ஆனந்த லஹரி - 31 & 32

சது: ஷஷ்ட்யா தந்த்ரை: ஸகல-மதிஸ்ந்தர்ய புவனம்
ஸ்திதஸ் தத்தத்-ஸித்தி-ப்ரஸ்வ-பரதந்த்ரை: பசுபதி:
புனஸ்-த்வந்நிர்ப்பந்தா-தகில புருஷார்த்தைக கடனா
ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதிதல-மவதீதர-திதம்


அம்மா!, பரமசிவன் பலவிதமான ஸித்திகளைத் தரக்கூடிய 64 தந்திர சாஸ்திரங்களை உலகிற்கு காண்பித்துவிட்டு விட்டுவிட்டார். ஆனால் உனது நிர்பந்தத்தால் அவரே அந்த 64 தந்திரங்களாலும் அடையக் கூடிய பிறவிப் பயன்களை ஒருங்கே தரவல்ல பஞ்சதசீ என்னும் உன்னுடைய மந்திர-தந்திர சாஸ்திரத்தையும், உபாசனா முறையையும் இவ்வுலகிற்கு அளித்தார்.

இந்த ஸ்லோகத்திலும், அடுத்த ஸ்லோகத்திலும் பஞ்சதசாக்ஷரீ என்னும் ஸ்ரீவித்யா மூல மந்திரத்தை பற்றிச் சொல்கிறார். அதாவது 64 தந்திர சாஸ்திரங்களையும் ஒருங்கே தரவல்லது அம்பிகையின் பஞ்சதசாக்ஷரீ மந்திரம் என்பதாக பொருள். 64 என்பது மிகுந்த சிறப்பானது. இந்த எண்ணானது ஈசனின் திருவிளையாடல்களையும், ஆய-கலைகளையுன் நினைவுக்கு கொண்டு வருவதும். இவை எல்லாம் சமயாசாரத்தில் சொல்லப்பட்ட 64 தந்திரங்களை குறிப்பிடுபவையே!. இவை 8-8 (!!!) ஆக பிரிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர சுபாகம பஞ்சகம் என்று வசிஷ்ட்டர்,சுகர், ஸநகர், ஸநந்தனர், ஸநத்குமாரர் ஆகிய ஐந்து பேரும் எழுதிய முறை ஒன்றும் இருக்கிறது, இதுவே க்ருஹஸ்தர்கள் அனுஷ்டிக்கத் தகுந்தது.

சது: ஷஷ்ட்யா - 64; தந்த்ரை - தந்திர சாஸ்திரம்; புவனம் - உலகம்; ஸகல - எல்லா; அதிஸ்ந்தாய - நிரப்பிவிட்டு; புன: மேலும்; த்வத்-நிர்ப்பந்தாத் - உன் கட்டாயத்தால்; அகில-புருஷார்த்த-ஏக-கடனா - எல்லா புருஷார்த்தங்களையும் (அறம்-பொருள்-இன்பம்-வீடு); ஸ்வதந்த்ரம்- தரவல்ல; தே தந்த்ரம் - உன் தந்திரம்; இதம் - இந்த; க்ஷிதிதலம் -பூவுலகில்; அவாதீதர - அவதரிக்க


சிவ: சக்தி: காம: க்ஷிதி-ரத ரவி: சீதகிரண:
ஸ்மரோ ஹம்ஸ: சக்ரஸ்-ததனு ச பரா-மார ஹரய:
அமீ ருல்லேகாபிஸ்-திஸ்ருபி-ரவாஸானேக்ஷு கடிதா
பஜந்தே-வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம்

இந்த ஸ்லோகத்தில் ஸ்ரீ பஞ்சதசாக்ஷரீ என்று கூறப்படும் மந்த்ரத்தின் அக்ஷரங்களை ரகஸியமாக விளக்குகிறார். எப்படி காயத்ரி மந்திரம் போன்றவை குரு முகமாக உபதேசம் செய்து கொள்ளல் அவசியமோ அது போன்றே இந்த மந்திரங்களும் குருமுகமாகவே உபதேசம் பெற்ற பின்னரே ஜபிக்க வேண்டும். இந்த பதினைந்தில் இருக்கும் அக்ஷரங்களாவது, சிவன், சக்தி, பிருத்வீ, சூர்ய, சந்திர, ஆகாச, இந்த்ர, ஹரி, பரா என்றவற்றுக்கான 9 பீஜங்களும், மன்மதனுக்கான 3 பீஜாக்ஷரங்களும், ஒவ்வொரு கூடத்தின் முடிவில் ஒரு புவனேஸ்வரி பீஜமாக மூன்று பீஜங்களைச் சேர்த்து வரும் 15 கலைகள்/அக்ஷரங்களே பஞ்சதசாக்ஷரீ. இவ்வாறாக மூன்று கூடங்களைக் கொண்டதாக இருந்தாலும் இத்துடன் ரமா பீஜத்தையும் சேர்த்து சொல்வதாலேயே மந்திரம் பரிபூர்ணம் அடைகிறது என்று லக்ஷ்மீதரர் சொல்லியிருக்கிறார்.

இந்த மந்திரமானது, ஹாதி வித்யா, மஹாவித்யா, துர்வாச வித்யா, லோபாமுத்ரா வித்யா, காதி வித்யா என்று பல ரிஷிகளின் பிரயோக முறையினை வைத்து சற்றே வேறுபடும். குருமுகமாக எது நமக்கு கிடைக்கிறதோ அதுவே தொடர்ந்து ஜபிக்க உகந்தது. ஆனந்த லஹரி பகுதியில் மிக முக்கியமான இரண்டு மந்த்ரார்த்தமான ஸ்லோகங்கள் என்றால் அது இந்த ஸ்லோகமும் அடுத்து வரும் ஸ்லோகமும் தான். பின்னர் செளந்தர்ய லஹரியில் நாம் பார்க்க இருக்கும் அன்னையின் செளந்தர்ய ரூபத்தை ப்ரத்யக்ஷமாக உணரச் செய்வது இந்த இரு ஸ்லோகங்களே என்று பரமாச்சார்யார் சொல்லியிருக்கிறார்.

ஆனந்த லஹரி - 29 & 30
கிரீடம் வைரிஞ்சம் பரிஹர புர: கைடபபித:
கடோரே கோடீரே ஸ்கலஸி ஜஹி ஜம்பாரி மகுடம்
ப்ரணம் ரேஷ்வேதேக்ஷுப்ரஸப முபயாதஸ்ய பவநம்
பவஸ்யாப்யுத்தாநே தவ பரிஜநோக்திர் விஜயதே


சகல தேவதேவர்களுக்கும் தலைவியாக விளங்குபவள் பராசக்தி என்பதை குறிப்பதான ஸ்லோகம் இது. அன்னை தனது இருப்பிடத்தை நோக்கி வரும் பரமசிவனை எதிர் கொண்டழைப்பதற்காக தனது ஆசனத்தில் இருந்து எழுகிறாளாம். அப்போது அன்னையின் சேடிப் பெண்கள் சொல்வதை கவனித்தது போன்று அமைந்த பாடலின் பொருள் பின்வருமாறு. அம்மா, எதிரில் வைரிஞ்சம் என்னும் பிரும்மாவின் கிரீடம் இருக்கிறது அதில் இடித்துக் கொள்ளாமல், அதன் பக்கத்தில் இருக்கும் கைடபாசுரனைக் கொன்ற கடினமான கோடீரம் என்னும் மஹாவிஷ்ணுவின் கிரீடத்தை கடந்து, இந்திரனின் மகுடத்தை கடந்து வாருங்கள். என்பதன் மூலமாக ப்ரம்மா முதலிய தேவர்கள் அனைவரும் அன்னையை நமஸ்காரம் செய்யும் நேரத்தில் அவளை நோக்கி வரும் பரமசிவனை வரவேற்க்க எழும் போது உனது சேடிப் பெண்கள் கூறும் சிறப்பான வார்த்தைக்கள் ஒலிக்கிறது என்கிறார் சங்கரர்.

ஆச்சார்யாள் விஷ்ணு பாதாதி-கேச ஸ்தோத்திரம் என்று ஒன்று பண்ணியிருக்கிறார். அதில் ஒரு மஹாவிஷ்ணுவின் கிரீடம் பற்றி சொல்கையில் 'க்ருத-மகுட-மஹாதேவ-லிங்க-ப்ரதிஷ்டே' அப்படின்னு வரும். அதாவது தனது கிரீடத்தை லிங்க ரூபமாகவே வைத்துக் கொண்டிருக்கிறாராம். வீர சைவர்கள் மகிழ்ச்சிக்காக, விஷ்ணு, சிவலிங்கத்தை எப்போதும் தலையில் தாங்குகின்றார் என்றும் சொல்லலாம்.

தேவர்கள் அன்னையை எப்போதும் வணங்குபவர்கள் என்று 25ஆம் ஸ்லோகத்தில் சொல்லியிருக்கிறார். அதனை மறுக்கும்படியாக இங்கு தேவர்கள் வணங்கும் நேரத்தில் (ப்ரஸப முப்யாதஸ்ய) என்று வருகிறதே என்று நினைக்கலாம். இதைத்தான் அடுத்த வரியில் தெளிவாக்குகிறார். 'பவநம் பவஸ்யாப்யுத்தாநே - அதாவது பவன் என்கிற சிவன் உங்கள் க்ருஹத்திற்கு வரும்போது என்பதாக. உபயாதம் என்றால் திரும்பி வருதல். அதாவது அன்னையிடமிருந்து சென்ற சிவன் திரும்பி வரும் காலத்தில் என்று பொருள்.

இந்த ஸ்லோகத்தைப் பற்றி சொல்கையில் பரமாச்சார்யார் பின்வரும் செய்தியினையும் தொட்டு விளக்கியிருக்கிறார். 'பவஸ்யாப்யுத்தாநே' என்ற சொல்லை கவனிக்கையில் "அப்யுத்தாநம் அதர்மஸ்ய" என்கிற பதம் பலருக்கும் நினைவுக்கு வரலாம். கீதையில் 'யதா யதா ஹி.." என்கிற ஸ்லோகத்தில் வருவது. எப்போதெல்லாம் தர்மம் குறைந்து அதர்மத்திற்கு அப்யுத்தானம் நடக்கிறதோ அப்போதெல்லாம் நான் அவதரிக்கிறேன் என்று பொருள். அதாவது இந்த 29ஆம் ஸ்லோகத்தில் அப்யுத்தானம் என்றால் எழுந்து எதிர் கொண்டு அழைத்தல் என்பது பொருள். ஆனால் மேற்ச் சொன்ன கீதை ஸ்லோகத்தில் இந்த வார்த்தைக்கு இப்பொருளைக் கொண்டால், எப்போதெல்லாம் நாம் அதர்மத்தில் போகிறோமோ அப்போதெல்லாம் க்ருஷ்ணன் மீண்டும், மீண்டும் அவதாரம் பண்ணி, நம்மை எதிர் கொண்டு நல்-வழிப்படுத்துகிறான் என்று கொள்ளலாம். அதாவது தர்மத்தின் பக்கத்தில் இருந்து வருபவர்களை இறைவன் கவனிப்பதில்லையாம், ஆனால் அதர்மத்தின் பக்கம் இருந்து வருபவர்களை எதிர் கொண்டு அழைத்து அவர்களை நல்வழிப்படுத்துகிறானாம். ராவணன், ஹிரண்யகசிபு, கம்ஸன் போன்றோரின் அதர்மத்தால் தானே நமக்கு நாராயணனின் கோலாகலமான திரு அவதாரங்கள் கிடைத்தன.

வைரிஞ்சம் - பிரம்மாவின் கிரீடம்; பரிஹர - விலக்கிவிட்டு; கைடபபித: - கைடபனைக் கொன்ற; கடோரே - கடினமான; கோடீரே- கிரீடத்தில்; ஜம்பாரி - இந்திரனது கிரீடம்; ஜஹி - ஒதுக்கிவிட்டு; ப்ரணம்ரேஷு - நமஸ்காரம் செய்கையில்; உபயாதஸ்ய - திரும்பி வருதல்; பவஸ்ய - பரமசிவன்; ப்ரஸபம் - அவசரமாக; தவ- உன்; பரிஜன-உக்தி - சேடிப் பெண்கள்;


ஸ்வதேஹோத்பூதாபிர் க்ருணீபி-ரணிமாத்யாபி ரபிதோ
நிஷேவ்யே நித்யே த்வா மஹமிதி ஸதா பாவயதி ய:
கிமாஸ்சர்யம் தஸ்ய த்ரிநயன ஸ்ம்ருத்திம் த்ருணயதோ
மஹாஸ்ம்வர்த்தாக்நிர்-விரசயதி நீராஜந-விதிம்.


அம்மா! ஆதியந்தமில்லாத பரம்பொருளே, உன்னிடத்தின்று தோன்றிய அணிமா போன்ற சக்திகளால் சூழப்பட்டவளாக சேவிக்கப்படுபவளே. உன்னை தனது ஆத்மாவாக பாவித்து சிந்திப்பவனுக்கு சிவ ஸாயுஜ்ய பதவிகூட துரும்பென தோன்றுவதால் தானே உன்னை ஆத்மாவாக சிந்திப்பவனை ஊழித்தீ கூட மங்கள ஹாரத்தி காட்டி பூஜிக்கிறது. இதில் வியப்பென்ன?.

ஸ்வதேஹ-உத்பூதாபி - உடலில் இருந்து தோன்றிய; க்ருணிபி - கிரணங்கள்; அணிமாத்யாபி: - அணிமா போன்ற தேவதைகள்; நிஷேவ்யே- வணங்கத்தக்க; த்வம் - உன்னை; அஹம் இதி - தனது ஆத்மா என; பாவயதி - பாவிப்பவன்; த்ரிநயன ஸ்ம்ருத்திம் - சிவசாயுஜ்யம்; த்ருணயத - துரும்பென; மஹாஸம்வர்த்தாக்னி: - ப்ரளய/ஊழித் தீ; நீராஜன விதிம் - மங்கள ஹாரத்தி; விரசயதி - அனுஷ்டித்தல்; கிம் ஆச்சர்யம் - என்ன ஆச்சர்யம்.

ஆனந்த லஹரி - 27 & 28
ஜபோ ஜல்ப: ஸில்பம் ஸகலமபி முத்ரா-விரசநா
கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மசநாத்யாஹுதி-விதி:
ப்ரணாம: ஸம்வேஸ: ஸுகமகில-மாத்மார்ப்பண-த்ருசா
ஸபர்யா-பர்யாயஸ்-தவ பவது யந்மே விலஸிதம்

அம்பிகே!, எல்லாம் உனக்கு என்ற ஆத்ம சமர்பண நோக்குடன், நான் பேசுவதெல்லாம் உன் மந்த்ர ஜபமாகவும், என் உடலசைவுகள் உன் முத்திரைகளாகவும், என் நடை உன்னை பிரதக்ஷிணம் செய்வதாகவும், நான் புசிப்பதெலாம் உனக்குச் செய்யும் ஹோமமாகவும், நான் படுப்பது உனக்கு செய்யும் நமஸ்காரமாகவும் ஆகட்டும். இவ்வாறு என் சுகத்திற்காக நான் செய்யக்கூடிய செயல்கள் எல்லாம் உன் பூஜையாகவே ஆகட்டும்.


அம்பிகைக்கு "தசமுத்ரா சமாராத்யா" அப்படின்னு சஹஸ்ரநாமத்தில் ஒரு நாமம் இருக்கு. அதாவது, ஸம்க்ஷோபிணீ, வித்ராவிணீ, ஆகர்ஷிணீ, வசங்கரீ, உன்மாதினீ, மஹாங்குசா, கேசரீ, பீஜ, யோனி, த்ரிகண்டா என்னும் பத்து முத்ரைகளால் வணங்கப்படுபவள் அப்படின்னு அர்த்தம். ஸமயாசார்த்தை பின்பற்றும் ஞானிகள் அம்பிகையின் பிம்பத்திலோ அல்லது சக்ர ராஜத்திலோ இந்த முத்ரைகளை வெளிப்படையாக காண்பித்து பூஜை செய்வதில்லை. அவர்களது இயற்கையான செயல்களே இம்முத்ரைகளாக ஆகிவிடுமாம்.
ஆச்சார்யார் இதை சிவமானச பூஜா ஸ்தோத்திரத்திலும் (5ஆம் ஸ்லோகமாக) இங்கே சொல்லியிருக்கார்.


ஜல்ப: - பேச்சு; ஸில்பம் ஸ்கலமபி - கைத்தொழில் அனைத்தும்; முத்ரா விரசனா - முத்ரைகளின் விளக்கமாக; ப்ராதக்ஷிண்ய-க்ரமணம் - பிரதக்ஷணமாகவும்; அசனாதி- உணவு வகைகள்; ஆஹுதிவிதி - ஹோமமாக; ஸம்வேஸ - படுத்துக் கொள்ளுதல்; ப்ரணாம: - நமஸ்காரம்; யத் விலஸிதம் - கார்யம் எல்லாம்; அகிலமபி - அதெல்லாம்; ஸபர்யா-பர்யாய: - பூஜை முறை.

ஸுதா மப்யாஸ்வாத்ய ப்ரதிபய-ஜராம்ருத்யு-ஹரிணீம்
விபத்யந்தே விஸ்வே விதி-ஸதமகாத்யா திவிஷத:
கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத: காலகலனாநா
ந-ஸம்போஸ் தன் மூலம் தவ ஜநநி தாடங்க-மஹிமா

அம்பிகே! ப்ரம்மன், இந்திரன் போன்ற தேவர்கள் எல்லாம் தமது கிழத்தன்மை/மரணம் பீடிக்காதிருக்க அம்ருதம் பருகியவர்களாக இருந்தாலும் ப்ரளயகாலத்தில் அழிந்துவிடுகிறார்கள். ஆனால் உனது பதி பரமசிவனோ ஆலகால விஷத்தை பருகிய பின்னரோ அல்லது ப்ரளயகாலத்திலோ கூட அழிவதில்லை. இதற்கான காரணம் பரம பதிவ்விரதையான நீ, உனது செவிகளில் பூட்டியிருக்கும் தாடங்கம் என்னும் கர்ணாபரணத்தின் மஹிமைதான்.


அந்தக் காலத்தில் சுவாசினிகள் இன்றுபோல திருமாங்கல்யம் அணியும் முறை கிடையாது. சுமங்கலிப் பெண்கள் அணிவது கருகமணியும், பனை ஓலையால் ஆன காதணியும் தான். இன்றும் இல்லங்களில் வர-மஹாலெக்ஷ்மி அம்மனை ஜோடனை செய்கையில் இந்த காதோலை-கருகமணி (ரோஸ் கலரில் சுருட்டப்பட்ட பனை ஓலை ஒரு கருப்பு நிற சிறு வளையத்துள் நுழைத்தது) சார்த்தப்படுகிறது. அதுபோல அன்னை அணிந்த தாடங்கத்தின் மஹிமையைத்தான் ஆச்சார்யார் இங்கே குறிப்பிடுகிறார். இதைத்தான் காளிதாசன் "தாலீ பலாச தாடங்காம்" என்று சொல்வதாக பரமாச்சார்யார் சொல்லியிருக்கிறார். அதாவது தாலீ என்பது பனை மரத்தைக் குறிக்கும். இலைகளை சாதாரணமாக பலாசம் எனக் கூறுவார்கள்.சூர்ய-சந்திரர்களே அம்பாளின் தாடங்கங்கள் என்று சஹஸ்ரநாமம் கூறுகிறது.

ருத்ரத்தில் "யா தே ருத்ர சிவா தனூ: சிவா விச்வாஹ பேஷஜீ: சிவா ருத்ரஸ்ய பேஷஜீ தயா நோ ம்ருட ஜீவசே" என்று வருகிற வரியும் இந்த அர்த்தத்தில் தான். பொருளாவது, "பரமசிவனே, உனது சரீரத்தில் பாதியான பராசக்தியே உலகிற்கு மருந்து, ருத்திரனாகிய உனக்கும் அவளே மருந்து. அவளருளால்தான் நீ ஆலகாலத்தை உண்ட பிறகும் எங்களுக்காக பிழைத்து இருக்கிறாய்.


ப்ரதிபய-ஜராம்ருத்யு - பயங்கரமான மூப்பு-மரணம்; ஸுதா - அம்ருதம்; ஆஸ்வாத்ய அபி - சாப்பிட்டும் கூட; விதி-சதமக - ப்ரம்மா, இந்திரன்; ஆத்யா - முதலிய; திவிஷத - தேவர்களும்; விபத்யந்தே - பிரளய காலத்தில்; க்ஷ்வேலம் - விஷம்; கபலிதவத: - சாப்பிட்ட; காலகலனா - காலத்தை வென்ற