ஆனந்த லஹரி - 31 & 32

சது: ஷஷ்ட்யா தந்த்ரை: ஸகல-மதிஸ்ந்தர்ய புவனம்
ஸ்திதஸ் தத்தத்-ஸித்தி-ப்ரஸ்வ-பரதந்த்ரை: பசுபதி:
புனஸ்-த்வந்நிர்ப்பந்தா-தகில புருஷார்த்தைக கடனா
ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதிதல-மவதீதர-திதம்


அம்மா!, பரமசிவன் பலவிதமான ஸித்திகளைத் தரக்கூடிய 64 தந்திர சாஸ்திரங்களை உலகிற்கு காண்பித்துவிட்டு விட்டுவிட்டார். ஆனால் உனது நிர்பந்தத்தால் அவரே அந்த 64 தந்திரங்களாலும் அடையக் கூடிய பிறவிப் பயன்களை ஒருங்கே தரவல்ல பஞ்சதசீ என்னும் உன்னுடைய மந்திர-தந்திர சாஸ்திரத்தையும், உபாசனா முறையையும் இவ்வுலகிற்கு அளித்தார்.

இந்த ஸ்லோகத்திலும், அடுத்த ஸ்லோகத்திலும் பஞ்சதசாக்ஷரீ என்னும் ஸ்ரீவித்யா மூல மந்திரத்தை பற்றிச் சொல்கிறார். அதாவது 64 தந்திர சாஸ்திரங்களையும் ஒருங்கே தரவல்லது அம்பிகையின் பஞ்சதசாக்ஷரீ மந்திரம் என்பதாக பொருள். 64 என்பது மிகுந்த சிறப்பானது. இந்த எண்ணானது ஈசனின் திருவிளையாடல்களையும், ஆய-கலைகளையுன் நினைவுக்கு கொண்டு வருவதும். இவை எல்லாம் சமயாசாரத்தில் சொல்லப்பட்ட 64 தந்திரங்களை குறிப்பிடுபவையே!. இவை 8-8 (!!!) ஆக பிரிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர சுபாகம பஞ்சகம் என்று வசிஷ்ட்டர்,சுகர், ஸநகர், ஸநந்தனர், ஸநத்குமாரர் ஆகிய ஐந்து பேரும் எழுதிய முறை ஒன்றும் இருக்கிறது, இதுவே க்ருஹஸ்தர்கள் அனுஷ்டிக்கத் தகுந்தது.

சது: ஷஷ்ட்யா - 64; தந்த்ரை - தந்திர சாஸ்திரம்; புவனம் - உலகம்; ஸகல - எல்லா; அதிஸ்ந்தாய - நிரப்பிவிட்டு; புன: மேலும்; த்வத்-நிர்ப்பந்தாத் - உன் கட்டாயத்தால்; அகில-புருஷார்த்த-ஏக-கடனா - எல்லா புருஷார்த்தங்களையும் (அறம்-பொருள்-இன்பம்-வீடு); ஸ்வதந்த்ரம்- தரவல்ல; தே தந்த்ரம் - உன் தந்திரம்; இதம் - இந்த; க்ஷிதிதலம் -பூவுலகில்; அவாதீதர - அவதரிக்க


சிவ: சக்தி: காம: க்ஷிதி-ரத ரவி: சீதகிரண:
ஸ்மரோ ஹம்ஸ: சக்ரஸ்-ததனு ச பரா-மார ஹரய:
அமீ ருல்லேகாபிஸ்-திஸ்ருபி-ரவாஸானேக்ஷு கடிதா
பஜந்தே-வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம்

இந்த ஸ்லோகத்தில் ஸ்ரீ பஞ்சதசாக்ஷரீ என்று கூறப்படும் மந்த்ரத்தின் அக்ஷரங்களை ரகஸியமாக விளக்குகிறார். எப்படி காயத்ரி மந்திரம் போன்றவை குரு முகமாக உபதேசம் செய்து கொள்ளல் அவசியமோ அது போன்றே இந்த மந்திரங்களும் குருமுகமாகவே உபதேசம் பெற்ற பின்னரே ஜபிக்க வேண்டும். இந்த பதினைந்தில் இருக்கும் அக்ஷரங்களாவது, சிவன், சக்தி, பிருத்வீ, சூர்ய, சந்திர, ஆகாச, இந்த்ர, ஹரி, பரா என்றவற்றுக்கான 9 பீஜங்களும், மன்மதனுக்கான 3 பீஜாக்ஷரங்களும், ஒவ்வொரு கூடத்தின் முடிவில் ஒரு புவனேஸ்வரி பீஜமாக மூன்று பீஜங்களைச் சேர்த்து வரும் 15 கலைகள்/அக்ஷரங்களே பஞ்சதசாக்ஷரீ. இவ்வாறாக மூன்று கூடங்களைக் கொண்டதாக இருந்தாலும் இத்துடன் ரமா பீஜத்தையும் சேர்த்து சொல்வதாலேயே மந்திரம் பரிபூர்ணம் அடைகிறது என்று லக்ஷ்மீதரர் சொல்லியிருக்கிறார்.

இந்த மந்திரமானது, ஹாதி வித்யா, மஹாவித்யா, துர்வாச வித்யா, லோபாமுத்ரா வித்யா, காதி வித்யா என்று பல ரிஷிகளின் பிரயோக முறையினை வைத்து சற்றே வேறுபடும். குருமுகமாக எது நமக்கு கிடைக்கிறதோ அதுவே தொடர்ந்து ஜபிக்க உகந்தது. ஆனந்த லஹரி பகுதியில் மிக முக்கியமான இரண்டு மந்த்ரார்த்தமான ஸ்லோகங்கள் என்றால் அது இந்த ஸ்லோகமும் அடுத்து வரும் ஸ்லோகமும் தான். பின்னர் செளந்தர்ய லஹரியில் நாம் பார்க்க இருக்கும் அன்னையின் செளந்தர்ய ரூபத்தை ப்ரத்யக்ஷமாக உணரச் செய்வது இந்த இரு ஸ்லோகங்களே என்று பரமாச்சார்யார் சொல்லியிருக்கிறார்.

3 comments:

Anonymous said...

அண்ணா,
உங்கள் பதிவுக்கு வரும் போது பல நல்ல விஷயஙகள் நினைவிற்கு வருகிறது.ஸ்ரீ வித்யா உபாசனையில் ஒரு ப்ரயோகத்தில் இஞ்சி ஆவாகன தீபத்துடன் வைக்கப்படும்.மலயாள ப்ரயோகமான இதன் தாட்பர்யம் இஞ்சி எவ்வளவு நாள் ஆனாலும் அதன் குணம் மாறாமல் இருக்கும் அது போல் சாதகன் எப்பேர்பட்ட சூழ்னிலையிலும் அவள் மீது கொண்ட நம்பிக்கை மாறமல் இருக்க வேண்டும் என்பதே ஆகும்.அதே போன்ற வைராக்யத்தை அவள் அளிப்பாள்.

By,
தம்பி

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பஞ்சதசாக்ஷரீ பற்றிய நல்ல பதிவுக்கு நன்றி மெளலி அண்ணா!

திவாண்ணா said...

//இஞ்சி எவ்வளவு நாள் ஆனாலும் அதன் குணம் மாறாமல் இருக்கும் அது போல் சாதகன் எப்பேர்பட்ட சூழ்னிலையிலும் அவள் மீது கொண்ட நம்பிக்கை மாறமல் இருக்க வேண்டும் என்பதே ஆகும்.அதே போன்ற வைராக்யத்தை அவள் அளிப்பாள்.//

ஆஹா! நன்றி தம்பி!