ஆனந்த லஹரி - 19 & 20



முகம் பிந்தும் க்ருத்வா குசயுக-மதஸ் தஸ்ய தததோ
ஹரார்த்தம் த்யாயேத் யோ ஹரமஹிஷி தே மன்மதகலாம்
ஸ ஸ்த்ய: ஸம்ஷோபம் நயதி வநிதா இத்யதிலகு
த்ரிலோகீ மப்யாஸு ப்ரமயதி ரவீந்து-ஸ்தநயுகாம்


பரமசிவனின் பட்டமஹிஷியே!, ஸ்ரீ சக்ர மத்தியிலுள்ள பிந்துவில் காமகலா ரூபிணியான உனது முகத்தையும், அவயவங்களையும் தியானம் செய்து கொண்டு காம கலையாகிய 'க்லீம்' என்னும் பீஜத்தை எவன் அவ்வயவங்களில் தியானம் செய்கிறானோ அவன் தனது காம சக்திகளைவசப்படும்படி செய்கிறான். இவ்வாறு காமகலா பீஜத்தை உபாசிப்பவன் சூர்ய-சந்திரர்களைப் போன்ற ஸ்தனங்களைக் கொண்ட முவுலகிலும் சிறந்த மடந்தையையும் கூட விரைவில் மயங்கச் செய்வான். இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்தால் ஸ்திரீ வசியம் நிச்சயம். ஏனென்றால் ஹரார்த்தம் என்பதில் 'ஹ' என்பது ஹம்ஸ: என்பதைக் குறிக்கிறது. ஹம்ஸ: என்பது மூன்று பிந்துக்களைக் குறிக்கும் மன்மதகலையாக கொள்ளப்பட்டிருக்கிறது. இவ்வாறு காமகலா த்யானம் செய்பவர் தேவியின் ஸ்வருபமாகவே ஆகிவிடுகிறான். இவனுக்கு முக்தி நிச்சயம் என்கிறது அருணா மோதினீ.

தஸ்ய அத: - அதற்கும் கீழே; குசயுகம் - ஸ்தனங்கள்; ததத: - அதற்கும் கீழே; வனிதா: - காம சக்தியின் ஒரு பெயர்; அதிலகு - மிக எளிது; ரவி-இந்து ஸ்தன-யுகாம் - சூர்ய சந்திரர்கள் போன்ற ஸ்தனங்கள்; த்ரிலோகீம் அபி - மூவ்வுலகத்திலும்.

கிரந்தீம்-அங்கேப்ய: கிரண-நிகுரும்பாம்ருதரஸம்
ஹ்ருதி-த்வாம் ஆதத்தே ஹிமகர-சிலா மூர்த்திம் இவ ய:
ஸ ஸ்ர்பாணாம் தர்பம் சமயதி ஸகுந்தாதிப இவ
ஜ்வர-ப்லுஷ்டாந் த்ருஷ்ட்யா ஸுகயதி ஸுதாதார ஸிரயா

அங்கங்களிலிருந்து கிரணக் கூட்டங்களாக அமுதச் சாற்றினை பெருக்குகின்ற சந்த்ரகாந்தக் கல்போன்ற உன்னை எவன் இதயத்தில் நிலைநிறுத்திக் கொள்கிறானோ அவன் புள்ளரசனைப்போல பாம்புகளின் வீர்யத்தை அடக்குகின்றான். அமுதமயமான நாடியுடன் அவன் பார்க்கும் பார்வையானது நோயுற்று ஜ்வரத்தால் பீடிக்கப்பட்டவனை நலமடையச் செய்யும்.

முன்னே 17ஆம் ஸ்லோகத்தில் அன்னையை சசிமணிசிலா என்று சந்த்ரகாந்த கல்லை உடைத்தாற்போல என்பதாக வர்ணித்தார். இங்கே 20ஆம் ஸ்லோகத்திலோ ஹிமகரசிலா என்கிறார். சசம் என்றால் முயல். சந்திரனில் தெரியும் கருப்பு நிறத்திட்டானது முயல் ரூபத்தில் இருக்கிறபடியால் சந்திரனுக்கே 'சசி' என்று பெயர். சாதாரணமாக சந்திரனிலிருந்துதான் அம்ருதமும் பனி ஜலமும் உருவாவதாக சொல்லப்படும். இந்த பனி ஜலத்தை உருவாக்குவதால் சந்த்ரனுக்கு ஸுதாகரன் என்ற நாமம் உண்டு. இன்றைய ஸுதாகர் என்னும் பெயர் இவ்வாறு வந்ததுதான். இந்த சந்திரன் பனி மலையினை உருவாக்குவதால் ஹிமகரன் என்றும் பெயர். ஹிமயமலை என்றால் பனிமலை என்றே பொருள். பனிமலை நிறத்தில் அன்னை என்பதை ஹிமகர-சிலா என்று கூறி அவளிடத்துப் பெருகும் அம்ருதரஸம் என்று ஆரம்பித்து ஸ்லோகத்தின் முடிவில் அவளை வழிபடுவதால் உபாசகனும் அம்ருதத்தை பெருக்குவதாக சொல்லி முடிக்கிறார். அதாவது சஹஸ்ராரத்தில் அன்னையை நிலை நிறுத்தி ஜபம் செய்கையில் உபாசகனுக்கு ஏற்படும் உணர்வினை அம்ருத ஊற்றாக உருவகப்படுத்துவது வழக்கம். அதை குறிப்பால் உணர்த்திச் செல்கிறார் ஆச்சார்யார்.

ரோக நிவாரணத்திற்காகச் சொல்லும் ஸ்லோகம் இது. முன்பு சொன்னது போல செளந்தர்ய லஹரி முழுவதுமே மந்த்ர சாஸ்த்ரமாகும். இதில் ஒவ்வொரு ச்லோகத்தையும் மந்த்ரமாக நினைத்து ஜபித்தால் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும். இந்த ஸ்லோகங்களுக்கான தனி-தனி சக்ரங்கள், த்யான, பாராயணாதி முறைகளை அறிந்து குருமுலமாக செய்ய வேண்டியது.

8 comments:

Geetha Sambasivam said...

இந்தப் பதிவின் விளக்கம் புதுமை, அருமை

ரசிகன் said...

அருமையான விளக்கங்கள். வாழ்த்துக்கள் தொடருங்க..:)

மெளலி (மதுரையம்பதி) said...

என்ன தலைவி,

படித்தமாதிரி தெரியல்லையே!!! :)

மெளலி (மதுரையம்பதி) said...

வாய்யா ரசிகன்....முதல் வருகைக்கு நன்றி...

Geetha Sambasivam said...

படித்தமாதிரி தெரியல்லையே!!! :)

athu sari, எதையும் கோட் பண்ணலைனா சரியா இருக்குனு அர்த்தம்,இல்லைனா பிடிச்சு ஒரு வாங்கு வாங்க மாட்டேன்? :P

ஷைலஜா said...

நானும் ரசித்தேன் .
ஸ்லோகம் கற்றுக்கொண்டு சொல்கிறேனே தவிர எல்லாவற்றிர்க்கும் அர்த்தம் தெரிவதில்லை ..இங்க படிச்சி தெளிந்தேன் நன்றி..

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க ஷைலஜா....உங்களது முதல் வரவு நல்வரவாகுக... :-)

ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் பொருள் தருவதாகத்தான் இந்தை ஆரம்பித்திருக்கிறேன்....நேரம் கிடைக்கையில் பழைய பதிவுகளையும் படிங்க.... :)

குமரன் (Kumaran) said...

சூரியனையும் சந்திரனையும் போன்ற ஸ்தனங்கள் என்ற உவமையை இன்று தான் கேள்விப் படுகிறேன்.