செளந்தர்யலஹரி 45 & 46



அராளை: ஸ்வாபாவ்யாத் அளிகளப ஸஸ்ரீபிரளகை:
பரீதம் தே வக்த்ரம் பரிஹஸதி பங்கேருஹருசிம்
தரஸ்மேரே யஸ்மிந் தசநருசி கிஞ்ஜல்க ருசிரே
ஸுகந்தெள மாத்யந்தி ஸ்மரதஹந சக்ஷுர் மதுலிஹ:

தாயே, இயற்கையாகவே சுருண்ட முடியால் சூழப்பட்ட உனது நெற்றியானது, வண்டுகளால் சூழப்பட்ட தாமரை மலரை தோற்கடிப்பதாக இருக்கிறது. அந்த முகத்தில் தவழும் உனது புன்சிரிப்பினால், பல்வரிசைகளின் மூலமான காந்தியை பிரதிபலிக்கும் இதழ்கள், மற்றும் பரிமளமுடைய அந்த முகாரவிந்தத்தால் காமனை வென்ற பரமசிவனின் கண்களான தேனிக்கள் மயங்கியிருக்கின்றன. மன்மதனை எரித்த பரமசிவனது கண்கள், இப்போது அம்பிகையின் முக லாவண்யத்தினால் காமவிகாரத்தை அடைந்ததாம்.

இந்த ஸ்லோகத்தில் அன்னையின் முகம் தாமரைப் புஷ்பமாகவும், அவளது முன்னுச்சியில் இருக்கும் சுருண்ட முடியானது தாமரையை மொய்க்கும் வண்டுகளாகவும் சொல்கிறார். அம்பிகையின் சிரிப்பினால் வெளிப்படும் பல்வரிசை மூலம் வெளிவரும் காந்தியுடன் கூடிய அந்த முகத்தைக் கண்ட பரமசிவன் மயங்கிவிடுகிறார். பரமசிவனைச் சொல்லும் போது, என்னதான் காமனை ஜெயித்தவரானாலும் அன்னையின் முகலாவண்யத்தின் முன் மயங்கி விடுவதாக சொல்லப்பட்டிருக்கிறது.


ஸ்வபாயாத் - இயற்கையாகவே; அராளை - சுருட்டையான; ப்ரீதம் - சூழப்பட்ட; அளகை - முன்னுச்சி மையிர்கள்; அளிகளப - சிறு வண்டுகள்; ஸஸ்ரீபி: - காந்தியுடைய; தே வக்த்ரம் - உன் முகமானது; தரஸ்மேரே - புன்சிரிப்புடன் கூடியது; தசனருசி - பல் வரிசைகளுடைய; கிஞ்ஜல்க - இதழ்களால்; ஸுகந்தெள - நல்ல மணமுள்ள; யஸ்மிந் - முகத்தில்; ஸ்மரதஹந - மன்மதனை எரித்த; சக்ஷுர் மதுலிஹ: - கண்களான தேனீக்கள்; மாத்யந்தி - மயங்குகின்ற

கூரெயிற்றின் அகஇதழுங் கொண்கர்விழி வரிவண்டும்
குழற்படிந்த மதுகரத்தின் குழாமும் கூடிப்
பேரியற்கை மணம்பொதிந்து புன்மூரல் முகையவிழப்
பிறழுமுன் தருணமுக கமல மென்றால்
ஒறியற்கை வாடுமிதழ் பொறிவண்டே படிவது
மற்றோர்-இயற்கை செயற்கைமணம் போதுசெய்யும்
நீரியற்கை மலர்க்கமல மிதற்குடைந்து பங்கமுறல்
நீதியென்பது யாரறியார் நிகரில் மாதே

--------------------------------------------------------------------------------------

லலாடம் லாவண்யத்யுதி விமலம் ஆபாதி தவ யத்
த்விதீயம் தந்மந்யே மகுடகடிதம் சந்த்ர சகளம்
விபர்யாஸ ந்யாஸாத் உபயமபி ஸம்பூய ச மித:
ஸுதாலேப ஸ்யூதி: பரிணமதி ராகா ஹிமகர:

லாவண்யமான வெண்ணிலாவுடன் ப்ரகாசிக்கும் உனது நெற்றியானது கிரீடத்திலிருக்கும் அர்த்த சந்திரனைத் தவிர்த்து வேறான அர்த்த சந்திரன் போல தோன்றுகிறது. ஏனென்றால் மேலும் கீழுமாக எதிரெதிர் திசையில் வளைவுகளையுடைய இரு நிலாக்களையும் வளைவுகள் பொருந்தும்படியாகச் சேர்த்து வைத்தால் அம்ருதம் நிறைந்த பூர்ண சந்திரன் போன்ற தோற்றமாம். இது தான் "அஷ்டமீசந்த்ர பிப்ராஜத் அலிகஸ்தல சோபிதா" என்னும் நாமம்.


அன்னையின் உச்சிக் வகிட்டின் கேசங்களுக்கு கீழ் புருவம் வரையில் இருக்கும் நெற்றிப் பகுதி வளைந்து கன்னங்களை அடைவது பிறைச் சந்திரனைத் தலைகீழாக கவிழ்த்து வைத்தது போல் இருக்கிறதாம். (இது பற்றி பெரியவர் திராச ஒரு பதிவு போட்டிருக்கிறார், அது இங்கே). பிறைச் சந்திரன் என்று சொல்லும் போது அர்த்த சந்திரன் என்கிறார். அஷ்டமீ தினமானது பக்ஷத்தின் நடுவில் இருக்கும் திதி. அமாவாசையில் இருந்து தினமும் சந்திரனைப் பார்த்துக் கொண்டே வந்தால் அஷ்டமி தினத்தில் சரிபாதியாக வளர்ந்திருக்கும். அதனால் அர்த்த சந்திரன். இவ்வாறாக இரு அர்த்த சந்திரனை வளைவுகள் பொருந்தும்படி அமைத்தால் வருவது முழு நிலா.


யத் லலாடம் - உன் நெற்றியானது; லாவண்யத்யுதி - நிர்மலமான நிலவு; ஆபாதி - ப்ரகாசிக்கிறதோ; மகுடகடிதம் - கீரிடத்தில் இருக்கும்; த்விதீயம் - இரண்டாவதான; சந்த்ர சகலம் - அந்த சந்த்ர பிம்பம்; மந்யே - நினைக்கிறேன்; உபயமபி - சிரசில் இருக்கும் அர்த்த சந்திரனும், நெற்றியாக இருக்கும் அர்த்த சந்திரனும் ஆகிய இரண்டும்; விபர்யாஸந்யாஸாத் - வித்தியாசமான வளைவுகளைக் கொண்டிருக்கும்; மத: ஸ்ம்பூயச - சரியாக பொருந்துவதால்; ஸுதாலேபஸ்யூதி: - அம்ருதத்தால் பூசப்பட்ட/நிறப்பப்பட்ட; ராகா ஹிமகர: - பூர்ண சந்திரனாக; பரிணமதி - ஆகின்றது.


கோதை நீண்முடி கொண்டொளிர் திங்கள்சேர்
பாதி வாள்நுத லென்று படிந்ததோ
ஈது கூடி யிரண்டு நிறைந்ததோ
சீத பூரணத் திங்கள் சிறந்ததே

3 comments:

Kavinaya said...

ஆஹா, படிக்க படிக்க அவ்ளோ சுவையா இருக்கு. தமிழ் பாவும் சுவை சேர்க்க, உங்களுடைய தமிழும் அழகா இருக்கு மௌலி. 'முக லாவண்யம்' ங்கிற பிரயோகத்தை ரசிச்சேன். அதே போல பாட்டுல 'புன்மூரல் முகையவிழ' ங்கிறது. படிக்கும்போதே அவளுடைய எழில் புன்னகை மனசுக்குள்ள வருதே... மிக்க நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கூர் எயிற்றின் அக இதழும் கொண்கர் விழி வரி வண்டும்
குழல் படிந்த மதுகரத்தின் குழாமும் கூடிப்

பேர் இயற்கை மணம் பொதிந்து புன் மூரல் முகை அவிழப்
பிறழும் உன் தருண முக கமலம் என்றால்

ஓர் இயற்கை வாடும் இதழ் பொறி வண்டே படிவது
மற்றோர் இயற்கை செயற்கை மணம் போது செய்யும்

நீர் இயற்கை மலர்க் கமலம் மீதிற் குடைந்து பங்கம் உறல்
நீதி என்பது யார் அறியார் நிகரில் மாதே

குமரன் (Kumaran) said...

கனகதாரா ஸ்தோத்ரத்தில் தான் சொன்னதை இங்கே அப்படியே மாற்றிச் சொல்லிவிட்டார் ஆசார்யர். அங்கே மரகத மலர் போன்ற மாலவன் திருமார்பில் மொய்க்கும் மாணிக்க வண்டு திருமகள் என்று சொல்வார். இங்கே தாமரை மலர் போன்ற அம்மையின் திருமுகத்தின் அழகைப் பருகி மயங்கும் கருவண்டுகள் ஐயனின் திருநயனங்கள் என்கிறார். :-)