ஆனந்த லஹரி - 23 & 24


த்வயா ஹ்ருத்வா வாமம் வபு-ரபரித்ருப்தேன மனஸா
சரீரார்த்தம் சம்போ-ரபரமபி சங்கே ஹ்ருதமபூத்
யதேதத் த்வத்ரூபம் ஸகல-அருணபம் த்ரிநயனம்
குசாப்யா-மாநம்ரம் குடில-சசி-சூடால-மகுடம்

அர்த்தநாரிஸ்வர ரூபத்தை சொல்வது போல ஆரம்பித்து சிவ-சக்தி ஐக்கியத்தைச் சொல்லும் ஸ்லோகம் இது. ஈஸ்வரனைப்போல முக்கண்ணும், கிரீடத்தில் சந்த்ர கலையும், கொண்டிருக்கும் அன்னையை விளித்து சொல்லப்படுகிறது....ஈசன் வெண்மையானவர், ஆனால் அன்னை சிவந்த நிறத்தவள் (அருண நிறம் பற்றி நிறைய பார்த்தோம் முன்னரே). ஈஸ்வரனின் இடது பாகத்தில் அன்னை இருக்கிறபடியால் ஈசனின் வெண்மை மறைந்து அருண நிறம் வந்து விடுகிறாதாம். பாதி உடலாக இருக்கும் அன்னைக்கு அந்த பாதியில் த்ருப்தியில்லாமல் இன்னொரு பாதியினையும் தனதாக்கிக் கொண்டாளாம். ஆகையால் ஈசனின் சந்திரனும், மூன்றாம் கண்ணும் அன்னை கொண்டிருப்பதாகவும், இரண்டு ஸ்தனங்களால் சற்றே வளைந்தும் இருப்பதால் இந்த சந்தேகம் கொண்டதாக சொல்கிறார் ஆச்சார்யார். இந்த ஸ்லோகமானது ருண விமோசனத்திற்கு பாராயணம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.


ஏதத் - என்னுடைய; த்வத் ரூபம் - உன் ரூபம்; ஸகலம் அருணபம் - முழுவதும் சிவப்பான நிறத்துடன்; த்ரிநயனம் - முக்கண்களுடன்; குசாப்யாம்- ஸ்தனங்கள்; அநம்ரம் - வளைந்த; குடில-சசி-சூடால மகுடம் - பிறைச் சந்த்ரனை சூடிய மகுடம்; வாமம் வபு: சரீரத்தின் இடது பகுதி; அபரி த்ருப்தேன - முழுமையான த்ருப்தியில்லாத; அபரம் சரீரார்த்தம் அபி - சரீரத்தின் இன்னொரு பாதியும்; ஹ்ருதம் அபூத் - கவர்ந்து கொள்ளப்பட்டது; சங்கே - சந்தேகம்


ஜகத்ஸுதே தாதா ஹரி-ரவதி ருத்ர: க்ஷபயதே
திரஸ்குர்வந்-நேதத் ஸ்வமபி வபுரீசத்-திரயதி
ஸதா-பூர்வ: ஸர்வம் ததித-மநுக்ருஹ்ணாதி ச சிவஸ்
தவாஜ்ஞா-மாலம்ப்ய க்ஷண-சலிதயோர் ப்ரூ-லதிகயோ


இதன் ஆரம்பமே 'பஞ்ச க்ருத்ய பராயணா' என்னும் நாமம் தான். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோதானம் (மாயை/மறைத்தல்), அனுக்ரஹம் என்னும் ஐந்து தொழில்களை முறையே ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன், சதாசிவன் ஆகியோர் மூலம் நடத்துகிறாள் அம்பாள். இதை இந்த ஸ்லோகத்தில் பின்வருமாறு சொல்கிறார் ஆச்சார்யார். ஹே பராசக்தி!, படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று செயல்களை செய்யும் ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரையும் தன்னுள் மறைத்துக் கொண்டு தன்னையும் மறைத்துக்கொள்கிறான் ஈசானன். ஸதாசிவன் என்னும் பரபிரம்ஹமானது கொடி போன்ற உன் புருவ அசைவினை ஆதாரமாகக் கொண்டு ப்ரம்ம-விஷ்ணு-ருத்ரன், மஹேசன் ஆகியோரது செயல்கள் செய்விக்கிறான்.


தா(4)தா - ப்ரம்மா; ஜகத்-ஸுதே - உலகை படைக்கும்; ஹரி-ரவதி = ஹரி-அவதி - அதாவது ஹரி ரக்ஷிக்கும்; க்ஷபயதே - அழிக்கும்; திரஸ்குர்வன் ஏதத் - திரோதானத்தால் இவற்றை மறைக்கும் (மாஹேசன்); ஸதா பூர்வ: சர்வம் - ஸதா என்னும் அடைமொழியினை கொண்ட சிவனான ஸதாசிவன்; க்ஷண-சலிதயோ: - நொடி நேர அசைவினால்; ப்ரூலதிகயோ - புருவங்கள் என்னும் கொடிகள் (ப்ரூ - அப்படின்னா புருவங்கள் ("ப்ரூவோர் மத்யே சகஸ்ராக்ஷி" அப்படிங்கறது தெரிந்திருக்கும்); லதை-லத்திகா அப்படிங்கறதெல்லாம் கொடிங்கற அர்த்தத்தில் வரும்); ஆஜ்ஞாம் - ஆணை; ஆலம்ப்ய - அனுசரித்து; அனுக்ருஹ்ணாதி - அனுக்கிரஹம்

ஆனந்த லஹரி - 21 & 22


தடில்லேகா-தன்வீம் தபன-சசி வைசானர-மயீம்
நிஷண்ணாம் ஷண்ணா-மப்யுபரி கமலானாம் தவ கலாம்
மஹாபத்மாடவ்யாம் ம்ருதித-மல மாயேன மனஸா
மஹாந்த: பச்யந்தோ தததி பரமாஹ்லாத-லஹரீம்

இந்த ஸ்லோகத்தில் குண்டலினீ யோகத்தில் ஸித்தி அடைந்தவர்களது நிலை சொல்லப்பட்டிருக்கிறது. மூலாதாரத்திலிருந்து படிப்படியாக மேலெழும்பிய குண்டலினீ சக்தியானது ஆக்ஞா சக்ரத்தில் மட்டும் அதிக நேரம் நிலைகொள்ளாது மின்னல் கொடி போல தோன்றி உடனடியாக க்ஷண நேரத்தில் மேலெழும்பி ஸஹஸ்ரார கமலத்தை அடைகிறதாம். காமம், மாயை போன்ற மலங்களை நீக்கி, சூர்ய சந்திரர்கள் போலவும் அக்னி, போன்றதுமான உனது கலையை சஹஸ்ராரத்தில் தியானிப்பவர்கள் பேராந்தமான அலைகளில் மூழ்கித் திளைப்பர் என்கிறார்.

இவ்வாறாக குண்டலினீ சஹஸ்ராரத்தில் சிவனுடன் சேர்ந்து ஐக்ய ஸ்வருபத்தில் நிலையாக குளிர்ந்து ப்ரகாசிப்பதை "ஸ்திர செளதாமினி" என்றும் க்ஷண நேரமே ஆக்ஞா சக்ரத்தில் இருப்பதால் "க்ஷண செளதாமினி" என்றும் இரு நாமங்களாக சஹஸ்ர நாமத்தில் கூறப்பட்டிருக்கிறது

தடித்-லேகா-தன்வீம் - மின்னல் போன்ற சூக்ஷ்மமான தேஜோரூபம் உடையதும்; தபன-சசி-வைச்வானர மயீம் - சூர்ய-சந்த்ர, அக்னி ஆகியவற்றில் ப்ரகாசிப்பதும். ஷண்ணாம் கமலானாம் அபி - ஆறு ஆராதாரங்களுக்கு மேலே; மஹாபத்ம அடவ்யாம் - தாமரை மலர்களாலான காடு போன்ற சஹஸ்ராரத்தில்; நிஷண்ணாம் - நிலையான;

பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம்
இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதி பவானி த்வமிதி ய:
ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்
முகுந்த-ப்ரஹ்மேந்த்ர-ஸ்புட மகுட நீராஜித பதாம்

ஈஸ்வரனுக்கு 'பவன்' என்று ஒரு பெயரிருக்கிறது, ஸ்ரீ ருத்ரத்தில் ''பவாயச ருத்ராயச' என்று வருகிறதே அதுதான். சிவனின் 8 பெயர்களில் முதல் பெயர் பவன். அந்த 8 பெயர்களாவன, பவன், சர்வன், ஈசானான், பசுபதி, ருத்ரன், உக்ரன், பீமன், மாஹாதேவன். இதில் ஸ்ருஷ்டிக்கு மூலமாக இருப்பவன் பவன். பவனுடைய சக்தி பவானி.

த்வம் - நீ; தாஸே மயி - தாஸனான என்னிடத்தில்; ஸகருணாம் - கருணையுடன் கூடிய; த்ருஷ்டிம் விதர - பார்வையைச் செலுத்துவாயாக. ஸ்தோதும் வாஞ்சன் - ப்ரார்த்தித்துக் கொள்ள ஆசைப்பட்டு; ததைவ - அப்போதே / உடனேயே; த்வம் - நீ; தஸ்மை - அவனுக்கு; நிஜ ஸாயுஜ்ய பதவி - நீயே ஆன சாயுஜ்ய பதவியினை (அதாவது அன்னையே சாயுஜ்யம் எனப்படுவதாம்); திசஸி - கொடுக்கிறாய்; முகுந்தன் என்றால் திருமால். ப்ரஹ்மேந்த்ர = ப்ரம்ஹ + இந்தர; ஸ்புட மகுட - ப்ரகாசமான க்ரீடம்; நீராஜனம் என்றால் நமக்கு தெரியும் கர்பூர நீராஜனம், புனர் நீராஜனம் என்றெல்லாம் சொல்கிறோமே, அதுதான்.

"பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம்" என்று சொல்லி அவள் கடாக்ஷத்தை ப்ரார்த்திக்க ஆசைப்பட்ட ஒருவன் இதில் முதல் இரண்டு சொற்களான 'பவானி த்வம்' என்று சொல்ல ஆரம்பித்த உடனேயே நீ அவனுக்கு, விஷ்ணு, ப்ரம்ஹா, இந்திரன் ஆகியோரின் க்ரீடங்களின் ஒளியால் தீபாராதனை செய்யப்பட்ட உனது பாதங்களைப் பெறும்படியான, உனதேயான ஸாயுஜ்ய பதவியைக் ஸாயுஜ்ய பதவியினை தந்தருளுகிறாய்" என்கிறார் இந்த ஸ்லோகத்தில்.

பரமாச்சார்யார் இது பற்றி சொல்லுகையில், இங்கே ஆச்சார்யார் சொல்லியிருப்பது ஞான வழியில் போய் நிர்குண ப்ரம்ஹத்தோடு ஐக்யமாகும் அத்வைத ஸாயுஜ்யம் இல்லை என்று கூறுகிறார். ஏனென்றால், அடுத்த வரி 'முகுந்த ப்ரஹ்மேந்த்ர ஸ்புட மகுட நீராஜித பதாம்' என்பதை காரணமாகச் சொல்கிறார். அம்பாளுடன் அவன் ஐக்ய சாயுஜ்யம் பெற்றுவிட்டால் அப்போது அவனுக்கே 'முகுந்த ப்ரஹ்மேந்த்ர' என்பதான தன்மை அவனுக்கே கிடைத்து விடுகிறது. ஆனால் அத்வைதத்தில் ஸாயுஜ்யம் அடையும் போது அங்கு மூர்த்தியே கிடையாது, பிறகு ஏது பாதங்கள், மகுடங்கள்?. நிர்குண தத்வம் என்பது மேலே சொன்ன பாடலில் இல்லை. எனவே இங்கே ஆதிசங்கரர் சொல்லியிருப்பது அத்வைத ஸாயுஜ்யம் இல்லை என்பார். இந்த ஸ்லோகமானது சர்வ ஸித்திகளையும் தரும் மந்த்ரம் என்றால் மிகையாகாது.

ஆனந்த லஹரி - 19 & 20



முகம் பிந்தும் க்ருத்வா குசயுக-மதஸ் தஸ்ய தததோ
ஹரார்த்தம் த்யாயேத் யோ ஹரமஹிஷி தே மன்மதகலாம்
ஸ ஸ்த்ய: ஸம்ஷோபம் நயதி வநிதா இத்யதிலகு
த்ரிலோகீ மப்யாஸு ப்ரமயதி ரவீந்து-ஸ்தநயுகாம்


பரமசிவனின் பட்டமஹிஷியே!, ஸ்ரீ சக்ர மத்தியிலுள்ள பிந்துவில் காமகலா ரூபிணியான உனது முகத்தையும், அவயவங்களையும் தியானம் செய்து கொண்டு காம கலையாகிய 'க்லீம்' என்னும் பீஜத்தை எவன் அவ்வயவங்களில் தியானம் செய்கிறானோ அவன் தனது காம சக்திகளைவசப்படும்படி செய்கிறான். இவ்வாறு காமகலா பீஜத்தை உபாசிப்பவன் சூர்ய-சந்திரர்களைப் போன்ற ஸ்தனங்களைக் கொண்ட முவுலகிலும் சிறந்த மடந்தையையும் கூட விரைவில் மயங்கச் செய்வான். இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்தால் ஸ்திரீ வசியம் நிச்சயம். ஏனென்றால் ஹரார்த்தம் என்பதில் 'ஹ' என்பது ஹம்ஸ: என்பதைக் குறிக்கிறது. ஹம்ஸ: என்பது மூன்று பிந்துக்களைக் குறிக்கும் மன்மதகலையாக கொள்ளப்பட்டிருக்கிறது. இவ்வாறு காமகலா த்யானம் செய்பவர் தேவியின் ஸ்வருபமாகவே ஆகிவிடுகிறான். இவனுக்கு முக்தி நிச்சயம் என்கிறது அருணா மோதினீ.

தஸ்ய அத: - அதற்கும் கீழே; குசயுகம் - ஸ்தனங்கள்; ததத: - அதற்கும் கீழே; வனிதா: - காம சக்தியின் ஒரு பெயர்; அதிலகு - மிக எளிது; ரவி-இந்து ஸ்தன-யுகாம் - சூர்ய சந்திரர்கள் போன்ற ஸ்தனங்கள்; த்ரிலோகீம் அபி - மூவ்வுலகத்திலும்.

கிரந்தீம்-அங்கேப்ய: கிரண-நிகுரும்பாம்ருதரஸம்
ஹ்ருதி-த்வாம் ஆதத்தே ஹிமகர-சிலா மூர்த்திம் இவ ய:
ஸ ஸ்ர்பாணாம் தர்பம் சமயதி ஸகுந்தாதிப இவ
ஜ்வர-ப்லுஷ்டாந் த்ருஷ்ட்யா ஸுகயதி ஸுதாதார ஸிரயா

அங்கங்களிலிருந்து கிரணக் கூட்டங்களாக அமுதச் சாற்றினை பெருக்குகின்ற சந்த்ரகாந்தக் கல்போன்ற உன்னை எவன் இதயத்தில் நிலைநிறுத்திக் கொள்கிறானோ அவன் புள்ளரசனைப்போல பாம்புகளின் வீர்யத்தை அடக்குகின்றான். அமுதமயமான நாடியுடன் அவன் பார்க்கும் பார்வையானது நோயுற்று ஜ்வரத்தால் பீடிக்கப்பட்டவனை நலமடையச் செய்யும்.

முன்னே 17ஆம் ஸ்லோகத்தில் அன்னையை சசிமணிசிலா என்று சந்த்ரகாந்த கல்லை உடைத்தாற்போல என்பதாக வர்ணித்தார். இங்கே 20ஆம் ஸ்லோகத்திலோ ஹிமகரசிலா என்கிறார். சசம் என்றால் முயல். சந்திரனில் தெரியும் கருப்பு நிறத்திட்டானது முயல் ரூபத்தில் இருக்கிறபடியால் சந்திரனுக்கே 'சசி' என்று பெயர். சாதாரணமாக சந்திரனிலிருந்துதான் அம்ருதமும் பனி ஜலமும் உருவாவதாக சொல்லப்படும். இந்த பனி ஜலத்தை உருவாக்குவதால் சந்த்ரனுக்கு ஸுதாகரன் என்ற நாமம் உண்டு. இன்றைய ஸுதாகர் என்னும் பெயர் இவ்வாறு வந்ததுதான். இந்த சந்திரன் பனி மலையினை உருவாக்குவதால் ஹிமகரன் என்றும் பெயர். ஹிமயமலை என்றால் பனிமலை என்றே பொருள். பனிமலை நிறத்தில் அன்னை என்பதை ஹிமகர-சிலா என்று கூறி அவளிடத்துப் பெருகும் அம்ருதரஸம் என்று ஆரம்பித்து ஸ்லோகத்தின் முடிவில் அவளை வழிபடுவதால் உபாசகனும் அம்ருதத்தை பெருக்குவதாக சொல்லி முடிக்கிறார். அதாவது சஹஸ்ராரத்தில் அன்னையை நிலை நிறுத்தி ஜபம் செய்கையில் உபாசகனுக்கு ஏற்படும் உணர்வினை அம்ருத ஊற்றாக உருவகப்படுத்துவது வழக்கம். அதை குறிப்பால் உணர்த்திச் செல்கிறார் ஆச்சார்யார்.

ரோக நிவாரணத்திற்காகச் சொல்லும் ஸ்லோகம் இது. முன்பு சொன்னது போல செளந்தர்ய லஹரி முழுவதுமே மந்த்ர சாஸ்த்ரமாகும். இதில் ஒவ்வொரு ச்லோகத்தையும் மந்த்ரமாக நினைத்து ஜபித்தால் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும். இந்த ஸ்லோகங்களுக்கான தனி-தனி சக்ரங்கள், த்யான, பாராயணாதி முறைகளை அறிந்து குருமுலமாக செய்ய வேண்டியது.