ஆனந்த லஹரி - 25 & 26


த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண-ஜநிதானாம் தவ சிவே
பவேத் பூஜா பூஜா தவ சரணயோர்-யா விரசிதா
ததா ஹி த்வத் பாதோத்வஹன-மணிபீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே சச்வன்-முகுலித-க்ரோத்தம்ஸ மகுடா

அம்பிகே! உன் பாதத்துக்கு ஒரு அர்ச்சனை பண்ணினால் போதும், அதுவே த்ரிமூர்த்திகளுக்கும் பண்ணியதாகிறது. அது எப்படி என்றால், த்ரிமூர்த்திகளும் உன்னுடைய திருவடிகளைத் தாங்கும் ரத்தினப் பலகையின் அருகில் அவர்களது சிரஸை வைத்து, சிரஸின் மேலே கைகளைக் கூப்பியவாறு அஞ்சலி செய்கிறார்கள். ஆகையால் உன் பாதத்தில் செய்யும் அர்ச்சனையானது அவர்களது சிரசுக்கும் சேர்த்து பண்ணியதாகிறது . இங்கு ருத்ரனுக்கும், சிவனுக்கும் வித்தியாசம் காண்பிக்கும் விதமாக த்ரிகுணத்தின் மூர்த்திகளில் அன்னையின் தமஸில் ஜனித்த ருத்ரன் அன்னையை வணங்குவதாக கூறியுள்ளார். அதாவது அன்னையின் தமஸிலிருந்து ஜனித்ததால் ருத்ரன் அன்னையின் குழந்தையாகிறார். குழந்தை தாயை வணங்குவது சரிதானே?.

த்ரிகுணங்கள் அப்படின்னு இங்கு ஆச்சார்யார் சொல்வது முத்தொழில்களையே. சிவம் சதுர்த்தம் என்பார்கள். த்ரிகுணங்களுக்கு மேலே இருக்கும் துரீயம் என்ற ப்ரஹ்ம நிலைதான் சதுர்த்தம். சாதாரணமாக ப்ரம்ஹம் கார்ய நிலைகளில் அதாவது த்ரிகுண நிலைகளில் இல்லாமல் தனித்து இருக்கும் அதுவே துரீயம். அதன் சித்சக்திதான் காமேஸ்வரி அப்படின்னு முதல் 10 ஸ்லோகங்களிலேயே சொல்லியிருக்கார். இந்த சித்-சக்திதான் த்ரிமூர்த்திகளை த்ரிகுணங்களுக்கான செயல்களுக்காக உருவாக்கியிருக்கிறாள். எனவே 'த்ரிகுண-ஜநிதானாம்'. அவள் ஜனனி, ஜனித்தவர்கள் மும்மூர்த்திகள் அப்படின்னு சொல்வது சரிதானே. 'தவ சிவே' துரீய நிலையில் இருக்கும் சிவன் என்பதாக செயலில்லாமல் ப்ரம்ஹ நிலையில் இருக்கும் சிவனே ஸதாசிவன். இதுவே லலிதா ஸஹஸ்ர நாமத்தில் வரும்போது, "ஸ்ருஷ்டிகர்த்ரீ ப்ரஹ்மரூபா கோப்த்ரீ கோவிந்த ரூபிணிஸம்ஹாரிணி ருத்ரரூபா திரோதானகரீ ஈஸ்வரி" என்பதாக சொல்லப்படுகிறது.

சரீரத்தில் உள்ள ஆராதாரங்களை மூன்று கண்டங்களாகப் பிரிக்கப்பட்டு, அவை ப்ரம்மக்கிரந்தி, விஷ்ணுக்கிரந்தி, மற்றூம் ருத்ரக்ரந்தி என்பதாகச் சொல்லப்படும். ஆறாதாரங்களில் அம்பிகையை அந்தர்முகமாக பூஜிக்கப்படும் போது மும்மூர்த்திகளையும் சேர்த்துப் பூஜிக்கப்பட்டதாகும்.
பவேத் - ஆகும்; நிகடே - சமீபத்தில்; சச்வத் - எப்போதும்; முகுலித கரோ - குவித்த கரங்கள்;

விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதிம்
விநாசம் கீனாசோ பஜதி தனதோ யாதி நிதனம்
விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித-த்ருசா
மஹா ஸம்ஸாரே அஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதி ரஸெள


மஹா ப்ரளய காலத்தில் அம்பாளோடு விஹாரம் பண்ணிக் கொண்டிருக்கும் ஈச்வரனை தவிர ஸகலமும், ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன் போன்றோர் கூட இல்லாமல் போகிறார்களாம். அதாவது பிர்ம்மா அழிவடைகிறார்; விஷ்ணு அப்படியே செயலின்றி சிலையாகிறார். எல்லோருக்கும் விநாசத்தை தரும் யமனும் நாசமடைக்கிறான். (கீனாசன் என்பதும் யமனது பெயரே). செல்வத்துக்கெல்லாம் அதிபனான குபேரனுக்கும் அச்செல்வத்தால் பயனின்றி முடிந்து போகிறான். (தநதன் என்பது குபேரனுக்கான பெயர்). ஒரு இந்திரன் மட்டுமல்லாது இந்திரப் பட்டாளமே அழிவுக்குள்ளாகிறது. அதென்ன இந்திரப் பட்டாளம்?. ஸ்ருஷ்டி ஆரம்பித்ததில் இருந்து மஹா ப்ரளயம் வரை பல மன்வந்திரங்கள் வந்திருக்குமல்லவா, அவற்றில் ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் ஒரு இந்திரன் இருந்திருப்பானல்லவா, அதனால் தான் மாஹேந்த்ரீ விததி என்கிறார் போலும். இந்தமாதிரி மூம்மூர்த்திகளும், தேவர்களும், முனிவர்களும் கூட மீளாத்துயிர் கொள்ளூம் அந்த மஹாப்ரளய காலத்திலும் (மஹா ஸம்ஹாரே) உன் பதி உன்னோடு விளையாடிக் கொண்டிருக்கிறான் என்கிறார் ஆச்சார்யார்.

இங்கு அம்பாளை குறிப்பிடுகையில் ஸதி என்றே கூறுகிறார். அன்னை பரம பதிவ்ரதை. பதிக்கு மரியாதை இல்லாத இடத்தில் தான் இருப்பது சரியல்ல என்றும் அப்படி மதிக்காத பிறந்தகத்தால் உருவான உடலே வேண்டாம் என்று தனது ஜீவனையே விட்டவள் தாக்ஷாயினி. அவளது இன்னொரு பெயரே ஸதி. இவளோ ப்ரம்ஹ சக்தி, அச்சக்திக்கு ஏது அழிவு?. அப்படி அப்பட்ட சக்தி பதிவ்ரதை என்றால் அவளது பதியும் அழிவில்லாதவன் தானே?. ஆகையால்தான் அவன் மட்டும் ப்ரளய காலத்தில் அழிவில்லாது இருக்கிறான் என்கிறார். இப்பாடலில் தநன, நிதந, விநாச, கீநாச என்று வார்த்தை ஜாலங்களைச் செய்திருக்கிறார் பகவத் பாதர்.