ஆனந்த லஹரி - 15 & 16சரஜ்-ஜ்யோத்ஸ்னா-ஸுத்தாம் சசியுத ஜடாஜுட மகுடாம்
வர-த்ராஸ-த்ராண-ஸ்படிக குடிகா-புஸ்தக கராம்
ஸக்ருந்ந த்வா நத்வா கதமிவ ஸதாம் ஸந்நிதததே
மது-க்ஷிர-த்ராக்ஷா-மதுரிம-துரீணா: பணிதயா


அன்னையே! நீ சரத்காலத்துச் சந்திரனைப் போல் வெளுப்பானவள். பிறைச்சந்திரனையும், நவரத்ன கிரீடத்தையும் முடியில் தரிப்பவள். அபய-வரத முத்திரைகளையும், ஸ்படிகமணி மாலையினையும், புஸ்தகத்தையும் கைகளில் தாங்கியவள். இவ்வாறாக இருக்கும் உன்னை ஒருதரம் வணங்கும் பக்தர்களுக்கும் தேன், பால், திராக்ஷை போன்றவற்றை விட அதிகமாக இனிக்கும் சொல் நயங்கள் எப்படி வராது போகும்?.


இந்த பாடலில் தேவியின் (சரஸ்வதி ரூபம்) சுத்த சத்வ வடிவினைப் பற்றி சொல்லியிருக்கிறார் சங்கரர். சரத்-ஜ்யோத்ஸ்னா சுத்தாம் - ரஜோ மற்றும் தமோகுணம் அற்ற சுத்த ஸ்த்வத்தை குறிக்கும் நிறம் வெண்மை. இதனால் தான் சரஸ்வதிக்கு ஏற்ற நிறமாக வெள்ளை சொல்லப்பட்டு இருக்கிறது. சசியுத ஜடாஜுட மகுடாம் - சந்திர கலையினை முடியில் சூட்டியிருப்பதால் பராசக்தியின் வடிவிலிருந்து இது வேறு அல்ல என்பது தெரிகிறது. இது மஹா சரஸ்வதியின் வடிவம். வர-த்ராஸ-த்ராண - அபய, வரத முத்திரைகள்; ஸ்படிக-குடிகா - ஸ்படிகமணி மாலை; ஸக்ருத் - ஒரு முறை; நத்வா - நமஸ்கரித்தல்; பணிதய: - சொற்றோடர்கள்; கதமிவ - எப்படி; ஸ்ந்நித ததே - சித்திக்காமல் போகும்?.அன்னை லலிதா மாஹா த்ரிபுர சுந்தரி தன்னிலிருந்து முதலில் தோற்றுவித்தது மூன்று சக்திகள். அவை முறையே மஹாகாளி, மஹாலக்ஷ்மி, மஹாசரஸ்வதி. இந்த மூன்று வடிவங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் இரண்டு வடிவங்கள் தோன்றியதாம். மஹாலஷ்மியிடமிருந்து ப்ரம்மாவும், லஷ்மியும் (சிவப்பு வர்ணம்), மஹாசரஸ்வதியிலிருந்து விஷ்ணுவும், பார்வதியும் (நீல வர்ணம், இப்போது தெரிகிறதா விஷ்ணுவும், பார்வதியும் ஏன் சகோதர-சகோதரி பாவம் என்று?), மஹாகாளியிடமிருந்து சிவனும் சரஸ்வதியும் (வெண்மை நிறம்) கொண்டு தோன்றினர் என்று தேவீ மஹாத்மீயம் கூறுகிறது. 'ஸர்வ வர்ணாத்மிகே'ன்னு காளிதாசர் ச்யாமளா தண்டகத்தில் சொல்வது இதனால்தான்.லக்ஷ்மி அஷ்டோத்திரமாகட்டும், சரஸ்வதி அஷ்டோத்திரமாகட்டும், 'ப்ரம்ம-விஷ்ணு சிவாத்மிகாயை'என்று ஒரு நாமாவளி வருவதை கவனித்து இருக்கலாம். அன்னை லலிதாவே ப்ரம்ம ரூபமாக ஸ்ருஷ்டி கார்த்தாவாகவும், விஷ்ணு ரூபமாக கோப்த்ரியாகவும், ருத்ர ரூபமாக ஸம்ஹார மூர்த்தியாகவும் விளங்குகிறாள். இதனால்தான் ப்ரம்ம-விஷ்ணு-சிவாத்மிகா.
கவீந்த்ராணாஞ் சேத: கமலவன பாலாதப-ருசிம்
பஜ்ந்தே யே ஸந்த: கதிசிதருணா மேவ பவதீம்
விரிஞ்சி-ப்ரேயஸ்யாஸ்-தருணதர-ச்ருங்காரலஹரீ
கபீராபிர்-வாக்பிர்-விதத்தி ஸதாம் ரஞ்ஜனமமீ


அன்னை சிறந்த கவிகளின் மனமாகிய தாமரை மலர்களை மலரச்செய்யும் இளம் வெய்யிலில் தோன்றும் சிவப்பு நிறத்தவள். அன்னையைப் பணியும்
எல்லோருக்கும் சரஸ்வதி தேவியின் யெளவன சிருங்கார ரஸத்தின் பிரவாகம் போன்ற சொல் வன்மை உண்டாகி அவர்கள் தம்மை சுற்றி உள்ளவர்களை மகிழ்விப்பார்கள்.


முந்தைய ஸ்லோகத்தில் வெண்மை நிறத்தினளாக அன்னையை கூறிய ஆச்சார்யார், இங்கு சிவப்பு நிறத்தவள் என்கிறார். அதுவும் எப்படி அருணோதய சூர்யன் போன்ற, அதாவது சூரியன் உதிக்கும் போது வரும் சிவந்த நிறமாம். இதைத்தான் 'உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம்' என்கிறார் அபிராமி பட்டர். வெண்மை எப்படி சத்வ குணமோ அது போல சிவப்பு ரஜோ குணத்தை குறிப்பது. ஏன் சிவப்பு என்பது இங்கு ரஜோ குணத்தை குறிக்க வேண்டும்?. ஏனென்றால் பின்வரும் வரியில் அன்னை சிருங்கார ரஸத்தை தருவதாக கூறுவதால். சிருங்கார ரஸம் என்பதும் ரஜோகுணத்தை குறிப்பதுதான். 'அருணாம் கருணா-தரங்கிதாஷாம்' என்றுதான் அன்னையின் தியான ஸ்லோகமே ஆரம்பிக்கிறது.ஆமாம்! இப்படி லலிதையின் வர்ணமான சிவப்பினை கூறி, உடனேயே விரிஞ்சி-ப்ரேயாஸ் என்று சரஸ்வதியை குறிக்க காரணம்?. அருண சரஸ்வதி
என்று அன்னைக்கு ஒரு ரூபம் உண்டு. அந்த ரூபத்தில் அன்னை காமாக்ஷி போல பாசாங்குசமும், தனுர்-பாணமும் நான்கு கைகளில் ஏந்தி, இன்னும் நாலு கைகளில் ஸரஸ்வதிக்கு உரிய அஷமாலை, புஸ்தகம், வர-அபயம் கொண்டும் இருக்கிறாளாம். அந்த ரூபத்தையே இங்கு மறை பொருளாக சொல்லியிருக்கிறார்.கவீந்த்ராணாம் - கவியரசர்களின்; சேத: கமல வன-பால ஆதப ருசிம் - சித்தமாகிய தாமரை வனத்திற்கு உதய சூரியனாய் பிரகாப்பதால்; அருணாம் ஏவ (அருணா மேவ) - அருணா என்று பெயர் பெற்றவளும்; பவதீம் - உன்னை; பஜந்தே - பூஜிக்கிறவர்கள்; விரிஞ்சி ப்ரேயஸ்யா: - ப்ரம்ம பத்னியான சரஸ்வதியின்; தருண-தர - செழிப்பான; ச்ருங்கார லஹரி - சிருங்கார ரஸ பிரவாஹம்; கபீராபி: - கம்பீரமான; வாக்பீ - வாக்குகளால்; ரஞ்ஜனம் - மகிழ்ச்சி; விதததி - அளித்தல்

ஆனந்த லஹரி - 13 & 14நரம் வர்ஷீயாம்ஸம் நயநவிரஸம் நர்மஸு ஜடம்
தவாபாங்காலோகே பதித-மநுதாவந்தி சதச:
கலத்வேணீபந்தா: குசகலச-விஸ்ரஸ்த-ஸிசயா
ஹடாத் த்ருட்யத்-காஞ்ச்யோ விகலித-துகூலா யுவதய:


தேவி! உன்கடைக்கண் பார்வையில் அகப்பட்டவன் கிழவனாகவோ, அல்லது பார்ப்பதற்கு குரூபியாகவோ அல்லது சக்தியற்றவனாகவோ இருந்தாலும் அழகிய யெளவனப் பெண்கள் வெட்கத்தை விட்டு அவனைப் பின் தொடரக்கூடிய வசிய சக்தியினை நீ அளிக்கிறாய். அதாவது அன்னையின் கடைக்கண் பார்வையே வசிய சக்தியினை ஏற்படுத்தக் கூடியதாம். இங்கு கூறப்பட்ட பெண்கள், சாதாரணமாக காமசவப்பட்டு அவனை பின் தொடருவதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. கீதையில் கிருஷ்ணன் சொன்னதை இங்கு நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அதாவது ஸ்தீரிகளுள் நான், கீர்த்தி, செல்வம், வாக்தேவதை, ஞாபக சக்தி, திடசித்தம், பொறுமை ஆகிய சக்திகளாக இருப்பதாக கிருஷ்ணன் சொல்கிறான். எனவே மேலே யெளவன பெண்கள் என்று கூறுவது இந்தமாதிரியான யெளவன பெண்ணுருவம் கொண்ட சக்திகள் அவனை அடையும் என்றே கருத வேண்டும். மேலும், தேவியின் கடாக்ஷம் பெற்ற எவனும் காமேஸ்வர அம்ஸமுடையவனாகிறான். எனவே, கண்ணன் சொன்ன அந்த சக்திகள் தேவியின் கடைக்கண் பார்வை பெற்றவனை தேடி வந்து சேர்வதில் தவறொன்றும் இல்லை.

இதை பரமாச்சாரியார் சொல்லும் போது பின்வருமாறு சொல்கிறார். "ஸகல விஷயங்களிலும் நமக்குள்ள சித்த விகாரங்கள் எல்லாம் நிவிருத்தியாக வேண்டும் என்பதற்காகத்தான் கரும்பு வில்லையும், புஷ்பபாணங்களையும் அன்னை தன் கையில் வைத்துக் கொண்டு இருக்கிறாள். அவளது கடாக்ஷம் ஏற்படுமானால் எல்லாவற்றையும் சமமாக பார்க்கும் சக்தி, எந்த விதத்திலும் மோகம் ஏற்படாத நிலை உண்டாகிவிடும்".

அபாங்க-ஆலோகே - கடைக்கண் பார்வையில்; நரம் - மனிதன்;
வர்ஷியாம்ஸம் - வயதானவன்; நயனவிரஸம் - பார்க்க சகிக்காத;
ஜடம் - மூடன்; நர்மஸு - சிற்றின்ப விளையாட்டுக்கள்;
களத்-வேணீ-பந்தா: - கலைந்த கூந்தலுடைய பெண்கள்;
குசகலச-விஸ்ரஸ்த - மேலாடை விலகிட்டவர்களாக;
ஹடாத்-த்ருட்யத்-காஞ்ச்ய: - பரபரப்பில் ஒட்டியாண பூட்டுக்கள் கழல; சதச: - நூற்றுக்கணக்கானவர்கள்; அனுதாவதந்தி - பின் தொடர்கிறார்கள்.க்ஷிதெள ஷட்பஞ்சாஸத்-த்விஸமதிக-பஞ்சாஸ-துதகே
ஹுதாஸே த்வாஷஷ்டிஸ் சதுரதிக பஞ்சாஸ-தநிலே
திவி த்வி: ஷட்த்ரிம்ஸந்-மநஸிச சதுஷ்ஷஷ்டிரிதி யே
மயூகாஸ்-தேஷா-மப்யுபரி தவ பாதாம்புஜ-யுகம்


தாயே, ப்ருதிவீ தத்துவமான மூலாதாரத்தில் 56 கிரணங்களும்,
ஜல தத்துவமாகிய மணிபூரகத்தில் 52 கிரணங்களூம்,
அக்னி தத்துவமாகிய ஸ்வாதிஷ்டானத்தில் 62 கிரணங்களும்,
வாயு தத்துவமாகிய அநாஹதத்தில் 54 கிரணங்களும்,
ஆகாச தத்துவமாகிய விசுத்தி சக்கரத்தில் 72 கிரணங்களும்,
மனஸ் தத்துவமாகிய ஆஜ்ஞா சக்கரத்தில் 64 கிரணங்களும்
இருப்பதாக (யோக) சாஸ்திரம் சொல்கிறது. இந்த சக்கரங்களுக்கு/கிரணங்களுக்கு மேலே உள்ள ஸஹஸ்ரார கமலத்தின் மத்தியில் உன் திருவடிகள் விளங்குகின்றது.

ஆறு ஆதாரங்களும் காலகதிக்கு உட்பட்டது என்பதும், அற்றிற்கு மேலே விளங்கும் தேவியின் திருவடிகள் காலத்தை கடந்தவை என்பதும் இங்கு குறிப்பால் உணர்த்தப்படுகிறது. இதில், மூலாதாரம் என்பது 56 நாட்களைக் கொண்ட வஸந்த ருதுவாகவும், மணிபூரகம் 52 நாட்களைக் கொண்ட க்ரீஷ்மருதுவாகவும், ஸ்வாதிஷ்டானம் 62 நாட்களைக் கொண்ட வர்ஷ ருதுவாகவும், அனாகதம் 54 நாட்களைக் கொண்ட சரத் ருதுவாகவும், விசுத்தி 72 நாட்களைக் கொண்ட ஹேமந்தருதுவுக்கு ஒப்பாகவும், ஆஜ்ஞை 64 நாட்கள் கொண்ட சிசிர ருதுவுக்கு ஒப்பாகவும் சொல்லப்படுகிறது. ப்ரம்மாண்டத்தில் நாட்களாக இருப்பது பிண்டாண்டத்தில் கிரணங்களாக சொல்லப்படுகிறது.

க்ஷட்பஞ்சாசத் - ஐம்பத்தாறு, த்விஸமதிக-பஞ்சாசத் - ஐம்பத்திரண்டு; த்வாஷஷ்டி: - அறுபத்திரண்டு; சதுரதிக-பஞ்சாசத் - ஐம்பத்து நான்கு; த்வி: ஷட்த்ரிம்சத் - எழுபத்திரண்டு; சதுஷ் ஷஷ்டி: - அறுபத்து நான்கு; பாதாம்புஜம் - திருவடிகள்; தேஷாம் அபி - எல்லாவற்றுக்கும் மேலாக; மயூகா: - கிரணங்கள்;

க்ஷிதெள - பூமியைக் குறிக்கும் மூலாதாரம்; உதகே - ஜலத்தை குறிக்கும் மணிபூரகம்; ஹுதாசே - அக்னி ரூபமான ஸ்வாதிஷ்டானம்; அனிலெ (தநிலே) - வாயுதத்துவத்தை குறிக்கும் அனாஹதம்; த்வி - ஆகாச தத்துவத்தை உள்ளடக்கிய விசுக்தி; மனஸி ச - மனஸுடன் சம்பந்தமுடைய ஆக்ஞை;