செளந்தர்யலஹரி 71 & 72


நகாநாம் உத்யோதை: நவநளிந ராகம் விஹஸதாம்
கராணாம் தே காந்திம் கதய கதயாம: கதம் உமே
கயாசித் வா ஸாம்யம் பஜது கலயா ஹந்த கமலம்
யதி க்ரீடல்லக்ஷ்மீ சரணதல லாக்ஷராஸ சணம்

தாயே உமா!, புதிதாய் மலர்ந்த செந்தாமரைப் பூவினைப் ஏளனம் செய்யும் விதமான, அழகிய பிரகாசம் உள்ள உனது கை நகங்களை நாங்கள் எவ்வாறு வர்ணிக்க இயலும்?. மஹா லக்ஷ்மியின் காலில் இருக்கும் செம்மையான குழம்பு, அவள் குடியிருக்கும் தாமரைப் பூவுடன் கலக்கும் சமயத்தில் உருவாகும் நிறம் ஒருவேளை உனது நகங்களின் காந்திக்கு சற்றே ஒப்பாக இருக்கலாம்.

அன்னையின் கை நகங்களது ஒளிக்கு சமமாக எதையும் சொல்ல இயலவில்லை, அது அவ்வளவு ஒளி பொருந்தியதாக, அழகாக இருக்கிறது என்கிறார் சங்கரர். புதிதாய் மலர்ந்த தாமரையின் அழகை போன்றது அன்னையின் நகங்கள் என்றால் அதுசரியல்ல. அன்னை மஹாலக்ஷ்மியின் பாதத்தில் இருக்கும் செம்மையான நலுங்கு அலங்காரம், அவள் அமர்ந்த தாமரைப் பூவுடன் சேர்கையில் கிடைக்கும் நிறமானதும் உனது நகங்களது ஒளிர்மைக்கு நிகரானது இல்லை, ஆனால் அது நகங்களின் உனது காந்திக்கு சற்றே அருகில் இருப்பதாக வேண்டுமானால் கூறலாம் என்கிறார்.

நகானாம் - நகங்களுடைய; உத்யோதை: - காந்தி/ஒளியினால்; நவ நளிந ராகம் - அன்றலர்ந்த செந்தாமரையின் நிறத்தில்; விஹஸதாம் - ஏளனம் செய்யும்; தே - உன்னுடைய; கராணாம் - கைகளின்; காந்திம் - ஒளியை;கதம் - எவ்வாறு; கதயாம: - வருணிப்போம்?; கமலம் - செந்தாமரை; யதி - ஒருவேளை; க்ரீடத் லக்ஷ்மி-சரண-தல - தன்னிடம் லீலை புரியும் லக்ஷ்மியின் திருவடியில்; லாக்ஷாரஸ சணம் - செம்மையான நலங்கு என்னும் கால் அலங்காரம்;கயாசித்வா - எப்படியோ; கலயா - சிறிதளவு; ஸாம்யம் - ஒற்றுமை; பஜது - அடையலாம்.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே:

திருமகள்தன் சீறடியால் துவண்டும் அதிற்
செம்பஞ்சாற் செங்கேழ் பெற்றும்
மருமுளரி எழில்படைத்த திதுவோநம்
இயற்கையெதிர் அலர்வ தென்றே
இருகரமு நகைத்தநகை ஒளியையுனது
எழிலுகிரேன் றிறைஞ்சி நாளும்
அருமறைகள் வழுத்துகின்ற ததிசயமோ
பேதமையோ அன்போ அம்மே
------------------------------------------------------------------------------------------


ஸமம் தேவி ஸ்கந்த த்விபவதந பீதம் ஸ்தநயுகம்
தவேதம் ந: கேதம் ஹரது ஸததம் ப்ரஸ்நுதமுகம்
யதாலோக்யாசங்காகுலித ஹ்ருதயோ ஹாஸ ஜநக:
ஸ்வகும்பெள ஹேரம்ப: பரிம்ருசதி ஹஸ்தேந ஜடிதி

தாயே!, உனது புத்ரர்களான கணபதி, ஸ்கந்தன் இவர்களால் பானம் பண்ணப்பட்டதும், அவர்களைக் கண்டவுடன் பெருகும் பாலை உடையதுமான உன்னுடைய ஸ்தனங்கள் எங்களுடைய துக்கங்களை எப்போதும் போக்குவதாக இருக்கட்டும். அந்த ஸ்தனங்களைப் பார்த்த கணபதி, எங்கே தன்னுடைய கும்பங்களே உனது ஸ்தனங்களாயிற்றோ என்று நினைத்து சந்தேகத்து, கலங்கிய மனத்துடன் தனது தலையைத் தடவிப் பார்ப்பதன் மூலமாக ஹாஸ்யத்திற்கு உள்ளாகிறார்.

தேவதேவர்களுக்கெல்லாம் தலைவர்கள் மஹா கணபதியும், ஸ்கந்தனும். அவர்களுடைய தாயார் என்று கூறி அவளது மஹிமையை எடுத்துக் காட்டியிருக்கிறார். அத்துடனில்லாது, அம்பிகையின் ஸ்தனத்துக்குஈடாக வினாயகரின் கும்பங்களை மட்டுமே உதாரணமாகச் சொல்ல முடியும் என்பதையும் மறைமுகமாகச் சொல்கிறார்.

ஸ்கந்த - கந்தன்/முருகன்; த்விபவதந - விநாயகப் பெருமான்; பீதம் - பால் அருந்தும்; ப்ரஸ்னுத-முகம் - பால் சுரக்கும் காம்புகளுடைய; ஸ்தனயுக - நகில்கள் இரண்டும்; ந: - எங்களுடைய; கேதம் - துன்பத்தை; ஸததம் - எப்போதும்; ஹரது - போக்கடிக்கட்டும்; யத் - அந்த நகில்களை; ஆலோக்ய - பார்த்து; ஆசங்கா - சந்தேகித்து; ஆகுலித - கலங்கிய; ஹ்ருதய - மனத்துடன்; ஹேரம்ப - வினாயகர்; ஹாஸ-ஜனக: - சிரிப்பு உண்டாகும்படியாக; ஸ்வகும்பெள - தனது தலையில் உள்ள இரு கும்பங்களை; ஜடிதி - அவசரமாக; ஹஸ்தேன - கைகளால்; பரிம்ருசதி - தடவிப் பார்க்கிறார்.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே:

நித்தரொரு பக்கர்மயில் நிர்களிறுன் வட்டமுலை
நிற்குமெழி வில்த னதுசீர்
மத்தகமெ னத்தனில் யிர்த்தொருக ரத்தைமுடி
வைத்துறவு றத்த டவுமால்
முத்தமுலை செப்புவதெ னக்களிறு பிற்குமரன்
முற்புதல்வர் துய்த்த அமுதால்
அத்தலைமை பெற்றனர் அதில்திவலை கிட்டினுமென்
அற்பஉயிர் முத்தி பெறுமே.

4 comments:

Kavinaya said...

//மஹா லக்ஷ்மியின் காலில் இருக்கும் செம்மையான குழம்பு, அவள் குடியிருக்கும் தாமரைப் பூவுடன் கலக்கும் சமயத்தில் உருவாகும் நிறம்//

என்ன அழகான கற்பனை!

//அதில்திவலை கிட்டினுமென்
அற்பஉயிர் முத்தி பெறுமே.//

கிட்டிடுமோ??
இந்த பாட்டு சந்தத்தோட அழகா அமைஞ்சிருக்கு.

Kavinaya said...

நன்றி சொல்ல மறந்துட்டேன் :( நன்றி மௌலி :)

குமரன் (Kumaran) said...

கவிராசரது பாடலும் விளக்கமும்:

திருமகள் தன் சீறடியால் துவண்டும் அதில்
செம்பஞ்சால் செங்கேழ் பெற்றும்
மருமுளரி எழில் படைத்தது இதுவோ நம்
இயற்கை எதிர் அலர்வது என்றே
இருகரமும் நகைத்த நகை ஒளியை உனது
எழில் உகிர் என்றே இறைஞ்சி நாளும்
அருமறைகள் வழுத்துகின்றது அதிசயமோ
பேதமையோ அன்போ அம்மே

அம்மா. திருமகள் தன் சிறிய திருவடிகளால் தீண்டும் மருவுடன் கூடிய தாமரை மலர்கள் அவளது திருவடிகளில் எழுதப்பட்ட செம்பஞ்சுச்சாற்றால் இன்னும் சிவந்த நிறம் பெற்று மேலும் அழகு பெற்றதுவோ உன்னுடைய இரு கரத்திலும் இருக்கும் அழகுடைய நகங்களின் சிறந்த சிரிப்பினைப் போன்ற ஒளி என்று அரிய வேதங்கள் இறைஞ்சி நாள்தோறும் உன்னை வணங்குகின்றன. அவ்வாறு அவை சொல்வது உன் நகங்களைக் கண்டு அடைந்த வியப்பாலா, நகங்களின் ஒளிக்கு எந்த உவமையும் இல்லை என்று தெரியாத பேதமையாலா, உன் மேல் கொண்ட அன்பால் ஏதோ ஒன்றை ஒப்பாகச் சொல்கிறதா தெரியவில்லை அம்மா.

குமரன் (Kumaran) said...

அடுத்தப் பாடலுக்கான கவிராசரது மொழிபெயர்ப்பும் அதன் பொருளும்:

நித்தர் ஒரு பக்கர் மயில் நிர்களிறு உன் வட்டமுலை
நிற்கும் எழில் தனது சீர்
மத்தகமெனத் தனில் அயிர்த்து ஒரு கரத்தை முடி
வைத்து உறவுறத் தடவுமால்
முத்த முலை செப்புவதெனக் களிறு பிற்குமரன்
முற்புதல்வர் துய்த்த அமுதால்
அத்தலைமை பெற்றனர் அதில் திவலை கிட்டினும் என்
அற்ப உயிர் முக்தி பெறுமே

நித்தரான சிவபெருமான் ஒரு பக்கமாக நிற்க மயிலவனும் இருக்க யானைமுகத்தவன் உன் வட்ட முலை கண்டு தனது மத்தகம் என்று மயங்கி ஒரு கையால் தன் தலையைத் தடவிப் பார்க்கிறான். முத்து மாலை அணிந்த உன் முலையமுதை யானைமுகனும் அவனுக்கு இளைய குமரனும் எனும் முதற்புதல்வர் இருவரும் அருந்தியதால் அவர்களுக்கு தேவர்களின் தலைமை கிடைத்தது. அந்த முதற்புதல்வர் அருந்திய அந்த அமுதில் ஒரு திவலை இந்தப் புதல்வன்/புதல்விக்கும் கிட்டினால் (உன் அருள் அமுதம் கிட்டினால்) எனது அற்ப உயிர் முக்தி பெறுமே.