விசுத்தெள தே சுத்தஸ்படிக விசதம் வ்யோமஜநகம்
சிவம் ஸேவே தேவீமபி சிவஸமாநவ்யவஸிதாம்
யயோ: காந்த்யா யாந்த்யா: சசிகிரண ஸாரூப்யஸரணே:
விதூதாந்தர்வாந்தா விலஸதி சகோரீவ ஜகதீ
அம்மா!, சுத்த ஸ்படிகம் போன்ற நிர்மலமானவரும், ஆகாச தத்துவத்தின் மூலமானவருமான பரமசிவனையும், அவரைப் போன்ற ரூப, தத்துவங்களையுடைய உன்னையும் என்னுடைய விசுத்தி சக்ரத்தில் தியானித்து வணங்குகிறேன். உங்களிருவரிடத்திருந்தும் வரும் வெண்ணிலா போன்ற ஒளியினால் அஜ்ஞான இருட்டானது அகன்று உலகம் சகோரபக்ஷி போன்று மகிழ்வுடன் இருக்கிறது.
சகோர பக்ஷி என்பது ஒரு உவமை, அந்த பறவையானது நிலவின் ஒளியினை அருந்தி, அதில் மகிழ்ந்து உயிர் வாழ்வதாம். அதைப் போன்று, அன்னையை வணங்குபவர்கள், அம்மை-அப்பனிடமிருந்து ப்ரகாசிக்கும் நிலவொளி போன்ற குளிர்ந்த காந்தியால் அஜ்ஞானத்தை விலக்கி ஆனந்தம் அடைவராம்.
தே விசுத்தெள - உன்னுடையதான விசுத்தி சக்ரத்தில்; சுத்தஸ்படிக விசதம் - சுத்தமான ஸ்படிகம் போன்ற நிர்மல ரூபமுடைய; வ்யோமஜநகம் சிவம் - ஆகாசதத்துவத்தை உண்டுபண்ணூம் சிவன்; சிவஸமாந வ்யவஸிதாம் - சிவனுக்கு சமமான; தேவீம் அபி ஸேவே- தேவியையும் வணங்குகிறேன்; யயோ: - எவரிடமிருந்து; சசி கிரண ஸாரூப்யஸரணே - சந்திர ஒளிக்கு சமமான; யாந்த்யா: காந்த்யா - வெளிவரும் காந்தி/ஒளி; ஜகதீ - ஜகம்/உலகம் முழுவதும்; விதூதாந்தர்த்வாந்தா - போக்கடிக்கும் அஜ்ஞானம் என்னும் உள்ளிருட்டு; சகோரீவ = சகோரீ இவ - சகோர பக்ஷி போல்; விலஸதி - விளங்குகிற
ஸமுந்மீலத் ஸம்வித்கமல மகரந்தைகரஸிகம் பஜே ஹாம்ஸத்வந்த்வம் கிமபி மஹதாம் மாநஸசரம்
யதாலாபாத் அஷ்டாதசகுணித வித்யாபரிணதி:
யதாதத்தே தோஷாத் குணமகிலம் அத்ப்ய: பய இவ:
இந்த ஸ்லோகத்தில் சிவ தம்பதிகளை ஹம்ஸ தம்பதிகளாக வர்ணித்திருக்கிறார் பகவத் பாதர். எந்த ஹம்ஸ ஜோடியானது அஷ்டாதச வித்தைகளுக்கு மூலமாக இருக்கிறதோ, அவை எப்படி நீரை விலக்கி பாலை மட்டும் குடிப்பது போல தோஷங்களை விலக்கி நல்ல குணங்களை ஏற்கிறதோ, அந்த ஹம்ஸ ஜோடி எப்படி மலர்ந்த (அனாஹத சக்ரம்) தாமரையின் மகரந்தத்தில் அதிக நாட்டமுடையதாக இருக்கிறதோ, அவை எப்படி மஹான்களுடைய மனதில் எப்போதும் சஞ்சரிக்கிறத்தோ, அந்த வர்ணிக்க முடியாத ஹம்ஸ தம்பதிகளான உங்கள் இருவரையும் எனது அனாஹதத்தில் வைத்து தியானிக்கிறேன்.
ஹம்ஸ பக்ஷிகள் வசிக்குமிடத்தை மானஸ ஸரஸ் என்பர், அவ்விடத்துக்கு ஒப்பாக மஹான்களின் மனதையும் சிவதம்பதிகளை அங்கு வசிக்கும் ஹம்ஸ பக்ஷிகளாகவும் சொல்லியிருக்கிறார். ஹம்ஸ பக்ஷிகளின் கூவுதலுக்கு இணையாக அஷ்டாதச வித்தைகளை குறிப்பிட்டுள்ளார். "நீர் ஒழிய பால் உண் குருகின் தெரிந்து" என்று அன்னம் பாலை மட்டும் பிரித்து உண்ணுவது பற்றிச் சொல்வது போல, நல்ல குணங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு தவரானவற்றை தள்ளுவது சொல்லப்பட்டிருக்கிறது. அஷ்டாதச வித்தைகள் என்பது, 4 வேதங்கள், 6 வேதாங்கங்கள், 8 சாஸ்திரங்கள் ஆக பதினெட்டும் சேர்ந்தது அஷ்டாதச வித்தைகள், இவை எல்லாம் ஹம்ஸ தம்பதிகளான சிவ-சக்திகளின் ஆலாபத்தில் வந்ததாக சொல்லப்படுகிறது.
மந்திரார்த்தமாகப் பார்த்தால் "ஹம்ஸ:" என்பதில் ஹம் என்பது புருஷனாகிய சிவனையும், ஸ: என்பது அம்பாளையும் குறிக்கும். எனவே ஹம்ஸ: என்பதே சிவசக்தி ஐக்கியத்தைக் குறிப்பதாக இருக்கிறது. ஆனால், ஹம்ஸத்வந்த்வம் என்பதில் ஜோடி ஹம்ஸங்கள் என்று தனித்தனியாக கூறியிருக்கிறார்.
ஆதத்தே - கிரஹிக்கின்ற; அத்ப்ய: பய இவ - நீரிலிருந்து பாலை போல்; குணமகிலம் - அகிலத்தின் குணம்; தோஷாத் - தோஷங்களை; யத் எந்த ஹம்ஸ ஜோடியானது; கிமபி - வர்ணிக்க முடியாத; அஷ்டாதசருணித வித்யாபரிணதி: - 18 வித வித்தைகளை குறிக்கும்; யதாலாபாத் - யதா+ ஆலாபாத் - எந்த ஹம்ஸ ஜோடியின் ஆலாபத்திலிருந்து; பஜே - நமஸ்கரிக்கிறேன்.
6 comments:
சகோர பக்ஷியின் உவமை நன்றாக இருக்கிறது. படிக்கையில் ஸ்ரீராமகிருஷ்ணர் உதாரணமாக சொல்கின்ற சாதகப் பறவையின் நினைவு வந்தது. அந்த பறவை மழைநீரை மட்டுமே உண்டு உயிர்வாழக் கூடியதாம். அதேபோல அன்னப்பறவை பற்றி சொன்னதும் இனிமை. நன்றி மௌலி.
//விலஸதி சகோரீவ ஜகதீ
//
பரம ஹம்ச முக சந்த்ர சகோரே என்ற மானச சஞ்சரரே-வும் நினைவுக்கு வந்தது!
//அதே போல நீரொழிய பாலூண் குறிகிற்றெரிந்து//
குறுகு=குருகு?
நீர் ஒழிய பால் உண் குருகின் தெரிந்து!
குருகு என்பது அன்னம்/கொக்கு வகை! திருக்குருகூர் என்பது நெல்லை மாவட்டத்து ஊரு! :)
வாங்க கவிக்கா....சாதகப் பறவை,புதிய செய்தி...
நன்றி..
வருகைக்கும் என் தமிழைத் திருத்தியமைக்கும் நன்றி கே.ஆர்.எஸ்
//நீர் ஒழிய பால் உண் குருகின் தெரிந்து//
எனக்கு அதை எழுதுகையில் சந்தேகம் வந்தது....ஜிராவிடம் கேட்டேன்...அவர் தனக்கு தெரியாதுன்னுட்டாரு.
விசுத்தி என்பது கழுத்தில் இருக்கும் சக்கரம் தானே. சுத்த ஸ்படிகத்திலிருந்து நிலவொளி; அதனைப் பருகும் சகோரப்பறவை. மிக அழகான உவமைகள். அசத்துகிறார் ஆசார்யர்.
குறைகளை நீக்கி குணங்களை மட்டும் கொள்ளும் திவ்ய தம்பதிகளை அடியேனும் என்னுடைய இருதய தாமரையில் வைத்து தியானிக்கிறேன்.
வாங்க குமரன். கருத்துக்களுக்கு நன்றி.
Post a Comment