செளந்தர்யலஹரி 63 & 64


ஸ்மித ஜ்யோத்ஸ்நா ஜாலம் தவ வதன சந்த்ரஸ்ய பிபதாம்
சகோராணாம் ஆஸீத் அதிரஸதயா சஞ்சுஜடிமா
அதஸ்தே சீதாம்சோ: அம்ருதலஹரீம் ஆம்லருசய:
பிபந்தி ஸ்வச்சந்தம் நிசி நிசி ப்ருசம் காஞ்ஜிகதியா

நீ, புன்சிரிப்புடன் இருக்கும் சமயம் உன்னுடைய வதன சந்திரனிடமிருந்து பெருகும் நிலவைப் போன்ற கிரணங்களை அதிகமாகச் சாப்பிட்ட சகோர பக்ஷிகளுக்கு அதன் இனிமையில் மூக்குத் திகட்டி மறத்துப் போனது. அவ்வாறு மறத்துப் போனதை மாற்றிக் கொள்ள அவை சந்திரனது அம்ருதமயமான கிரணங்களைப் புளித்த கஞ்சியாக நினைத்து அதை இரவுகளில் வேண்டிய அளவு குடிக்கின்றன.

இந்த ஸ்லோகத்தில் அன்னையின் புன்சிரிப்பினைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். ஸ்மிதம் என்றாலேயே புன்சிரிப்பு என்று பொருள். அம்பிகையின் புன்சிரிப்பானது இன்னொரு சந்திரன் போன்று தோற்றம் தருகிறதாம். சகோர பக்ஷிகள் சந்திரனுடைய நிலாவையே பானம் பண்ணுவதாகச் சொல்வர். இதே சகோர பக்ஷியை "இங்கேயும்" பகவத் பாதர் உபயோகம் பண்ணியிருக்கிறார். அதாவது அன்னையின் ஸ்மிதமான வதனமானது சந்திரனைவிட அதிக மதுரமாக இருக்கிறது என்றும், அம்பிகையின் வதனாரவிந்தமாகிய சந்திரனுடன் ஒப்பிடும் போது, சந்திரன் புளித்த கஞ்சி மாதிரி இருப்பதாக ஒப்பீடு செய்கிறார்.


தவ வதந சந்த்ரஸ்ய - உன்னுடைய முகமாகிற சந்த்ரனுடைய; ஸ்மித ஜ்யோத்ஸ்னா ஜாலம் - புன்சிரிப்பாகிய நிலவுக் கூட்டத்தை; பிபதாம் - குடிக்கிற; சகோராணாம் - சகோர பக்ஷிகளுக்கு; அதிரஸதயா - அதிக இனிமையாக இருப்பதால்; சஞ்சு ஜடிமா ஆஸீத் - மூக்கு திகட்டி மறத்துப் போதல்; அத: ஆகவே; தே - அவை; ஆம்லருசய: - புளிப்பில் ஆசையுடையதாக; சீதாம்சோ: சந்திரனுடைய; அம்ருத லஹரீம் - கிரணங்களாகிய அம்ருத கலையை; காஞ்ஜிகதியா - கஞ்சி என்றெண்ணி; ஸ்வச்சந்தம் - யதேஷ்டமாக; நிசி நிசி - ஒவ்வொரு இரவிலும்; ப்ருசம் பிபந்தி - நிறையக் குடிக்கின்றன.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்:

அன்பு முற்றிவடி வாய அம்மைநின்
தான னத்துமதி நகைநிலா
நன்பு றத்தமுத மொழுகு மாமதுர
நறைகொள் சீதளம யின்றவாய்
இன்பு ளிப்பலது உவட்டு றாதினியெ
நத்தெ விட்டியச கோரம்வான்
முன்ப ரப்புநில வுண்ணு மாலுனது
மூர லுக்குநிகர் மூரலே.


-----------------------------------------------------------------------------------------
அவிச்ராந்தம் பத்யு: குணகண கதாம்ரேடநஜபாஜபா
புஷ்பச்சாயா தவ ஜநநி ஜிஹ்வா ஜயதி ஸா
யதக்ராஸீநாயா: ஸ்படிகத்ருஷதச்சச்சவிமயீ
ஸரஸ்வத்யா மூர்த்தி: பரிணமதி மாணிக்யவபுஷா

தாயே!, பதிவிரதையான நீ, உன் புருஷனுடைய லீலைகளை எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பதால் உனது நாக்கானது செம்பரத்தைப் புஷ்பம் போன்று சிவப்பாக இருக்கிறது. அவ்வாறான உனது நாக்கில் குடிகொண்டிருக்கும் சரஸ்வதி தேவியின் சுத்த ஸ்படிக நிறமானது உனது நாவில் இருக்கும் சிவப்பின் காரணமாக பத்மராகக் கல்லின் காந்தியோடு கூடினதாக மாறியிருக்கிறது.

அன்னையின் நாக்கில் சரஸ்வதி தேவி எப்போதும் இருப்பதாகச் சொல்வது வழக்கம். அவளுடைய நிறம் ஸ்படிகம் போன்ற வெளுப்பு. அப்படியிருந்தாலும் அவள் வாசம் செய்யும் அன்னையின் நாக்கு ரக்த வரணமாக இருப்பதால் சரஸ்வதி தேவியும் நிறம் மாறி பத்மராகக் கல்லின் ஒளியுடன் இருப்பதாகச் சொல்கிறார். அன்னை எப்போதும் தனது புருஷனது லீலைகளைப் பேசிக்கொண்டே இருப்பதாகச் சொல்லி அவளது நாக்கைச் சிறப்பித்துக் கூறும்போதே அவளது பாதிவிரந்தத்தையும் விசேஷமாகச் சொல்கிறார்.

தவ ஸா ஜிஹ்வா - உன் நாக்கானது; அவிச்ராந்தம் - எப்போதும்/இடைவிடாது; பத்யு: - உன் புருஷனான பரமசிவத்திடம்; குணகண கதாம்ரேடந ஜபா - ஈசனின் கல்யாண குணங்களைச் சொல்லும் கதைகளை மீண்டும் மீண்டும் மந்திர ஜபம் போல; ஜபா புஷ்ப - செம்பரத்தைப் பூ; சாயா -
நிறத்துடன்; ஜயதி - விளங்குகிறது; யதக்ராஸீநாயா - யத் அக்ராஸீனாயா: - எந்த நாக்கின் நுணியில்; ஸரஸ்வதியா - சரஸ்வதி தேவியின்; ஸ்படிக- த்ருஷத்-அச்சவிமயீ - ஸ்படிகம் போன்ற வெண்மையான ஒளியுடைய; மூர்த்தி: - ரூபமானது; மாணிக்க வபுஷா - பத்மராகத்தின் ரூபமாக; பரிணமதி - மாறுதல் ஆகிறதோ?.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்:

விள்ள நாவுரை எழுந்தொ றுந்தலைவர்
வீரமும் புகழும் அழகுமே
தெள்ளு பாடல்மது ரம்ப ழுத்தனைய
செய்ய கேழொளிவ னப்பினால்
அள்ளல் மாமலரை விட்டு வாணியுனது
அருண நாவுறைய வெள்ளையாய்
உள்ள மேனியுமே னம்மை நீயருள
உன்நி றம்பெறுவ தொத்ததே.

செளந்தர்யலஹரி 61 & 62


அஸெள நாஸாவம்ச: துஹிநகிரிவம்சத்வஜபடித்
வதீயோ நேதீய: பலது பலமஸ்மாக முசிதம்
வஹந்த்யந்தர் முக்தா: சிசிரகர நிச்வாஸகளிதம்

ஸ்ம்ருத்யா யத்தாஸாம் பஹிரபி ச முக்தாமணிதர:


அம்மா!, முத்துமணியைத் தரித்துக் கொண்டிருக்கும் உனது மூக்கு (நாஸதண்டம்) நாங்கள் கோரியவைகளை சீக்ரமாகக் கொடுக்கட்டும். அது மூங்கில் போல முத்துக்கள் நிறைந்து இருப்பதால் அவைகளில் ஒரு முத்து உனது ஸ்வாசத்தின் போது வெளிவந்து மூக்குத்தியாக இருப்பதைப் போல தோன்றுகிறது.

மூங்கிலரிசி என்பது மூங்கில் கணுக்களிடையே இருப்பதாகப் படித்த நினைவு. மூங்கில் உள்ளே முத்துக்கள் இருப்பதாகச் சொல்லப்படுமாம். இங்கே ஆசார்யார் அன்னையின் மூக்கை மூங்கில் போன்று இருப்பதாகக் கூறுகிறார். மேலும், மூங்கில் உள்ளே இருக்கும் முத்துக்கள் போல அன்னையின் மூக்கினுள்ளும் இருக்கிறது. அதனால்தான் அன்னை ஸ்வாசத்தை வெளிவிடும் போது உள்ளிருக்கும் முத்தானது வெளிவந்துநமக்குத் மூக்குத்தியாகத் தெரிகிறது என்று கூறுகிறார்.


துஹிந கிர்வம்சத்வஜபடி - ஹிமவான் வம்சத்துத்திற்கு த்வஜத்தின் கொடி போன்றவளே; த்வதீய: அஸெள - உன்னுடைய நாசதண்டமானது; அஸ்மாகம் - எங்களுக்கு; உசிதம் - தகுந்தது; நேதீய: - சீக்கிரம் கிடைக்க; பலம் பலது - (உன் நாச தண்டமானது) பலத்தை தரட்டும்; அந்த: தன்னுள்; முக்தா: வஹதி - முத்துக்களை கொண்டுள்ள; யத்: எதனால்; தாஸாம் ஸம்ருத்யா - நிறைந்துள்ள; பஹிரபி ச - வெளியிலும் கூட; சிசிரகர நிச்வாஸகளிதம் - வாம நாடி என்று கூறப்படும் இடது பக்கத்து மூக்கு துவாரம்(சாதாரணமாக மூச்சினை வெளிவிடும் பகுதி); மூக்தா மணிதர - முத்து மூக்குத்தி (புல்லாக்கு?) அணிந்திருக்கிறதோ?

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!

இமய மன்னன் மரபில் வெற்றி
இடுப தாகை அனையஎன்
அமலை யுன்றன் வதம துண்ட
அணிசி றந்த மணியையோ
விமலு மன்னு கவிஞர் முத்தை
வெற்பில் வல்லி யலர்வதோர்
கமல மன்னு குமிழ ளித்தல்
கண்ட தல்ல என்பதே

-------------------------------------------------------------------------------------ப்ரக்ருத்யா (ஆ)ரக்தாயாஸ் தவ ஸுததி தந்தச்சதருசே:
ப்ரவக்ஷ்யே ஸாத்ருச்யம் ஜநயது பலம் வித்ருமலதா
ந பிம்பம் தத்பிம்ப ப்ரதிபலந ராகாத் அருணிதம்
துலாம் அத்யாரோடும் கதமிவ விலஜ்ஜேத கலயா


அம்பிகே!, இயற்கையாகவே சிவந்த் உன்னுடைய அதரங்களுக்கு சமமாக ஒரு பொருள் ஏதாவது இருக்குமானால், அது பவழக்கொடியில் பழுத்த பழமாக இருக்கலாம். கோவைப் பழமோ உன்னிடௌய அதரத்தினது ஒளியால் உண்டான சிவப்பு நிறமுடையதாக இருப்பதால், அது உனது அதரகாந்தியின் முன் வெட்கப்படும்படியாக இருக்கிறது.

பவழக்கொடிக்கு பழம் கிடையாது, ஆகையால் அம்பாளுடைய அதரங்களுக்கு இணை ஏதுமில்லை என்று கூறுகிறார். கவிஞர்கள் சாதாரணமாக பெண்களின் அதரத்திற்குச் சமமாகக் கோவைப்பழத்தையும், பவழத்தையும் சொல்வது வழக்கம். கோவைப் பழத்திற்கு சம்ஸ்கிருதத்தில் பிம்ப-பலம் என்று பெயர். அன்னையின் அதர பிம்பத்தின் சிகப்பு நிறமானது கோவைக்கனியில் பிரதிபலிப்பதாலேயே அப்பழம் அந்த நிறத்தைப் பெற்றிருக்கிறது என்கிறார். ஆக, பிரதிபலிப்பே கோவைப்பழத்தின் சிவப்பு என்றால் அதனி மூலமான அன்னையின் அதரங்கள் எப்படியிருக்கும் என்று நம்மை கற்பனையில் காணச் செய்கிறார் பகவத்பாதர். இதுவே சஹஸ்ரநாமத்தில், "நவவித்ரும பிம்ப ஸ்ரீந்யக்கார் தசனச்சதா" என்று கூறப்படுகிறது.

ஸுததி - அழகிய பல்வரிசை உடையவளே; ப்ரக்ருத்யா - இயற்கையாக; ஆரக்தாயா: - சிவந்திருக்கும்; தவ - உன்னுடைய; தந்தச் சதருசே: அதரத்தின் அழகானது; ஸாத்ருச்யம் -உபமானமாகும்; ப்ரவ்க்ஷ்யே - சொல்லுகிறேன்; வித்ருமலதா - பவழக்கொடி; பலம் - பழம்; ஜயநது - உண்டாக்கும்; பிம்ப பலம் - கோவைப் பழம்; தத் பிம்ப ப்ரதிபலந ராகாத் - உதட்டின் பிரதி பிம்பத்தால் ஏற்பட்ட நிறத்தில்; அருணிதம் - சிவப்பாக; கலயா - சிறிதளவு; துலாம் - சமமாக இருக்கும் தன்மை; அத்யாரோடும் - அடைவதற்கு; கதம் ந விலஜ்ஜேந - ஏன் வெட்கப்படாது?

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!


இறைவி நின் இதழ் சிவப்பு
இயற்கை ஒத்து இணைச்சொன்னால்
நிறைகொள் கொவ்வை இந்த நிறத்தின்
நீழல் பெற்று விம்பமாய்
உறைதல் கொண்டு நாணும் மற்றோர்
உவமை இல்லை உண்டென்றால்
அறைகடல் துகிர்ப்ப ழுக்கின்
அன்று சொல்வன் அளியனே.

செளந்தர்யலஹரி 59 & 60ஸ்புரத் கண்டாபோக ப்ரதிபலித தாடங்கயுகளம்
சது:சக்ரம் மந்யே தவ முகமிதம் மந்மதரதம்
யமாருஹ்ய த்ருஹ்யத்வநிரதம் அர்கேந்துசரணம்

மஹாவீரோ மார: ப்ரமத பதயே ஸஜ்ஜிதவதே

அம்மா!, உனது தாடங்கங்கள் கன்னத்தில் ப்ரதிபலிப்பதால் முகமானது நான்கு சக்ரங்களுடன் கூடிய மன்மதனது ரதம் போன்று காக்ஷி அளிக்கிறது. இது போன்ற ரதத்தில் இருப்பதால்தான் மன்மதன், ஸுர்ய-சந்திரர்களை சக்ரங்களாகக் கொண்ட பூமி என்னும் ரதத்தில் ஏறிக்கொண்டு யுத்த சன்னாஹத்துடன் இருப்பவரும், ப்ரமத கணங்களால் சூழப்பட்டவருமான பரமசிவனுடனேயே போர் புரியத் தயாராகிறான்.

இந்தப் பாடல் அன்னையின் கன்னங்களை வர்ணிப்பதாக அமைந்துள்ளது. அம்பிகையின் கன்னங்கள் வழுவழுப்பாக கண்ணாடி போல் இருக்கிறதாம். அதனால் காதில் இருக்கும் தாடங்கங்கள் கன்னதில் பிரதிபலித்து நான்கு சக்கரங்களாகத் தெரிகிறது என்கிறார். இந்த நேரத்தில் பகவத்பாதாள் திருவானைக்காவலில் அன்னையின் உக்ரத்தை தணிக்க ஸ்ரீ சக்ரங்களால் ஆன தாடங்கங்களைச் சாற்றியது நினைவுக்கு வருகிறது. இன்றும் காஞ்சி ஆசாரியார்கள் இந்த தாடங்கப் பிரதிஷ்டையைச் செய்து வருகின்றனர்.

மன்மதன் போர் புரிய உபயோகிக்கும் ரதம் இது போன்று என்று கூறியபின், பரமசிவனது த்ரிபுர சம்ஹாரத்திற்கு உபயோகித்த ரதத்தைப் பற்றிக் கூறுகிறார். அதாவது த்ரிபுர சம்ஹாரத்தின் போது பூமியே ரதத்தின் தட்டாகவும், சூர்ய-சந்திரர்களே சக்கரங்களாகவும் இருந்தனராம். அப்படியான சிறப்புமிக்க ரதத்தைக் கொண்ட சிவபெருமானையே தனது காம பாணங்களால் எதிர்க்கும் துணிச்சல் மன்மதனுக்கு வந்தது என்றால், அதன் காரணம் அன்னையின் வதனமே! என்று கூறுகிறார்.

ஸ்புரத் - பிரகாசிக்கும்; கண்டாபோக - கன்னங்களில்; ப்ரதிபலித -பிரதிபலிக்கும்; தாடங்க யுகளம் - காதில் அணியிம் தாடங்ம் என்னும் அணிகலன்; தவ இதம் முகம் - உன்னுடைய முகம்; சது: சக்ரம் மந்மத ரதம் -நான்கு சக்ரங்கள் உடைய மன்மதனது ரதம்; மந்யே - நினைக்கிறேன்; யமாருஹ்ய - யம்+ஆருஹ்ய - எதில் ஏறிக்கொண்டு; மார: - மன்மதன்; மஹா வீர: மஹாவிரனாக இருந்து கொண்டு; அர்கேந்து சரணம் - ஸுர்ய-சந்திரர்களை சக்ரங்களாக உடைய; அவநி-ரதம் - பூமியாகிய ரதத்தை; ஜ்ஜிதவதே - தயாராக இருக்கும்; ப்ரமதபதயே - ப்ரமத கணங்களுக்கு அதிபதியான பரமேஸ்வரன்; த்ருஹ்யதி - பகைக்கிறானோ.

கவிராஜரது பாடல் கீழே!

தோகைநின் கபோலஞ் சார்ந்த
துணைநிழற் சுவடுந் தோடும்
ஆகவில் வுருளை நான்கின்
ஆனன இரதம் வாய்த்தோ
ஏகநன் புடவி வட்டத்
திருசுட ராழித் திண்தேர்ப்
பாகரைப் பொருது மாரன்
பழம்பகை தீரப் பெற்றான்.

------------------------------------------------------------------------------------------
ஸரஸ்வத்யா: ஸுக்தீரம்ருதலஹரீ கெளசல ஹரீ:
பிபந்த்யா: சர்வாணி ச்ரவண சுளுகாப்யாம் அவிரளம் சமத்காரச்லாகா சலிதசிரஸ: குண்டலகணோ
ஜணத்காரைஸ் தாரை: ப்ரதிவசநமசஷ்ட இவ தே

அம்மா!, பரமசிவன் பத்னியே, அம்ருதம் போன்ற இனிமையாக உனது பேச்சுக்களை இடைவிடாது கேட்டுக் கொண்டு இருக்கும் சரஸ்வதி தேவி, கேட்கும் ஆவலில் தலையை அசைத்த வண்ணம் இருக்கிறாள். அவ்வாறு தலையை அசைக்கும் சமயத்தில், அவள் தன் காதுகளில் அணிந்திருக்கும் குண்டலங்கள் அசைகிறது. அவ்வாறு சரஸ்வதியின் குண்டலங்கள் அசைவது, அவை உங்களது பேச்சுக்களை ஜணத்கார சப்தம் கொடுத்து ஆமோதிப்பது போல இருக்கிறது.

அன்னையின் குரல் இனிமையைக் குறிப்பதான ஸ்லோகம் இது. அம்பிகையின் பேச்சு அம்ருதத்தினைப் போல இருக்கும் என்கிறார். சரஸ்வதி அன்னையின் அருகில் எப்போதும் இருப்பதாகச் சொல்லி, அவள் அன்னையின் அம்ருத பிரவாஹத்தை விஞ்சும் இனிய குரலோசையை கைகளால் உணவை அள்ளி-அள்ளி உண்பது போல தலையை ஆட்டிக் கொண்டு காதுகளால் கேட்கிறாளாம். அப்போது சரஸ்வதியின் காதுகளில் இருக்கும் குண்டலங்களால் ஏற்படும் சப்தம் அன்னையின் பேச்சை கேட்டு வியந்து பதிலாக புகழ்ச்சி கோஷம் செய்வது போல இருக்கிறதாம்.

சர்வாணி - சர்வேசரனாகிய பரமசிவன் பத்னி; அம்ருதலஹரீ-கெளசலஹரீ - அம்ருதப் பிரவாஹத்தை விஞ்சும் இனிய பிரவாஹமான; தே ஸுக்தீ: - உன் பேச்சுக்களை; ச்ரவண சுளுகாப்யாம் - கைகளில் அள்ளிச் சாப்பிடுவது போல காதுகளால்; அவிரளம் - அப்போதைக்கபோது; பிபந்த்யா: - குடிப்பவள்; சமத்காரச்லாகா-சலிதசிரஸ: - பேச்சை மெச்சும்படியாக தலை அசைத்தல்; ஸரஸ்வத்யா: - சரஸ்வதியின்; குண்டலகண: குண்டலங்களின்; தாரை - உரத்த; ஜணத்காரை: - ஜண்-ஜண் என்னும் சப்தம்; ப்ரதிவசநம் - பதில்; ஆசஷ்ட இவ - சொல்வது போல்.

கவிராஜரது பாடல் கீழே!

வேரி நா மலர்க்குள் வாணி
விலையில் பாடல் முதலாஞ்
சேர மா மடந்தை நின்செ
விக்கு ணாஅ ருத்தவே
ஆர மாலை முடி அசைப்ப
ஆடி யெற்று குண்டலம்
பூரை பூரை என்ற சொற்
பொலிந்த ஓசை பெற்றதே.

செளந்தர்யலஹரி 57 & 58த்ருவா த்ராகீயஸ்யா தரதளித நீலோத் பலருசா
தவீயாம்ஸம் தீநம் ஸ்நபய க்ருபயா மாமபி சிவே
அநேநாயம் தந்யோ பவதி ந ச தே ஹாநிரியதா
வநே வா ஹர்ம்யே வா ஸமகர நிபாதோ ஹிமகர:

மங்களங்களை அருள்பவளே!, சந்திரன் வனம் மற்றும் மாளிகை என்ற பேதம் இல்லாது எங்கும் சமமாகத் தன் கிரணங்களை வீசுவது போல, தீர்க்கமானதும், அன்றலர்ந்த நீலோத்பல புஷ்பத்தைப் போன்ற காந்தியுடையதுமான உன் கண்களின் கடாக்ஷ த்ருஷ்டியானது உன்னிலிருந்து விலகி தூரத்தில் இருப்பவனும், பாக்கியமில்லாதவனுமான என் மேலும் விழும்படி செய்வாயாக. இவ்வாறு செய்வதால் உனக்கு எந்த குறைவும் ஏற்படாது.


சந்திரனது கிரணங்கள் எப்படி எந்த வேற்றுமையும் பாராட்டாது எல்லா இடங்களிலும் குளிர்ச்சியுடைய ஒளியைப் பரவச் செய்கிறதோ அப்படியாக அன்னையவள் கருணை எவ்வித வித்தியாசமும் இல்லாது எல்லோருக்கும் அருள் தரக் கூடியது என்று கூறுகிறார் சங்கரர்.


சிவே - மங்களங்களை அருள்பவளே; த்ராகீயஸ்யா - அதிக நீளமுள்ள; தரதளித கொஞமாக மலர்ந்த; நீலோத்பல ருச - காந்தியுடைய நீலோத்பல மலர்; த்ருசா - கடாக்ஷ தீக்ஷண்யத்தால்; மாம் அபி - என்னையும்; க்ருபயா - கருணையால்; ஸ்நபய - ஸாநம் செய்தல்; அநேந - செய்வதால்; அயம் - அடியேன்; தந்யோ பவதி - க்ருதார்த்தனாக/உருப்படியாக ஆவான்; இயதா - இதனால்; தே - உனக்கு; ஹாநிர் ந ச - ஒருவித நஷ்டமும் இல்லை; ஹிமகர - சந்திரன்; வநே வா - காட்டிலும் சரி; ஹர்ம்யே வா - மாளிகையிலும் சரி; ஸமகர நிபாத: - கிரணங்களால் எங்கும் வியாபித்தல்


கவிராஜரது தமிழாக்கம் கீழே!

நெடியகண் கரிய நெய்தல்
நிறையருட் சலதி யெய்தாக்
கொடியனேன் பிறவித் துன்பக்
குறைகடல் கடந்து மூழ்க
விடினதிற் குறைவது உண்டோ
மெய்த்தவர்க் கொழிந்து றாதோ
கடிநகர் நிலவ காட்டிற்
காயுமே கருணை வாழ்வே.
-------------------------------------------------------------------------------------------அராளம் தே பாலீயுகளம் அக்ராஜந்யதநயே
ந கேஷாம் ஆதத்தே குஸுமசர கோதண்ட குதுகம்
திரச்சீநோ யத்ர ச்ரவணபதம் உல்லங்க்ய விலஸத்
அபாங்கவ்யாஸங்கோ திசதி சரஸந்தாந திஷணாம்

மலையரசன் மகளே!, வளைவுடன் கூடிய உனது கண்களூக்கும் காதுக்கும் இடைப்பட்ட பிரதேசங்கள் இரண்டும், உனது காதுகள் வரையில் நீண்ட கண்களையே பாணங்களாகப் பூட்டிய மன்மதனுடைய வில் போன்று இருப்பதாக யாருக்குத்தான் தோன்றாது?.

முன்பே இங்கே அன்னையின் கண்கள், நாசி பகுதியை மன்மதனது வில்லுக்குச் சமமாக வர்ணித்தார். அதே போல் இப்பாடலில் அன்னையின் கண்கள், காது போன்றவற்றுடன் சொல்லியிருக்கிறார் ஆசார்யார். அன்னையின் கண்கள் நீண்டு, அகன்று இருக்கிறது என்பதை ச்ரவணபதம் உல்லங்க்ய என்று கூறுகிறார்.

அக்ராஜந்யதநயே - அக்ராஜந்ய தநயே - மலையரசன் மகளே; தே - உன்னுடைய; பாலீயுகளம் - கண்களுக்கும் காதுகளுக்கும் இடைப்பட்ட பிரதேசம் (பொட்டு என்று கூறும் இடம்); அராளம் - வளைந்த; குசுமசர - மன்மதனுடைய; கோதண்ட குதுகம் - வில்லின் அழகை; கேஷாம் - யாருக்கும்; ந ஆதத்தே - தோன்றச் செய்வதில்லை; யத்ர - அப்பகுதியில்; திரச்சீந: - கோணலாக; விலஸத் - தெரியும்; அபாங்கவ்யா - நீண்ட கடைக்கண் பார்வை; ச்ரவணபதம் - காதுகள்; உல்லங்க்ய - ஸமீபத்தில்; சர ஸ்ந்தாந திக்ஷணாம் - பாணம் பூட்டியது போன்ற; திசதி - தோன்றுதல்


கவிராஜரது தமிழாக்கம் கீழே!

கருங்குழல் நுதஏகட் பின்னற்
கவின்கடைக் கபோலந் தாழ்ந்த
அருகுழை கடந்த கண்ணின்
அயிற்கடை அனங்க சாப
நெருங்குறத் தொடுத்த ஏவின்
நிமிர்தலை யேய்க்கு மென்றால்
மருங்கில்பொற் றிருவே யாருன்
மதர்விழி பரவ வல்லார்.