செளந்தர்யலஹரி 79 & 80


நிஸர்க்க க்ஷீணஸ்ய ஸ்தநதடபரேண க்லமஜுஷோ
நமந் மூர்தேர் நாரீதிலக சநகை: த்ருட்யத இவ
சிரம் தே மத்யஸ்ய த்ருடித தடிநீ தீரதருணா
ஸமாவஸ்த்தா ஸ்த்தேம்னோ பவது குசலம் சைலதநயே


பெண்குலத்தின் திலகமான சைல புத்ரியே!, இயற்கையிலேயே மெல்லியதான உன்னுடைய இடையானது ஸ்தநங்களின் பாரத்தைத் தாங்கும் ச்ரமத்துடன் கொஞ்சம் வளைந்து இருப்பதைப் பார்க்கையில்,ஆற்றின் இடிந்த கரையில் இருக்கும் மரக்கிளை சற்றே உடைந்து தொங்கி மெள்ள மெள்ள ஒடிந்து போய்விடுவது போல தோன்றுகிறது. அவ்வாறான ஆபத்து நேராமல் வெகுகாலம் க்ஷேமமாக இருக்க வேண்டுமென ப்ராத்திக்கிறேன்.

சாமுத்ரிகா லக்ஷணத்தின்படி சுந்தர ஸ்திரீகளது இடை மிகச் சிறிதானதாகச் சொல்லப்படும். அன்னையின் இடையும் அவ்வாறு இருப்பதாகச் சொல்லி, ஸ்தனத்தின் பாரத்தால் சற்றே வளைந்த உடலமைப்பினைக் கொண்டதாக இருக்கிறாள் என்று கூறுகிறார். இதனை அபிராமி அந்தாதியில் 'சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும், பென்னம் பெரிய முலையு முத்தாரமும்' என்று கூறியிருக்கிறார் பட்டர்.

நாரீதிலக - பெண்ணினத்தின் திலகமான; சைலதநயே - மலையரசன் மகளே; நிஸர்க்க க்ஷீணஸ்ய - ஸ்வபாவமாகவே மெலிந்த; ஸ்தந-தட-பரேண - நகில்களின் பாரத்தால்; க்லம ஜுஷ: - சிரமத்துடன்; நமந்மூர்த்தே: - (பாரத்தால்) வளைந்த ரூபத்துடன்; சநகை: - மெல்ல மெல்ல; த்ருட்யத இவ - ஒடிந்து போவது போல; த்ருடித - இடிந்த; தடிநீ தீர - நதிக்கரையிலுள்ள; தருணா - மரம்; ஸ்மாவஸ்தா - சமமான நிலையில்; ஸ்தேம்ன: இருக்கும்; தே மத்யஸ்ய - உன்னுடைய இடுப்பிற்கு; குசலம் - க்ஷேமமானது; சிரம் - நீண்ட காலம்; பவது - உண்டாகட்டும்.

கவிராஜரது மொழிபெயர்ப்பு:

தரைம டந்தை பரவு மங்கை
தனத டம்பொ றாதுநின்
திரும ருங்கு லறவ ளைந்து
சிறுகி மூவி ரேகையாய்
வரைபி ளந்தொ ரிடிக ரைக்குள்
வாழ்ம ரத்தொ டொத்ததால்
உரைக டந்து விடுமுன்
மற்றொ ருறுதி தேட நாடுமே

----------------------------------------------------------------------------------------


குசெள ஸத்யஸ் ஸ்வித்யத் தடிகடித கூர்பாஸ பிதுரெள
கஷந்தெள தோர்மூலே கநகலசாபெள கலயதா
தவ த்ராதும் பங்காத் அலமிதி வலக்நம் தநுபுவா
த்ரிதா நத்தம் தேவி த்ரிவளி லவலீவல்லிபிரிவ

தாயே!, உன்னதமானதும், கனத்த தங்கக் கலசங்கள் போன்றதுமான உனது ஸ்தனங்களை மன்மதன் உருவாக்கிய போது, அவைகளின் பாரத்தால் உன்னுடைய மெலிதான இடுப்பனது ஒடிந்து போகாமலிருப்பதற்காக இடுப்பினைச் சுற்றி வள்ளிக் கொடிகளால் மூன்று சுற்றுக்கள் சுற்றியது போல உனது இடுப்பிலிருக்கும் த்ரிவளியானது தோன்றுகிறது.

அன்னையின் ஸ்தனங்களை உருவாக்கியவன் என்பதாக மன்மதனைக் குறிப்பிடுவதன் மூலமாக படைக்கும் பிரம்மனை விலக்கி, அன்னையின் பக்தர்களில் சிறந்தவரும், பராசக்தியின் மைந்தனுமான (மன்மதனுக்கு மறுபடிஉயிர் கொடுத்த அன்னையாகிறாள்)மன்மதனையே அன்னையின் ரூபத்தை சமைத்தவனாகக் காட்டுகிறார் பகவத்பாதர். அன்னை தனது பதியான பரமசிவனுடைய ரூபத்தை எப்போதும் மனத்தில் எண்ணுவதால் ஸ்தனங்கள் விம்மிப் பருத்து தங்களைக் கட்டியிருக்கும் கச்சையை விலக்குவதாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது.

த்ரிவளி என்னும் மூன்று மடிப்புக்கள் பற்றி முன்பே சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு அந்த த்ரிவளியானது இடுப்பு முறிந்திடாது காப்பதற்காகப் போடப்பட்ட கட்டுப் போல இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. லலிதா ஸஹஸ்ர நாமத்தில் வரும் 'ஸ்தன-பார-தலன் - மத்ய பட்ட பந்த-வலித்ரயா' என்பதும் இந்தப் பொருளையே குறிப்பிடுகிறது.

ஸ்வித்யத் தடகடித கூர்பாஸ பிதுரெள - வேர்வையால் உடலில் ஒட்டிய கச்சையைக்; தோர்மூலே கஷந்தெள - கைகளின் அடிப்பாகத்தில் இருக்கும்; கநக கலசாபெள - தங்க கலசங்களொத்த; குசெள - உன் ஸ்தநங்கள்; கலயதா - செய்த; தநுபுவா - மன்மதன்; வலக்நம் - இடுப்பு;பங்காத் அலம் இதி - முழுவதும் ஒடிந்திடாது; த்ராதும் - காக்கும்; த்ரிவளி தவ வலக்நம் மூன்று வரிகளை/மடிப்புகளையுடைய உன்னுடைய இடுப்பு; லவலீவல்லிபி: - வள்ளிக் கொடிகளால்; த்ரிதா நத்தம் இவ மூன்று சுற்றுக்கள் சுற்றப்பட்டது போல இருக்கிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு:

வம்பைத் தொலைத்துதறி யிறுகிக் கனத்திளகி
வருபுடை நெருக்கி வளர்மாக்
கும்பக் கடாக்களிற் றினையனைய உனதுமுலை
கொடிதுகொடி தென்று வெருவா
அம்பொற் றனிக்கமல இறைபொறா திடையென
அழுத்துபூ ணென முனிவரோடு
உம்பர்க்கு முளமருள ஒளிகெழுமி ரேகைமூன்
றுலகமோ தெளிவ துமையே

8 comments:

குமரன் (Kumaran) said...

கவிராசரின் பாடலும் பொருளும்:

தரை மடந்தை பரவு மங்கை
தன தடம் பொறாது நின்
திருமருங்குல் அற வளைந்து
சிறுகி மூவிரேகையாய்
வரை பிளந்தொர் இடிகரைக்குள்
வாழ் மரத்தொடு ஒத்ததால்
உரை கடந்து விடுமுன்
மற்றொர் உறுதி தேட நாடுமே

மண்மகளாம் பூமி தேவி வணங்கும் பெண்ணாகிய அம்மையே! உன் பென்னம்பெரிய திருமுலைகளின் பாரம் பொறுக்க இயலாது உன் திருமருங்குல் (இடை) ஒடிந்து விடுவதைப் போல் வளைந்து சிறுகி மூன்று மடிப்புகளுடன், பாறையைப் பிளந்து ஒரு ஆற்றின் இடிந்த கரையில் வளர்ந்திருக்கும் மரத்தை ஒத்திருக்கிறது. சொல்ல இயலாத நிலையை அடைவதற்கு முன்னர் ஓர் உறுதி உன் திருமருங்குலுக்கு ஏற்படட்டும்.

வம்பைத் தொலைத்து தறி இறுகிக் கனத்து இளகி
வரு புடை நெருக்கி வளர் மாக்
கும்பக் கடாக்களிற்றினை அனைய உனது முலை
கொடிது கொடிது என்று வெருவா
அம்பொன் தனிக்கமல இறை பொறாது இடையென
அழுத்து பூண் என முனிவரொடு
உம்பர்க்கு உளம் அருள ஒளி கெழுமி ரேகை மூன்று
உலகமோ தெளிவது உமையே

கட்டுக்களை மீறி கச்சையை இறுக்கி கனத்து இளகி இருபக்கமும் நெருக்கி வளர்கின்ற, பெரும் கும்பத்தைப் போல் தோன்றி, யானையின் மத்தகத்தைப் போல் விளங்கும் உனது திருமுலை கொடியது கொடியது என்று பயந்து தனிப்பெருமை கொண்ட தாமரையில் வாழ்கின்ற இறைவன் இனி மேல் தாங்காது என்று எண்ணி இடையுடன் சேர்ந்து உன் திருமுலையைக் கட்டியது போல் உன் இடையில் மூன்று ரேகைகளை உருவாக்கினான். உலகம் அதனை உணருமோ உமையவளே.

Kavinaya said...

அழகான விளக்கங்களுக்கு நன்றி, மௌலி, குமரன், இருவருக்கும்.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கும் பொருள் சொன்னதுக்கும் நன்றி குமரன்.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி கவிக்கா.

திவாண்ணா said...

நல்லா ரசிக்கிறிங்கப்பா அத்தனை பேரும்!
:-)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க திவாண்ணா...ஏதேது இந்தப்பக்கம்?. :)

திவாண்ணா said...

ஆணி குறைஞ்சு இருக்கு இப்போதைக்கு. அதான் நண்பர்கள் பதிவுல சிலதை ரௌண்ட் அடிக்கிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

உங்களுக்கு ஆணி கம்மியா?...ஆச்சர்யமாகத்தான் இருக்கு. :)