ஆனந்த லஹரி - 29 & 30




கிரீடம் வைரிஞ்சம் பரிஹர புர: கைடபபித:
கடோரே கோடீரே ஸ்கலஸி ஜஹி ஜம்பாரி மகுடம்
ப்ரணம் ரேஷ்வேதேக்ஷுப்ரஸப முபயாதஸ்ய பவநம்
பவஸ்யாப்யுத்தாநே தவ பரிஜநோக்திர் விஜயதே


சகல தேவதேவர்களுக்கும் தலைவியாக விளங்குபவள் பராசக்தி என்பதை குறிப்பதான ஸ்லோகம் இது. அன்னை தனது இருப்பிடத்தை நோக்கி வரும் பரமசிவனை எதிர் கொண்டழைப்பதற்காக தனது ஆசனத்தில் இருந்து எழுகிறாளாம். அப்போது அன்னையின் சேடிப் பெண்கள் சொல்வதை கவனித்தது போன்று அமைந்த பாடலின் பொருள் பின்வருமாறு. அம்மா, எதிரில் வைரிஞ்சம் என்னும் பிரும்மாவின் கிரீடம் இருக்கிறது அதில் இடித்துக் கொள்ளாமல், அதன் பக்கத்தில் இருக்கும் கைடபாசுரனைக் கொன்ற கடினமான கோடீரம் என்னும் மஹாவிஷ்ணுவின் கிரீடத்தை கடந்து, இந்திரனின் மகுடத்தை கடந்து வாருங்கள். என்பதன் மூலமாக ப்ரம்மா முதலிய தேவர்கள் அனைவரும் அன்னையை நமஸ்காரம் செய்யும் நேரத்தில் அவளை நோக்கி வரும் பரமசிவனை வரவேற்க்க எழும் போது உனது சேடிப் பெண்கள் கூறும் சிறப்பான வார்த்தைக்கள் ஒலிக்கிறது என்கிறார் சங்கரர்.

ஆச்சார்யாள் விஷ்ணு பாதாதி-கேச ஸ்தோத்திரம் என்று ஒன்று பண்ணியிருக்கிறார். அதில் ஒரு மஹாவிஷ்ணுவின் கிரீடம் பற்றி சொல்கையில் 'க்ருத-மகுட-மஹாதேவ-லிங்க-ப்ரதிஷ்டே' அப்படின்னு வரும். அதாவது தனது கிரீடத்தை லிங்க ரூபமாகவே வைத்துக் கொண்டிருக்கிறாராம். வீர சைவர்கள் மகிழ்ச்சிக்காக, விஷ்ணு, சிவலிங்கத்தை எப்போதும் தலையில் தாங்குகின்றார் என்றும் சொல்லலாம்.

தேவர்கள் அன்னையை எப்போதும் வணங்குபவர்கள் என்று 25ஆம் ஸ்லோகத்தில் சொல்லியிருக்கிறார். அதனை மறுக்கும்படியாக இங்கு தேவர்கள் வணங்கும் நேரத்தில் (ப்ரஸப முப்யாதஸ்ய) என்று வருகிறதே என்று நினைக்கலாம். இதைத்தான் அடுத்த வரியில் தெளிவாக்குகிறார். 'பவநம் பவஸ்யாப்யுத்தாநே - அதாவது பவன் என்கிற சிவன் உங்கள் க்ருஹத்திற்கு வரும்போது என்பதாக. உபயாதம் என்றால் திரும்பி வருதல். அதாவது அன்னையிடமிருந்து சென்ற சிவன் திரும்பி வரும் காலத்தில் என்று பொருள்.

இந்த ஸ்லோகத்தைப் பற்றி சொல்கையில் பரமாச்சார்யார் பின்வரும் செய்தியினையும் தொட்டு விளக்கியிருக்கிறார். 'பவஸ்யாப்யுத்தாநே' என்ற சொல்லை கவனிக்கையில் "அப்யுத்தாநம் அதர்மஸ்ய" என்கிற பதம் பலருக்கும் நினைவுக்கு வரலாம். கீதையில் 'யதா யதா ஹி.." என்கிற ஸ்லோகத்தில் வருவது. எப்போதெல்லாம் தர்மம் குறைந்து அதர்மத்திற்கு அப்யுத்தானம் நடக்கிறதோ அப்போதெல்லாம் நான் அவதரிக்கிறேன் என்று பொருள். அதாவது இந்த 29ஆம் ஸ்லோகத்தில் அப்யுத்தானம் என்றால் எழுந்து எதிர் கொண்டு அழைத்தல் என்பது பொருள். ஆனால் மேற்ச் சொன்ன கீதை ஸ்லோகத்தில் இந்த வார்த்தைக்கு இப்பொருளைக் கொண்டால், எப்போதெல்லாம் நாம் அதர்மத்தில் போகிறோமோ அப்போதெல்லாம் க்ருஷ்ணன் மீண்டும், மீண்டும் அவதாரம் பண்ணி, நம்மை எதிர் கொண்டு நல்-வழிப்படுத்துகிறான் என்று கொள்ளலாம். அதாவது தர்மத்தின் பக்கத்தில் இருந்து வருபவர்களை இறைவன் கவனிப்பதில்லையாம், ஆனால் அதர்மத்தின் பக்கம் இருந்து வருபவர்களை எதிர் கொண்டு அழைத்து அவர்களை நல்வழிப்படுத்துகிறானாம். ராவணன், ஹிரண்யகசிபு, கம்ஸன் போன்றோரின் அதர்மத்தால் தானே நமக்கு நாராயணனின் கோலாகலமான திரு அவதாரங்கள் கிடைத்தன.

வைரிஞ்சம் - பிரம்மாவின் கிரீடம்; பரிஹர - விலக்கிவிட்டு; கைடபபித: - கைடபனைக் கொன்ற; கடோரே - கடினமான; கோடீரே- கிரீடத்தில்; ஜம்பாரி - இந்திரனது கிரீடம்; ஜஹி - ஒதுக்கிவிட்டு; ப்ரணம்ரேஷு - நமஸ்காரம் செய்கையில்; உபயாதஸ்ய - திரும்பி வருதல்; பவஸ்ய - பரமசிவன்; ப்ரஸபம் - அவசரமாக; தவ- உன்; பரிஜன-உக்தி - சேடிப் பெண்கள்;


ஸ்வதேஹோத்பூதாபிர் க்ருணீபி-ரணிமாத்யாபி ரபிதோ
நிஷேவ்யே நித்யே த்வா மஹமிதி ஸதா பாவயதி ய:
கிமாஸ்சர்யம் தஸ்ய த்ரிநயன ஸ்ம்ருத்திம் த்ருணயதோ
மஹாஸ்ம்வர்த்தாக்நிர்-விரசயதி நீராஜந-விதிம்.


அம்மா! ஆதியந்தமில்லாத பரம்பொருளே, உன்னிடத்தின்று தோன்றிய அணிமா போன்ற சக்திகளால் சூழப்பட்டவளாக சேவிக்கப்படுபவளே. உன்னை தனது ஆத்மாவாக பாவித்து சிந்திப்பவனுக்கு சிவ ஸாயுஜ்ய பதவிகூட துரும்பென தோன்றுவதால் தானே உன்னை ஆத்மாவாக சிந்திப்பவனை ஊழித்தீ கூட மங்கள ஹாரத்தி காட்டி பூஜிக்கிறது. இதில் வியப்பென்ன?.

ஸ்வதேஹ-உத்பூதாபி - உடலில் இருந்து தோன்றிய; க்ருணிபி - கிரணங்கள்; அணிமாத்யாபி: - அணிமா போன்ற தேவதைகள்; நிஷேவ்யே- வணங்கத்தக்க; த்வம் - உன்னை; அஹம் இதி - தனது ஆத்மா என; பாவயதி - பாவிப்பவன்; த்ரிநயன ஸ்ம்ருத்திம் - சிவசாயுஜ்யம்; த்ருணயத - துரும்பென; மஹாஸம்வர்த்தாக்னி: - ப்ரளய/ஊழித் தீ; நீராஜன விதிம் - மங்கள ஹாரத்தி; விரசயதி - அனுஷ்டித்தல்; கிம் ஆச்சர்யம் - என்ன ஆச்சர்யம்.

14 comments:

Geetha Sambasivam said...

முதல்லே படம் அருமைனு சொல்லிடறேன், எங்கே இருந்து சுட்டீங்க படம்????

//அதாவது தனது கிரீடத்தை லிங்க ரூபமாகவே வைத்துக் கொண்டிருக்கிறாராம். வீர சைவர்கள் மகிழ்ச்சிக்காக, விஷ்ணு, சிவலிங்கத்தை எப்போதும் தலையில் தாங்குகின்றார் என்றும் சொல்லலாம்.//


அது சரி, இதிலே ஏதும் உ.கு. இருக்கோ???

திவாண்ணா said...

அரண்டவன் கண்......

:-)))))))))))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அதில் இடித்துக் கொள்ளாமல், அதன் பக்கத்தில் இருக்கும் கைடபாசுரனைக் கொன்ற கடினமான கோடீரம் என்னும் மஹாவிஷ்ணுவின் கிரீடத்தை கடந்து, இந்திரனின் மகுடத்தை கடந்து வாருங்கள்//

என்ன தான் மண்டபம் முழுதும் சீ வரிசைப் பொருட்கள் சூழ்ந்திருந்தாலும், சீர் வைக்கப்பட்ட பொருள்களின் அலங்காரம் கலையாமல் அல்லவோ மணப்பெண் வரவேண்டும்!

அப்படிச் சீதனமாக வைக்கப்பட்ட வரிசைப் பொருள் மகாவிஷ்ணுவின் கிரீடம். திருமுடியைக் காலால் மிதித்து விடலாகாது என்று அன்னை இடிக்காமல் ஒய்யாரமாக வருகிறாள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆச்சார்யாள் விஷ்ணு பாதாதி-கேச ஸ்தோத்திரம் என்று ஒன்று பண்ணியிருக்கிறார்//

திருமலை எம்பெருமானின் மேல் தானே அண்ணா?

//மஹாவிஷ்ணுவின் கிரீடம் பற்றி சொல்கையில் 'க்ருத-மகுட-மஹாதேவ-லிங்க-ப்ரதிஷ்டே' அப்படின்னு வரும்.
அதாவது தனது கிரீடத்தை லிங்க ரூபமாகவே வைத்துக் கொண்டிருக்கிறாராம். வீர சைவர்கள் மகிழ்ச்சிக்காக//

அடியோங்களின் மகிழ்ச்சிக்காகவும் கூடத் தான்! :)

சந்திரனை மட்டுமே மெளலியில் வைத்துள்ளான் ஈசன்!
ஆனால் அந்தச் சந்திரமெளலியையே மெளலியில் புனைந்து கொண்டல்லவோ அருள் பாலிக்கிறான் வேங்கடேசன்!

அப்பேர்ப்பட்ட மெளலியே இவன் மெளலியில் அடங்கிவிடுகிறான் போலும்! சந்திரமெளலி மெளலீஸ்வரன் என்றும் வேங்கடவனை அழைக்கலாம் போலிருக்கே! :)

ஈஸ்வரனே மகுடத்தை அலங்கரிப்பதால் வேங்கடேஸ்வரன் என்கிற ஈஸ்வர பட்டமும் சாலவும் பொருத்தமானதே! :)

pudugaithendral said...

ஆனந்த லஹரி சித்ர லஹரியாகவும் மகிழ்விக்கிறாள்,

உங்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது இத்தகைய சித்திரங்கள்.

வாழ்த்துக்கள்.

Kavinaya said...

அருமையான விளக்கங்களுக்கு நன்றி மௌலி.

ஆடிவெள்ளித் திருநாளில் அன்னையின் திருவடிகளில் பணிந்து கொள்கிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கீதாம்மா...

பட உபயம் கூகிளாண்டவர் தான்.

ஒரு குத்தும் இல்ல..என்னை யாரும் குமட்டுல குத்தாம இருந்தா போதாதா?

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கே.ஆர்.எஸ்.

//திருமலை எம்பெருமானின் மேல் தானே//

மன்னிக்கவும்...எந்த தலத்தில், எப்போது பாடினார் என்ற விபரம் எனக்கு தெரியாது.

மெளலி (மதுரையம்பதி) said...

//ஆனந்த லஹரி சித்ர லஹரியாகவும் மகிழ்விக்கிறாள்,

உங்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது இத்தகைய சித்திரங்கள்.//

வாங்க புதுகையக்கா..எல்லாம் கூகிளாண்டவர் உபயம். :)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கவிக்கா. நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

சிவலிங்கத்தை எப்போதும் தலையில் தாங்குகின்றார் என்றும் சொல்லலாம்

ஓ இதிலேருந்துதான் "" அவன் தலைலே தூக்கிவெச்சுண்டு கொண்டாடரான்"" என்ற வார்த்தையே வந்ததோ! சரி விஷ்ணு ஈஸ்வரன் கீரிடத்தை தலையில் வைப்பது இருக்கட்டும், காசியில் மரிப்பவர்கள் காதில் ஈஸ்வரன்"ராம ராம""என்று சொல்லி விஸா இல்லாமல் சொர்கத்துக்கு அனுப்புகிறாரே அதற்கு என்ன பதில்?.ச்ரி ராம ராமேதி ரமே ராமே மனோரமே""என்று ராமன் பெயரைத்தான் ஈஸ்வரன் சொல்லுகிறார்.எல்லாம் இங்குதான் சண்டை. பேசாமல் கோட்டூர்புரத்துக்கும் ஓட்டேரிக்கும் ஒரு இணைப்பு பாலம் போட்டால் சரியாகிவிடும்

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க திரச....

//இங்குதான் சண்டை.//

அச்சோ!, அப்படியா?. இங்க எந்த சண்டையும் நடந்த மாதிரி எனக்கு தெரியல்லையே? :)

//பேசாமல் கோட்டூர்புரத்துக்கும் ஓட்டேரிக்கும் ஒரு இணைப்பு பாலம் போட்டால் சரியாகிவிடும்//

புதசெவி....இந்த ரெண்டு இடங்களும் சென்னைல இருக்கு அப்படிங்கறதை தவிர இந்த இடங்கள் பற்றி வேற ஏதும் எனக்கு தெரியாது.

Geetha Sambasivam said...

//பேசாமல் கோட்டூர்புரத்துக்கும் ஓட்டேரிக்கும் ஒரு இணைப்பு பாலம் போட்டால் சரியாகிவிடும்//

TRC Sir,இப்படி இரண்டுக்கும் சம்மந்தமில்லாமல் முடிச்சுப் போட்டதை விளக்கவேண்டாமா?? எப்போப் பார்த்தாலும், ஓடி ஒளியறீங்க??? நாங்களும் பதிவுகள் எழுதறோம் சார், உங்க பதிவுக்குக் கூப்பிடாமலேயே வரோம்! நினைவு வச்சுக்குங்க! :P :P :P

குமரன் (Kumaran) said...

இரண்டு சுலோகங்களின் விளக்கங்களும் அருமை மௌலி. கீதையின் சுலோகத்திற்குக் கிடைத்த புதிய விளக்கமும் நன்று. :-)

அன்னையை தானென எண்ணி உபாசித்தால் சிவ சாயுஜ்யமும் மதிப்பிழந்து போகும் என்றால் அன்னையின் சாயுஜ்யம் கிடைக்கும் என்று பொருளோ? பிரளயாக்னி நீராசன தீபம் என்ற உவமை அழகாக இருக்கிறது.