
அவித்யானா-மந்தஸ்திமிர-மிஹிர-த்வீப-நகரி
ஜடானாம் சைதன்ய-ஸ்தபக-மகரந்த-ஸ்ருதிஜரி
தரித்ராணாம் சிந்தாமணி-குணநிகா ஜன்மஜலதெள
நிமக்னாம் தம்ஷ்ட்ரா முரரிபு-வராஹஸ்ய பவதி
அம்மா, உன்னுடைய பாததூளி, அஞ்ஞானமாகிய இருளை அகற்றுபவனான பகலவன் தோன்றும் தீவு;மூடர்களுக்கு ஞானமென்னும் மலர்களில் மகரந்தத்துடனான தேன் பிரவாகம்; ஏழைகளுக்குச் சிந்தாமணி; பிறவிக்கடலில் மூழ்கியவர்களுக்கு வராஹப் பெருமானின் பூமியைத் தாங்கிய கோரப் பல்.
சிந்தாமணி என்னும் ரத்னம் நினைத்ததை எல்லாம் தரவல்லது. இதனைப் பற்றி மகாபாரதக் கதையும் உண்டு. அன்னையின் மந்திரங்களில் முக்கியமான ஒரு பீஜாக்ஷரத்திற்கு சிந்தாமணி பீஜம் என்றே பெயர். (இவ்வாறாகசில அக்ஷரங்கள் பற்றி வரும் இடங்களில், அக்ஷரத்தை இங்கு குறிப்பிடுவதாக இல்லை, வேண்டுபவர்கள் தனிமடல் அனுப்பினால் தருகிறேன்)
அந்தஸ்திமிர-மிஹிர-த்வீப-நகரி - மன இருளைப் போக்கும் சூரியன்; மகரந்தஸ்ருதிஜரி - மகரந்தம் கலந்த கால்வாய்,அதாவது தேன்னும், மகரந்தமும் கலந்து கால்வாயாக ஓடுமாம்; முரரிபு: வராஹஸ்ய - முரன் என்ற அசுரனைக் கொன்ற மஹா விஷ்ணுவின் பெயர் முரரிபு;
அதாவது, அன்னையின் பாததூளியானது, ஏழைகளுக்கு வேண்டுவதை தரும், ஞானத்தை தரும், வராஹப் பெருமான் எப்படிமுழ்க இருந்த பூமிப் பந்தை தனது பற்களால் தாங்கிப் பிடித்தாரோ அதுபோல பிறவிக் கடலை நீந்துபவர்களுக்கு மூழ்காது காக்கும் என்கிறார்.
த்வ-தன்ய: பாணிப்ப்யா-மபயவரதோ தைவதகண:
த்வமேகா நைவாஸி ப்ரகடித-வாரபீத்யபிநயா
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்சாஸமதிகம்
சரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணெள
தாயே!, உன்னைத் தவிர மற்ற தேவதைகளெல்லாம் அபய-வரத முத்திரைகளைக் காட்டுகிறார்கள். ஆனால் நீ அந்த முத்திரைகளை காட்டுவதில்லை. ஏனெனில் உன் திருவடிகளே பயத்திலிருந்து காத்து விடுகிறது. அத்திருவடிகளே அவரவர் விரும்புவதற்கு அதிகமாக வரமும் அளித்து விடுகிறது.
த்ரிபுரசுந்தரி தனது கைகளில் பாசம், அங்குசம், புஷ்பபாணம், கரும்புவில் ஆகியவற்றையே தரித்திருக்கிறாள். அபய-வரதம் என்பது அவள் பாதகமலங்களில் அடங்கியிருப்பதால்தான் பிற தேவதைகளும் அவள் பாதாரவிந்தத்தை பூஜிக்கின்றனர்.
த்வ-தன்ய: - உன்னைத் தவிர்த்த; தைவதகண: - தேவர்கள்; பாணிப்யாம் - கைகளால்; அபய-வரத - அபயத்தையும், வரத்தையும்த்வமேகா - நீ மட்டும் ; ப்ரகடித-வாரபீத்யபிநயா - அபிந்யத்தால் அபயத்தையும், வரதத்தையும் பிரகடனம்; நைவாஸி - செய்வதில்லை. பயாத்-த்ராதும் - பயத்திலிருந்து காப்பாற்றவும்; வாஞ்சா-ஸமதிகம் - வேண்டியதற்கு மேலாக; பலம்-பலன்; தாதும் அபி சவ- அளிக்ககூடிய; சரணெள ஏவ - உன் திருவடிகளே; நிபுணெள ஹி - திறமை உடையவை; சரண்யே லோகானாம் - உலகிற்குப் புகலிடமானவளே.