செளந்தர்யலஹரி 53 & 54



விபக்த த்ரைவர்ண்யம் வ்யதிகரித லீலாஞ்ஜநதயா
விபாதி த்வந் நேத்ரத்ரிதயம் இதம் ஈசாநதயிதே
புந: ஸ்ரஷ்டும் தேவாந் த்ருஹிணஹரிருத்ராந் உபரதாந்
ரஜஸ்ஸத்வன் பிப்ரத் தம இதி குணானாம் த்ரயமிவ

அம்பிகே, அஞ்சனத்தை தரித்திருக்கும் உனது கண்கள் வெவ்வேறான நிறங்களில் (வெண்மை, சிகப்பு,கருப்பு) இருப்பதானது ப்ரளய காலத்தில் உன்னிடம் மறைந்து போன பிரம்மா, விஷ்ணு ருத்ரர்களை திரும்பவும் ஸ்ருஷ்டி செய்வதற்காக வேண்டிய ரஜஸ், ஸத்வ, தமோ குணங்களோடு கூடியதாக இருக்கிறது.


அம்பிகையின் இரு-கண்களாக சூர்ய-சந்திரர்களும், நெற்றிக்கண்ணாக அக்னியும் இருப்பதாகச் சொல்லப்படும். இங்கே அன்னையின் கண்களைப் பற்றி வர்ணித்து, அதன் நிறங்களை மும்மூர்த்திகளுக்கு உரியதாகச் சொல்லியிருக்கிறார். சாதாரணமாக நமது கண்களில் கருவிழிகள் கருப்பாகவும், வெண்மை நிறைந்த பகுதியில் சிவப்பான நரம்புகளும் இருக்கிறது. இந்த நிறங்கள் முறையே ரஜஸ், ஸத்வ, மற்றும் த்மோ குணங்களுக்கானது. இதே போல ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு சிவன் ஆகியோர் அன்னையின் ரஜஸ் ஸத்வ, மற்றும் தமோ குணங்களாகச் சொல்லுகிறார் இந்த ஸ்லோகத்தில். மஹா பிரளய காலத்தில் இவர்கள் மூவரும் அழிந்து ஜகதீஸ்வரியிடத்தில் சேர்வதாகச் சொல்கிறார்.


பிப்ரத் விபாதி - தரித்து இருப்பது; சத்வ, ரஜஸ், தம என்னும்; குணானாம் த்ரயம் இவ - மூன்று குணங்களைப் போல்; த்ருஹிண ஹரிருத்ரான் தேவாந் - பிரம்ம-சிஷ்ணு-சிவன் போன்ற தேவர்களை; புந: - மீண்டும்; ஸ்ரஷ்டும் - சிருஷ்டிக்கும்; விபக்த - வெவ்வேறான; த்ரைவர்ண்யம் - மூன்று வர்ணங்களை; உபரதாந் - மறைந்திருக்கும்; வ்யதிகரித - சேர்க்கப்பட்ட; லீலாஞ்ஜநதயா - கண்மையுடன் கூடிய; இதம் - இந்த; த்வந் நேத்ர த்ரிதயம் - உன்னுடைய மூன்று கண்களும்.

அடுத்ததாக கவிராயர் சொன்னதைப் பார்ப்போமா?:

வரிவிழிச் செம்மை வெண்மை
வனப்புறு கருமை மூன்றும்
எரிதெறு கற்ப காலத்
திறந்தமுப் பொருளுந் தோன்றுங்
கருஎனக் குணங்கள் மூன்றின்
காரண மென்னப் பெற்றால்
அருமறைப் பொருளே உன்றன்
அருளலா துலக முண்டோ.

----------------------------------------------------------------------------------------------


பவித்ரீகர்த்தும் ந: பசுபதிபராதீந ஹ்ருதயே
தயாமித்ரைர் நேத்ரை: அருணதவள ச்யாமருசுபி:
சோணோ கங்கா தபநதநயேதி த்ருவம் அமும்
த்ரயாணாம் தீர்த்தானாம் உபநயஸி ஸம்பேதம் அநகம்

அம்மா!, பசுபதியிடத்து மனதை உடையவளே, உலகத்தை பரிசுத்தமாக்கும் சோணா, கங்கை மற்றும் காளிந்தீ ஆகிய நதிகளின் சங்கமம் போன்று இருக்கும் உனது கண்களானது அந்த நதிகளைப் போன்றே சிகப்பு, வெண்மை மற்றும் கருமை நிறங்களுடன் என்னைப் போன்றவர்களை புனிதர்களாக்குவதற்கு கருணையுடன் இருக்கிறது.

சோணா நதீ என்பது சிகப்பு நிறம் உடையதாம்; கங்கை வெண்மையானது; யமுனையின் இன்னொரு பெயரே காளிந்தீ, இது கருப்பு நிறமானது. இவை போன்ற நிறங்களைத் தனது கண்களிலேயே கொண்டிருக்கிறாளாம் அன்னை. இந்த நதி சங்கமிக்கும் இடமானது எப்படி அங்கு ஸ்நானம் செய்பவர்களது பாபத்தைப் போக்குகிறதோ, அதே போல அம்பாளது கண்கள் பக்தர்களது எல்லா பாபங்களையும் போக்கிடும் என்கிறார் பகவத் பாதர்.

பசுபதிபராதீந ஹ்ருதயே - பசுபதியினிடத்தே எப்போதும் ஈடுபட்ட மனத்தவளே; தயாமித்ரை - தயை/கருணையுடன் கூடிய; அருண தவள ச்யாம ருவிபி: - சிகப்பு, வெண்மை, கருமை போன்ற நிறங்களை உடைய; நேத்ரை: கண்களால்; இதி - இதுபோல்; த்ரயாணாம் தீர்த்தானாம் - மூன்று புண்ய தீர்த்தங்களைப் போல்; சோணா - சோணா நதி; கங்கா - கங்கா நதி; தபந தநயா - காளிந்தீ நதியின் இன்னொரு பெயர்; அமும் - பாபங்கள்; அநகம் ஸம்பேதம் - போக்ககூடிய ஸங்கமத்தை; பவித்ரீ - புனிதர்களாக; கர்த்தும் - செய்யும்; உபநயஸி - ஏற்படுத்துகிற; த்ருவம் - நிச்சயம்;


கவிராயர் சொன்னதைப் பார்க்கலாமா?:

அம்மைநின் கருணை பொங்கி
அலையெறி நயன வேலை
மும்மணி கெழுமுன் தொண்டர்
மும்மலங் களைய மூழ்கச்
செம்மைநன் சோணை ஆறு
தெளிகங்கை யமுனை மூன்றுந்
தம்மய தொடும்வந் துற்ற
தன்மையீ தென்பர் மிக்கோர்