செளந்தர்யலஹரி 55 & 56


நிமேஷோந்மேஷாப்யாம் ப்ரளயமுதயம் யாதி ஜகதீ
த்வேத்யாஹு: ஸந்தோ தரணிதர ராஜந்ய தநயே
த்வதுன்மேஷாஜ்ஜாதம் ஜகதிதம் அசேஷம் ப்ரளயத:
பரித்ராதும் சங்கே பரிஹ்ருத நிமேஷாஸ் தவ த்ருச:

ஹே! பர்வதராஜ புத்ரி, உனது கண்கள் திறப்பதால் லோகங்கள் ஸ்ருஷ்டியாகின்றன என்றும், மூடுவதனால் அழிகின்றன என்றும் சாதுக்கள் சொல்கின்றனர். உனது கண்கள் திறந்திருக்கும் போது உண்டான லோகங்கள் அழிந்துவிடக் கூடாது என்பதால்தான் உனது கண்களை மூடாது இருக்கிறார் என்று தோன்றுகிறது.

அநிமிஷா என்றால் இமைகளால் கண்களை மூடாதிருத்தல். தேவர்களுக்கு அநிமிஷா என்றே பெயர் உண்டு. லலிதா சஹஸ்ரநாமத்தில் "உன்மேஷநிமிஷோத்பந்ந விபந்ந புவனாவளி" என்று ஒரு நாமம் இருக்கிறது. இதன் பொருள், அம்பிகை கண்களைத் திறப்பதால் புவனத்தின் ஸ்ருஷ்டியும், முடும் பொழுது பிரளய/ஸம்ஹாரமும் நடக்கிறது என்று பொருள்.

நிமேஷோந்மேஷாப்யாம் -நிமிஷ-அநிமிஷோப்யாம் - கண்களை திறப்பதும்-மூடுவதும்; ப்ரளயமுதயம் - ப்ரளய+உதயம் - லோகங்கள் அழிவதும், உருவாவதும்; யாதி இதி - அடைகிறது என்று; ஸந்த: - பெரியோர், யோகிகள்; ஆஹு - சொல்கிறார்கள்; தரணிதர ராஜ்ந்ய தநயே - பர்வதராஜ புத்ரி; த்வத் உந்மேஷாத் ஜாதம் - உன் கண்கள் திறப்பதால் உண்டான; இதம் ஜகத்-அசேஷம் - அசேஷமான இந்த ஜகத்தை; ப்ரளயத: பரிராதும் - ப்ரளய காலத்திலிருந்து காப்பாற்ற; தவ த்ருச: - உன் கண்கள்; பரிஹ்ரித நிமேஷா: இமைகள் கொட்டாது இருக்கிறது; சங்கே - ஸந்தேகமாகிறது.

தீந்தமிழில் கவிராயர் சொன்னது கீழே!

இணைவிழி இமையா நாட்டம்
எய்தியது அலரத் தோன்றும்
பணைநெடும் புவனம் இந்தப்
பார்வை சற்று இமைக்குமாயில்
துணையிழ்து அழிவது எண்ணித்
துணிந்தநின் கருணை யென்றோர்
கணையினுங் கொடிய தென்னக்
கடவதோ கடவுண் மாதே.
----------------------------------------------------------------------------------------

தவாபர்ணே கர்ணே ஜபநயன பைசுன்ய சகிதா:
நிலீயந்தே தோயே நியதம் அநிமேஷா: சபரிகா:
இயம் ச ஸ்ரீர் பத்தச் சத புடக வாடம் குவலயம்
ஜ்ஹாதி ப்ரத்யூஷே நிசி ச விகடய்ய ப்ரவிசதி

அம்பிகே! அபர்ணா!, காதுகளை அடுத்து நீண்டிருக்கும் உனது கண்கள், காதுகளில் தங்களைப்பற்றி கோள் சொல்லுகின்றனவோ என்று பயந்த மீன்கள் மூடாத கண்களுடன் நீரிலேயே ஒளிந்து கொண்டிருக்கின்றன. உனது நேத்ரங்களில் வாசம் செய்யும் லக்ஷ்மியும் பகலில் நீலோத்பலங்களை விட்டு உன்கண்களுக்கு வந்திடுகிறது, இரவில் நீலோத்பலங்கள் மலர அப்புஷ்பங்களில் எழுந்தருளுகிறாள்.

மீனலோசனி, மீனாக்ஷி போன்ற பெயர்களை குறிக்கும் ஸ்லோகம் இது. அன்னையின் கண்களை மீன்களுக்கும், நிலோத்பல மலருக்கும் உவமையாகச்
சொல்கிறார். அன்னையின் கண்கள் காதுவரை நீண்டு இருப்பது மீனைப் போல் இருக்கின்றதாம். முந்தைய ஸ்லோகத்தில் அன்னை தனது கண்களை மூடுவதில்லை என்றார், இங்கு மீன்களைச் சொல்கிறார். மீன்களும் கண்களை மூடுவதில்லை.

இந்த ஸ்லோகத்தில் அன்னையை அபர்ணா என்று கூறி விளிக்கிறார். "அபர்ணா" என்ற நாமத்திற்கு இரு பொருட்கள் உண்டு. பக்தர்கள் கேட்கும் வரங்களை அளித்து, அவர்களுக்கு ருணங்களை தீர்ப்பதால் அபர்ணா. அன்னை பார்வதியாகப் பிறந்து தபஸ் பண்ணும் சமயத்தில் இலையைக் கூட உண்ணாது கடுந்தவம் புரிந்தாளாம். பர்ணா என்றால் இலை, அபர்ணா என்றால் இலையையும் தவிர்த்தவள் என்று பொருள். [அபர்ணா து நிராஹாரா தாம் மாதா ப்ரத்யபாஷத: - ப்ரம்ம புராணம்] தவத்தின் போது இலையைக் கூட உண்ணாது தவிர்த்ததால் அபர்ணா என்று பொருள். பாஸ்கர ராயரது மனைவி, ஏழ்மையால் உண்ணவும் ஏதுமின்றி இருக்கையில் ராயர் அன்னையை 'அபர்ணா' என்றழைத்தவுடன் அவரது ருணத்தை தீர்க்க அன்னையே வந்ததாகச் சொல்வது நினைவுக்கு வருகிறது.

கர்ணேஜபநயந பைசுந்ய சகிதா: - காதுகளருகில் இருக்கும் கண்களது கோள் சொல்லுக்கு பயந்து; சபரிகா: - பெண்மீன்கள்; அநிமேஷா: - கண்களை மூடாது; தோயே நிலீயந்தே - நீரில் ஒளிந்துகொண்டு; நிபதம் - நிச்சயம்; இயம் ச ஸ்ரீ - உன் கண்களிலிருக்கும் லக்ஷ்மியும்; பத்தச்ச - மூடப்பட்ட; புடக - இதழ்களான; வாடம் - கதவுகள்; குவலயம் - நீலோத்பலம்; ப்ரத்யூஷே - காலையில்; ஜஹாதி - விட்டுவிடுகிறது; நிசி ச - ராத்திரியில்; தத் விகடய்ய - திறந்து கொண்டு {அரும்பான குவலய புஷ்பத்தை திறந்து கொண்டு}; ப்ரவிசதி - அதில் பிரவேசித்தல்;

கவிராயரது அமுத மொழி கீழே!

இடம்படர் கொடியே நின்கண்
இருசெவிக்கு உரைப்பதே என்று
அடர்ந்தெழு கயலின் கண்கள்
அடைப்பில் பயப்பட் டம்மா
கடும்பகற் கமல வீடுங்
கங்குல்வாய் நெய்தல் வீடும்
அடைந்தனள் கமலை யொன்றோன்
டைப்பன கண்டு கண்டாய்.

6 comments:

குமரன் (Kumaran) said...

//நிமேஷோந்மேஷாப்யாம் -நிமிஷ-அநிமிஷோப்யாம் - கண்களை திறப்பதும் மூடுவதும்; ப்ரளயமுதயம் - ப்ரளய+உதயம் - லோகங்கள் அழிவதும், உருவாவதும்;//

ஆசார்யர் வரிசை மாறாமல் சொல்லியிருக்கிறார். நீங்கள் பொருள் சொல்லும் போது வரிசை மாறிவிட்டது. நிமிஷ = ப்ரளயம்; அநிமிஷம் = உதயம். சரி செய்துவிடுங்கள்.

குமரன் (Kumaran) said...

இரண்டு சுலோகங்களிலும் இருக்கும் கவிதை நயம் மிக அருமையாக இருக்கிறது. அபர்ணா என்ற திருப்பெயரைப் பார்த்தவுடன் பொருள் தெரியவில்லையே என்று நினைத்தேன். அதனையும் விளக்கியிருக்கிறீர்கள். நன்றி மௌலி.

ருணத்தை என்றால் கடனை என்று பொருள் புரிந்து கொள்கிறேன். சரி தானா? அந்த இடத்தில் கஷ்டத்தை என்ற பொருள் சொன்னாலும் பொருந்தும். ருணத்திற்கு கஷ்டம்/துன்பம் என்றொரு பொருளும் உண்டா?

கவிராயர் சொன்னது போல் பார்த்தால் அன்னையின் திருக்கண்களை மீனுக்கும் கமலத்திற்கும் ஆசார்யர் ஒப்பிடுகிறார். 'கடும்பகல் கமல வீடும்' பகலில் அன்னையின் கண்களான தாமரை வீட்டிலும், 'கங்குல் வாய் நெய்தல் வீடும்' இரவில் நெய்தல் என்னும் குவலய நீலோத்பலத்திலும் குடியிருக்கிறாள் கமலையான திருமகள்.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி குமரன்.

//நிமிஷ-அநிமிஷோப்யாம் - கண்களை திறப்பதும் மூடுவதும்; //

மேலே இருக்கும் வரியைச் சொல்லியிருக்கீங்கன்னு நினைக்கிறேன். மாற்றிடறேன்.

//ருணத்தை என்றால் கடனை என்று பொருள் புரிந்து கொள்கிறேன். சரி தானா? அந்த இடத்தில் கஷ்டத்தை என்ற பொருள் சொன்னாலும் பொருந்தும். ருணத்திற்கு கஷ்டம்/துன்பம் என்றொரு பொருளும் உண்டா//

ருணம் என்பதற்கு கடன், கஷ்டம் என்ற இரு பொருளும் இருப்பதாகத்தான் அறிகிறேன் குமரன்.

Kavinaya said...

கண்கள் பற்றி இன்னும் எவ்வளவு இருக்கு மௌலி? எல்லாம் சேர்த்துப் படிக்கணும் :) மீனாட்சி படம் ரொம்ப ச்வீட் :)

தி. ரா. ச.(T.R.C.) said...

கண்கள் காதுவரை நீண்டு இருப்பது மீனைப் போல் இருக்கின்றதாம். முந்தைய ஸ்லோகத்தில் அன்னை தனது கண்களை மூடுவதில்லை என்றார், இங்கு மீன்களைச் சொல்கிறார். மீன்களும் கண்களை மூடுவதில்லை.
மீனாக்ஷி மீன்போன்ற கண்களை உயையவள் மட்டும் காரணம் அல்ல. மீன் தன் குஞ்சுகளை பொரித்தவுடன் உணவு எப்படி அளிக்கும் தெரியுமா? கண்களாலேயே முட்டையிலிருந்து குஞ்சுகளை பொரிக்கச் செய்து தன் பார்வையிலேயே உணவளிக்கும். அப்படித்தான் மீனாக்ஷியும் தன் கண்களினாலேயே தன் குழந்தைகளான நம்மை காத்து ரக்க்ஷிக்கிறாள்.அவள்தான் மீனாக்ஷி.மௌளிசார் சௌந்தர்யலகிரிக்கும் வந்தாச்சு. ஆன என்ன வந்தா சும்மா படிச்சுட்டு போகமாட்டேன் ஏதாவது இப்படி உளறிவிட்டுத்தான் போவேன்

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க திராச.

//மீனாக்ஷியும் தன் கண்களினாலேயே தன் குழந்தைகளான நம்மை காத்து ரக்க்ஷிக்கிறாள்.அவள்தான் மீனாக்ஷி.//

மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

//மௌளிசார் சௌந்தர்யலகிரிக்கும் வந்தாச்சு. ஆன என்ன வந்தா சும்மா படிச்சுட்டு போகமாட்டேன் ஏதாவது இப்படி உளறிவிட்டுத்தான் போவேன்//

அடாடா. இவ்வளவு நல்ல செய்தியைப் உளரல் என்று சொல்வது அபசாரம்.