ஆனந்த லஹரி - 41

தவாதாரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்யபரயா
நவாத்மாநம் மந்யே நவரஸமஹாதாண்டவநடம்
உபாப்யாம் ஏதாப்யாம் உதயவிதிமுத்திச்ய தயயா
ஸநாதாப்யாம் ஜஜ்ஞே ஜநகஜநநீமத் ஜகதிதம்

தாயே!, லாஸ்யத்தில் ப்ரியமுடைய மஹா பைரவியாகிய உன்னுடன் நவரஸங்களுடன் கூடிய மஹாதாண்டவத்தைச் செய்யும் நவாத்மகனான ஆனந்த பைரவராகிய ஸதாசிவனை என்னுடைய மூலாதார சக்ரத்தில் வைத்து தியானித்து நமஸ்கரிக்கிறேன். ப்ரளயகாலத்தில் நாசமடைந்த லோகங்களை உஜ்ஜீவிக்க வேண்டும் என்ற கருணையுடன் நீங்கள் இருவரும் ஸ்ருஷ்டி தாண்டவம் செய்வதால் இந்த உலகானது உங்களிருவரையும் மாதா-பிதாவாக கொண்டது.

ஷட்சக்ரங்கள் மூலாதாரத்திலிருந்து ஆஜ்ஞா வரையிகிருப்பதை சொல்வது க்ரமம், ஆனால் இங்கே கடந்த ஆறு ஸ்லோகங்களில் அவற்றைச் சொல்கையில் ஆஜ்ஞா சக்ரத்திலிருந்து ஆரம்பித்து மூலாதாரத்தில் முடித்ததன் காரணம் என்ன என்று பார்க்க வேண்டும். அந்த சக்ரங்களின் தத்வங்கள் ஆஜ்ஞாவில் ஆரம்பித்துச் சொல்லுகையில் மனஸ், ஆகாசம், வாயு, அக்னி, ஜலம், ப்ருதிவி என்று வரிசை வருகிறது. இந்த வரிசையானது "ஆத்மன ஆகாஸ் ஸம்பூத: ஆகாசாத் வாயு: வாயோரக்னி: அக்னேராப: அத்ப்ய: ப்ருதிவி" என்ற ச்ருதி வாக்கியத்தை ஒட்டி வருகிறது என்பர். அதாவது ப்ருதிவியானது ஜலத்திலிருந்தும், ஜலமானது அக்னியிலிருந்தும், அக்னி வாயுவிலிருந்தும், வாயு ஆகாசத்திலிருந்தும், ஆகாசம் ஆத்ம தத்வத்திலிருந்தும் வந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பஞ்சவிம்சதிகள் ப்ருதிவியிருந்து செல்கையில் ஸ்தூலமாகவும் பின்னர் ஸுக்ஷ்மத்திலும் மாறுகிறது. இதனால்தான் மயிம் மூலாதாரே என்ற 9ஆம் ஸ்லோகத்திலும் மாற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த ஸ்லோகத்தில் மூலாதாரத்தில் அம்பிகையை பரமசிவனுடன் சேர்த்து உபாசிக்கும் முறை சொல்லப்பட்டிருக்கிறது. அம்மூலாதாரத்தில் இருக்கும் சக்திக்கு குண்டலினீ என்று பெயர். அம்பாளை உபாசிக்கும் முறையில் பல விதங்கள் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றில் முக்கியமானவை இரண்டு. அதாவது, தக்ஷிண மார்க்கம், வாம மார்க்கம் என்பன அவ்விரண்டும். இவை முறையே ஸமயமார்க்கம், கெளல மார்க்கம் என்றும் வழங்கப்படுகிறது. கெளல மார்க்கத்தில் பூர்வ கெளலம், உத்தர கெளலம் என்று இருமுறைகள் உண்டு. அம்பாளது பூஜையானது அந்தர்முகமாகவே செய்யப்பட வேண்டும் என்றும், அதிலும் அம்பாளை சஹஸ்ராரகமலத்துக்கு அழைத்து வந்து அங்கே பூஜிக்க வேண்டும் என்றும் ஸமயிகள் கூறுவர். இவ்வாறு செய்ய இயலாதோர், பஹிர்முகமாக ஸ்ரீசக்ரம், மேரு போன்றவற்றில் பாவனையாக பூஜிப்பர்.

கெளல மார்க்கத்தில் ஸ்ரீசக்ரத்தில் த்ரிகோணத்தை மட்டுமே பூஜிப்பர். கெளல மார்கத்தவர் மூலாதாரத்தில் இருக்கும் த்ரிகோணத்தையே பிந்து ஸ்தானமாக பூஜிப்பதால் அங்கிருக்கும் குண்டலினீ சக்தியே ப்ராதான்யம், இதனால்தான் இச்சக்திக்கு கெளலினீ என்றொரு பெயர். குண்டலினீ தனது நித்திரையை விட்டு எழும்பினாலே கெளலர்களுக்கு முக்தி. இதிலிருக்கும் பூர்வ-உத்தர கெளலம் பற்றி பின்னர் விளக்கமாக பார்க்கலாம்.

இவை எல்லாமே ஸ்ரீவித்யை என்று சொல்லப்பட்டாலும் இதனை உணர்ந்து, உபாசித்து உயர்வினை எய்தியவர்கள் 12 பேர். அவர்கள் ஒவ்வொருவரும் மஹிமை வாய்ந்த இவ்வித்யை வேதங்களின் வேவ்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து உபாசித்துள்ளதால் இவ்வித்யை 12 மந்த்ர த்ரஷ்டாகளால்/ரிஷிகளால் வழங்கப்படுகிறது. அவர்கள் அகஸ்தியர், லோபாமுத்ரா, துர்வாசர், மனு, சந்திரன், மன்மதன், குபேரன், அக்னி, சூர்யன், இந்திரன், ஸ்கந்தன், சிவன் ஆகியவர்கள். இவர்கள் சொல்லிய வித்தைகள் இதுவரை வந்த ஸ்லோகங்களில் (32 முதல்) ஆங்காங்கே மறைமுகமாக சொல்லப்பட்டிருக்கிறது.

முன்னர் சொல்லியபடி இதுவரையில் சொல்லப்பட்ட 41 ஸ்லோகங்கள் ஆனந்த லஹரி என்றும் இனி வரும் 59 ஸ்லோகங்கள் செளந்தர்ய லஹரி என்றும் சொல்லப்படுகிறது. இதுவரையில் சொல்லப்பட்டது மந்த்ர சாஸ்திரம், உபாசனா-க்ரமம் போன்றவற்றைச் சொல்லியது. இனி வருவது அம்பாளின் விசேஷ செளந்தர்யத்தை அழகாகச் சொல்லும். இந்த க்ரந்தத்திற்கு செளந்தர்ய லஹரி என்ற பெயர் இனிவரும் பகுதியாலேயே எற்பட்டிருக்கிறது. இந்த இரண்டாம் பாகம் (59 ஸ்லோகங்கள்) தான் ஆதிசங்கர பகவத் பாதாள் பண்ணினது. இந்த பகுதியினை நவராத்திரியில் ஆரம்பிக்கலாம்.

9 comments:

Kavinaya said...

இந்த முறை வார்த்தைக்கு வார்த்தை பொருள் சொல்லாம விட்டுட்டீங்களே...

//அம்பாளை உபாசிக்கும் முறையில் பல விதங்கள் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றில் முக்கியமானவை இரண்டு. அதாவது, தக்ஷிண மார்க்கம், வாம மார்க்கம் என்பன அவ்விரண்டும்.//

இதெல்லாம் தனித்தனியா விளக்கி எழுதுங்களேன்.. இங்கே இல்லைன்னா உங்களுடைய மதுரையம்பதி பூவில்...

//இனி வருவது அம்பாளின் விசேஷ செளந்தர்யத்தை அழகாகச் சொல்லும்.//

ஆஹா... மிகுந்த ஆவலுடன் வெயிட்டிங்...

//இந்த பகுதியினை நவராத்திரியில் ஆரம்பிக்கலாம்.//

ஆனா அவ்ளோ நாள் காத்திருக்கணுமா :(

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கவிக்கா...

//இந்த முறை வார்த்தைக்கு வார்த்தை பொருள் சொல்லாம விட்டுட்டீங்களே...//

அட ஆமாம், சரி, நாளை போட்டுடறேன். காலை எழுதினேன், அப்படியே ஆப்பீஸ் வந்துட்டேன்... போஸ்டும் போட்டுட்டேன்...கவனிக்கல்ல. :)

//இதெல்லாம் தனித்தனியா விளக்கி எழுதுங்களேன்.. இங்கே இல்லைன்னா உங்களுடைய மதுரையம்பதி பூவில்...//

எழுதறேன்...சில விஷயங்களை எழுத கொஞ்சம் தயக்கமாக இருக்கு....பார்க்கலாம்.

//ஆஹா... மிகுந்த ஆவலுடன் வெயிட்டிங்...//

நன்றி. நவராத்ரி தினம் ஒரு போஸ்ட் போட வேணும் என்று பெரிய இடத்து உத்தரவு வந்திருக்கு. அதுக்கு டாபிக் முடிவு செய்து அப்ரூவலுக்கு அனுப்பியிருக்கேன்...அதுக்கு எழுத ஆரம்பிக்கணும்....

//ஆனா அவ்ளோ நாள் காத்திருக்கணுமா //

ரொம்ப நாள் இல்லை, இன்னும் 15 நாட்களில் நவராத்திரி வருகிறது....அதற்குள் ஒரு போஸ்ட் முயற்சிக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

பஞ்சப்ரேதாசனத்தில் திரிபுரசுந்தரி லலிதா பரமேஸ்வரியின் திருவுருவப் படத்தைப் பார்த்திருக்கிறேன். இன்று தான் அதே ஆசனத்தில் அமர்ந்திருக்கும் காமேஸ்வர காமேஸ்வரியைத் தரிசிக்கிறேன் மௌலி.

தக்ஷிண மார்க்கம், வாம மார்க்கம் என்று சொல்லி கௌலினி வரையில் சொன்னதே பெரிய விஷயம். இதுவரை கேட்டும் படித்தும் அறியாதது. ஒன்றிற்குப் பல முறை படித்துப் புரிந்து கொள்ள வேண்டியது மௌலி. அதனால் கௌல மார்க்கத்தின் இரு பிரிவுகளைப் பற்றி பின்னர் சொல்லும் போது படிப்பது சரி என்றே தோன்றுகிறது. ஒரே நேரத்தில் நிறைய புரிந்து கொள்வது கடினம் தானே.

இரண்டாம் பாகம் தான் பகவத்பாதர் செய்தது என்றால் முதல் பாகமான ஆனந்த லஹரி? கைலாயத்தில் சுவற்றில் எழுதி வைக்கப்பட்டிருந்தது என்று சொல்லப்படும் பகுதி அது தானா?

குமரன் (Kumaran) said...

நவராத்திரி இடுகைக்கான செயல்நிலை அறிக்கை: எந்த இடங்களில் எல்லாம் அம்பிகையைப் பற்றி சொல்லியிருக்கிறது என்று தேடி ஒரு பட்டியலை எடுத்து வைத்திருக்கிறேன். இனி மேல் தான் நன்றாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். விஜயதசமிக்குள் ஒரு இடுகையாவது இட்டுவிடலாம் என்று நினைக்கிறேன் மௌலி.

இதுவரை அன்னையைக் குறிப்பிட்டுள்ள இடங்களைத் தேடிப் பிடிக்க ஆறு மணி நேரங்கள் செலவாகியிருக்கிறது. அதற்குரிய பில்லை பெங்களூருவிற்கு அனுப்பிவிடட்டுமா? :-)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க குமரன்.

//பஞ்சப்ரேதாசனத்தில் திரிபுரசுந்தரி லலிதா பரமேஸ்வரியின் திருவுருவப் படத்தைப் பார்த்திருக்கிறேன். இன்று தான் அதே ஆசனத்தில் அமர்ந்திருக்கும் காமேஸ்வர காமேஸ்வரியைத் தரிசிக்கிறேன் //

ஸ்ரீ சக்ர பூஜையில் இந்த ரூபத்தில் தான் அன்னையை பிந்துஸ்தானத்தில் பூஜிக்க வேண்டும். ஒவ்வொரு ஆவரணங்களாக பூஜித்து வந்து, கடைசியில் பிந்துவில் அன்னையை பரமேஸ்வரனுடன் இணைத்து பூஜித்து திரையிடல் வேண்டும் என்பது ஒரு தாத்பர்யம்.


//தக்ஷிண மார்க்கம், வாம மார்க்கம் என்று சொல்லி கௌலினி வரையில் சொன்னதே பெரிய விஷயம். இதுவரை கேட்டும் படித்தும் அறியாதது. ஒன்றிற்குப் பல முறை படித்துப் புரிந்து கொள்ள வேண்டியது மௌலி. அதனால் கௌல மார்க்கத்தின் இரு பிரிவுகளைப் பற்றி பின்னர் சொல்லும் போது படிப்பது சரி என்றே தோன்றுகிறது. //

கடினம் என்பது படிக்கும் போது ஏற்படுவது. எனக்கு இவற்றை எழுதும் போது எதுவரை எழுதுவது, எதெல்லாம் உணர்வால் புரிந்து கொள்ள வேண்டியதென விடுவது என்பது கொஞ்சம் குழப்பமாகவே இருக்கிறது. சில விஷயங்களை நான் பதிவிட இயலாத நிலையிலிருக்கிறேன் என்பதே உண்மை.

கெளல மார்க்கம் கொஞ்சம் சர்ச்சைக்கு உரியது. அதை எப்படி படிப்பவர்கள் எடுத்துக் கொள்வார்கள் என்பது தெரியவில்லை. சாக்தத்திலேயே சொல்வதுண்டு, கெளல மார்க்கம் என்பது கத்தியின் மேல் நடப்பது போன்றது என்று. பாலகுமாரன் எழுதிய அபிராமிபட்டர் கதையில் கெளல மார்க்கம் என்று சொல்லாமல் சில விஷயங்களை சொல்லியிருந்த நினைவு. அதை படித்திருந்தீர்கள் என்றால் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

மெளலி (மதுரையம்பதி) said...

ஆஹா!, செயல் நிலை அறிக்கைக்கு நன்றி குமரன். உங்களது முயற்சியே மிகுந்த மனநிறைவினை தருகிறது.

ஆம் ஒரு இடுகையாவது நவராத்திரியில் இடுங்கள்...அப்பறம் மிச்சத்தை தொடருங்கள் :-)

தராளமாக பெங்களூருக்கு அனுப்பலாம். இதற்கு செலவு செய்ய கசக்குமா என்ன?. டி&எம் மோட்ல ஒவ்வொரு போஸ்டும் ஒரு டெலிவரியா டிரிட் பண்ணி சார்ஜ் பண்ணுங்க...வித் அவுட் எனி யூசர் அக்ஸப்டன்ஸ் பில்லிங்க் பண்ணலாம்.. :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆனந்த லகிரியின் சௌந்தர்யத்தைக் கண்டு மகிழ்ந்தேன். இனி சௌந்தர்யலகிரியின் ஆனந்தத்தில் முழ்கலாம் நவ ராத்திரியின் போது. நன்றி. மௌளி.

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பிகயின் முகத்தை வர்ணிக்கும் 9 வரிகளை (லலிதா ஸ்கஸ்ரநாமத்தில்) நவராத்திரியின் போது பதிவு போடலாம் என்ர எண்ணம் எனக்கும் உண்டு. அம்பிகையின் அருள் வேண்டும்

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க திராச. ரொம்ப நாட்கள் கழிந்து வந்திருக்கிறீர்கள்.

ஆமாம், அடுத்ததாக செளந்தர்ய லஹரியில் ஆனந்தத்தை அள்ளிப் பருக வாங்க.

//அம்பிகயின் முகத்தை வர்ணிக்கும் 9 வரிகளை (லலிதா ஸ்கஸ்ரநாமத்தில்) நவராத்திரியின் போது பதிவு போடலாம் என்ர எண்ணம் எனக்கும் உண்டு//

சூப்பர், கண்டிப்பாக பதிவிடுங்கள். நான் செளந்தர்ய லஹரியில் வதனாரவிந்தத்தை எழுதுகையில் எனக்கும் உங்களது இடுகை உதவும் :-)