ஆனந்த லஹரி - 37 & 38


விசுத்தெள தே சுத்தஸ்படிக விசதம் வ்யோமஜநகம்
சிவம் ஸேவே தேவீமபி சிவஸமாநவ்யவஸிதாம்
யயோ: காந்த்யா யாந்த்யா: சசிகிரண ஸாரூப்யஸரணே:
விதூதாந்தர்வாந்தா விலஸதி சகோரீவ ஜகதீ
அம்மா!, சுத்த ஸ்படிகம் போன்ற நிர்மலமானவரும், ஆகாச தத்துவத்தின் மூலமானவருமான பரமசிவனையும், அவரைப் போன்ற ரூப, தத்துவங்களையுடைய உன்னையும் என்னுடைய விசுத்தி சக்ரத்தில் தியானித்து வணங்குகிறேன். உங்களிருவரிடத்திருந்தும் வரும் வெண்ணிலா போன்ற ஒளியினால் அஜ்ஞான இருட்டானது அகன்று உலகம் சகோரபக்ஷி போன்று மகிழ்வுடன் இருக்கிறது.


சகோர பக்ஷி என்பது ஒரு உவமை, அந்த பறவையானது நிலவின் ஒளியினை அருந்தி, அதில் மகிழ்ந்து உயிர் வாழ்வதாம். அதைப் போன்று, அன்னையை வணங்குபவர்கள், அம்மை-அப்பனிடமிருந்து ப்ரகாசிக்கும் நிலவொளி போன்ற குளிர்ந்த காந்தியால் அஜ்ஞானத்தை விலக்கி ஆனந்தம் அடைவராம்.


தே விசுத்தெள - உன்னுடையதான விசுத்தி சக்ரத்தில்; சுத்தஸ்படிக விசதம் - சுத்தமான ஸ்படிகம் போன்ற நிர்மல ரூபமுடைய; வ்யோமஜநகம் சிவம் - ஆகாசதத்துவத்தை உண்டுபண்ணூம் சிவன்; சிவஸமாந வ்யவஸிதாம் - சிவனுக்கு சமமான; தேவீம் அபி ஸேவே- தேவியையும் வணங்குகிறேன்; யயோ: - எவரிடமிருந்து; சசி கிரண ஸாரூப்யஸரணே - சந்திர ஒளிக்கு சமமான; யாந்த்யா: காந்த்யா - வெளிவரும் காந்தி/ஒளி; ஜகதீ - ஜகம்/உலகம் முழுவதும்; விதூதாந்தர்த்வாந்தா - போக்கடிக்கும் அஜ்ஞானம் என்னும் உள்ளிருட்டு; சகோரீவ = சகோரீ இவ - சகோர பக்ஷி போல்; விலஸதி - விளங்குகிற


ஸமுந்மீலத் ஸம்வித்கமல மகரந்தைகரஸிகம்
பஜே ஹாம்ஸத்வந்த்வம் கிமபி மஹதாம் மாநஸசரம்
யதாலாபாத் அஷ்டாதசகுணித வித்யாபரிணதி:
யதாதத்தே தோஷாத் குணமகிலம் அத்ப்ய: பய இவ:இந்த ஸ்லோகத்தில் சிவ தம்பதிகளை ஹம்ஸ தம்பதிகளாக வர்ணித்திருக்கிறார் பகவத் பாதர். எந்த ஹம்ஸ ஜோடியானது அஷ்டாதச வித்தைகளுக்கு மூலமாக இருக்கிறதோ, அவை எப்படி நீரை விலக்கி பாலை மட்டும் குடிப்பது போல தோஷங்களை விலக்கி நல்ல குணங்களை ஏற்கிறதோ, அந்த ஹம்ஸ ஜோடி எப்படி மலர்ந்த (அனாஹத சக்ரம்) தாமரையின் மகரந்தத்தில் அதிக நாட்டமுடையதாக இருக்கிறதோ, அவை எப்படி மஹான்களுடைய மனதில் எப்போதும் சஞ்சரிக்கிறத்தோ, அந்த வர்ணிக்க முடியாத ஹம்ஸ தம்பதிகளான உங்கள் இருவரையும் எனது அனாஹதத்தில் வைத்து தியானிக்கிறேன்.ஹம்ஸ பக்ஷிகள் வசிக்குமிடத்தை மானஸ ஸரஸ் என்பர், அவ்விடத்துக்கு ஒப்பாக மஹான்களின் மனதையும் சிவதம்பதிகளை அங்கு வசிக்கும் ஹம்ஸ பக்ஷிகளாகவும் சொல்லியிருக்கிறார். ஹம்ஸ பக்ஷிகளின் கூவுதலுக்கு இணையாக அஷ்டாதச வித்தைகளை குறிப்பிட்டுள்ளார். "நீர் ஒழிய பால் உண் குருகின் தெரிந்து" என்று அன்னம் பாலை மட்டும் பிரித்து உண்ணுவது பற்றிச் சொல்வது போல, நல்ல குணங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு தவரானவற்றை தள்ளுவது சொல்லப்பட்டிருக்கிறது. அஷ்டாதச வித்தைகள் என்பது, 4 வேதங்கள், 6 வேதாங்கங்கள், 8 சாஸ்திரங்கள் ஆக பதினெட்டும் சேர்ந்தது அஷ்டாதச வித்தைகள், இவை எல்லாம் ஹம்ஸ தம்பதிகளான சிவ-சக்திகளின் ஆலாபத்தில் வந்ததாக சொல்லப்படுகிறது.

மந்திரார்த்தமாகப் பார்த்தால் "ஹம்ஸ:" என்பதில் ஹம் என்பது புருஷனாகிய சிவனையும், ஸ: என்பது அம்பாளையும் குறிக்கும். எனவே ஹம்ஸ: என்பதே சிவசக்தி ஐக்கியத்தைக் குறிப்பதாக இருக்கிறது. ஆனால், ஹம்ஸத்வந்த்வம் என்பதில் ஜோடி ஹம்ஸங்கள் என்று தனித்தனியாக கூறியிருக்கிறார்.ஆதத்தே - கிரஹிக்கின்ற; அத்ப்ய: பய இவ - நீரிலிருந்து பாலை போல்; குணமகிலம் - அகிலத்தின் குணம்; தோஷாத் - தோஷங்களை; யத் எந்த ஹம்ஸ ஜோடியானது; கிமபி - வர்ணிக்க முடியாத; அஷ்டாதசருணித வித்யாபரிணதி: - 18 வித வித்தைகளை குறிக்கும்; யதாலாபாத் - யதா+ ஆலாபாத் - எந்த ஹம்ஸ ஜோடியின் ஆலாபத்திலிருந்து; பஜே - நமஸ்கரிக்கிறேன்.

ஆனந்த லஹரி - 35 & 36


மநஸ்த்வம் வ்யோம த்வம் மருதஸி மருத்ஸாரதி-ரஸி
த்வ-மாபஸ்-த்வம் பூமிஸ்-த்வயி பரிணதாயாம் ந ஹி பரம்
த்வமேவ ஸாத்மாநம் பரிணமயிதும் விஸ்வ-வபுஷா
சிதாநந்தாகாரம் ஸிவயுவதி பாவேந பிப்ருஷே

அம்மா!, நீயே மனம், நீயே ஆகாசம், நீயே, சூர்யன், வாயு, அக்னி, பூமி, நீர் போன்றவற்றின் தத்வமாகிறாய். நீயே பிரபஞ்சமாக இருப்பதால் உனக்கு வேறான பொருள் இல்லை. நீயே உனது ரூபத்தை பிரபஞ்சமாக காண்பிப்பதற்காக பரமசிவனுடைய பத்னி என்பதான ஆனந்த சித் ரூபத்தை ஏற்கிறாய்.


இந்த ஸ்லோகத்தில் அன்னையின் அஷ்ட மூர்த்தி தத்வம் சொல்லப்படுகிறது. அதாவது மனத்தின் (மநஸ்த்வம்) அதிதேவதையான சந்திரனும், மருத்ஸாரதி: என்பதில் சூரியன் மற்றும் அக்னியும், பிருதிவி, அப்பு, வாயு, தேயு, ஆகாசம் ஆகிய எட்டு வடிவம்.


த்வயி பரிணதாயாம் - நீயே பிரபஞ்சமாக பரிணமிக்கிறதால்; ந ஹி பரம் - வேறு பரம்பொருள் இல்லை; சிவ-யுவதி - சிவனது பத்னி; சிவானந்த ஆகாரம் - ஆன்ந்த சித்ருபத்தை; பிப்ருஷே - ஏற்கிறாய்.தவாஜ்ஞா-சக்ரஸ்த்தம் தபந-ஸசி கோடி த்யுதிதரம்
பரம் ஸம்பும் வந்தே பரிமிலித பார்ஸ்வம் பரசிதா
யமாராத்த்யன் பக்த்யா ரவி-ஸசி-ஸுசீநா-மவிஷயே
நிராலோகே-லோகே நிவஸதி ஹி பாலோக-புவநே

அம்பிகே!, உன்னுடைய ஆக்ஞா சக்கரத்தில் (புருவங்களுக்கு மத்தியில்) ஒளிர்கின்றவனும், கோடி சூர்ய-சந்திரர்களின் காந்தியைத் தரிப்பவனும், ஸகுண-நிர்குண சக்திகளை தனது இடது பக்கத்தில் தாங்குபவனுமான காமேஸ்வரனை நான் வணங்குகிறேன். அந்த காமேஸ்வரனை தியானிப்பவன்
சூரிய, சந்திர, அக்னி போன்றவர்களுக்கு பிரகாசத்தை அருளும் பரஞ்சோதி வடிவான உன்னுடைய சாயுஞ்ய பதவியில் வசிப்பான்.


இங்கே தவாஜ்ஞா என்பது ஸ்ரீ சக்ரத்தில் இருக்கும் நான்கு சிவ தளங்களை என்பது குறிக்கப்படுவதாக லக்ஷ்மிதரர் விளக்குகிறார். ஆனால் இது ஆஞ்யா சக்ரத்தில் இருக்கும் இருதளங்களைக் குறிப்பதாகவும் சொல்லப் படுகிறது.


இந்த இடத்தில் "ந தத்ர ஸுர்யோ பாதி ந சந்த்ர தாரகம், நேமா வித்யுதோ பாந்தி குதோயமக்னி: தமேவ பாந்த மனு பாதி ஸர்வம், தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி" என்பதான கடோபநிஷதத்தை எடுத்துக் காட்டுகிறார் தேதியூரார். அதாவது, ஆக்ஞா சக்ரத்தில் வாசம் செய்யும் சங்கரனாலேயே சூரியன், சந்திரன், நக்ஷத்திரங்கள் பிரகாசமடைக்கிறது. ஸ்வயம்பிரகாசியான அவனது ஒளியால்தான் அக்னி, சூரியன், சந்திரன் போன்றவை பிரகாசம் அடைகிறது என்பது பொருள்.


தவாஜ்ஞா-சக்ரஸ்த்தம் - தவ+ஆஞ்யா - உன் ஆஞ்யா சக்ரத்தில்; தபந-ஸசி கோடி த்யுதிதரம் - கோடி சூர்ய சந்திரர்களின் பிரகாசம் உடையவரும், பரசிதா - சகுண, நிர்குணங்கள் இரண்டும் இணைந்த சக்தி; பரிமிளித பார்ச்வம் - இருபக்கங்களிலும் அணைக்கப் பெற்ற; பரம் சம்பும் - பரமசிவனை; வந்தே - வணங்குகிறேன்; அவிஷயே - விளங்க வைக்க முடியாத; நிரா லோகே - கண்ணுக்குப் புலனாகாத; அலோகே - கண்களில் வேறுபடத் தெரியும்; பாலோக புவனே - ஜோதிவடிவான உலகில்; நிவஸதிஹி - வசிப்பான்.

ஆனந்த லஹரி - 33 & 34ஸ்மரம் யோனீம் லக்ஷ்மீம் த்ரிதய-மித-மாதெள தவமனோ:
நிதாயைகே நித்யே நிரவதி-மஹாபோக-ரஸிகா:
பஜந்தி த்வாம் சிந்தாமணி-குண நிபத்தாக்ஷ-வலயா:
சிவாக்னெள ஜுஹ்வந்த: ஸுரபிக்ருத தாராஹுதி-சதை:

அம்பிகே!, புண்யவான்களாகிய யோகிகள், தமது கைகளில் தாமரை மணிமாலையைக் கையில் கொண்டு, முறையே காம, யோனி, மற்றும் லக்ஷ்மி பீஜாக்ஷரங்களை முன்னர் சொன்ன15 அக்ஷரங்களுடன் சேர்த்து த்ரிகோணாகாரமாகிய சிதக்னியில் பசு நெய்யினால் ஹோமம் செய்து உன்னை திருப்தி செய்விக்கிறார்கள்.

பஞ்சதசீ என்னும் மந்திரம் பற்றி 32ஆம் ஸ்லோகத்தில் பார்த்தோம். பஞ்சதசீயில் வரும் அக்ஷரங்களுக்கான தேவதைகள் என்னென்ன என்று அங்கு பார்த்தோம். அவற்றுடன் காம, யோனி, மற்றும் லக்ஷ்மி அக்ஷரங்களை இணைத்து இங்கு சொல்கிறார். இவ்வாறாக இந்த மூன்றும் இணைத்தபின் வருவதை செளபாக்ய பஞ்சதசீ என்பர். அந்த மந்த்ரம் இங்கே மறைத்துக் கூறப்பட்டிருக்கிறது. இந்த ஸ்லோகத்தையே கைவல்யர் காதி வித்தை என்றும் முந்தைய ஸ்லோகத்தை ஹாதி வித்தை என்றும் கூறுகிறார்.

நிரவதி மஹாபோக-ரஸிகா - இடைவிடாது மந்திர ஜபம் செய்து ரசிக்கிறவர்கள்; ஏகே - சிலர்; சிந்தாமணி-குண-நிபத்த-அக்ஷவலயா: - தொடர்ந்து சிந்தனையையே ஜபமாலையாக கொண்டு; சிவாக்னெள - சிவாக்னி எனப்படும் முக்கோண ஹோம-குண்டத்தில்; ஸுரபிக்ருத-தாரா - காமதேனு அளித்த நெய் தாரையை; ஆஹுதி - (அக்னிக்கு) அளித்தல்; ஜுஹ்வந்த: - செய்பவர்களாக; பஜந்தி - ஆராதித்தல்

வீட்டில் செய்யப்படும் ஹோமங்கள் சதுரமான குண்டத்தில் செய்யப்பட்டாலும், கோவில்களில் பல ரூபங்களில் ஹோம குண்டங்கள் அமைத்திருப்பதை பார்த்திருக்கிறோம். ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு ரூபத்தில் ஹோம குண்டம் இருக்க வேண்டும். அதில் சிவனுக்கானது முக்கோண அமைப்பில் இருக்கும். இங்கே சிவோஹம் என்று பாவனையாக சிதக்னியில் ஹோமம் செய்ய வேண்டும் என்கிறார்.


சரீரம் த்வம் சம்போ: சசி-மிஹிர-வக்ஷோருஹ-யுகம்
தவாத்மானம் மன்யே பகவதி நவாத்மான மனகம்
அத: சேஷ: சேஷீத்யய-முபய-ஸாதாரணதயா
ஸ்த்தித: ஸம்பந்தோ வாம் ஸமரஸ-பரானந்த-பரயோ:

பராம்பிகே!, சந்திர-சூரியர்களை நிகில்களாக கொண்ட நீ பரமசிவனுக்கு உடலாகவும், மாசற்ற ஒன்பது வ்யூக ஸ்வரூபியான சிவனது உடலானது உன்னுடையதாகவும் மனக்கண்ணால் காண்கிறேன். ஆகவே உடமை, உடையவர் என்ற பாகுபாடில்லாது உங்களது உறவு ஸமநிலையில், சேஷ-சேஷி பாவமாக (ஒருவர் சரீரமாகவும், இன்னொருவர் ஆன்மாவாகவும்) இருப்பது ஒப்புயர்வற்ற ஸச்சிதானந்தத்தை அளிப்பதாக இருக்கிறது.

ஸமரஸ பரானந்த பரயோ - சிவனும் சக்தியும் சமமாக இருப்பதால் சிவனுக்கு ஸமய: என்றும் சக்திக்கு ஸமயா என்றும் பெயருண்டு. நாம் சாதாரணமாக சிவ-சிவா என்று சொல்லும் போது முதலில் வரும் சிவ என்பது ஈசனையும் இரண்டாவதாக வரும் சிவா: அம்பிகையையும் குறிக்கும் என்பர். 32, 33 ஆகிய ஸ்லோகங்களில் மறைந்திருக்கும் மந்திரத்தின் ரிஷி ஈசன், அதனால் தான் இங்கே சம்போ என்று கூறி அவரை தியானிக்கும்படி அமைக்கப்படிருக்கிறதாக லக்ஷ்மிதரர் சொல்கிறார்.


சசி-மிஹிர - சந்திர-சூர்யர்களை; வக்ஷோருஹ-யுகம் - நிகில்களாக கொண்ட; த்வம் - நீ; சரீரம் - உடல்; சம்போ - பரமசிவன்; நவாத்மானம் - (காலம், குலம், நாமம், ஞானம், சித்தம், நாதம், பிந்து, கலை, ஜீவன்) ஆகிய 9 விதமான வியூஹங்களை உடையவன். மன்யே - மனக்கண்; அத: -ஆகையால்; உபய ஸாதரணதயா - இருவருக்கும் ஸமமான; ஸ்தித: - நிலை பெற்ற;