செளந்தர்யலஹரி 73 & 74


அமூ தே வக்ஷோஜெள் அம்ருதரஸ மாணிக்ய குதுபெள
ந ஸந்தேஹ ஸ்பந்தெள நகபதிபதாகே மநஸி ந:
பிபந்தெள தெள யஸ்மத் அவிதித வதூஸங்க ரஸிகெள
குமாரெள அத்யாபி த்விரதவதந க்ரெளஞ்சதலநெள

அம்மா, உன்னுடைய மார்பிலிருப்பது பால் நிறைந்த ஸ்தனங்களல்ல, அவை, அம்ருதம் நிறம்பிய மாணிக்கக் குடுவைகள் என்பதில் லவலேசமும் சந்தேகமில்லை. பாலுடைய ஸ்தனங்களானால் அதைப் பருகிய கணபதி மற்றும் ஸ்கந்தன் ஆகிய இருவரும்பால்யம் தாண்டி யெளவனம் போன்ற வளர்ச்சிகளை அடைந்திருப்பார்கள். அவர்களிருவரும் வளர்ந்து ஸ்த்ரீ சங்கமம் தெரியாத குழந்தைகளாக, யானை முகத்துடனும், பர்வதத்தைப் பிளப்பது போன்ற விளையாட்டுக்களுடன் இருக்கின்றனர். இதன் காரணமாகவே உனது ஸ்தனங்களில் பாலுக்குப் பதிலாக அம்ருத ரஸம் நிறைந்ததாகக்கூறுகிறோம்.

மனிதர்கள் போன்று அன்னை பராசக்தியின் ஸ்தனங்களில் தாய்ப் பால் இருந்திருந்தால் அதனை உண்ட கணபதி மற்றும் ஸ்கந்தன் மனிதர்கள் போன்று வளர்ந்து யெளவன இச்சைகள் உடையவராக இருந்திருப்பர். ஆனால் அவர்கள் சிறு பிள்ளைகளாக, யானை முகமூடி கொண்டும், பர்வதம்/மலையைப் பிளப்பது போன்ற விளையாட்டுக்களில் மூழ்கியிருப்பதால் அவர்கள் சிறு-குழந்தைகளாகவே தோன்றுகின்றனர். இதன் காரணத்தை ஊன்றிப் பார்த்தால் உன்னுடைய ஸ்தனங்களில் அவர்கள் அருந்தியது அம்ருதமாக இருப்பதே காரணம் என்று புலனாகிறது என்கிறார் பகவத்பாதர். அம்ருதம் உண்டவர்களுக்கு வயதால் ஏற்படும் மூப்பு கிடையாது என்று சொல்லப்படும்.

அமூ தே வக்ஷோஜெள - உன்னுடைய ஸ்தனங்கள்; அம்ருதரஸ மாணிக்ய குதுபெள - அம்ருத ரஸம் நிறம்பிய மாணிக்கத்தாலான குடுவைகள்; ந மநஸி - எங்கள் மனதில்; ந ஸந்தேஹ ஸ்பந்த: - ஸம்சயம் லவலேசமும்/சிறிதும் இல்லை; யஸ்மாத் - ஏனென்றால்; தெள பிபந்தெள - அவைகளை பானம் செய்கின்ற; த்விரத வதந க்ரெளஞ்ச தலநெள - கஜானனனும், க்ரெளஞ்சத்தைப் பிளந்த குமரனும்; அத்யாபி - இன்னமும்; அவிதித வதூஸங்க ரஸிகெள - ஸ்த்ரீ ஸங்கமத்தின் ரஸம் தெரியாத; குமாரெள - குழந்தைகளாக இருப்பது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு:

முக்கணிறை வர்க்குமயல் முற்றஎழின் முற்றும்முலை
முட்டியசு ரப்பொ ழுகுபால்
மக்களிரு வர்க்கருள அக்களிறும் இக்குகனும்
மட்டிளமை முற்று கிலரால்
அக்கடலு தித்தஅமு தத்தனையெ டுத்ததில
டைத்திருகண் முத்தி ரையின் வாழ்
செக்கர்மணி மெய்க்கலச மத்தனையுன் வட்டமுலை
செப்பலம் லைப்பு தல்வியே

------------------------------------------------------------------------------------


வயத்யம்ப ஸ்தம்பேரம தநுஜ கும்ப ப்ரக்ருதிபி:
ஸமாரப்தாம் முக்தா மாணிபிரமலாம் ஹாரலதிகாம்
குசாபோகோ பிம்பாதர ருசிபிரந்த: சபளிதாம்
ப்ரதாப வ்யாமிச்ராம் புரதம்யிது: கீர்த்திமிவ தே

தாயே! உன்னுடைய ஸ்தனங்களின் மத்ய ப்ரதேசத்தில் கஜாஸுரனுடைய கும்பத்திலிருந்து உண்டான முத்துக்களால் கோர்க்கப்பட்ட ஹாரமானது விளங்குகிறது. அந்த முத்துக்களில் உன்னுடைய சிவப்பான அதர காந்தியானது படுவதால் வெளியில் சிவப்பாகவும், உள்ளுக்குள்ளே பலவித விசித்ர வர்ணன்களுடனும் இருக்கிறது. இந்த ஹாரமானது பரமசிவனுடைய பராக்ரமத்தை/கீர்த்தியை சொல்வதாக இருக்கிறது.

நமக்குத் தெரிந்தவரையில் முத்து என்பது சிப்பியிலிருந்து தோன்றுவது மட்டும் தான். ஆனால் கஜகும்பம், மூங்கில், பாம்புப்படம், மேகம், முத்துச் சிப்பி மற்றும் கரும்பு ஆகிய ஆறு இடங்களில் முத்துக்கள் விளைவதாகச் சொல்வர். இவற்றில் யானையிடத்திருந்து கிடைக்கும் முத்துக்கள் பல நிறங்கள் கலந்தவை என்றும் கூறப்படுகிறது.கஜாஸுரனைப் பரமசிவன் ஸம்ஹாரம் பண்ணியபின் அவனுடைய கும்பத்திலிருந்து கிடைத்த முத்துக்களை கோர்த்து அம்பிகை மாலையாக அணிந்ததாக சொல்லப்படுகிறது. அம்முத்துக்கள் பலவகையாக இருப்பினும் அவள் கழுத்தில் இருக்கும் போது அவளது அதரங்களின் அத்யந்த சிவப்பு நிறமானது சிவப்புடன் கூடி பல வர்ணங்களாக மாறுகிறதாம்.

சாதாரணமாக கீர்த்தி/புகழ் என்பதற்கு வெண்மை நிறத்தை குறிக்கிறார்கள். அதேபோல பராக்ரமம்/வெற்றி போன்றவைகளுக்கு சிகப்பை குறிப்பது கவிகளின் வழக்கமாம். இங்கே கஜாஸுரனுடைய ஸம்ஹாரம், த்ரிபுர சம்ஹாரம் போன்றவை பரமசிவனது பராக்ரமத்துக்கும், அவரது கீர்த்திக்கு ஸமமாக முத்து மாலையையும் குறித்திருக்கிறார் ஆதி சங்கரர்என்று சொல்கிறார் தேதியூரார்.

குசா போக: - ஸ்தனங்களின் மத்ய ப்ரதேசம்; ஸ்தம்பேரம தநுஜ கும்ப ப்ரக்ருதிபி: - கஜாஸுரனுடைய கும்பத்திலிருந்து உருவான; முதாமணிபி: - முத்து மணிகளால்; ஸமாரப்தாம் - நன்றாக சேர்க்கப்பட்ட; அமலாம் - தோஷமில்லாத; பிம்பாதர ருசிபி: - கோவைப் பழம்போல சிவந்த அதர காந்தியால்; அந்த: சபளிதாம் - உட்புறம் சித்ர வர்ணங்களோடு கூடியதாய்ச் செய்யப்பட்ட; ஹாரலதிகாம் - கொடிபோன்ற ஹாரத்தை; புரதமயிது: - புரங்களை அழித்தவரான ஈசனுடைய; ப்ரதாப வ்யாமிச்ராம் - பராக்ரமத்தோடு கலந்த; கீர்த்திமிவ - கீர்த்தியைப் போல; வஹதி - தரித்துக் கொண்டு.

கவிராஜரது மொழிபெயர்ப்பு:

கொற்ற வாரண முகம கன்பொரு
குஞ்ச ரானன நிருதனார்
இற்ற கோடு திர் ஆர மாலிகை
இதழ்ம னிப்ரபை தழையவே
பெற்ற பாகபி னாக பாணிப்ரதாப
மோடணை புகழெனா
உற்ற தாயினும் உனது பொற்றனம்
உரைப டாநிறை செல்வியே.

3 comments:

Kavinaya said...

//இதன் காரணத்தை ஊன்றிப் பார்த்தால் உன்னுடைய ஸ்தனங்களில் அவர்கள் அருந்தியது அம்ருதமாக இருப்பதே காரணம் என்று புலனாகிறது என்கிறார் பகவத்பாதர்.//

உண்மைதானே? :)

//அந்த முத்துக்களில் உன்னுடைய சிவப்பான அதர காந்தியானது படுவதால் வெளியில் சிவப்பாகவும், உள்ளுக்குள்ளே பலவித விசித்ர வர்ணன்களுடனும் இருக்கிறது.//

ஒவ்வொன்றையும் படிக்கும் போது இப்படியும் வர்ணிக்க முடியுமான்னு இருக்கு. அழகு.

நன்றி மௌலி.

குமரன் (Kumaran) said...

கவிராசரது மொழிபெயர்ப்பும் விளக்கமும்:

முக்கண் இறைவர்க்கு மயல் முற்ற எழில் முற்றும் முலை
முட்டிய சுரப்பு ஒழுகு பால்
மக்கள் இருவர்க்கு அருள அக்களிறும் இக்குகனும்
மட்டு இளமை முற்றுகிலரால்
அக்கடல் உதித்த அமுதத்தனை எடுத்து அதில்
அடைத்து இருகண் முத்திரையில் வாழ்
செக்கர் மணி மெய்க்கலசம் அத்தனை உன் வட்டமுலை
செப்பல் அம் மலைப் புதல்வியே.

மலைமகளே! மூன்று கண்கள் உடைய இறைவருக்கு உன் மேல் அன்பு பொங்க அந்த அன்பினால் அழகு பொங்கும் உன் முலையில் இருந்து தானே சுரக்கும் பால் உன் மக்கள் இருவருக்கும் நீ அருள அந்தக் களிற்று முகத்தோனும் இந்த குகனும் அழகிய இளமைப் பருவம் முற்றாமல் இருக்கிறார்கள். அந்தக் கடலில் உதித்த அமுதத்தினை எடுத்து சிவந்த மணிகளால் ஆன கலசத்தில் இட்டு அடைத்து வைத்தது போல் உன் வட்டமுலை இருக்கின்றது.

கொற்ற வாரண முகமகன் பொரு
குஞ்சரானன நிருதனார்
இற்ற கோடு உதிர் ஆர மாலிகை
இதழ் மணி ப்ரபை தழையவே
பெற்ற பாக பினாகபாணி ப்ரதாப
மோடு அணை புகழ் எனா
உற்றது ஆயினும் உனது பொற்றனம் (பொன் தனம்)
உரை படா நிறை செல்வியே

வெற்றியுடன் யானை முகத்தினை உடைய ஒருவனுடன் போரிட்ட அழகிய திருமுகம் கொண்ட வேடனாகிய சிவபெருமான் ஒடித்த கொம்பிலிருந்து (தந்தத்திலிருந்து) உதிர்ந்த முத்து ஆரம் உனது இதழின் மாணிக்க ஒளிக்கதிர் பெற்று விளக்குவது உன்னிடம் பாகம் பெற்ற மானை ஏந்திய இறைவனாரின் வெற்றிச் சிறப்பையும் அதனுடன் கூடிய புகழையும் கூறுகின்றது எனலாம். அப்படி சொல்லலாம் ஆயினும் உனது பொன் போன்ற திருமுலைகளைப் பற்றி ஏதும் சொல்லிப் புகழ்ந்து நிறைவு பெற இயலாது நிறைவான செல்வியே.

MoHaNeSh said...

வணக்கம் ஐயா ,
தங்கள் பதிவிற்கு நான் புதியவன் .சிலவற்றைப் படித்ததிலேயே நான் ஆதி சங்கரருக்கு அடிமையானேன் .(தங்களின் அனைத்து பதிவுகளையும் படிப்பேன் )என்னைப் போல் சமஸ்கிருதம் அறியாதவர்களும் உங்களால் அரிய பொக்கிசத்தை அனுபவிக்கின்றோம் .நன்றிகள் கோடி