி - 39 & 40தவ ஸ்வாதிஷ்டானே ஹுத்வஹ்மதிஷ்டாய நிரதம்
தமீடே ஸம்வர்தம் ஜனனி மஹதீம் தாம் ச ஸமயாம்
யதாலோகே லோகான் தஹதி மஹதி க்ரோதகலிதே
தயார்த்ரா யா த்ருஷ்டி: சிசிரமுபசாரம் ரசயதி

தாயே! உங்களிருவரையும் (சிவ-சக்தி) என்னுடைய அக்னி தத்வ ஸ்தானமாகிய ஸ்வாதிஷ்டான சக்ரத்தில் காலாக்னி ருத்ரராகவ்ய்ம், அந்த காலாக்னியின் ஜ்வாலா ரூபிணியாகவும் த்யானம் செய்து நமஸ்கரிக்கிறேன். ருத்ரனின் கோபத்தோடு கூடிய காலாக்னியானது ஸமஸ்த லோகங்களையும் தஹிக்கும் போது, கருணையால் நனைந்த சந்திரகலாத்மகமான உன்னுடைய பார்வையானது லோகங்களுக்கு சீதளத்தை தருகிறது.

ஸ்வாதிஷ்டான சக்ரத்தை அக்னிஸ்தானம் என்பர். அங்கே இருக்கும் அக்னியை ப்ரளயகால அக்னியாக பாவித்து, சிவ-தம்பதியினரை ப்ரளயகால ருத்ரனாகவும், ருத்ராணியாகவும் உபாசனை செய்கிறார் இங்கே. ப்ரளயகால அக்னிக்கு ஸம்வர்த்தாக்னி என்று பெயர். அந்த ஸம்வர்த்தாக்னியின் ஜ்வாலையை ருத்ராணி என்று அம்பாளாகச் சொல்கிறார். அம்பாளை ஜ்வாலையாகச் சொன்னாலும் அவளது பார்வை கருணையோடு கூடிய குளிர்ச்சி தருகிறதாம்.

ஹுதவஹம் - அக்னிதத்துவத்தை; தம் ஸம்வர்த்தம் - பிரசித்தியான ப்ரளயாக்னி; அதிஷ்டாய - பாவித்து/ஆச்ரயித்து; நிரதம் - இடைவிடாது; ஈடே - ஸ்துதிக்கிறேன்; ஸமயாம் - ஸமயா என்னும் சக்தியை; மஹதி க்ரோத கலிதே - மிகவும் கோபத்துடன் கூடிய; யத் ஆலோகே - யாருடைய பார்வையானது; தஹதி - கொளுத்துகிறதோ; தயார்த்ரா - கருணையால் நனைந்த; யா த்ருஷ்டி: - எவருடைய பார்வையானது; சிசிரமுபசாரம் - சிசிரம்+உபசாரம் - சைத்ரோபசாரம்; ரசயதி - செய்கிறது.
தடித்வந்தம் சக்த்யா திமிரபரிபந்தி ஸ்புரணயா
ஸ்புரந் நாநாரத்ன பரிணத்தேந்த்ர தநுஷம்
தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக சரணம்
நிஷேவே-வர்ஷ்ந்தம் ஹரமிஹிரதப்தம் த்ரிபுவநம்

அம்மா!, என்னுடைய ஜலாத்மகமான மணிபூரக சக்ரத்தில் சிவனை வர்ஷா-காலத்து மேகமாகவும், உன்னை அதில் தோன்றும் மின்னல் கொடியாகவும் தியானித்து நமஸ்கரிக்கிறேன். அங்கிருக்கும் தமஸாகிய இருட்டைப் போக்கும் மின்னல் ஒளியாக நீ இருக்கிறாய். நீ அணிந்திருக்கும் நானாவித ஆபரணங்களுடைய ஒளியில் அந்த கருமேகமானது இந்திர தனுஸுடன் கூடியது போல் இருக்கிறது. ப்ரளயகால ருத்ரனால் தஹிக்கப்பட்ட லோகங்களை தனது மேகங்களைக் கொண்டு வரிஷித்து குளிரச் செய்கிறது.


மணிபூரக சக்ரமானது இருள்சூழ்ந்த இடம், தாமிஸ்ர லோகம். இங்கு அன்னையை மின்னல் கொடி போன்றவள் என்றாலும், அவள் ஷண மாத்திரம் வந்து போகும் மின்னலைப் போல் இல்லாது, ஸ்திர செளதாமினி ரூபமாக இருக்கிறாள் என்று சஹஸ்ர நாமத்தில் சொல்லப்படுகிறது.

தவ - உன்னுடைய; மணிபூரைக சரணம் - மணிபூரக சக்ரத்திலே முக்யமான நிலையாக உடையது; திமிரபரிபந்தி ஸ்புரணயா - அங்கேயிருக்கும் இருட்டுக்கு சத்ருவாகும்; சக்த்யா - சக்தியினால்; தடிந்வந்தம் - மின்னலுடன் கூடியதுமான; ஸ்புரந் நாநாரத்ந பரண பரிணத்த இந்த்ர தனுஷம் - ப்ரகாசிக்கின்ற நானாவிதமான ரத்னாபரணங்களாகிய இந்த்ர தனுசுடன் கூடியதான; ச்யாமம் - கருப்பு வர்ணமுடையதும்; ஹர மிஹிர தப்தம் - ருத்ரனாகிய ப்ரளயகால ஸுர்யனால் தஹிக்கப்பட்ட; வர்ஷந்தம் - வர்ஷிக்கிற; நிஷேவே - நமஸ்கரிக்கிறேன்.


அடுத்த இடுகையுடன் (41ஆம் ஸ்லோகம்) ஆனந்த லஹரி முடிவு பெற்று செளந்தர்ய லஹரி அதற்கடுத்த இடுகைகளில் வர ஆரம்பிக்கும்...