கலே ரேகாஸ்திஸ்ரோ கதி-கமக-கீதைக நிபுணே
விவாஹ-வ்யாநத்த-ப்ரகுணகுண ஸங்க்யா ப்ரதிபுவ:
விராஜந்தே நானாவித-மதுர-ராகாகர-புவாம்
த்ரயாணாம் க்ரமாணாம் ஸ்திதி-நியம ஸீமான இவதே
ஸங்கீதத்தில் இருக்கும் கதி, கமகம் மற்றும் கீதத்தில் நிபுணியான தாயே!, உன்னுடைய கழுத்தில் இருக்கும் மூன்று ரேகைகளானது உன்னைப் பரமசிவன் விவாஹம் செய்து கொண்டபோது அவரால் கட்டப்பட்ட கண்ட ஸுத்ரத்தின் அடையாளம் போலும். உனது கண்டத்திலிருந்து வரும் ஸங்கீதத்திற்கு ஆதாரமான மூன்று ஸ்ருதிகளுடைய லக்ஷ்ணங்களை காட்டும் எல்லையைப் போன்று விளங்குகிறது.
இந்த ஸ்லோகத்தில் அம்பிகையின் கழுத்தில் இருக்கும் மூன்று வரிகளை வர்ணித்திருக்கிறார் ஆசார்யார். விவாஹ காலத்தில் மாங்கல்ய தாரணம் என்று சொல்லப்படும் திருமாங்கல்யக் கயிறானது முப்பிரிகளால் ஆனது. அன்னையின் கழுத்தில் இருக்கும் மூன்று ரேகைகள் பரமசிவன் கட்டிய மாங்கல்யத்தைச் சுட்டுவதாக இருக்கிறது என்கிறார். ஸாமுத்ரிகா லக்ஷணத்தின்படி உத்தம ஸ்த்ரீ மற்றும் புருஷர்களுடைய நெற்றி, கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் மூன்று கோடுகள்/ரேகைகள் இருக்குமாம். அந்த த்ரிவளீ எனப்படும் ரேகைகள் அம்பாளுடையகழுத்தில் ஸ்திரமாக இருந்து அன்னையின் குரலிசையில் பிறக்கும் ஸங்கீத சாஸ்திரத்தின் ஆதாரமான க்ராமங்களின் எல்லைகளை காட்டுகிறது என்கிறார். ஸங்கீத ஸ்வரங்களைத் தொகுப்பதில் அவைகளை ஷ்ட்ஜ, மத்யம, மற்றும் காந்தாரக் க்ரமங்களாகச் சொல்கிறார்கள். இதில் முதல் இரண்டு க்ராமங்கள் தான் தற்போது பிரயோகத்தில் இருப்பது, மூன்றாவது தேவலோகத்தைல் மட்டுமே புழக்கத்தில் இருப்பதாச் சொல்லப்படுகிறது. இங்கே க்ராமங்கள் என்பது நமது ஸ்வரங்கள் அல்ல. அவை க்ராமங்கள் என்பவை ஸ்வரத்திற்கும் மூலமானவை என்றே தோன்றுகிறது.
கதி-கமக-கீதைக நிபுணே - ஸங்கீதத்தில் ப்ரதான்யமான கதி, கமகம் மற்றும் கீதங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவளே; தே களே - உன் கழுத்திலுள்ள; திஸ்ரோ ரேகா - மூன்று மடிப்புகள்/வரிகள்; விவாஹ வ்யாநத்த ப்ரகுண - விவாஹத்தில் கட்டப்பட்ட சரடான ஸுத்த்ரத்தின்;குண ஸங்க்யா ப்ரதி புவ: - சரடுகளின் எண்ணிக்கையை நினைவுபடுத்தும்; நாநாவித - பலவிதமான; மதுர ராகாகர புவாம் - இனிமையான ராகங்களுக்கு உற்பத்தியிடமாகிற; த்ரயாணாம் க்ரமாணாம் - ஷட்ஜம மத்யம, காந்தாரம் என்கிற மூன்று க்ரமங்களுக்கு; ஸ்திதி நியம ஸீமாந இவ- இயற்கை, பாகுபாடு இவற்றுக்கான எல்லைகள் போல; விராஜந்தே - விளங்குகின்றது.
கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!
செந்திருநின் திருமணத்திற் சேர்ந்தசர
மூன்றழுந்தித் திகழ்வ தென்கோ
மந்தரமத் திமதார மூவகைநா
தமுமெல்லை வகுத்த தென்கோ
கொந்திரையுந் துணர்பூகங் கொழுத்தபசுங்
கழுத்தின்வரைக் குறிகள் மூன்றும்
இந்திரையுஞ் சயமகளுங் கலைமாதும்
புகழ்வதல்லால் யானென் சொல்வேன்.
---------------------------------------------------------------------------------------------
ம்ருணாலீ-ம்ருத்வீனாம் தவ புஜலதானாம் சதஸ்ருணாம்
சதுர்ப்பி: ஸெள்ந்தர்யம் ஸரஸிஜபவ: ஸ்தெளதி வதனை:
நகேப்ய: ஸந்த்ரஸ்யன் ப்ரதம-மதனா தந்தகரிபோ:
சதுர்ணாம் சீர்ஷாணாம் ஸம-மபய-ஹஸ்தார்ப்பண-தியாஅம்மா!, ப்ரம்மா தன்னுடைய ஐந்தாவது தலையை பரமசிவன் கொய்ததால் பரமசிவனது கை நகங்களுக்கு பயந்து கொண்டு உன்னைச் சரணமடைந்து, உன்னுடைய நான்கு கைகளால் அவரது மீதியிருக்கும் 4 தலைகளுக்கும் ஏக-காலத்தில் அபயம் கிடைக்கும் என்று தன்னுடைய நான்கு முகங்களால்உனது நான்கு கைகளையும் ஸ்தோத்ரம் செய்கிறார்.
இந்த ஸ்லோகத்தில் அன்னையின் கரங்களது அழகை தாமரைத் தண்டுக்கு ஒப்பாகச் சொல்லியிருக்கிறார். மேலும் பிரம்மாவால் மட்டுமே அம்பிகையின் கைரங்களை வர்ணித்து ஸ்தோத்ரம் செய்ய முடியும் என்பதாகவும் கொள்ள முடிகிறது.
ம்ருணாளீ ம்ருத்வீனாம் - தாமரைத் தண்டு போன்ற ம்ருதுவான; தவ -உனது; சதஸ்ருணாம் புஜ லதானாம் - கொடிகள் போன்ற நான்கு புஜங்களை; ஸெளந்தர்யம் - அழகை; ஸரஸிஜபவ: ப்ரம்மா; ப்ரதமமதனாத் - தன்னுடைய ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்த; அந்தகரிபோ: - பரமசிவன்;நகேப்ய: - நகங்களுக்கு; ஸம்த்ரஸ்யந் - பயந்துகொண்டு; ஸம-அபய - ஏக காலத்தில் அபயம்; சதுர்ணாம் சீர்ஷாணாம் - மீதமிருக்கும் நான்கு தலைகளுக்கும்; அபயஹஸ்தார்ப்பணதியா - அபயப்ரதானம் செய்வாயென்ற எண்ணத்தில்; சதுர்பிர் வதனை: - தனது நான்கு முகங்களாலும்; ஸ்தெளதி - ஸ்தோத்ரம் செய்கிறார்.
கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!
முன்னமொரு தலைசினவுன் முதல்வரால்
இழந்த அயன் முகங்கள் நான்கால்
உன்னழகுக் கேற்றபசுங் கழைமணித்தோள்
ஒருநான்கும் வழுந்து கின்றான்
இன்னமொரு சீற்றமெழுந் தரிமலையை
எனினுமிவள் தடமென் தோளைச்
சொன்னதலைக் கழிவிலையென் றதிற்றுணிந்த
துணிவன்றோ சுருதி வாழ்வே.
6 comments:
சின்ன வயசில் பார்க்கும் போதெல்லாம், அன்னையின் நெற்றியில்/கழுத்தில் மூன்று ரேகைகள் என்பது அவளிடம் இயற்கையாகவே துலங்கும் திருநீறு போல-ன்னு நினைச்சிக்குவேன்!
மூன்று ரேகை விஷயம் புதிய வியப்பான சேதி!
ஆண்களுக்குமா? யாராச்சும் கண்ணாடியில் பார்த்துட்டு வந்து சொல்லுங்க! :)
//இங்கே க்ராமங்கள் என்பது நமது ஸ்வரங்கள் அல்ல. அவை க்ராமங்கள் என்பவை ஸ்வரத்திற்கும் மூலமானவை என்றே தோன்றுகிறது//
உம்ம்ம்ம்
க்ரமம் என்பது வரிசையில் ஒலிப்பது.
ஆரோகண/அவரோகணங்களும் க்ரமம் தான்!
ஸ்வரங்கள் அதே வரிசையில் வரிசை மாறாமல் வந்தால் அதைச் சம்பூர்ண க்ரமம் என்று சொல்லுவார்கள்!
நன்றி மௌலி. படங்களும் அழகா இருக்கு. குறிப்பா இரண்டாவது படம்.
கவிராசபண்டிதரின் பாடல்களும் அவற்றின் பொருளும்:
செந்திரு நின் திருமணத்தில் சேர்ந்த சரம்
மூன்று அழுந்தித் திகழ்வது என்கோ
மந்தர மத்திம அதார மூவகை நாதமும்
எல்லை வகுத்தது என்கோ
கொந்திரை உந்துணர் பூகம் கொழுத்த பசும்
கழுத்தின் வரைக் குறிகள் மூன்றும்
இந்திரையும் சயமகளும் கலைமாதும்
புகழ்வதல்லால் யானென் சொல்வேன்
செந்திருவே! நின் திருமணத்தில் சேர்ந்த திருமாங்கலியச் சரம் மூன்றும் அழுந்தித் திகழ்வது என்று சொல்லுவேனோ? மந்தர மத்திம அதார என்கின்ற மூவகை இசைகளுக்கும் எல்லை வகுத்தது என்று சொல்லுவேனோ? மணம் வீசும் கஸ்தூரி அணிந்த பசும் கழுத்தில் இருக்கும் மூன்று கோடுகளை தாமரையில் வாழும் திருமகளும் (இந்திரையும்) வெற்றித் திருமகளான துர்க்கையும் (சயமகளும்) கலைகளின் அரசியான கலைமகளும் (கலைமாதும்) புகழ்ந்து பேசுவதன்றி என்னால் புகழ இயலுமா?
முன்னம் ஒரு தலை சின உன் முதல்வரால்
இழந்த அயன் முகங்கள் நான்கால்
உன்னழகுக்கு ஏற்ற பசுங்கழை மணித்தோள்
ஒரு நான்கும் வழுத்துகின்றான்
இன்னமொரு சீற்றம் எழுந்து அரிமலையை
எனினும் இவள் தட மென் தோளைச்
சொன்ன தலைக்கு அழிவிலை என்று அதில் துணிந்த
துணிவன்றோ சுருதி வாழ்வே
முன்னொரு நாள் உன் தலைவரான சிவபெருமானின் சினத்தால் ஒரு தலையை இழந்த பிரமன் மீதமுள்ள முகங்கள் நான்கால் உன் அழகுக்கு ஏற்ற உன் அழகான திருத்தோள்கள் நான்கினையும் போற்றிப் புகழ்கின்றான். அது எப்படி இருக்கின்றதென்றால், இன்னும் ஒரு முறை சிவபெருமானுக்குச் சினம் தோன்றி தலையைக் கொய்ய வந்தால் எந்த தலை உனது திருத்தோள்களைப் புகழ்ந்ததோ அந்த தலை தப்பும் என்று ஆய்ந்து முடிவு செய்து புகழ்ச்சியெனும் செயலில் இறங்கியது போல் இருக்கிறது.
//தாமரையில் வாழும் திருமகளும் (இந்திரையும்) வெற்றித் திருமகளான துர்க்கையும் (சயமகளும்) கலைகளின் அரசியான கலைமகளும் (கலைமாதும்)//
இப்படில்லாம் எனக்கு யோசிக்கக் கூட தெரியாது. பதம் பிரித்து பொருளும் தருவதற்கு நன்றி குமரா.
தவராமல் வந்து பதம் பிரித்துப் பொருள் தருவதற்கு நன்றி குமரன்.
வருகை தந்த கண்ணபிரானுக்கும், கவிக்காவுக்கும் நன்றிகள்
Post a Comment