
ரணே ஜித்வா தைத்யா-னபஹ்ருத-சிரஸ்த்ரை: கவசிபி:
நிவ்ருத்தைச் சண்டாம்ச-த்ரிபுரஹர-நிர்மால்ய-விமுகை:
விசாகேந்த்ரோ-பேந்த்ரை: சசிவிசத-கர்ப்பூரசகலா
விலீயந்தே மாதஸ்தவ வதன-தாம்பூல-கபலா
தாயே!, அசுரர்களுடன் போரில் ஈடுபட்டு, அவர்களை வென்று திரும்பிய விசாகன் என்று சொல்லப்படும் தேவஸேனாபதியான ஸுப்ரமண்யரும், இந்த்ர, உப-இந்திரரும் தாங்கள் போரில் ஜெயம் அடைந்ததை உனக்குத் தெரிவிப்பதற்காக போர்களத்திலிருந்து நேராக உன்னிடம் வந்து தங்கள் கவசத்துடனும், தலைப்பாகையை கழற்றியவாறும் உன்னை நமஸ்கரிக்கின்றனர். இவர்கள் சண்டிகேஸ்வரனுடைய பாகமாகிய பரமசிவனது நிர்மால்யத்தில் நோக்கம் இல்லாதவர்களானாலும், சந்திரன் போன்ற நிறமுடைய பச்சைக் கர்பூரத்துடன் கூடிய உன்னுடைய வாயில் மெல்லப்பட்ட தாம்பூலக் கவளங்களை பிரஸாதமாகக் கொள்கின்றனர்.
சிவனுடைய நிர்மால்யம் (சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட புஷ்பம், தாம்பூலம், மற்றும் உணவுப் பதார்த்தங்களில் அவர் எடுத்துக் கொண்டது போக மீதி) அவரது ப்ரமத கணங்களில் முதலாவதான சண்டன் என்பவனுக்குச்சொந்தமானது. இதனால்தான் சிவன் சொத்துக் குல நாசம் என்று கூறுகிறார்கள். சிவ பூஜையில் சண்டேஸ்வரருக்கு சிறப்பிடம் உண்டு. சண்டேசரது அனுமதி பெற்றே சிவ பிரஸாதம் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறான சணடேசருக்குச்சொந்தமானதில் ஸுப்ரமண்யர், விஷ்ணு மற்றும் இந்திரன் விருப்பம் காண்பிக்கவில்லையாம். உபேந்திரர் என்பது மஹாவிஷ்ணுவின் பெயர். தேவர்களின் ஸேனாபதியாக விசாகன் இருப்பதால் அவரது பெயரை முதலில் சொல்லியிருக்கிறார்.
மாத: - தாயே!, ரணே - போரில்; தைத்யான் - அசுரர்கள்; ஜித்வா - வென்று; நிவ்ருத்தை: - திரும்பியவர்கள்; அபஹ்ருத-சிரஸ்த்ரை: - தலைப்பாகை இல்லாதவர்கள்; கவசிபி: - கவசமணிந்தவர்கள்; சண்டாம்ச - சண்டிகேஸ்வரனுடைய பாகமான; த்ரிபுரஹர நிர்மால்ய - பரமசிவனது நிர்மால்யம்; விமுகை: - விருப்பமின்மை; விசாக-இந்த்ர-உபேந்த்ர - விசாக நக்ஷத்திரத்தில் பிறந்த ஸுப்ரமண்யன், இந்திரன், உபேந்திரன் என்று கூறப்படும் மஹாவிஷ்ணு; சசி விசத - சந்திரன் போன்ற வெண்மையான; கர்ப்பூரசகலா - பச்சைக் கர்பூரத்துடன் கூடிய; தவ - உன்னுடைய; வதன தாம்பூல கபலா - வாயில் மெல்லப்பட்ட தாம்பூல கவளங்கள்; விலீயந்தே - உட்கொள்ளுதல்.
கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!
அற்றையருட் கிவசேடஞ் சண்டனுண
அது பொறா தாவல் தீரக்
கற்றைமலர்க் குழலுமைநின் கருப்பூரச
கலமதிச் சகலம் போல
உற்றதிருத் தம்பலத்து னொருசகல
மேனுமினி துண்டு வாழப்
பெற்றிலரேல் அமரரெனும் பெயர்பெரவும்
இருந்தனரோ பிழைப்பில் விண்ணோர்.
விபஞ்ச்யா காயந்தீ விவித-மபதாநம் பசுபதேஸ்
வயாரப்தே வக்தும் சலிதசிரஸ ஸாது-வசனே
ததீயைர்-மாதுர்யை-ரபலபித-தந்த்ரீ-கலரவாம்
நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேன நிப்ருதாம்அம்மா, உன்னுடைய பதியான பரமசிவனது லீலா வினோதங்களை சரஸ்வதி வீணையில் பாடிக் கொண்டிருக்கும்போது அதனைக் கேட்டு சந்தோஷமடைந்து அதைப் பாராட்டுகையில், உனது குரலினிமையானது சரஸ்வதியின் யாழிசையைப்பழிக்கும் அளவு இனிமையாக இருந்ததால், சரஸ்வதி வெட்கமடைந்து தனது யாழை உறையிட்டு வெளியே தெரியாதபடி மூடிவிடுகிறாள்.
அம்பிகையின் குரலானது வாக்தேவதையின் வீணையிசையை விட இனிமையானது என்கிறார் பகவத்பாதர். தீந்தமிழிலும் 'யாழைப் பழித்த மொழியாள்' என்று அன்னையைப் போற்றும் பெயர் இருப்பதைக் காணலாம். அன்னைக்கு தனது பதியின்லீலைகளைக் கேட்பதில் விருப்பம் அதிகம் என்பதை 64ம் ஸ்லோகத்தில் பார்த்தோம். இதனை அறிந்த சரஸ்வதி தேவி ஈசனது லீலைகளான த்ரிபுரசம்ஹாரம், தக்ஷயாக த்வம்ஸனம், ஹாலாஹல தாரணம், கஜாசுர வதம் போன்றவற்றை தனதுவீணையிசையில் பாடியதாகச் சொல்லியிருக்கிறார்.
சரஸ்வதியின் கையில் இருக்கும் வீணையின் பெயர் "கச்சபீ" என்பது. சஹஸ்ரநாமத்தில், 'நிஜஸல்லாப மாதுர்ய வினிர்பர்த்ஸித கச்சபீ' என்னும் நாமமும் கச்சபீ விணையின் நாதத்தை தோற்கடிக்கும் குரலினிமை உடையவள் என்றே சொல்கிறது.
பசுபதே: - பரமசிவனுடைய; விவிதம் அபதாநம் - நானாவிதமான லீலைகளை; விபஞ்ச்யா - வீணையால்; காயந்தீ - பாடிக் கொண்டிருக்கும்; வாணீ - சரஸ்வதி தேவி; சலித சிரஸா - மகிழ்ச்சியில் தலையசைத்த; த்வயா - உன்னால்ஸாது வசநே - ஏற்க்கும்படியான வார்த்தைகளை; லக்தும் ஆராப்தே - சொல்ல ஆரம்பிக்கும் போது; ததீயை: மாதுர்யை வாக்கின் இனிமையில்; அபலபித தந்த்ரீஇ கலரவாம் - பரிஹாஸம் ப்ண்ணப்பட்ட தந்திகளுடைய ஸ்வரத்தோடு கூடிய ;நிஜாம் வீணாம் - தன்னுடைய வீணையை; சோளேந - உறையில்; நிப்ருதம் - வெளியில் தெரியாது மறைத்து; நிசுளயதி - மூடி விடுதல்.
கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!
பசுத்தமலர்க் கொடிகருணை பழுத்தனைய
கொம்பேநின் பரமர் பொற்றோள்
விசைத்தொழிலைக் கலைவாணி தனிற்பாடிப்
பாடியவண் மெலிவ தல்லால்
அசைத்திலர்பொன் முடியுனது மதுரமொழிக்
கசைத்தனரென் றதற்கு நாணி
இசைத் தொழிலைக் கைவிட்டாள் எழில்வீணை
உறையிலிட்டா ளேது செய்வாள்.