செளந்தர்ய லஹரி - 42

போன இடுகையில் சாக்த உபாஸனையில் இருக்கும் இரு பெரும் பிரிவுகளைப் பற்றிய சில விஷயங்களைக் கண்டோம். இவ்விடுகையில் செளந்தர்ய லஹரி பகுதிக்குச் செல்லும் முன் தமிழில் செளந்தர்ய லஹரியை மொழியாக்கம் செய்த கவிராஜ பண்டிதர் என்பவரைப் பற்றிச் சிறிது தெரிந்து கொள்வோம்.

இவர் பாண்டிய நாட்டில் வீரை [இப்போது என்ன பெயர் என தெரியவில்லல] என்ற ஊரில் வசித்தவர். சிறு-பிராயம் முதலே அம்பிகையின் உபாசனையில் ஈடுபட்டு அவளுடைய தரிசனம் கிடைக்கப் பெற்றவர் என்று தெரிகிறது. தக்ஷிணம், வாமம் என்கிற இரண்டு வித உபாசனைகளில், இவர் வாம மார்க்கத்தை அவலம்பித்தவர்/உபாசித்தவர் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அம்பிகையின் திருவருளால் விசேஷமான கவித்துவம் வாய்க்கப் பெற்று விளங்கியிருக்கிறார். இவர் வராஹி-மாலை, ஆனந்த-மாலை போன்ற நூல்களை எழுதியிருக்கிறார்.

இவருடைய செளந்தர்ய லஹரி மொழியாக்கமானது ஏற்கனவே இருக்கும் ஆனந்தலஹரி-செளந்தர்ய லஹரி என்னும் பிரிவினை அனுசரித்தே இருக்கிறது. இம்- மொழியாக்கம் சம்ஸ்கிருதத்தின் மூலத்தை அப்படியே ஒட்டி இருப்பது விசேஷம். இது மிக எளிதாகவும், படிக்கப்படிக்க இன்பமும், அன்னையின் அருளையும் உணரச்செய்கிறது என்றால் மிகையல்ல. இந்த மொழிப் பெயர்ப்புக்கு சைவ எல்லப்ப நாவலர் என்பவர் உரையும் எழுதியிருப்பதாகத் தெரிகிறது.

இனி ஒவ்வொரு செளந்தர்ய லஹரி இடுகையின் முடிவிலும் இந்த தமிழாக்க பாடல்களும் இடம் பெறும். இடுகையின் முடிவில் இந்த தமிழாக்கத்தைச் சொல்வதால் தமிழை பின் தள்ளுவதாக அர்த்தம் கற்பிக்காது, மூலத்தைச் சொல்லி அதன் மொழிப் பெயர்ப்பைச் சொல்லும் மரபாக மட்டுமே பார்க்க வேண்டுமென வேண்டுகிறேன்.

41ஆம் ஸ்லோகம் தனி இடுகையாக இருப்பதால் இவ்விடுகையில் 42ஆம் ஸ்லோகத்தை மட்டும் பார்க்கலாம்.கதைர் மாணிக்யத்வம் ககநமணிபி: ஸாந்த்ரகடி
தம்கிரீடம் தே ஹைமம் ஹிமகிரிஸுதே கீர்த்தயதி ய:
ஸ நீடேயச்சாயாச் சுரணசபளம் சந்த்ரசகலம்
தநு: செள்நாஸீரம் கிமிதி ந நிபத்நாதி தஷணாம்

மலையரசன் மகளே!, த்வாதச ஆதித்யர்களே மாணிக்கங்களாக இழைக்கப்பட்ட உன்னுடைய தங்கக் கிரீடத்தை எந்த பக்தனாவது வர்ணிக்கையில், உன் கிரீடத்தில் பதிந்திருக்கும் ரத்னங்களின் காந்தியால், [அந்த கிரீடத்தில் இருக்கும்] சந்திரன் பல நிறமுடையதாக தோன்றுவதைக் காணும் போது சந்த்ரனை இந்திர தனுஸோ என்று சந்தேகித்து அப்படியே வர்ணிக்கக்கூடும்.

ஈஸ்வரன் தன் தலையில் சந்திரனை அணிந்திருப்பது போல அம்பாளும் அணிந்திருக்கிறாள். ஆக அம்பாளும் சந்த்ரமெளலி தான். அன்னைக்கு "அஷ்டமிச் சந்த்ர விப்ரபா" என்ற நாமம் இருப்பதை நாம் அறிவோம். இவ்வாறாக அன்னையின் கிரீடத்தில் உள்ள சந்த்ரன் வெண்மையாக இருந்தாலும், அவளது கிரீடத்தில் இழைக்கப்பட்டிருக்கும் மற்ற நவரத்னங்களான பன்னிரு ஆதித்யர்களது ஒளியால் பல வர்ணங்களில் ஜகஜ்வலிக்கும் இந்திர தனுசு போன்று காக்ஷியளிக்கிறதாம். இதுவே "ஐந்த்ரஸ்யேவ சராஸனஸ்ய தததீ மத்யேலலாடம் ப்ரபாம்" என்று லகுஸ்துதியில் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கே த்வாதச ஆதித்யர்கள் அம்பாளுக்கு அருகில் இருந்து சேவை செய்கிறார்கள் என்பது குறிப்பு.


ஹிமகிரிஸுதே - மலையரசன் மகளே; மாணிக்யத்வம் - மாணிக்கங்களாக; கதை: - இருக்கும்; ககநமணிபி: - ஆதித்யர்களால்; சாந்த்ர கடிதம் - நெருக்கமாக இழைத்த; தே - உன்னுடைய; ஹைமம் - தங்கம்; நீடேயே - கிரீடத்துக் குவளைப்பகுதியில் இருக்கும் ரத்னக்கள்; ச்சாயா - காந்தி/ஒளி; ச்சுரண - வ்யாபிக்கிறது/பரவுகிறது; சபளம் - பல நிறங்களாக தெரிதல்; சந்த்ர சகலம் - சந்த்ர பிரபை/ரேகை; செளநாஸிரம் தனு: - இந்த்ர வில்; திஷணாம் - யூகம்; ந நிபத்னாதி கிம் - கொள்ளமாட்டானா?.

இனி வருவது கவிராயரது செய்யுள்,

அந்தர மணித்தபனர் பலமணியின் வடிவெடுத்
தமருமுன் தம்பொன் முடிமேல்
இந்துகலை நவமணியி னொழுகுபல நிறமடைந்து
இலகுமதி சயவ டிவினாற்
சந்த்ரகலை நன்றுநன் றென்பர்சிலர் அன்றன்று
சந்த்ரகலை இந்த நிறமோ
இந்த்ரசிலை இந்த்ரசிலை யென்பர்சில ராதலால்
யாதென வழுத்த உமையே.

8 comments:

கவிநயா said...

//ஆக அம்பாளும் சந்த்ரமெளலி தான்.//

:)))

கவிராஜ பண்டிதரின் மொழியாக்கம் புத்தகமாக கிடைக்குதா? எங்கே கிடைக்கும்?

ஆனந்தலஹரியுடைய தமிழ் ஸ்லோகங்களையும் அந்தந்த இடுகையில சேர்த்துடுங்களேன்! (நான் வேணுமானா உதவறேன்).

மதுரையம்பதி said...

வாங்க கவிக்கா!!!
ஒருவருடம் முன் எங்கெங்கோ சொல்லி
வைத்து கடைசில ஒரு பழைய
புத்தகம் கிடைத்தது.

சேர்க்கிறேன், கொஞ்சம்-கொஞ்சமாக
ஒரு மாதம் கழித்து அதைச்
செய்கிறேன். ஓகேயா?

குமரன் (Kumaran) said...

தமிழாக்கப் பாடல்களைத் தருவதற்கு நன்றிகள் மௌலி.

சூரிய ஒளியின் பிரதிபலிப்பு தான் சந்திரனின் ஒளி என்றும் சொன்னதாக ஆகிறது பாருங்கள். :-)

குமரன் (Kumaran) said...

அம்பாளும் ஐயனும் மட்டுமா? குடும்பமே சந்திரமௌலி தானே?! :-) இல்லையா மௌலி?

மதுரையம்பதி said...

வாங்க குமரன்.

ஆமாம், சூரிய ஒளியால் தோன்றுவது தான் என்றும் கொள்ள முடிகிறது. நான் இதை கவனிக்கல்ல :). நன்றி குமரன்.

//அம்பாளும் ஐயனும் மட்டுமா? குடும்பமே சந்திரமௌலி தானே?! :-) இல்லையா மௌலி?//

நமது நண்பர், தீவிர முருக பக்தர் இங்கு வருவதில்லைங்கற நம்பிக்கைல சொல்றேன். முருகனைப் பிறைசூடிப் பெருமானாக எங்கும் சொல்லிய/பார்த்த நினைவு இல்லீங்க.
:-).

உங்களுக்குத் தெரியுமுன்னு நினைக்கிறேன், சொல்லுங்களேன். உங்க பதிவு ஏதோ ஒன்றிலும் இது பற்றிப் படித்த நினைவு. சரியா ஞாபகம் வரல்லை.

ஜீவா (Jeeva Venkataraman) said...

தமிழ் செய்யுளும் சேர்த்து படிக்க இரட்டிப்புக் குஷி!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நமது நண்பர், தீவிர முருக பக்தர் இங்கு வருவதில்லைங்கற நம்பிக்கைல சொல்றேன்//

அந்த நண்பருக்கு நண்பர் இங்கு வாரேன் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! :)

//முருகனைப் பிறைசூடிப் பெருமானாக எங்கும் சொல்லிய/பார்த்த நினைவு இல்லீங்க.
:-)//

பாதி மதி நதி-ன்னு பாதிப் பிறையைச் சூடாமல், முழு நிலவையும் கண்களில் வைத்துள்ளான் முருகப் பெருமான்.
இடப்புறம் தேவானை என்னும் அத்தியாள் - அவள் கரத்திலோ அல்லிப்பூ - அவன் இடக்கண் சந்திரன் அல்லவா?

:))

மதுரையம்பதி said...

வாங்க கே.ஆர்.எஸ்.

//பாதி மதி நதி-ன்னு பாதிப் பிறையைச் சூடாமல், முழு நிலவையும் கண்களில் வைத்துள்ளான் முருகப் பெருமான்.//

ஆம், முன்பு எங்கோ படித்திருக்கேன், நினைவுபடுத்தியதற்கு நன்றிகள்.