செளந்தர்யலஹரி 67 & 68


கராக்ரேண ஸ்ப்ருஷ்டம் துஹிநகிரிணா வத்ஸலதயா கிரீசேனோதஸ்தம் முஹுரதரபானாகுல தயா
கரக்ராஹ்யம் சம்போர் முகமுகுரவ்ருந்தம் கிரிஸுதே
கதங்காரம் ப்ரூமஸ்-தவ சுபுக-மெளபம்ய ரஹிதம்



தாயே!, உன்னிடம் வாத்ஸல்யமுள்ள ஹிமவானால் தன் கைவிரல்களின் நுனியில் தொடப்பட்டதும், உன்னுடைய அதரத்தைப் பானம் பண்ணுகிறதில் ஆசையுள்ள உன் புருஷனான பரமசிவனால் அடிக்கடி உயரே தூக்கப்பட்டதும், அவருடைய கைக்கு அடங்கியதும்,ஸமமாகச் சொல்லக்கூடியது ஏதும் இல்லாததும், உனது முகம் என்னும் கண்ணாடிக்குக் கைப்பிடிக் காம்பு போன்றதுமான உன்னுடைய முகவாய்க்கட்டையை நாங்கள் எப்படி வர்ணிக்க முடியும்?.

அன்பு/ப்ரியம் என்பது ஒவ்வொருவரது உறவின் மூலம் பல பெயர்களில் கூறப்படுகிறது. தாய்-தந்தை தனது குழந்தையிடம் கொண்டிருப்பது வாத்ஸல்யம் என்பர், இதே போல கணவன் தனது மனையாளிடம் கொண்டிருப்பது ப்ரேமை என்றும், சிஷ்யன் தனது குருவிடம் கொண்டிருப்பது பக்தியென்றும், குரு தமது சிஷ்யர்களிடம் கொண்டிருப்பது அனுக்ரஹமென்றும் கூறுவர். இந்த ஸ்லோகத்தில், பராம்பிக்கைக்கு ஹிமவான் தந்தையானதால் [பார்வதி அவதாரம்] வாத்ஸல்யமும், பரமசிவ பத்னி என்பதால் ஈஸ்வரனுக்கு அன்னையிடம் இருப்பது ப்ரேமை என்றும் ஆசார்யார் கூறுகிறார்.

இன்றும் சிறிய முகம் பார்க்கும் கண்ணாடிகள் கைபிடியுடன் இருப்பதைப் பார்க்கிறோம். அது போலவே அன்னையின் முகமென்னும் கண்ணாடிக்கு கைப்பிடியாக இருக்கிறதாம் அன்னையின் முகவாய்க்கட்டை. 'அனாகலித ஸாத்ருச்ய சுபுகஸ்ரீவிரஜிதா' என்று லலிதா சஹஸ்ர நாமத்தில் வருவதன் பொருளானது அம்பிகையின் முகவாய்கட்டுக்கு இணையாக வர்ணிக்க ஏதுமில்லை என்பதே.

துஹிந கிரிணா - உன் பிதாவான ஹிமவானால்; வத்ஸலதயா - குழந்தையிடத்து வாத்ஸல்யம்/அன்பு; கராக்ரேண - கை விரல் நுணியால்; ஸ்ப்ருஷ்டம் - தொடப்பட்டதும்; கிரிசேந - உன் புருஷனான பரமசிவனால்; அதர-பான-குலதயா - அதரபானம்பண்ணுவதிலேயே அதிக ப்ரேமையுடவரான; முஹு: - அடிக்கடி; உதஸ்தம் - உயரத் தூக்கப்பட்டதும்; சம்போ: - அவருடைய - பரமசிவனுடைய; கரக்ராஹ்யம் - கையால் பிடிக்கத் தகுந்ததும்; ஒளபம்ய ரஹிதம் - உபமானமில்லாத/நிகரற்ற;முக முகுர வ்ருந்தம் - முகமாகிற கண்ணாடிக்குக் காம்பு/பிடி போன்ற; தவ சுபுகம் - உன் முகவாய்க்கட்டையை; கதம்காரம் ப்ரூம: எப்படி வர்ணிப்போம்.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!


மகவாசை யாலிமைய மலையரையன்
மலர்க்கைதொட மனத்து ளன்பு
புகாஅசை யாலிறைவன் கரத்தேந்தப்
பொலிவுறுநின் சுபுகம் போற்றின்
முகவாசி அரன்படிமக் கலம்பார்க்க
விட்டமுகிழ்க் காம்பு போலுஞ்
சகவாழ்வை இகழ்ந்திதயந் தனித்தவர்தந்
தவக்கொழுந்து தழைத்த கொம்பே.







புஜாச்லேஷாந்-நித்யம் புர-தமயிது: கண்டகவதீ
தவ க்ரீவா தத்தே முககமலநால-ச்ரிய-மியம்
ஸ்வத: ச்வேதா காலாகரு-பஹுல-ஜம்பால-மலினா
ம்ருணலீ-லாலித்யம் வஹதி யததோ ஹாரலதிகா


அம்பிகே!, பரமசிவன் உன்னை எப்போதும் ஆலிங்கனம் செய்வதினால் ஏற்படும் மயிர்க்கூச்சத்தால் உன் கழுத்துப் பகுதி முள்ளு-முள்ளாக இருக்கிறது. இவ்வாறான உனது கழுத்துப் பிரதேசம், உனது முகமாகிய தாமரைக்குத் தண்டு போன்று தோற்றம் தருகிறது.கழுத்தில் அணிந்திருக்கும் முத்து ஹாரம் வெண்மையானாலும், உனது கழுத்தில் பூசப்பட்டிருக்கும் கருத்த அகில் கலந்த சந்தனக் குழம்பின் மிகுதியால் சேற்றில் இருக்கும் தாமரைக் கொடியைப் போன்றதாக இருக்கிறது.

அன்னையின் முகத்தை தாமரைப் புஷ்பத்திற்கும், கழுத்தை தாமரைத் தண்டாகவும் சொல்லி தாமரைத் தண்டில் இருக்கும் சிறு முள்ளுகள் போல ஈசனது ஆலிங்கனத்தால் அன்னையின் கழுத்தில் உள்ள மயிர்கால்கள் கூச்செரிதலுடன் காணப்படுவதாகச் சொல்கிறார்.தாமரை, தண்டு ஆகியவற்றை அன்னையின் முகம், கழுத்துக்கு உவமையாக்கி, பின்னர் தாமரைக் கொடிக்கு உவமையாக அன்னையின் கழுத்தில் விளங்கும் முத்தாலான ஹாரத்தைச் சொல்கிறார். முத்து மாலை வெண்மை நிறமுடையது என்றாலும் அன்னையின்கழுத்தில் இருக்கும் அகிலுடன் கூடிய சந்தனக் குழம்பில் புரள்வதால் தனது வெண்மையை இழந்து தாமரைக் கொடி போல காணப்படுவதாகச் சொல்கிறார்.

தவ - உன்னுடைய; க்ரீவா - கழுத்து; புரதமயிது: - முப்புரமெரித்த சிவனது; புஜாச்லேஷாத் - புஜங்களின் தழுவுதலால்; நித்யம் - எப்போதும்; கண்டகவதீ - மயிர்க் கூச்செரிந்து முள்ளுகள் போல; முக-கமல-நால-ச்ரியம் - முகத்தாமரைக்குக் காம்புபோன்ற அழகை; தத்தே - அடைகிறது; யத் அத: - அதன் கீழே; ஹார-லதிகா - முத்து மாலை; ஸ்வத: - இயற்கையில்; ச்வேத: - வெண்மையாக; காலாகரு - கருமையான அகிலுடன் சேர்ந்த; பஹுல-ஜம்பால - சந்தன குழம்பினால்; மலினா - சேற்றில்;ம்ருணாலீ - தாமரைக் கொடியின்; லாலித்யம் - பொலிவை; வஹதி - கொண்டதாக இருக்கிறது.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!

வயங்குறுநின் தரளவட மான்மதச்சே
றளையமது மத்தர் மேனி
முயங்குதொறும் எழுபுளக முட்பொதிந்த
பசுங்கழுத்து முகமுங் கண்டால்
இயங்குபுனற் கருஞ்சேற்றின் எழும்வலய
முள்ளரைத்தா ளீன்ற கஞ்சம்
பயம்புகுதல் கடனன்றோ மாற்றிலாப்
பசுமையொளி பழுத்த பொன்னே.

3 comments:

jeevagv said...

அருமையாக இருந்தது மௌலி சார்!

புஷ்ப பாண ஹஸ்தே நமஸ்தே!
நமஸ்தே ஜகதேக மாதஹா!

குமரன் (Kumaran) said...

கவிராச பண்டிதரின் பாடல்கள் பதம் பிரித்துப் பொருளுடன்:

மகவு ஆசையால் இமையமலை அரையன்
மலர்க்கை தொட மனத்துள் அன்பு
புக ஆசையால் இறைவன் கரத்து ஏந்தப்
பொலிவுறு நின் சுபுகம் போற்றின்
முகவாசி அரன் படிமக்கலம் பார்க்க
விட்ட முகிழ்க்காம்பு போலும்
சகவாழ்வை இகழ்ந்து இதயம் தனித்தவர் தம்
தவக்கொழுந்து தழைத்த கொம்பே

பிள்ளைப்பாசத்தால் இமயமலை அரசன் மலர்க்கையால் தொட, மனத்துள் அன்பு புக ஆசையால் இறைவன் தன் கரத்தில் ஏந்த, ஒளிவீசும் நின் சுபுகம் போற்ற வேண்டும் என்றால் அரனாகிய சிவபெருமான் தன் பிரதிபலிப்பைப் பார்க்கும் கண்ணாடியின் முகிழ்க்காம்பு போல் இருக்கிறது. உலக வாழ்க்கையை இகழ்ந்து இதயத்தைத் தவத்தில் ஈடுபடுத்தியவர்களின் தவத்தின் பயனாக விளங்கும் அன்னையே.

வயங்குறு நின் தரளவட மான் மதச்சேறு
அளைய மதுமத்தர் மேனி
முயங்குதொறும் எழு புளகம் உட்பொதிந்த
பசுங்கழுத்து முகமும் கண்டால்
இயங்குபுனல் கருஞ்சேற்றில் எழும் வலய
முள்ளரைத்தாள் ஈன்ற கஞ்சம்
பயம் புகுதல் கடனன்றோ மாற்றிலாப்
பசுமையொளி பழுத்த பொன்னே

தவழும் உனது முத்து மாலை கஸ்தூரிச்சேற்றில் அசைய, மதுவை உண்டு மயங்கியவர் போல் உன்னவர் உன் திருமேனியைத் தழுவும் போதெல்லாம் எழுகின்ற புல்லரிப்பை உடைய பசிய உன் கழுத்தையும் முகத்தையும் கண்டால் - அசையும் நீரையை உடைய கரிய சேற்றில் விளையும் வட்டவடிவமான முள்ளினையுடைய காம்புகள் ஈன்ற தாமரை பயந்து போவது இயற்கையன்றோ உவமையில்லாத பச்சை ஒளி கொண்ட சிறந்த பொன் போன்றவளே.

Kavinaya said...

வெகு அழகு. என்னவொரு வர்ணனை! சமஸ்கிருதம் தெரியாத என் போன்றவரும் அனுபவித்துப் படிக்க ஏதுவாக பொருள் சொல்லி தருவதற்கு மிக்க நன்றி மௌலி.

குமரா, நீங்களும் ஒவ்வொரு முறையும் கவிராச பண்டிதரின் பாடல்களைப் பதம் பிரித்து பொருள் தருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மீண்டும் நன்றி.