செளந்தர்யலஹரி 49 & 50


விசாலா கல்யாணீ ஸ்புடருசியோத்யா குவலையை:
க்ருபாதாராதாரா கிமபி மதுரா போகவதிகா
அவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹுநகர விஸ்தார விஜயா
த்ருவம் தத்தன் நாம வ்யவஹரண யோக்யா விஜயதே


அம்பிகே!, உன் கண்கள் விசாலமாக இருப்பதால் விசாலா என்றும், மங்களகரமானதால் கல்யாணி என்றும், இந்தீவர புஷ்பங்களாலும் ஜெயிக்க முடியாத அழகுடையதால் அயோத்யா என்றும், கருணையினை தாரையாக பொழிய ஆதாரமாக இருப்பதால் தாரா என்றும், வர்ணிக்கமுடியாத மாதுர்யத்துடன் இருப்பதால் மதுரா என்றும், ஆழ்ந்த உணர்வினைத் தருவதால் போகவதீ என்றும், சகல உலகங்களையும் காப்பதால் அவந்தீ என்றும் கூறத்தக்கவாறு அந்த நகரங்களில் விஜயம் செய்து கொண்டு விளங்குகின்றன.


இந்தப் ஸ்லோகத்தில் அம்பாளின் எட்டு விதமான த்ருஷ்டிகளுக்கு (பார்வைகளுக்கு), 8 நகரங்கள் உதாரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சாதாரணமாக சாமுத்ரிகா லக்ஷணங்களுடைய பெண்களின் பார்வையை இவ்வாறு பிரித்துச் சொல்வது வழக்கமாம். இந்த 8 விதமான பார்வைகளாவன; உள்ளார்ந்த, ஆச்சர்யமான, முழுதாக மலர்ந்த, களைப்போடு கூடிய, சஞ்சலமான, ப்ரியத்துடன் கூடிய, மயங்கிய நிலையில், மற்றும் பாதி மூடிய நிலையிலானதாம். இவை எல்லா பெண்களிடத்தும் இருந்தாலும், அன்னையிடத்து இவை இருப்பது, ஸம்க்ஷோபண, ஆகர்ஷண, த்ராவண, உன்மாதன, வச்ய, உச்சாடன, வித்வேஷண, மாரண சக்திகளைக் கூறிப்பதாக தேதியூரார் தமது விளக்கத்தில் சொல்லியிருக்கிறார்.

ஸம்க்ஷோபணம் - குழப்பம்; த்ருவம் விஜயதே - நிச்சயமாக விளங்குகிறது; தத் தத் - அந்தந்த; நாம வ்யவஹரண யோக்யா - பெயர்களால் அழைக்கும் யோக்கியதை உடைய; பஹுநகர - அநேக நகரங்கள்; விஸ்தார விஜயா - விஸ்தாரமாக விஜயம் செய்ய; அவந்தீ - காப்பாற்றுகின்ற; ஆபோகவதிகா - ஆழ்ந்த; கிமபி மதுரா - வர்ணிக்க முடியாத மாதூர்யமான; க்ருபா - கருணை; தாராதாரா - ப்ரவாஹத்துக்கு ஆதாரமான; குவலையை: - இந்தீவர புஷ்பம்; அயோத்யா - ஜெயிக்க முடியாத; ஸ்புடருசி - விரிந்த காந்தியுடையது; கல்யாணி - மங்களமான; தே திருஷ்டி - உன் பார்வை.

கோலநகர் விசாலையாய் நிரந்தரக் கல்யாணியாய்க்
குவலயத்தால் அயோத்தியாய்க் குலமதிரை தானாய்
சாலஒளிர் போகவதியாய் அமுத தாரையாய்த்
தண்ணளியால் அவந்தியாய்ச் சகவிசையை எனலாய்
நிலவிழி புடைபரந்து நெடுநகரப் பெயர்கவர்ந்து
நீண்டு சேந்தரிபரந்து நிகரொழிக்கும் என்றால்
ஆலவிடம் அமுதெனக்கொண்டு அருந்திய உன்மத்தர் புரம்
அதனில் ஒருபுறம் கவர்தல் அதிசயமோ தாயே!

-------------------------------------------------------------------------------------------------
கவீனாம் ஸந்தர்பஸ்தபக மகரந்தைக ரஸிகம்
கடாக்ஷ வ்யோக்ஷேப ப்ரமர கலபெள கர்ணயுகளம்
அமுஞ்சந்தெள த்ருஷ்ட்வா தவ நவரஸாஸ்வாத தரளெள
அஸுயாஸம்ஸ்ர்காத் அளிகநயனம் கிஞ்சித் அருணம்

கவிஞர்களது க்ரந்தங்களான புஷ்பங்களில் இருக்கும் மகரந்தத்தை பருகுவது போல உனது காதுகள் அமைந்திருக்கிறது. அந்த க்ரந்தங்களில் சொல்லப்பட்ட நவரசங்களையும் பார்க்க உனது இரு கண்களும் தேனிக்கள் போல சுற்றிச் சுற்றி வருகின்றது. உனது இரு கண்களைப் பார்த்த நெற்றிக் கண்ணானது பொறாமையால் சிவந்து காணப்படுகிறது என்கிறார்.

அதாவது, அன்னையின் காதுகள் நீண்டு இருப்பதும், அவளை துதிக்கும் பக்தர்களது கோரிக்கைகளை எப்போதும் அக்காதுகள் கேட்டுக் கொண்டு இருப்பதையும், அவளது கண்கள் பக்தர்களுக்கு கருணை மழை பொழிந்த வண்ணம் இருப்பதாகவும், அக்னி ரூபமான நெற்றிக் கண் தூர்-மதியுடையவர்களை சுட்டெரிக்க ஏதுவாக சிவந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கிஞ்சித் அருணம் - கொஞ்சம் சிவப்பாக; அளிக நயனம் - நெற்றிக்கண்; அஸுயாஸம்ஸ்ர்காத் - பொறாமையால்; கடாக்ஷ வ்யக்ஷேப - கடாக்ஷிக்கும் கண்களாகிய; ப்ரமர கலபெள - தேனிக் குஞ்சுகள்; தவ கர்ணயுகளம் - உன்னிரு காதுகளும்; மகரந்தைக ரஸிகம் - மகரந்தத்திலிருக்கும் தேனைப் பருக விரும்பும்; ஸந்தர்பஸ்தபக - மலர்ச் செண்டினைப் போன்ற கர்ந்தங்கள்; கவீனாம் - கவிகள்

அடுத்து வருவது கவிராஜர் சொன்னது.

இருசெவியுண் பலகவிதை
இரரொழுகு பசுந்தேனிற்
பெருகுநவ ரதமருந்திப்
பிறழ்ந்திடுமுன் பிணைவிழியாங்
கருநிறவண்டினைக் களிப்பக்
கண்டு பொறாதென்னையோ
வரிநுதற்கண் அளிசிவந்த
வளம்பாராய் மலர்க்கொடியே.

செளந்தர்யலஹரி 47 & 48



ப்ருவெள புக்நே கிஞ்சித் புவனபயபங்கவ்யஸ்நிதி
த்வதீயே நேத்ராப்யாம் மதுகரருசிப்யாம் த்ருதகுணம்
தநுர்மந்யே ஸவ்யேதரகர க்ருஹீதம் ரதிபதே:
ப்ரகோஷ்டே முஷ்டெள ச ஸ்தகயதி நிகூடாந்தரம் உமே


ஸகல புவனங்களுக்கும் அபயம் கொடுத்திருக்கும் உமையவளே!, கொஞ்சம் வளைந்திருக்கும் உன்னுடைய புருவங்கள் வில்லாகவும், உனது கண்களாகிய வண்டுகளை வில்லின் நாணாகவும் (வில்லில் இருக்கும் கயறு), அந்த வில்லை மன்மதன் தனது வலது கையில் பிடித்திருப்பது போன்று உனது நாச தண்டமும் (மூக்கு), மன்மதனது வில் பிடித்த கையின் முஷ்டியானது நாணின் நடுப்பகுதியையும், அவனது விரல்களும் உள்ளங்கையும் வில்லின் நடுப்பகுதியையும் மறைத்ததுபோல தோன்றத்தை தருகிறது.

இந்தப் பாடலில் அம்பிகையின் புருவங்கள் மன்மதனுடைய வில்லுக்கு சமமாகக் கூறப்பட்டுள்ளது. மன்மதனது வில்லில் 'மெளர்வி மதுகரமயீ'' என்பதாக (இங்கே) அதாவது வண்டுகளே நாணாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். இந்தப் பாடலில் அந்த வண்டுகளாக அன்னையின் கண்விழியசைவினைச் சொல்கிறார். காதுவரை நீண்ட மீன் போன்ற கண்களில் (மீனாக்ஷி) கருவண்டு போன்ற கருவிழிகள் ஒரு முனையிலிருந்து இன்னொன்றுக்குப் போய்வருவது நாண் போன்ற தோற்றத்தை தருகிறதாம். அன்னையின் நாஸதண்டம் (மூக்கு) மன்மதனுடைய முழங்கைக்கும், அவனது முஷ்டி (மடங்கிய விரல்கள் உடைய கைப் பகுதி) அன்னையின் புருவங்களூக்கு மத்தியில் இருக்கும் பகுதிக்கும் சொல்லியிருக்கிறார்.

சாதாரணமாக வில்லில் இருந்து அம்பு எய்வதற்கு முயலும் போது இடது கரத்தில் வில்லும், அம்பினை வலது கரத்திலும் வைத்துக் கொள்ள வேண்டும். இங்கே தெளிவாக வலது (ஸ்வயேதர) கரத்தில் வில்லை வைத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார். வில்லை வலதுகையினால் பிடித்தால்தான் அதன் நாண்கள் முழங்கைகளால் மறைக்கப்படும், இடதுகையில் அம்பெய்யும் விதமாகப் பிடித்தால் நாண்கள் மறைந்திருக்காது, அப்படியே மறைந்திருப்பதைக் காண முயன்றாலும் புருவ மத்தியானது விரல்களால் ஏற்படும் சுருங்கிய தோற்றம் தராது, புறங்கையினையொத்த இடைவெளி போன்றே தோன்றும். சகல உலகங்களுக்கும் பயத்தினைப் போக்கும் விதமாக புருவங்களை சற்றே நெரிப்பதால் தோற்றம் தருவதானது, நாணேற்றிய வில்லுக்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது.

புவன-பய-பங்க-வ்யஸ்நிநி - சகல லோகங்களுக்கும் இருக்கும் பயத்தைப் போக்கும் சக்தியுடையவளே; த்வதீயே-உன்னுடைய;கிஞ்சித் புக்னே-கீழ் நோக்கிபடி கொஞ்சம் வளைந்த; ப்ருவெள - புருவங்கள்; மதுகர ருசிப்யாம் - வண்டுகள் போல அழகுடன் கூடிய; நேத்ராப்யாம் - கண்களால்; த்ருத குணம் - நாண் ஏற்றியதான; ஸ்வ்யேதர கர க்ருஹீதம் - வலதுகையால் பிடிக்கப்பட்ட; ப்ரகோஷ்டே - முழங்கையின் முடிவுப் பகுதி; முஷ்டெள் ச - விரல்கள் மடக்கிப் பிடித்த; ஸ்தகயதி - மறைக்கப்பட்டதால்; நிகூடாந்த்ரம் - மறைந்த நடுப்பகுதி; ரதிபதே: - ரதியின் பதி-மன்மதன்; தனுர் - வில்; மந்யே - நினைக்கிறேன்.

உமா என்று இங்கே அன்னையை விளித்திருக்கிறார். உமா என்பதற்கான விளக்கத்தை பிறகு ஒரு தனிப் பதிவில் பார்க்கலாம். இப்போ கவிராஜர் சொன்னதைப் பார்க்கலாமா?

கருவிழிச் சுருப்பு நாண் உன்
கண் மலரம்பு கன்னற்
புருவவில் நடு ஒழித்தல்
போன்றத்ய் வளைத்துப் போர்மேல்
வருமதன் பிடித்த கைக்குள்
மறைந்தது போலும் என்றால்
திருமகள் பரவும் அம்மே
சிலையிது புருவம் அன்றே


------------------------------------------------------------------------------------------------


அஹஸ் ஸுதே ஸவ்யம் தவ நயனம் அர்க்காத்மகதயா
த்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி ரஜநீ நாயகதயா
த்ருதீயா தே த்ருஷ்டி: தரதளித ஹேமாம்புஜருசி:
ஸ்மாதத்தே ஸந்த்யாம் திவஸ நிசயோரந்தர சரீம்


அம்மா, சூர்ய ரூபமான உன்னுடைய வலதுகண்களால் பகலையும், சந்திர ரூபமான இடது கண்களால் இரவையும் உண்டுபண்ணுகிறாய். கொஞ்சமாக மலர்ந்ததும், தங்கத் தாமரைபோன்ற காந்தி/ஒளி உடையதும், அக்னி ரூபமானதுமான உனது நெற்றிக்கண்ணானது இரு சந்தியா காலங்களையும் உண்டு பண்ணுகிறது.




அம்பாளுடைய கண்களாலேயே பகல்-இரவு மற்றும் ஸந்தியாகாலம் ஆகியவை உருவாகிறது என்று கூறப்படுவதால் தான் காலாதீதமானவள் என்று அம்பிக்கை கூறப்படுகிறாள். பரமசிவன் போன்றே அன்னைக்கும் நெற்றிக் கண் உண்டு. பரமசிவனைப் போலவே இவளது நெற்றிக் கண்ணும் அக்னி ஸ்வரூபம். அந்த நெற்றிக் கண்ணானது, அக்னியின் நிறமும், ஹேம-அம்புஜத்தின் (தங்க தாமரை) ஒளியும், சூரிய உதய/அஸ்தமன நேரத்தில் உருவாகும் சிவப்பு நிறமும் கொண்டதாக, மலர்ந்தும்-மலராத தங்கத்தாமரை போல இருக்கிறதாம்


தவ ஸவ்யம் நயனம் - உன் வலது கண்ணானது; அர்க்காத்மகதயா - ஸூர்யனாக; அஹஸ் ஸூதே - பகலை உண்டுபண்ணுகிறது; தே வாமம் நயனம் - உன் இடது கண்ணானது; ரஜனீ நாயகதயா - சந்த்ரனாக இருந்து கொண்டு; த்ரியாமாம் ஸ்ருஜதி - ராத்ரியை உண்டுபண்ணுகிறது; தே த்ருதீயா த்ருஷ்டி: நெற்றியில் இருக்கும் மூன்றாவது கண்ணானது; தர தனித ஹேமாம்புஜ ருசி: - கொஞ்சம் மலர்ந்த தங்கத் தாமரையின் ஒளியுடன்; திவஸ நிசயோ: அந்தர சரீம் - பகல்-இரவுக்கு இடைப்பட்ட; ஸந்தியா - சந்தியாகால; ஸாமாதத்தே - உருவாக்குகிறது.


ஒருமலர்க்கண் இரவி-வலத்து
உதித்தருளும் நண்பகலும்
ஒருமலர்க்கண் மதியின் இடத்து
உதித்தருளும் பேரிரவும்
திருநுதற்கட் பொற்கமலச்
செந்நிறத்தீ விளைத்தருளும்,
விரவுசெக்கர் மாலையும்
உன்விழைவு அகலா விழுப்பொருளே