ஆனந்த லஹரி - 3 & 4




அவித்யானா-மந்தஸ்திமிர-மிஹிர-த்வீப-நகரி
ஜடானாம் சைதன்ய-ஸ்தபக-மகரந்த-ஸ்ருதிஜரி
தரித்ராணாம் சிந்தாமணி-குணநிகா ஜன்மஜலதெள
நிமக்னாம் தம்ஷ்ட்ரா முரரிபு-வராஹஸ்ய பவதி

அம்மா, உன்னுடைய பாததூளி, அஞ்ஞானமாகிய இருளை அகற்றுபவனான பகலவன் தோன்றும் தீவு;மூடர்களுக்கு ஞானமென்னும் மலர்களில் மகரந்தத்துடனான தேன் பிரவாகம்; ஏழைகளுக்குச் சிந்தாமணி; பிறவிக்கடலில் மூழ்கியவர்களுக்கு வராஹப் பெருமானின் பூமியைத் தாங்கிய கோரப் பல்.


சிந்தாமணி என்னும் ரத்னம் நினைத்ததை எல்லாம் தரவல்லது. இதனைப் பற்றி மகாபாரதக் கதையும் உண்டு. அன்னையின் மந்திரங்களில் முக்கியமான ஒரு பீஜாக்ஷரத்திற்கு சிந்தாமணி பீஜம் என்றே பெயர். (இவ்வாறாகசில அக்ஷரங்கள் பற்றி வரும் இடங்களில், அக்ஷரத்தை இங்கு குறிப்பிடுவதாக இல்லை, வேண்டுபவர்கள் தனிமடல் அனுப்பினால் தருகிறேன்)

அந்தஸ்திமிர-மிஹிர-த்வீப-நகரி - மன இருளைப் போக்கும் சூரியன்; மகரந்தஸ்ருதிஜரி - மகரந்தம் கலந்த கால்வாய்,அதாவது தேன்னும், மகரந்தமும் கலந்து கால்வாயாக ஓடுமாம்; முரரிபு: வராஹஸ்ய - முரன் என்ற அசுரனைக் கொன்ற மஹா விஷ்ணுவின் பெயர் முரரிபு;

அதாவது, அன்னையின் பாததூளியானது, ஏழைகளுக்கு வேண்டுவதை தரும், ஞானத்தை தரும், வராஹப் பெருமான் எப்படிமுழ்க இருந்த பூமிப் பந்தை தனது பற்களால் தாங்கிப் பிடித்தாரோ அதுபோல பிறவிக் கடலை நீந்துபவர்களுக்கு மூழ்காது காக்கும் என்கிறார்.
த்வ-தன்ய: பாணிப்ப்யா-மபயவரதோ தைவதகண:
த்வமேகா நைவாஸி ப்ரகடித-வாரபீத்யபிநயா
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்சாஸமதிகம்
சரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணெள
தாயே!, உன்னைத் தவிர மற்ற தேவதைகளெல்லாம் அபய-வரத முத்திரைகளைக் காட்டுகிறார்கள். ஆனால் நீ அந்த முத்திரைகளை காட்டுவதில்லை. ஏனெனில் உன் திருவடிகளே பயத்திலிருந்து காத்து விடுகிறது. அத்திருவடிகளே அவரவர் விரும்புவதற்கு அதிகமாக வரமும் அளித்து விடுகிறது.

த்ரிபுரசுந்தரி தனது கைகளில் பாசம், அங்குசம், புஷ்பபாணம், கரும்புவில் ஆகியவற்றையே தரித்திருக்கிறாள். அபய-வரதம் என்பது அவள் பாதகமலங்களில் அடங்கியிருப்பதால்தான் பிற தேவதைகளும் அவள் பாதாரவிந்தத்தை பூஜிக்கின்றனர்.

த்வ-தன்ய: - உன்னைத் தவிர்த்த; தைவதகண: - தேவர்கள்; பாணிப்யாம் - கைகளால்; அபய-வரத - அபயத்தையும், வரத்தையும்த்வமேகா - நீ மட்டும் ; ப்ரகடித-வாரபீத்யபிநயா - அபிந்யத்தால் அபயத்தையும், வரதத்தையும் பிரகடனம்; நைவாஸி - செய்வதில்லை. பயாத்-த்ராதும் - பயத்திலிருந்து காப்பாற்றவும்; வாஞ்சா-ஸமதிகம் - வேண்டியதற்கு மேலாக; பலம்-பலன்; தாதும் அபி சவ- அளிக்ககூடிய; சரணெள ஏவ - உன் திருவடிகளே; நிபுணெள ஹி - திறமை உடையவை; சரண்யே லோகானாம் - உலகிற்குப் புகலிடமானவளே.

4 comments:

குமரன் (Kumaran) said...

அருமையான உவமைகளின் மூலம் மிக நல்ல கருத்துகளைச் சொல்கின்றது 3வது ஸ்லோகம்.
அறியாமை என்பது இருளைப் போன்றது தானே. இருள் என்றால் ஒளி குறைவாக இருப்பது; ஒளி முழுவதுமே இல்லாத நிலை இல்லை. அனாலும் அந்த இருளில் எதுவுமே தெரிவதில்லை. அறியாமை என்பதும் அப்படித் தான். Ignorance என்று சொல்வார்களே அது. நாம் அறியோம் என்பதே தெரியாத அறிவு அது. அந்த அறியாமை எனும் இருளை நீக்கும் ஒளி வீசும் பகலவனின் ஒளி நிறைந்த தீவில் உள்ள நகரத்தை உடையவள். அந்த நகரத்தில் ஒளி வீசி நிற்பவள் அவளே.

அறியாமை என்னும் இருள் போல் அன்றி அறிவே இல்லாத நிலைக்கு ஜடம் என்று சொல்வார்கள். அந்த ஜடத்திற்கு சைதன்யம் என்ற அறிவு நிலையைக் கொடுக்கும் தேன் ஆறு அவள்.
பொருள் வேண்டி நிற்பவர்களுக்கு கேட்பதை எல்லாம் கொடுக்கும் சிந்தாமணி போன்றவள். தரித்ரம் என்பது பலவகைப்பட்டது. பொருளின்மை மட்டும் இல்லை. எத்தனையோ வறுமைகள் உண்டு. அப்படிப் பட்ட எந்த வறுமையானாலும் அவளை வேண்டினால் அவை எல்லாம் நிறைந்து விடும்.
நற்குணம் நிறைந்தவர்களுக்கோ பிறவிக்கடலில் இருந்து வராஹ பகவான் பூமியைக் கடலிலிருந்து தூக்கி நிறுத்தியதைப் போல் நிறுத்திவிடுபவள். ஆகா. மிகப் பொருத்தமான உவமை.
நன்கு அனுபவிக்கும் படி சௌந்தர்யலஹரி ஸ்லோகங்களை எழுதுவதற்கு மிக்க நன்றி மௌலி. அடுத்த ஸ்லோகத்தைப் படித்த பிறகு மீண்டும் வருகிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி குமரன்.

குமரன் (Kumaran) said...

இதுவரை சிந்திக்காத ஒன்று இது மௌலி. ஏன் திரிபுரசுந்தரி லலிதாம்பிகை அபய வரத முத்திரைகளைக் காண்பிப்பதில்லை என்பதை ஆசாரியாள் அருமையாகச் சொல்லியிருக்கிறார். படிக்க அருமையாக இருக்கிறது.

J.R.Julius said...

சிந்தாமணி என்னும் ரத்னம் நினைத்ததை எல்லாம் தரவல்லது. இதனைப் பற்றி மகாபாரதக் கதையும் உண்டு. அன்னையின் மந்திரங்களில் முக்கியமான ஒரு பீஜாக்ஷரத்திற்கு சிந்தாமணி பீஜம் என்றே பெயர். (இவ்வாறாகசில அக்ஷரங்கள் பற்றி வரும் இடங்களில், அக்ஷரத்தை இங்கு குறிப்பிடுவதாக இல்லை, வேண்டுபவர்கள் தனிமடல் அனுப்பினால் தருகிறேன்)


PLS SEND CHINTAMANI BEEJA to jrjulius2004@yahoo.com

Thanks in Advance.

Regards