செளந்தர்யலஹரி 85 & 86


நமோவகம் ப்ரூமோ நயநரமணீயாய பதயோ:
தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புடருசிரஸாலக்தகவதே
அஸுயத் யத்யந்தம் யதபிஹநனாய ஸ்ப்ருஹயதே
பசூனாம் ஈசாந: ப்ரமதவந கங்கேளிதரவே


தாயே!, எந்தப் பாதங்களால் உதைக்கப்படுவதற்கு உனது நந்தவனத்தில் இருக்கும் அசோக மரம் ஆசைப்படுகிறதோ அதைக்கண்டு, அப்பாதங்களின் ஸ்பரிசம் தனக்கு மட்டுமே உரியதென்று பரமசிவனே அஸூயைப்படும்படியானதும், கண்களுக்கு இனிமையும், செம்மையான குழம்பால் அலங்கரிக்கப்பட்டதுமான உனது சரணங்களுக்கு எனது நமஸ்காரங்களைக் கூறுகிறேன்.

உத்தம ஸ்த்ரீகளுடைய கால்களால் உதைக்கப்பட்டால் தான் அசோகமரமானது புஷ்பிக்கும் என்பர். அம்பாளுடைய நந்தவனத்தில் இருக்கும் அசோக மரமானது அவளுடைய பாத ஸ்பரிசத்திற்கு ஏங்குவதாகவும், அதைக்கண்ட பரமசிவன், கலஹ காலத்தில் தனக்கு மட்டுமே கிடைக்கும் அந்த பாத ஸ்பரிசத்தினை எதிர்பார்க்கும் அம்மரத்தின் மீது அஸூயை கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

தவ - உன்னுடைய; நயந ரமணீயாய - கண்களுக்கு ரமணீயமான/இனிமையான; ஸ்புர ருசிர ஸாலக் தகவதே - ஒளியுடன் விளங்குகிறதும், ஈரமான செம்பஞ்சுக் குழம்புடன் கூடிய; பத்யோ: அஸ்மை த்வந்த்வாய - இந்த இரு பாதங்களுக்கும், ந்மோவாகம் - நாம்ஸ்கார வார்த்தைகளை; ப்ரூம: சொல்லுகிறோம்;யத் அபிஹநனாய - எந்தப் பாதங்களால் உதையப்படுவதை; ஸ்ப்ருஹயதே - விரும்புகிற; ப்ரமதவந கங்கேளி தரவே - நந்தவனத்தில் இருக்கும் அசோக வ்ருக்ஷத்தின்; பசூனாம் ஈசன: - எல்லா ப்ராணிகளுக்கும் ஈசனான பரமேஸ்வரனும்; அத்யந்தம் அஸூயதி - அதிகமான பொறாமையுடன்

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

அரியமென் காவில் நீபுக்கு
அசோகினிற் பாத மேற்ற
உரியநம் பதத்தை யீதோ
உறுமெனப் பொறாது பெம்மான்
எரியுற மரத்தை நோக்கும்
இயல்பினைக் கேட்டும் யானுன்
வரிமலர்ப் பாதம் போற்றும்
வளமினி தினிது மாதே.

*********************************************************************************


ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலநமத வைலக்ஷ்ய நிமிதம்
லலாடே பர்த்தாரம் சரணகமலே தாடயதி தே
சிராத் அந்த: சல்யம் தஹனக்ருதம் உந்மூலிதவதா
துலாகோடி க்வாணை: கிலிகிலிதம் ஈசாநரிபுணா

அம்பிகே, விளையாட்டாக உனது பிறந்த வீட்டினைப் பற்றி ஏளனமாகச் சொன்ன பரமசிவனார், உன்னுடைய கோபத்தைக் கண்டு, என்ன செய்வதென்று தெரியாது உன்னை வணங்கிடுகிறார். அவ்வாறு வணங்கும் போது அவருடைய நெற்றியில் உன்னுடைய பாத கமலங்களில்பட்டு, உன்பாத 'சிலம்புகள் கிலி-கிலி'என்று ஒலியெழுப்புகின்றன. உன் பாதசிலம்புகள் ஏற்படுத்தும் அவ்வொலியானது மன்மதன் முன்பு ஒருமுறை சிவனாரின் நெற்றிக் கண்ணிலிருந்து வந்த நெருப்பினால் பஸ்மமானதால் கொண்டிருந்த பாணம் போன்ற பகையை தீர்த்துக் கொள்ளுவது போல சிரிப்பதாக இருக்கிறது.

அம்பாளிடத்து சரஸம் செய்வதாக எண்ணி அவளுக்குக் கோபம் உண்டாகும்படியாக அவளது பிறந்த் வீட்டினை இகழ்ந்த பரமன், அதனால் கோபம் கொண்ட அம்பிகையை சமாதானம் செய்யும் விதமாக மன்னிப்புக் கேட்டு அவளது பாதங்களில் நமஸ்கரிப்பதாகவும், அப்போது சிவனது நெற்றி அன்னையின் பாதங்களில்பட்டு, அவள்காலில் இருக்கும் பாத சிலம்புகள் ஒலியெழுப்புவதாகவும் சொல்கிறார். மஹா-பதிவிரதையான அம்பிகை தனது பர்த்தா நமஸ்கரிப்பது என்பது ச்ருங்கார சாஸ்த்ரங்களின் ரீதியை அனுசரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார். முன்பு ஒருமுறை பரமசிவன் மன்மதனை எரித்த காரணத்தால் மன்மதனுக்கு பரமசிவனிடத்து இருந்த பகையானது உடம்பில் தைத்த பாணம் போன்று இருந்ததாகக் கூறுகிறார். தன்னை எரித்த பரமன் நெற்றி நிலத்தில்பட வீழ்ந்து வணங்குவது கண்ட மன்மதன் தானே அவரை ஜெயித்தது போன்று சிரித்து மகிழ்வது போல அன்னையின் பாதசிலம்புள் ஒலிக்கிறது என்கிறார்.

ம்ருஷா - விளையாட்டாக; கோத்ரஸ்கலனம் - பிறந்த வீடு பற்றிய ஏளனம்; க்ருத்வா - செய்தது; அத வைலக்ஷ்ய நமிதம் - அதனால் ஏற்பட்ட கோபத்தைக் கண்டு என்ன செய்வதென; பர்த்தாரம் - கணவரான பரமசிவன்; லலாடே - நெற்றியில்; தே சரணகமலே - உன் பாத-கமலங்களில்; தாடயதி சதி - (பாதங்களின்) மேலே பட்டு; ஈசான ரிபுணா - ஈசனின் விரோதியான மன்மதனால்; தஹநக்ருதம் - நேத்ராக்னியால் எரித்ததால் ஏற்பட்ட; சிராத் - வெகுகாலமாக இருக்கும்; அந்த: சல்யம் - தனது மனதில் பாணமாகப் பதிந்த பகையை; உந்மூலிதவதா - வேரோடு எடுத்து; துலாகோடிக்வாணை: - கால் சிலம்பில் இருக்கும் சிறிய மணிகளால் எழும் சப்தத்தை; கிலிகிலிதம் - கிலி-கிலி என்ற சப்தம்;

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

மறும டந்தையை மொழிய நின்பத
மலர்வெ குண்டர னுதலிலோர்மு
றைய றைந்திட விழியி னும்பட
முத்ப ழம்பகை கருதிவேள்
இறையை வென்றனன் விழியை வென்றனன்
எனமு ழங்கிய குரலெனாது
அறைசி லம்பெழும் அரவ மென்பதன்
அருண மங்கல கமலையே.

செளந்தர்யலஹரி 83 & 84


பராஜேதும் ருத்ரம் த்விகுண சரகர்பெள கிரிஸுதே
நிஷங்கெள ஜங்கே தே விஷமவிசிகோ பாடம் அக்ருத
யதக்ரே த்ருச்யந்தே தச சர பலா: பாதயுகளீ
நகாக்ரச்சத்மாந: ஸுரமகுட சணைக நிசிதா:

அம்மா!, உன்னுடையக கணுக்கால்களானது பரமசிவனை ஜெயிக்க மன்மதனால் செய்யப்பட்ட அம்பறாத்தூணிகள் மாதிரி இருக்கின்றன. அம்பறாத்தூணிகளின் முன்பாகத்தில் அம்புகளின் கூர்மை மிகுந்த நுனிகள் தெரிவது போல உனது பத்து கால் விரல்களிலிருக்கும் நகங்கள் மன்மதன்தனது பஞ்ச பாணங்களை இரட்டிப்பாக்கிக் கொண்டது போல இருக்கிறது, அந்த பத்து நகங்கள் உன் காலில் விழுந்து வணங்கும் தேவர்களது மகுடங்களால் தீட்டப்பட்டு கூர்மையுடன் இருக்கிறது.

மன்மதன் தன்னுடைய பஞ்சபாணங்களால் பரமசிவனை ஜெயிக்க முடியாததைப் பார்த்து, அவரை ஜெயிக்கத்தக்க பாணங்களையும், அந்த பாணங்களை வைக்கும் அம்பறாத்தூணியையும் ஏற்படித்திக் கொண்டதாகவும், அவ்வாறான பாணங்களும், அம்பராத்தூணியும் அன்னையின்கால்களும், அக்கால்களில் இருக்கும் நகங்களுமே என்று கூறியிருக்கிறார். ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமத்திலும், "இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மரதூணாப ஜங்கிகா' என்னும் நாமம் அன்னையின் கணுக்கால்களை மன்மதனது அம்பறாத்தூணியாகவே சொல்லியிருக்கிறது. இவ்வாறானஅம்பிகையின் கணுக்கால்களது அழகாலேயே பரமேஸ்வரனை பின்னர் ஒருமுறை ஜெயித்துவிட்டான் மன்மதன் என்று கூறுவதன் மூலமாக அன்னையின் கால் அழகினை விவரித்திருக்கிறார்.

கிரிஸுதே - மலையரசன் மகளே; விஷமவிசிக: - மன்மதன்; ருத்ரம் பராஜேதும் - பரமசிவனை ஜெயிக்க; த்விகுணசர கர்பெள - தன் பாணங்களை இரட்டித்து பத்து பாணங்களுடன்; நிஷங்கெள - அம்பறாத்தூணியாக; தே ஜங்கே - உன் கணுக்கால்கள்; அக்ருத - செய்தான்; பாடம் - நிச்சயம்; யத் அக்ரே - அவைகளின் முன்பாகத்தில்; பாத யுகளீ - இரண்டு பாதகளிலும்; நகாக் ரச்சத்மான:- விரல் நகங்களின் நுனிகள்; ஸுரமகுட - வணங்குகிற தேவர்களின் மகுடங்களே; சாணைக நிசிதா: - சாணைக் கற்களாகக் கொண்டு தீட்டப்பட்ட; தச சர பலா: - அந்த பத்து பாணங்களுடைய கூர்கள்; க்ருச்யந்தே - காணப்படுகிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

உம்பர்தொழுந் தொறுமகுடச் சாணை தீட்டி
ஒளிருநக நுணைக்கணையோர் ஐந்தும் ஐந்துஞ்
செம்பொன்மணிக் கணைக்காலாம் இணைப்பொற் றூணி
சேர்த்தன்றோ சிவன்பகைவேள் தீருகின்றான்
அம்பொருபத் தளித்தனையின் றன்று போல
ஐங்கணைதொட் டழியினது பழுதென் றன்றோ
வம்பமருங் கனதனப்பொற் றிருவே உன்றன்
மனவிரகின் செயலொருவர் மதிப்ப தன்றே

*********************************************************************************
ச்ருதீனாம் மூர்தானோ தததி தவ யெள சேகரதயா
மமாப்யேதெள மாத: சிரஸி தயயா தேஹி சரணெள
யயோ: பாத்யம் பாத: பசுபதி ஜடாஜுட தடிநீ
யயோர் லாக்ஷாலக்ஷ்மி: அருணஹரி சுடாமணிருசி:

தாயே!, எந்த சரணங்கள் வேதாந்தங்களுக்கு சிரத்தில் அணியும் அணிகலனாக விளங்குகிறதோ, எந்த சரணங்களின் பாதப்ரக்ஷாலனம் (பாதபூஜையின் போது பாதத்தில் வார்க்கும் நீர்) பரமசிவனது ஜடாமுடியிலிருக்கும் கங்கையால் நடைபெறுகிறதோ, எந்த சரணங்களில் விஷ்ணு தரித்துள்ள சூடாமணியின் ஒளியால் செம்பஞ்சுக் குழம்பு தீட்டிய நிறத்தை ஏற்படுத்துகிறதோ, அப்படியான உனது திவ்ய சரணங்களை எனது சிரஸிலும் தயவுசெய்து நீ வைப்பாயாக.

அம்பாளது சரணங்கள் வேதங்களாலும், பரமசிவனாலும், விஷ்ணுவாலும் சிரஸில் தரிக்கப்படுபவை என்றும், அதுபோலவே அம்பிகை தனது (சங்கரரது) சிரஸிலும் அம்பிகை தனது சரணங்களை வைக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அம்பிகையின் சரண-கமலங்களை ச்ருதிகளாகிய பெண்கள் தங்கள் தலையில் சூடும் புஷ்பங்களைப் போல எப்போதும் தலையில் வைத்திருப்பதாக கூறுவதால், வேதங்கள் அன்னையின் காலடியில் எப்போதும் இருப்பவை என்று கூறுகிறார். இதையே சஹஸ்ரநாமத்தில், ' ச்ருதி ஸீமந்த ஸிந்தூரீக்ருத பாதாப்ஜ தூளிகா' என்கிறது. அதாவது வேத மாதா, அன்னையின் காலடியில் நமஸ்காரம் செய்யும் போது அந்த சரணகமலங்களில் இருக்கும் சிவப்பு நிறமான மகரந்தத் துகள்கள் வேதமாதாவின் தலை வகிட்டில் படிந்து அங்கே தரிக்கப்படும் ஸிந்தூரமாகிறது என்கிறது.

மாத: தாயே; தவ - உன்னுடைய; யெள சரண - எந்த சரணங்களை; ச்ருதீனாம் மூர்தாந - வேதங்களுடைய சிரஸ்; சேகரதயா - சிரோ புஷணங்களாக; தததி - தரிக்கின்றனவோ; ஏதெள - அவை (அந்த சரணங்கள்); மம சிரஸி அபி - என்னுடைய சிரஸிலும்; தயயா - தயவு செய்து;தேஹி - வைப்பாயாக; யயோ: - எந்த சரணங்களுடைய; பாத்யம் பாத: - பாதோதக ஜலமானது; பசுபதி ஜடாஜூட தடிநீ - பரமசிவனுடைய ஜடையிலிருக்கும் கங்கையாகவும்; லாக்ஷாலக்ஷ்மி: - செம்பஞ்சுக்குழம்பின் ஒளியாக; அருண ஹரிசூடாமணி ருசி: விஷ்ணுவின் சூடாமணியிலிருந்து வரும் சிவந்த ஒளியாக இருக்கிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

உளமகிழ் மகிழ்நர் சென்னி
உறுநதி விளக்க மாயோன்
கிளர்முடிப் பதும ராகத்
கேழொளி செம்பஞ் சேய்க்கும்
முளரிநின் பதங்கள் வேத
முடியுறப் பதித்த தவ்வாறு
எளியஎன் தலைமேல் வைக்க
இரங்குவ தென்று தாயே.

செளந்தர்யலஹரி 81 & 82குருத்வம் விஸ்தாரம் க்ஷிதிதரபதி: பார்வதி நிஜாத்
நிதம்பாத் ஆச்சித்ய த்வயி ஹரண்ரூபேண நிததே
அதஸ்தே விஸ்தீர்ணோ குருயம் அசேஷாம் வஸுமதீம்
நிதம்ப ப்ராக் பார ஸ்த்தகயதி லகுத்வம் நயதி ச


தாயே!, உன்னுடைய நிதம்ப ப்ரதேசமானது அதன் பருமனாலும், விசாலத்தாலும் பூமியையே மறைத்து, பூமியை லேசான இருப்பதுபோல் செய்கிறது. இவ்வாறான பருமனையும், விசாலத்தையும் உன்னுடைய தகப்பனாராகிய மலையரசன்/ஹிமவான் தன்னுடைய அடிவாரத்தில் இருந்து எடுத்து உனக்கு ஸ்த்ரீதனச் சீராக அளித்தாற்போல இருக்கிறது.

இந்த ஸ்லோகத்தில் அன்னையின் நிதம்பத்தைச் சொல்லுகையில் அது பூமியை விடப் பெரியதாக, அதிக கனத்துடன் இருப்பதாகவும், அவ்வாறான அன்னையின் நிதம்பத்தால் பூமி லேசாக இருப்பதாகத் தோன்றுகிறது என்றும் சொல்லியிருக்கிறார். மேலும், மலையடிவாரத்தை மலையின் நிதம்பம் என்று கூறுவதையொட்டி மலையரசன் தனது அடிவாரத்தை தன்மகளான பார்வதிக்கு நிதம்பமாகக் கொள்ளசீதனம் கொடுத்துள்ளதாகக் கூறுகிறார்.


பார்வதீ - மலையரசன் மகளே!;க்ஷிதிதரபதி: - பர்வதராஜனாகிய உன் தந்தை; குருத்வம் - கனமான தன்மையுள்ள; விஸ்தாரம் - விசாலமானதான; நிஜாத் நிதம்பாத் - தன்னுடைய நிதம்ப ப்ரதேசத்திலிருந்து;ஆச்சித்ய - எடுத்து; த்வயி - உன்னிடத்தில்; ஹரணரூபேண - ஸ்த்ரீதனச் சீராக; நிததே - வைத்திருக்கிறார்; அத: - ஆகையால்; அயம் - இந்த; குரு: - பருத்த; விஸ்தீர்ண - விசாலமான; தே - உன்னுடைய;நிதம்ப ப்ராக்பார - நிதம்பத்தின் உருவமானது; அசேஷாம் வஸுமதீம் - பூமியின் எல்லா பாகத்தையும்; ஸ்தகயதி - மறைக்கிறது; லகு த்வம் நயதி ச - (பூமியை) லேசாக இருப்பது போல தோன்றச் செய்கிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

கொத்துவரி யலர்சோலை யிமயவெற் பரசன்மெய்க்
குலமலைப் பக்க மெனவாழ்
அத்தனைவி ரிந்தவக லத்தொடுபெ ரும்பாரம்
அடையவுன்நி தம்ப விடையே
எத்தனைபெ ரும்புவனம் இற்றாலும் அழிவிலை
இதற்கெனச் சேம நிதிபோல்
வைத்தது பரந்திடங் கொண்டுவகை யிடமற
வருத்தவோ மதுர அமுதே.


******************************************************************************கரீந்த்ராணாம் சுண்டாந் கநககதளீ காண்ட படலீம் உபாப்யாம் ஊருப்யாம் உபயமபி நிர்ஜித்ய பவதி
ஸுவ்ருத்தாப்யாம் பத்யு: ப்ரணதி கடிநப்யாம் கிரிஸுதே
விதிஜ்ஞே ஜாநுப்யாம் விபுதகரிகும்பத்வயம் அஸி


அம்பிகே!, உன்னுடைய தொடைகளிரண்டும் கஜராஜங்களது துதிக்கைகளையும், தங்க வாழை மர தண்டுகளையும் விஞ்சிய சோபையுடன் கூடியதாக இருக்கிறது. உன்னுடைய முழங்கால்களில் இருக்கும் சில்லுகளோ மிகவும் உருட்சியாக, உனதுபதி பரமசிவனுக்கு நீ அடிக்கடி நமஸ்காரம் செய்வதால் மிகுந்த கடினமாகி, திக்கஜங்களைன் கும்பங்களைக் கூட ஜெயித்த பலத்துடன் விளங்குகின்றன.

அம்பிகை சகல சாஸ்த்ரார்த்தங்களையும் அறிந்தவளாதலால் தனக்கு எவ்வளவு மஹிமை இருந்த போதிலும், மஹா பதிவிரதையாக, தன் புருஷனான பரமசிவனுக்குச் செய்யவேண்டிய மரியாதைகளில் கொஞ்சமும் குறைவில்லாமல் நடந்து கொள்கிறாள்,என்பதை 'வித்ஜ்ஞே' என்ற சொல்லாலும், 'பத்யு: ப்ரணதிகடினாப்யாம்' என்பதாகவும் அறியத் தருகிறார். 'விதிஜ்ஞே' என்பதற்கு வேதார்த்தங்களை அனுஷ்டிக்கிறவளென்றும் சொல்லலாம்.

பவதி - அம்மா; கிரிஸுதே - மலையரசன் மகளே!; விதிஜ்ஞே - வேதார்த்தங்கள் அறிந்தவளே; கரீந்த்ராணாம் சுண்டாந் - கஜங்களின் தும்பிக்கைகளையும்; கநக கதளீகாண்ட படலீம் - தங்க வாழைமரத்து தண்டுகளையும்; உபயமபி - இரண்டையும்;உபாப்யாம் ஊருப்யாம் - உன் இரு தொடைகளால்; நிர்ஜித்ய - ஜெயித்து; ஸுவ்ருத்தாப்யாம் - நன்றாக திரண்ட; பத்யு: ப்ரணதி கடினாப்யாம் - புருஷனான பரமசிவனுக்கு அடிக்கடி நமஸ்காரம் செய்வதால் கடினமாகிய; ஜாநுப்யாம் - முழங்கால் சில்லுகள்;விபுதகரி கும்பத்வயம் - கஜங்களின் கும்பங்களை; நிர்ஜித்ய - ஜெயித்த; அஸி - விளங்குகிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

பொற்கதலி புறங்காட்டுங் குறங்கால் வேழப்
புழைக்கைதடிந் துஞ்சிவனைப் பணிந்து தேய்ந்த
வற்கடின முழந்தாளிற் கும்பஞ் சாய்த்து
மணிமருப்பைக் கனதனத்தால் வளைத்து மம்மே
நிற்கடின கோபமம ராமை கண்டோ
நித்தரதன் தொக்குரித்த துடுத்த நேயம்
பிற்கருதி யிவளுறுப்போ டுவமை வீறு.
பெற்றதிது என்னுமிந்தப் பெருமை கண்டோ.