செளந்தர்யலஹரி 59 & 60



ஸ்புரத் கண்டாபோக ப்ரதிபலித தாடங்கயுகளம்
சது:சக்ரம் மந்யே தவ முகமிதம் மந்மதரதம்
யமாருஹ்ய த்ருஹ்யத்வநிரதம் அர்கேந்துசரணம்

மஹாவீரோ மார: ப்ரமத பதயே ஸஜ்ஜிதவதே

அம்மா!, உனது தாடங்கங்கள் கன்னத்தில் ப்ரதிபலிப்பதால் முகமானது நான்கு சக்ரங்களுடன் கூடிய மன்மதனது ரதம் போன்று காக்ஷி அளிக்கிறது. இது போன்ற ரதத்தில் இருப்பதால்தான் மன்மதன், ஸுர்ய-சந்திரர்களை சக்ரங்களாகக் கொண்ட பூமி என்னும் ரதத்தில் ஏறிக்கொண்டு யுத்த சன்னாஹத்துடன் இருப்பவரும், ப்ரமத கணங்களால் சூழப்பட்டவருமான பரமசிவனுடனேயே போர் புரியத் தயாராகிறான்.

இந்தப் பாடல் அன்னையின் கன்னங்களை வர்ணிப்பதாக அமைந்துள்ளது. அம்பிகையின் கன்னங்கள் வழுவழுப்பாக கண்ணாடி போல் இருக்கிறதாம். அதனால் காதில் இருக்கும் தாடங்கங்கள் கன்னதில் பிரதிபலித்து நான்கு சக்கரங்களாகத் தெரிகிறது என்கிறார். இந்த நேரத்தில் பகவத்பாதாள் திருவானைக்காவலில் அன்னையின் உக்ரத்தை தணிக்க ஸ்ரீ சக்ரங்களால் ஆன தாடங்கங்களைச் சாற்றியது நினைவுக்கு வருகிறது. இன்றும் காஞ்சி ஆசாரியார்கள் இந்த தாடங்கப் பிரதிஷ்டையைச் செய்து வருகின்றனர்.

மன்மதன் போர் புரிய உபயோகிக்கும் ரதம் இது போன்று என்று கூறியபின், பரமசிவனது த்ரிபுர சம்ஹாரத்திற்கு உபயோகித்த ரதத்தைப் பற்றிக் கூறுகிறார். அதாவது த்ரிபுர சம்ஹாரத்தின் போது பூமியே ரதத்தின் தட்டாகவும், சூர்ய-சந்திரர்களே சக்கரங்களாகவும் இருந்தனராம். அப்படியான சிறப்புமிக்க ரதத்தைக் கொண்ட சிவபெருமானையே தனது காம பாணங்களால் எதிர்க்கும் துணிச்சல் மன்மதனுக்கு வந்தது என்றால், அதன் காரணம் அன்னையின் வதனமே! என்று கூறுகிறார்.

ஸ்புரத் - பிரகாசிக்கும்; கண்டாபோக - கன்னங்களில்; ப்ரதிபலித -பிரதிபலிக்கும்; தாடங்க யுகளம் - காதில் அணியிம் தாடங்ம் என்னும் அணிகலன்; தவ இதம் முகம் - உன்னுடைய முகம்; சது: சக்ரம் மந்மத ரதம் -நான்கு சக்ரங்கள் உடைய மன்மதனது ரதம்; மந்யே - நினைக்கிறேன்; யமாருஹ்ய - யம்+ஆருஹ்ய - எதில் ஏறிக்கொண்டு; மார: - மன்மதன்; மஹா வீர: மஹாவிரனாக இருந்து கொண்டு; அர்கேந்து சரணம் - ஸுர்ய-சந்திரர்களை சக்ரங்களாக உடைய; அவநி-ரதம் - பூமியாகிய ரதத்தை; ஜ்ஜிதவதே - தயாராக இருக்கும்; ப்ரமதபதயே - ப்ரமத கணங்களுக்கு அதிபதியான பரமேஸ்வரன்; த்ருஹ்யதி - பகைக்கிறானோ.

கவிராஜரது பாடல் கீழே!

தோகைநின் கபோலஞ் சார்ந்த
துணைநிழற் சுவடுந் தோடும்
ஆகவில் வுருளை நான்கின்
ஆனன இரதம் வாய்த்தோ
ஏகநன் புடவி வட்டத்
திருசுட ராழித் திண்தேர்ப்
பாகரைப் பொருது மாரன்
பழம்பகை தீரப் பெற்றான்.

------------------------------------------------------------------------------------------




ஸரஸ்வத்யா: ஸுக்தீரம்ருதலஹரீ கெளசல ஹரீ:
பிபந்த்யா: சர்வாணி ச்ரவண சுளுகாப்யாம் அவிரளம் சமத்காரச்லாகா சலிதசிரஸ: குண்டலகணோ
ஜணத்காரைஸ் தாரை: ப்ரதிவசநமசஷ்ட இவ தே

அம்மா!, பரமசிவன் பத்னியே, அம்ருதம் போன்ற இனிமையாக உனது பேச்சுக்களை இடைவிடாது கேட்டுக் கொண்டு இருக்கும் சரஸ்வதி தேவி, கேட்கும் ஆவலில் தலையை அசைத்த வண்ணம் இருக்கிறாள். அவ்வாறு தலையை அசைக்கும் சமயத்தில், அவள் தன் காதுகளில் அணிந்திருக்கும் குண்டலங்கள் அசைகிறது. அவ்வாறு சரஸ்வதியின் குண்டலங்கள் அசைவது, அவை உங்களது பேச்சுக்களை ஜணத்கார சப்தம் கொடுத்து ஆமோதிப்பது போல இருக்கிறது.

அன்னையின் குரல் இனிமையைக் குறிப்பதான ஸ்லோகம் இது. அம்பிகையின் பேச்சு அம்ருதத்தினைப் போல இருக்கும் என்கிறார். சரஸ்வதி அன்னையின் அருகில் எப்போதும் இருப்பதாகச் சொல்லி, அவள் அன்னையின் அம்ருத பிரவாஹத்தை விஞ்சும் இனிய குரலோசையை கைகளால் உணவை அள்ளி-அள்ளி உண்பது போல தலையை ஆட்டிக் கொண்டு காதுகளால் கேட்கிறாளாம். அப்போது சரஸ்வதியின் காதுகளில் இருக்கும் குண்டலங்களால் ஏற்படும் சப்தம் அன்னையின் பேச்சை கேட்டு வியந்து பதிலாக புகழ்ச்சி கோஷம் செய்வது போல இருக்கிறதாம்.

சர்வாணி - சர்வேசரனாகிய பரமசிவன் பத்னி; அம்ருதலஹரீ-கெளசலஹரீ - அம்ருதப் பிரவாஹத்தை விஞ்சும் இனிய பிரவாஹமான; தே ஸுக்தீ: - உன் பேச்சுக்களை; ச்ரவண சுளுகாப்யாம் - கைகளில் அள்ளிச் சாப்பிடுவது போல காதுகளால்; அவிரளம் - அப்போதைக்கபோது; பிபந்த்யா: - குடிப்பவள்; சமத்காரச்லாகா-சலிதசிரஸ: - பேச்சை மெச்சும்படியாக தலை அசைத்தல்; ஸரஸ்வத்யா: - சரஸ்வதியின்; குண்டலகண: குண்டலங்களின்; தாரை - உரத்த; ஜணத்காரை: - ஜண்-ஜண் என்னும் சப்தம்; ப்ரதிவசநம் - பதில்; ஆசஷ்ட இவ - சொல்வது போல்.

கவிராஜரது பாடல் கீழே!

வேரி நா மலர்க்குள் வாணி
விலையில் பாடல் முதலாஞ்
சேர மா மடந்தை நின்செ
விக்கு ணாஅ ருத்தவே
ஆர மாலை முடி அசைப்ப
ஆடி யெற்று குண்டலம்
பூரை பூரை என்ற சொற்
பொலிந்த ஓசை பெற்றதே.

12 comments:

Kavinaya said...

ரொம்ப அழகா இருக்கு, அம்மாவைப் போலவே. நன்றி மௌலி.

குமரன் (Kumaran) said...

//உனது தாடங்கங்கள் கன்னத்தில் ப்ரதிபலிப்பதால் முகமானது நான்கு சக்ரங்களுடன் கூடிய மன்மதனது ரதம் போன்று காக்ஷி அளிக்கிறது. //

அருமை அருமை அருமை.

குமரன் (Kumaran) said...

கவிநயா அக்கா. கவிராஜரது பாடல்கள் நேரடியாகப் புரிகின்ற மாதிரியே இருக்கின்றன என்று நினைக்கிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கவிக்கா....நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

வருக குமரன்...

கவிராஜரது 2ஆம் பாடலைக் கொஞ்சம் பிரித்து விளக்கம் சொல்லுங்களேன்....அது சரியாகப் புரியல்ல, எங்க பிரிக்கணும்/சேர்கணும் தெரியல்ல...ஆகவே அப்படியே மூலத்தைக் கொடுத்துவிட்டேன்.

குமரன் (Kumaran) said...

தோகை நின் கபோலம் சார்ந்த துணை நிழல் சுவடும் தோடும் ஆக வில் உருளை நான்கின் ஆனன இரதம் வாய்த்தோ ஏக நன் புடவி வட்டத்து இரு சுடர் ஆழித் திண் தேர்ப் பாகரைப் பொருது மாரன் பழம்பகை தீரப் பெற்றான்?

மயில் போன்றவளே. உன்னுடைய திருமுகத்தைச் சார்ந்த இரு புறமும் இருக்கும் கன்னத்தில் தெரியும் சுவடுகளும் (நிழல்களும்) தோடுகளும் அழகிய சக்கரம் நான்கு கொண்ட உன் திருமுகமெனும் இரதம் பெற்றுத் தான் ஒற்றை நல்ல உலக வடிவான வட்டவடிவம் கொண்ட இரு சுடர்களை (சூரிய சந்திரர்களை) சக்கரமாகக் கொண்ட திண்மையான தேரினை உடையவருடன் போரிட்டு மன்மதன் முன்னொரு காலத்தில் அவரிடம் தோற்ற பழம்பகையின் பழியைத் தீரப் பெற்றான்?

குமரன் (Kumaran) said...

வேரி நா மலர்க்குள் வாணி விலையில் பாடல் முதலாம் சேர மாமடந்தை நின் செவிக்கு உணா அருத்தவே ஆர மாலை முடி அசைப்ப ஆடி எற்று குண்டலம் பூரை பூரை என்ற சொல் பொலிந்த ஓசை பெற்றதே.

அழகிய (நான்முகனின்) நாவு என்னும் மலரில் அமரும் வாணி, மாமடந்தை நின் விலையில்லாத பாடல் போன்ற திருமொழிகளை முன்னின்று கேட்டு தன் செவிக்கு உணவாக அருந்தவே, அப்போது அழகிய மாலைகள் அணிந்த அவளது தலையை அசைக்க, அதனால் ஆடி உதைக்கும் குண்டலம் (உன் பேச்சுக்கு பதில் சொல்வதைப் போல்) பூரை பூரை என்ற சொல் பொலிந்த ஓசை பெற்றதே.

பூரை பூரை என்றால் என்ன என்று தெரியவில்லை.

மெளலி (மதுரையம்பதி) said...

கேட்பதும் கொடுப்பவரே, குமரா, குமரா! :-) ....மிக்க நன்றி....

பூரை என்று அன்னைக்கு ஒரு பெயரும் இருக்கிறது குமரன்...அன்னை பற்றிய சித்தர் பாடல்களில் பார்த்த நினைவு இருக்கிறது.

பூரை-பூரணை என்பதாக வருமோ?..

குமரன் (Kumaran) said...

அகரமுதலியைப் பார்த்தேன் மௌலி.

பூரை பூரை என்றால் 'போதும் போதும்' என்று பொருளாம். அன்னையின் அமுத மொழிகளை ஆசை தீர பருகி விட்டு 'போதும் போதும் கொஞ்சம் நேரம் சென்று மீண்டும் பருகுகிறேன்' என்று காதுகள் குண்டலங்களை ஆட்டிச் சொல்கின்றன போலும்.

***

பூரை +. Expr. signifying 'enough, enough'; போதும் போதுமெனல். பூரைபூரையென் றிருகையா லமைத்த புத்தேளிர் (அரிச். பு. மீட்சி. 16).

மெளலி (மதுரையம்பதி) said...

உங்க சிரத்தைக்கு நன்றி குமரன்....:-)

Kavinaya said...

//கவிராஜரது பாடல்கள் நேரடியாகப் புரிகின்ற மாதிரியே இருக்கின்றன என்று நினைக்கிறேன்.//

சில சமயம் அப்படி இருந்தால் கூட, நீங்கள் விளக்கம் சொல்லிப் படிக்கும்போது அதிகமாவே இனிக்குதே :)

//உங்க சிரத்தைக்கு நன்றி குமரன்....:-)//

ரிப்பீட்டேய்...! :)

mohanasundaram said...

நன்று. வாழ்த்துக்கள்.
ந.மோகனசுந்தரம்.
வேந்தன்பட்டி.