Showing posts with label கவிராஜர். Show all posts
Showing posts with label கவிராஜர். Show all posts

செளந்தர்யலஹரி 99 & 100



ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதிஹரி ஸபத்னோ விஹரதே
ரதே: பாதிவ்ரத்யம் சிதிலயதி ரம்யேண வபுஷா
சிரம் ஜீவந்நேவ க்ஷபித பசுபாசவ்யதிகர:
பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத் பஜநவாந்


அம்மா!, உன்னை பூஜிப்பவன் பிரம்மாவும், விஷ்ணுவும் கூட பொறாமைப்படக் கூடிய அளவில் கல்வியிலும், செல்வத்திலும், இன்பத்திலும் சிறந்து விளங்குகிறான். உன்னை பூஜிப்பவனது அழகு மன்மதனுக்கு ஒப்பாக இருப்பதால் ரதி தேவியையும் தடுமாறச் செய்யக் கூடியதாக இருப்பதால் மன்மதனும் கலங்குகிறான். உன் பக்தன் சிரஞ்சிவியாக இருந்து கொண்டு பசு, பாச ஸம்பந்தங்களிலிருந்து விடுபட்டவனாக ப்ரஹ்மானந்த ஸுகத்தை அனுபவிக்கிறான்.


பராசக்தியை வழிபடுவதன் மூலமாக அவளது கருணாகடாக்ஷத்தில் பக்தனுக்கு ஞானம், செல்வம், செளந்தர்யம் ஆகிய மூன்றும் தாமாகவே கிடைத்துவிடுகிறது என்கிறார் பகவத் பாதர். இவ்வாறு இந்த மூன்றையும் பெற்ற பக்தன் லோக சுகங்களை அனுபவித்து சிரஞ்சிவியாக இருந்து கொண்டே பரலோக செளக்கியத்திற்கு முடிவான பிரம்மானந்தத்தை இங்கேயே அடைந்துவிடுகிறானாம். பசு என்பது ஜீவன், பாசம் என்பது மாயை, அவித்யை. பாசத்தில் பாதிக்கப்பட்ட ஜீவனான பக்தன் பஞ்சபூதத்தால் ஆன உடலை தான் என்று எண்ணாது, தனக்கும் பிரம்மத்திற்கும் உள்ள ஐக்யத்தை உணர்ந்து பாசத்தில் இருந்து விலகி பசு நிலையிலிருந்து பசுபதியின் ஜ்யோதி ஸ்வரூபத்தில் மனதை லயிக்கச் செய்து ப்ரம்மானந்ததை அடைகிறான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையே ஜீவன் -முக்தி நிலை என்றழக்கப்படும்.


த்வத் பஜநவாந் - உன்னை உபாசிக்கிறவன்; ஸரஸ்வத்யா - சரஸ்வதியிருப்பதால்; லக்ஷ்ம்யா - லக்ஷ்மியிருப்பதால்; விதிஹரி ஸபத்ன - ப்ரம்ஹா, விஷ்ணு இவர்களுடைய அஸுயைக்கு இடமாக இருந்து கொண்டு; விஹரதே - ஆனந்தமாக காலம் கழிக்கிறான்; ரம்யேண வபுஷா - ஸுந்தரமான ரூபத்தால்; ரதே பாதிவ்ரத்யம் - ரதீ தேவியின் பதிவிரதத்தை; சிதிலயதி - தளரச் செய்திடுவான்; சிரம் ஜீவன்நேவ - சிரஞ்சீவியாக இருந்து கொண்டு;க்ஷபித பசுபாச வ்யாதிகர; - பசு-பாசம் ஆகியவற்றின் ஸம்பந்தத்தை போக்கியவனாக; பராநந்தாபிக்யம் - பிரம்மானந்தம் என்னும் ஸுகத்தை; ரஸயதி - அனுபவிக்கிறான்.


கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!


சுந்தரிநின் தொண்டர்தமைத் தோய்வதற்கு நாமகளும்
இந்திரையு மலரயன்மா லிடருழப்ப இரதியின்கண்
அந்தமில்பே ரழ்கொடுகற் பழித்துநெடு நாள்கழியச்
சிந்தையுறு பாசம்போய்ச் சிவமயத்தைச் சேர்குவரால்.



*********************************************************************************






ப்ரதீப ஜ்வாலாபி: திவஸகர நீராஜந விதி:
ஸுதாஸூதே: சந்த்ரோபலஜல லவைராக்யரசனா
ஸ்வகீயை ரம்போபி: ஸலில நிதி ஸெள்ஹித்யகரணம்
த்வதீயாபிர் வாக்பிஸ்தவ ஜநநி வாசாம் ஸ்துதிரியம்



தாயே!, உன்னுடைய வாக்குகளால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்ரத்தினால் நான் உன்னைத் துதிப்பது கை தீவட்டிகளின் ஜ்வாலையால் ஸுரியனுக்கு ஹாரத்தி செய்வது போலும், அம்ருதத்தை வர்ஷிக்கும் கிரணங்களையுடைய சந்திரனுக்கு சந்திர காந்த கல்லின் ஜலத் துளிகளால் அர்க்ய ப்ரதானம் செய்வதாகவும், ஜப நிதியாகிய ஸமுத்திர ராஜனுக்கு அவனுடையதான ஜலங்களாலேயே தர்ப்பணம் செய்வது போல இருக்கிறது.


இந்த கடைசி ஸ்லோகத்தில் ஆசார்யார் தாம் இந்த ஸ்லோகத்தை அம்பாளுடைய அனுக்ரஹத்தினாலேயே செய்ததாகவும், அதில் தாம் ஒரு கெளரவமும் கொள்ளவில்லை என்று தனது விநயத்தை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். ஸ்வகீயை: என்கிற பதத்தை ஸுர்யன், சந்திரன், ஸமுத்ரம் ஆகிய மூன்று இடத்திலும் சேர்த்தாலேயே இங்கே பொருள் வருகிறது. தீவட்டி ஜ்வாலையும் சூர்யனே; சந்திர காந்த கல்லின் ஜலத்திற்கு ஆதாரம் சந்திரனுடைய கதிர்களே; எல்லா நீர்கும் ஆதாரம் ஸமுத்ரமே; இதே போல சகல வாக்குகளுக்கும் அம்பிகையே ஜனனி என்று கூறுகிறார்.


ப்ரதீப ஜ்வாலாபி: - கைத் தீவட்டிகளின் ஜ்வாலையால்; திவஸகர நீராஜன விதி: - ஸுர்யனுக்கு ஹாரத்தி செய்வதுபோலும்; ஸுதாஸூதே: அம்ருதம் வர்ஷிக்கும் கிரணங்களிடைய சந்திரனுக்கு; சந்த்ரோபல ஜலவை: - சந்திர காந்த கல்லில் (சந்திர ஒளியால் ஏற்படும்) இருக்கும் நீர் போலவும்; ஸ்வகீயை: அம்போபி: தன்னுடைய ஜலத்தாலேயே; ஸலிலநிதி - நீருக்கு அதிபதியாகிய சமுத்திரத்துக்கு; ஸெளஹித்யகரணம் - தர்பணம் முதலியவைகளால் த்ருப்தி செய்வது போல;வாசாம் ஜநநி - வாக்குக்களுக்கு உத்பத்தி ஸ்தானமான தாயே; த்வதீயாபி - உன்னுடையதான; வாக்பி: வாக்குகளால் செய்யப்பட்ட; தவ இயம் ஸ்துதி: உன் பற்றிய இந்த ஸ்துதி;


கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!


ஆதவனுக் கவன்கிரணத் தங்கியைக்கொண்
டாலத்தி சுழற்ற லென்கோ
சீதமதிக் கவன்நிலவி னொழுகுசிலைப்
புனல்கொடுப சரிப்ப தென்கோ
மோதியமைக் கடல்வேந்தை அவன்புனலால்
முழுக்காட்டும் முறைமை யென்கோ
நீதருசொற் கவிகொடுனைப் பாடியனது
அருள்பெறுமென் நீதி அம்மே.



*****************************************************************************
ஸ்ரீ ஜகத்குரு சங்கர பகவத்பாத சரணாரவிந்தாப்யாம் நம:
ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுரஸுந்தர்யை நம:

******************************************************************************

2 வருஷங்கள் முன்பு ஆரம்பித்த வலைப்பூ இது. அம்பிகையை சரந்நவராத்ரிக்கு ஆவாஹனம் செய்யும் இன்றைய தினம் முடிவுக்கு வந்திருக்கிறது. தொடர்ந்து இங்கு வந்து பதிவுகளைப் படித்தவர்கள் எல்லோருக்கும், குறிப்பாக ஒவ்வொரு பதிவுகளுக்கும் வந்து வாழ்த்திய குமரன் மற்றும் சகோதரி கவிநயா ஆகியோருக்கு எனது நன்றிகள். கவிராஜரது மொழிபெயர்ப்புக்களை வெளியிட ஆரம்பித்தபின் குமரன் அவற்றை சந்தி பிரித்து பொருள் சொல்கிறார், அதற்கும் எனது நன்றிகள்.


அம்பிகை எல்லோருக்கும் அவரவர் மனோபிஷ்டங்களை அருள பிரார்த்திக்கிறேன்.


சுபமஸ்து

செளந்தர்யலஹரி 97 & 98


கிராமாஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீம் ஆகமவிதோ
ஹரே: பத்நீம் பத்மாம் ஹர ஸஹசரீம் அத்ரிநயாம்
துரீயா காபி த்வம் துரதிகமநிஸ்ஸீம மஹிமா

மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷீ

அம்பிகே!, ஆகம ரகஸ்யங்கள் தெரிந்தவர்கள் உன்னை பிரம்மனின் பத்னியான சரஸ்வதியென்றும், மஹாவிஷ்ணுவின் பத்னியான லக்ஷ்மியென்றும், அத்ரி மஹரிஷியின் புத்ரியான பார்வதீயென்றும் சொல்லுகிறார்கள். ஆனாலும் நீ இவர்களல்லாத துரீய ரூபமுடையவளும், வர்ணிக்க முடியாதவளும், அடையமுடியாத, எல்லையற்ற மஹிமையுடன் கூடியவளான மஹாமாயா ஸ்வரூபிணியாக, சர்வ ப்ரபஞ்சத்தையும் மோஹிக்கச் செய்து உலகனைத்தையும் ஆட்டுவிக்கிறாய்.

சரஸ்வதீ, லக்ஷ்மி, பார்வதீ என்னும் ரூபங்களைக் கடந்தவள் பராசக்தி. த்ரிமூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, பரமேஸ்வரனைக் காட்டிலும் மேலானவரான சதாசிவனுடைய பத்னியாக இருந்துகொண்டு சுத்த வித்யையில் அடங்கிய மஹா மாயா ஸ்வரூபிணியாக ஸகல ப்ரபஞ்சங்களையும் வழிநடத்துகிறாள் என்கிறார் பகவத் பாதர். 'நிஸ்ஸீம மஹிமா' என்பதற்கு கால, தேச, வஸ்துக்களுக்கு அப்பாற்பட்டவள் என்று பொருள்.

த்ருஹிண க்ருஹிணிம் - பிரம்மாவின் பத்னி; கிரமாஹுர் தேவீம் = கிராம் தேவீம் - வாக்தேவியான சரஸ்வதி; ஹரே: பத்நீம் - விஷ்ணு பத்னியான லக்ஷ்மி; ஹரஸசரீம் அத்ரி தநயாம் - ருத்ரனுடைய பத்னியான பார்வதி; ஆகமவித: ஆகம ரஹஸ்யங்கள் அறிந்தவர்கள்; ஆஹு: - சொல்கிறார்கள்; த்வம் - நீ; துரீயா - இவர்களல்லாத; காபி - வர்ணிக்க இயலாத; துரதிகம நிஸ்ஸீம மஹிமா - அடையமுடியாத எல்லையற்ற மஹிமைகளுடன் கூடியவளாய்; மஹாமாயா - மஹா மாயா ஸ்வரூபிணியாக; விச்வம் ப்ரமயஸி - சர்வ லோகங்களையும் ஆட்டுவிக்கிறாய்.


கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

வேதியர்க ளயன்நாவில் விஞ்சைமக ளென்றும்
சீதரன்றன் மணிமார்பிற் செழுங்கமலை யென்றும்
நாதரிடத் தரிவையென்று நாட்டுவரெண் ணடங்க
ஆதிபரன் மூலபரை யாமளையுன் மயக்கால்.

********************************************************************************




கதா காலே மாத: கதய கலிதாலக்தக ரஸம்
பிபேயம் வித்யார்த்தீ தவ சரண நிர்ணேஜநஜலம்
ப்ரக்ருத்யா மூகானாமபி ச கவிதாகாரணதயாகதா
தத்தே வாணீ முக-கமல-தாம்பூல ரஸதாம்

தாயே!, உனது காலில் பூசப்பட்டிருக்கும் செம்மையான் ரஸம் கலந்ததால் தாம்பூல ரஸம் போல் சிவந்திருக்கும் உனது பாதப்ரக்ஷாளன ஜலமானது ப்ரம்ஹஞானத்தை அடைய விரும்பும் எனக்கு எப்போது பருக கிடைக்கும் என்பதை கூறியருளுங்கள். பிறவியிலேயே ஊமையானவர்களுக்கும் கூட கவிதா சக்தியை உண்டாக்கும் ஸரஸ்வதியின் தாம்பூல ரஸத்திற்கு ஸமமான சக்தி உடைய உங்களது பாத தீர்த்தம் எப்போது எனது வாயில் சேரும்?.

கொல்லூரில் பிறவி ஊமைக்கு பேசும் திறம் மட்டுமின்றி கவிதை பாடும் திறனையும் அம்பிகை தனது பாத தீர்த்தத்தால் அளித்ததாகவும், அதனையே ஆசார்யார் இங்கு குறிப்பிடுகிறார் என்று அருணா-மோதினியில் சொல்லப்பட்டிருக்கிறது. பெண்கள் தங்கள் கால்களில் செம்மையான குழம்பினை அழகிற்காக இட்டுக் கொள்வார்கள். அன்னையின் அக்குழம்பு கலந்த பாத தீர்த்தமானது தாம்பூல ரஸத்தை ஒத்து இருப்பதாகவும், அதனை பிரஸாதமாக ஏற்றுக் கொண்டு உண்பதன் மூலமாக ப்ரம்மஞானத்தை அடைய முடியும் என்பதையும் கூறி அது தனக்கு என்று கிடைக்குமோ என்று ஏங்குகிறார் ஆசார்யார்.

கலிதா லக்தக ரஸம் - காலில் உள்ள செம்மை நிறத்தான அலங்காரம்; தவ சரண நிர்ணே ஜந ஜலம் - உனது பாதங்களை அலம்பிய நீரை; வித்யார்த்தீ - ப்ரஹ்மஞானத்தை/ப்ரஹ்ம வித்யயை அடைய விரும்பும் கதா காலே - எந்தக்காலத்தில்; பிபேயம் - சாப்பிடுவேன்; கதய தயை செய்து சொல்வாயா?; ப்ரக்ருத்யா - இயற்கையாக; மூகானாம் அபி - ஊமைக்குக் கூட; கவிதா காரணதயா - கவித்வத்தை அருளுவதால்; வாணீமுக கமல தாம்பூல ரஸதாம் - சரஸ்வதி தேவியின் வாயில் இருக்கும் தாம்பூல ரஸத்தின் தன்மை; கதா தத்தே - எப்போது அடைகிறதோ.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!


செய்ய பஞ்சுகு ழம்பெ ழும்புனல்
செல்வி நின்பத நல்கவே
துய்ய பங்கய வாணி தம்பல
ஊறல் துய்த்தசொல் வாணர்போல்
மையல் நெஞ்சுறு மூம ருங்கவி
வாண ராகிம லிந்ததால்
மெய்ய டங்கலு மூழ்கு முன்
கவி வீறு நாவில டங்குமோ.

செளந்தர்யலஹரி 95 & 96


புராராதே ரந்த்த:புரமஸி ததஸ் த்வச்சரண்யோ:
ஸபர்யா மர்யாதா தரளக்ரணாநாம் அஸுலபா
ததா ஹ்யேதே நீதா: சத மக முகாஸ் ஸித்திம் அதுலாம்
தவ த்வாரோபாந்தஸ்திதி-பிரணிமாத்யாபிரமா


அம்மா!, நீ த்ரிபுராந்தகனான பரமசிவனின் பட்டமகிஷியாக இருப்பதால் உனது பாதபூஜையானது அடங்காத சித்தமுடையவர்கள் செய்யக் கிடைக்ககூடியதில்லை. இதனால்தான் இந்திராதி தேவர்கள்கூட உன்னுடைய க்ருஹத்தின் வாசற்படியருகில் காவல் புரியும் அணிமாதி சித்திகளால் உள்ளே செல்ல இயலாது தடை செய்யப்பட்டு அவர்களிருக்கும் வாயிற்படியிலேயே நின்று நிகரல்லாத மனோரத சித்தியை பெறுகிறார்கள்.

அம்பிகையின் இல்லமான சிந்தாமணி க்ருஹத்தின் ஒன்பதாவது வாசலில் அணிமாசித்திகள் எப்போதும் இருந்து காவல் காப்பதாக ஐதீகம். அவர்களது உத்தரவு இன்றி யாரும் உள்ளே செல்ல முடியாது. இந்திராதி தேவர்கள் வந்தால் கூட இந்திரிய நிக்ரஹமில்லாத காரணத்தால் அவர்களை உள்ளேசெல்ல அனுமதிக்க மாட்டார்களாம் அணிமாசித்திகள். இதன் மூலம் இந்திரிய நிக்ரஹம் என்பதன் சிறப்பையும், அன்னையின் பக்தர்கள் அணிமாசக்திகளுக்கு இணையாக வாயில்வரை சென்று வசிக்கக் கூடிய வாய்ப்பையும் ஒருங்கே கூறியிருக்கிறார் ஆசார்யார்.

த்வம் - நீ; புராராதே - த்ரிபுர சம்ஹாரியான பரமசிவனது; அந்த:புரம் அஸி - பட்டமகிஷியாக இருப்பது; அத: அக்காரணத்தால்; த்வச் சரணயோ - உன் பாதங்களுக்கு; ஸபர்யா மர்யாதா - பூஜை செய்வது; தரள கரணானாம் - சஞ்சலமான சித்தத்தை உடையவர்களுக்கு; அஸுலபா - சுலபமில்லை;ததா ஹி - ஆகவே; ஏதே சதமகமுகா: அமரா: - இந்திரன் முதலான தேவர்கள்; தவ - உனது; த்வாரோபாந்த ஸ்திதிபி: - வாசற்படியருகில் இருக்கும்; அணிமாத்யாபி: - அணிமா முதலிய அஷ்டசித்திகளுடன்; அதுலாம் ஸித்திம் - நிகரற்ற ஸித்தியை; நீதா: அடைய முடிகிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

தேவியும் இல்லஞ் சிவனுறை அந்தப் புரமானால்
யாவ ருனைக்கண் டெய்துவ ரிமையோர் முதலானோர்
ஆவல்கொ டெய்த்துன் வாயிலில் அணிமா திகளாலே
மேவிய சித்திப் பேறோடு மீள்வா ரானாரே.
*******************************************************************************


களத்ரம் வைதாத்ரம் கதிகதி பஜந்தே ந கவய:
ச்ரியோ தேவ்யா: கோ வா ந பவதி பதி: கைரபி தநை:
மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸ்தீநாம் அசரமே
குசாப்யாம் ஆஸங்க: குரகதரோரப்யஸுலப:


சதிதேவி என்றழைக்கப்படும் பதிவிரதைகளின் தெய்வமே!, பிரம்மாவின் மனைவியை எத்தனையோ கவிகள் தங்களது மேதா விலாசத்தால் அடைவதில்லையா?, சிறிதளவே செல்வத்தை கொண்டிருந்தாலும் எவனோ ஒருவன் கூட லக்ஷ்மி-பதி என்று கூறப்படுவதில்லையா?. பதிவிரதைகளில் முதன்மையானவளே!, உனது நகில்களது சம்பந்தமோ மஹாதேவனையன்றி ஒரு மருதோன்றி மரத்திற்குக் கூட கிடைத்ததில்லயே!.

மஹா கவிஞர்கள் மற்றும் மந்த்ர ஜபம் போன்றவற்றின் மூலமாக சரஸ்வதி கடாக்ஷ்த்தைப் பெற்றவர்களை 'சரஸ்வதி வல்லபர்கள்' என்றும், இதேபோல தன-தான்ய செல்வங்களை வசமாக்கிக் கொண்டிருப்பவர்களை 'லக்ஷ்மி-பதி' என்றும் கூறுவது வழக்கம். ஆனால் பார்வதீ பதி என்றோ, ஸதி-பதி என்றோ யாரையும் கூறுவதில்லை. வித்தையையும், செல்வத்தையும் மனிதர்கள் வசப்படுத்திக் கொண்டாலும், மனத்துக்கும், வாக்குக்கும் எட்டாத பரதேவதையை எவரும் வசப்படுத்த இயலாது. அவள் பரமசிவனுக்கே வசப்பட்டவள் என்று கூறுகிறார் லக்ஷ்மீதரர்.

குரவகதரோ: என்றால் மருதோன்றி (மருதாணி) மரம். முன்பு அசோக மரம் புஷ்பிக்க அன்னையின் பாதத்தால் தீண்டப்படவேண்டும் என்று 85 ஆம் ஸ்லோகத்தைல் இங்கே சொன்னது போல, மருதோன்றி மரம் புஷ்பிக்க என்பதற்காகக் கூட அன்னை அதனை ஆலிங்கனம் செய்யமாட்டாளாம். ஏனெனில் அவளால் ஆலிங்கனம் செய்யப்படுபது ஸ்ரீ பரமேஸ்வரன் ஒருவனே என்றுகூறி அவளது பதிவிரதா சிறப்பை கூறியிருக்கிறார் பகவத்பாதர்.

வைதாத்ரம் களத்ரம் - பிரம்மாவின் பத்னியாகிய சரஸ்வதி; கதிகதி கவய: எத்தனை கவிகள்; ந பஜ்ந்தே - அடையவில்லை; கோ வா - எவன் தான்; கைரபி தநை: - கொஞ்சம் செல்வம்; ச்ரியோ தேவ்யா: - லக்ஷ்மிதேவிக்கு; பதி: - புருஷனாக; ந பவதி - ஆகிறதில்லை; ஸதீநாம் அசரமே - பதிவிரதைகளுள் முதன்மையானவளே; மஹாதேவம் ஹித்வா - மஹா தேவரைத் தவிர;தவ - உன்னுடைய; குசாப்யாம் ஆஸங்க: ஆலிங்கனமானது; குரவகதரோ: அபி - குரவக வ்ருக்ஷத்திற்குக் கூட; அஸுலப: கிடைப்பதரிது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே

கலைமகளும் பொதுமடந்தை கமலையுமற் றவளே
மலைமகள் நீ கற்புடைய வனிதையெனப் பகருங்
குலமறைக ளெதிர்கொடுநின் குரவினையும் அணையா
முலைகுழையப் புணர்வதுநின் முதல்வரல திலையால்.

செளந்தர்யலஹரி 85 & 86


நமோவகம் ப்ரூமோ நயநரமணீயாய பதயோ:
தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புடருசிரஸாலக்தகவதே
அஸுயத் யத்யந்தம் யதபிஹநனாய ஸ்ப்ருஹயதே
பசூனாம் ஈசாந: ப்ரமதவந கங்கேளிதரவே


தாயே!, எந்தப் பாதங்களால் உதைக்கப்படுவதற்கு உனது நந்தவனத்தில் இருக்கும் அசோக மரம் ஆசைப்படுகிறதோ அதைக்கண்டு, அப்பாதங்களின் ஸ்பரிசம் தனக்கு மட்டுமே உரியதென்று பரமசிவனே அஸூயைப்படும்படியானதும், கண்களுக்கு இனிமையும், செம்மையான குழம்பால் அலங்கரிக்கப்பட்டதுமான உனது சரணங்களுக்கு எனது நமஸ்காரங்களைக் கூறுகிறேன்.

உத்தம ஸ்த்ரீகளுடைய கால்களால் உதைக்கப்பட்டால் தான் அசோகமரமானது புஷ்பிக்கும் என்பர். அம்பாளுடைய நந்தவனத்தில் இருக்கும் அசோக மரமானது அவளுடைய பாத ஸ்பரிசத்திற்கு ஏங்குவதாகவும், அதைக்கண்ட பரமசிவன், கலஹ காலத்தில் தனக்கு மட்டுமே கிடைக்கும் அந்த பாத ஸ்பரிசத்தினை எதிர்பார்க்கும் அம்மரத்தின் மீது அஸூயை கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

தவ - உன்னுடைய; நயந ரமணீயாய - கண்களுக்கு ரமணீயமான/இனிமையான; ஸ்புர ருசிர ஸாலக் தகவதே - ஒளியுடன் விளங்குகிறதும், ஈரமான செம்பஞ்சுக் குழம்புடன் கூடிய; பத்யோ: அஸ்மை த்வந்த்வாய - இந்த இரு பாதங்களுக்கும், ந்மோவாகம் - நாம்ஸ்கார வார்த்தைகளை; ப்ரூம: சொல்லுகிறோம்;யத் அபிஹநனாய - எந்தப் பாதங்களால் உதையப்படுவதை; ஸ்ப்ருஹயதே - விரும்புகிற; ப்ரமதவந கங்கேளி தரவே - நந்தவனத்தில் இருக்கும் அசோக வ்ருக்ஷத்தின்; பசூனாம் ஈசன: - எல்லா ப்ராணிகளுக்கும் ஈசனான பரமேஸ்வரனும்; அத்யந்தம் அஸூயதி - அதிகமான பொறாமையுடன்

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

அரியமென் காவில் நீபுக்கு
அசோகினிற் பாத மேற்ற
உரியநம் பதத்தை யீதோ
உறுமெனப் பொறாது பெம்மான்
எரியுற மரத்தை நோக்கும்
இயல்பினைக் கேட்டும் யானுன்
வரிமலர்ப் பாதம் போற்றும்
வளமினி தினிது மாதே.

*********************************************************************************


ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலநமத வைலக்ஷ்ய நிமிதம்
லலாடே பர்த்தாரம் சரணகமலே தாடயதி தே
சிராத் அந்த: சல்யம் தஹனக்ருதம் உந்மூலிதவதா
துலாகோடி க்வாணை: கிலிகிலிதம் ஈசாநரிபுணா

அம்பிகே, விளையாட்டாக உனது பிறந்த வீட்டினைப் பற்றி ஏளனமாகச் சொன்ன பரமசிவனார், உன்னுடைய கோபத்தைக் கண்டு, என்ன செய்வதென்று தெரியாது உன்னை வணங்கிடுகிறார். அவ்வாறு வணங்கும் போது அவருடைய நெற்றியில் உன்னுடைய பாத கமலங்களில்பட்டு, உன்பாத 'சிலம்புகள் கிலி-கிலி'என்று ஒலியெழுப்புகின்றன. உன் பாதசிலம்புகள் ஏற்படுத்தும் அவ்வொலியானது மன்மதன் முன்பு ஒருமுறை சிவனாரின் நெற்றிக் கண்ணிலிருந்து வந்த நெருப்பினால் பஸ்மமானதால் கொண்டிருந்த பாணம் போன்ற பகையை தீர்த்துக் கொள்ளுவது போல சிரிப்பதாக இருக்கிறது.

அம்பாளிடத்து சரஸம் செய்வதாக எண்ணி அவளுக்குக் கோபம் உண்டாகும்படியாக அவளது பிறந்த் வீட்டினை இகழ்ந்த பரமன், அதனால் கோபம் கொண்ட அம்பிகையை சமாதானம் செய்யும் விதமாக மன்னிப்புக் கேட்டு அவளது பாதங்களில் நமஸ்கரிப்பதாகவும், அப்போது சிவனது நெற்றி அன்னையின் பாதங்களில்பட்டு, அவள்காலில் இருக்கும் பாத சிலம்புகள் ஒலியெழுப்புவதாகவும் சொல்கிறார். மஹா-பதிவிரதையான அம்பிகை தனது பர்த்தா நமஸ்கரிப்பது என்பது ச்ருங்கார சாஸ்த்ரங்களின் ரீதியை அனுசரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார். முன்பு ஒருமுறை பரமசிவன் மன்மதனை எரித்த காரணத்தால் மன்மதனுக்கு பரமசிவனிடத்து இருந்த பகையானது உடம்பில் தைத்த பாணம் போன்று இருந்ததாகக் கூறுகிறார். தன்னை எரித்த பரமன் நெற்றி நிலத்தில்பட வீழ்ந்து வணங்குவது கண்ட மன்மதன் தானே அவரை ஜெயித்தது போன்று சிரித்து மகிழ்வது போல அன்னையின் பாதசிலம்புள் ஒலிக்கிறது என்கிறார்.

ம்ருஷா - விளையாட்டாக; கோத்ரஸ்கலனம் - பிறந்த வீடு பற்றிய ஏளனம்; க்ருத்வா - செய்தது; அத வைலக்ஷ்ய நமிதம் - அதனால் ஏற்பட்ட கோபத்தைக் கண்டு என்ன செய்வதென; பர்த்தாரம் - கணவரான பரமசிவன்; லலாடே - நெற்றியில்; தே சரணகமலே - உன் பாத-கமலங்களில்; தாடயதி சதி - (பாதங்களின்) மேலே பட்டு; ஈசான ரிபுணா - ஈசனின் விரோதியான மன்மதனால்; தஹநக்ருதம் - நேத்ராக்னியால் எரித்ததால் ஏற்பட்ட; சிராத் - வெகுகாலமாக இருக்கும்; அந்த: சல்யம் - தனது மனதில் பாணமாகப் பதிந்த பகையை; உந்மூலிதவதா - வேரோடு எடுத்து; துலாகோடிக்வாணை: - கால் சிலம்பில் இருக்கும் சிறிய மணிகளால் எழும் சப்தத்தை; கிலிகிலிதம் - கிலி-கிலி என்ற சப்தம்;

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

மறும டந்தையை மொழிய நின்பத
மலர்வெ குண்டர னுதலிலோர்மு
றைய றைந்திட விழியி னும்பட
முத்ப ழம்பகை கருதிவேள்
இறையை வென்றனன் விழியை வென்றனன்
எனமு ழங்கிய குரலெனாது
அறைசி லம்பெழும் அரவ மென்பதன்
அருண மங்கல கமலையே.

செளந்தர்யலஹரி 83 & 84


பராஜேதும் ருத்ரம் த்விகுண சரகர்பெள கிரிஸுதே
நிஷங்கெள ஜங்கே தே விஷமவிசிகோ பாடம் அக்ருத
யதக்ரே த்ருச்யந்தே தச சர பலா: பாதயுகளீ
நகாக்ரச்சத்மாந: ஸுரமகுட சணைக நிசிதா:

அம்மா!, உன்னுடையக கணுக்கால்களானது பரமசிவனை ஜெயிக்க மன்மதனால் செய்யப்பட்ட அம்பறாத்தூணிகள் மாதிரி இருக்கின்றன. அம்பறாத்தூணிகளின் முன்பாகத்தில் அம்புகளின் கூர்மை மிகுந்த நுனிகள் தெரிவது போல உனது பத்து கால் விரல்களிலிருக்கும் நகங்கள் மன்மதன்தனது பஞ்ச பாணங்களை இரட்டிப்பாக்கிக் கொண்டது போல இருக்கிறது, அந்த பத்து நகங்கள் உன் காலில் விழுந்து வணங்கும் தேவர்களது மகுடங்களால் தீட்டப்பட்டு கூர்மையுடன் இருக்கிறது.

மன்மதன் தன்னுடைய பஞ்சபாணங்களால் பரமசிவனை ஜெயிக்க முடியாததைப் பார்த்து, அவரை ஜெயிக்கத்தக்க பாணங்களையும், அந்த பாணங்களை வைக்கும் அம்பறாத்தூணியையும் ஏற்படித்திக் கொண்டதாகவும், அவ்வாறான பாணங்களும், அம்பராத்தூணியும் அன்னையின்கால்களும், அக்கால்களில் இருக்கும் நகங்களுமே என்று கூறியிருக்கிறார். ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமத்திலும், "இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மரதூணாப ஜங்கிகா' என்னும் நாமம் அன்னையின் கணுக்கால்களை மன்மதனது அம்பறாத்தூணியாகவே சொல்லியிருக்கிறது. இவ்வாறானஅம்பிகையின் கணுக்கால்களது அழகாலேயே பரமேஸ்வரனை பின்னர் ஒருமுறை ஜெயித்துவிட்டான் மன்மதன் என்று கூறுவதன் மூலமாக அன்னையின் கால் அழகினை விவரித்திருக்கிறார்.

கிரிஸுதே - மலையரசன் மகளே; விஷமவிசிக: - மன்மதன்; ருத்ரம் பராஜேதும் - பரமசிவனை ஜெயிக்க; த்விகுணசர கர்பெள - தன் பாணங்களை இரட்டித்து பத்து பாணங்களுடன்; நிஷங்கெள - அம்பறாத்தூணியாக; தே ஜங்கே - உன் கணுக்கால்கள்; அக்ருத - செய்தான்; பாடம் - நிச்சயம்; யத் அக்ரே - அவைகளின் முன்பாகத்தில்; பாத யுகளீ - இரண்டு பாதகளிலும்; நகாக் ரச்சத்மான:- விரல் நகங்களின் நுனிகள்; ஸுரமகுட - வணங்குகிற தேவர்களின் மகுடங்களே; சாணைக நிசிதா: - சாணைக் கற்களாகக் கொண்டு தீட்டப்பட்ட; தச சர பலா: - அந்த பத்து பாணங்களுடைய கூர்கள்; க்ருச்யந்தே - காணப்படுகிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

உம்பர்தொழுந் தொறுமகுடச் சாணை தீட்டி
ஒளிருநக நுணைக்கணையோர் ஐந்தும் ஐந்துஞ்
செம்பொன்மணிக் கணைக்காலாம் இணைப்பொற் றூணி
சேர்த்தன்றோ சிவன்பகைவேள் தீருகின்றான்
அம்பொருபத் தளித்தனையின் றன்று போல
ஐங்கணைதொட் டழியினது பழுதென் றன்றோ
வம்பமருங் கனதனப்பொற் றிருவே உன்றன்
மனவிரகின் செயலொருவர் மதிப்ப தன்றே

*********************************************************************************




ச்ருதீனாம் மூர்தானோ தததி தவ யெள சேகரதயா
மமாப்யேதெள மாத: சிரஸி தயயா தேஹி சரணெள
யயோ: பாத்யம் பாத: பசுபதி ஜடாஜுட தடிநீ
யயோர் லாக்ஷாலக்ஷ்மி: அருணஹரி சுடாமணிருசி:

தாயே!, எந்த சரணங்கள் வேதாந்தங்களுக்கு சிரத்தில் அணியும் அணிகலனாக விளங்குகிறதோ, எந்த சரணங்களின் பாதப்ரக்ஷாலனம் (பாதபூஜையின் போது பாதத்தில் வார்க்கும் நீர்) பரமசிவனது ஜடாமுடியிலிருக்கும் கங்கையால் நடைபெறுகிறதோ, எந்த சரணங்களில் விஷ்ணு தரித்துள்ள சூடாமணியின் ஒளியால் செம்பஞ்சுக் குழம்பு தீட்டிய நிறத்தை ஏற்படுத்துகிறதோ, அப்படியான உனது திவ்ய சரணங்களை எனது சிரஸிலும் தயவுசெய்து நீ வைப்பாயாக.

அம்பாளது சரணங்கள் வேதங்களாலும், பரமசிவனாலும், விஷ்ணுவாலும் சிரஸில் தரிக்கப்படுபவை என்றும், அதுபோலவே அம்பிகை தனது (சங்கரரது) சிரஸிலும் அம்பிகை தனது சரணங்களை வைக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அம்பிகையின் சரண-கமலங்களை ச்ருதிகளாகிய பெண்கள் தங்கள் தலையில் சூடும் புஷ்பங்களைப் போல எப்போதும் தலையில் வைத்திருப்பதாக கூறுவதால், வேதங்கள் அன்னையின் காலடியில் எப்போதும் இருப்பவை என்று கூறுகிறார். இதையே சஹஸ்ரநாமத்தில், ' ச்ருதி ஸீமந்த ஸிந்தூரீக்ருத பாதாப்ஜ தூளிகா' என்கிறது. அதாவது வேத மாதா, அன்னையின் காலடியில் நமஸ்காரம் செய்யும் போது அந்த சரணகமலங்களில் இருக்கும் சிவப்பு நிறமான மகரந்தத் துகள்கள் வேதமாதாவின் தலை வகிட்டில் படிந்து அங்கே தரிக்கப்படும் ஸிந்தூரமாகிறது என்கிறது.

மாத: தாயே; தவ - உன்னுடைய; யெள சரண - எந்த சரணங்களை; ச்ருதீனாம் மூர்தாந - வேதங்களுடைய சிரஸ்; சேகரதயா - சிரோ புஷணங்களாக; தததி - தரிக்கின்றனவோ; ஏதெள - அவை (அந்த சரணங்கள்); மம சிரஸி அபி - என்னுடைய சிரஸிலும்; தயயா - தயவு செய்து;தேஹி - வைப்பாயாக; யயோ: - எந்த சரணங்களுடைய; பாத்யம் பாத: - பாதோதக ஜலமானது; பசுபதி ஜடாஜூட தடிநீ - பரமசிவனுடைய ஜடையிலிருக்கும் கங்கையாகவும்; லாக்ஷாலக்ஷ்மி: - செம்பஞ்சுக்குழம்பின் ஒளியாக; அருண ஹரிசூடாமணி ருசி: விஷ்ணுவின் சூடாமணியிலிருந்து வரும் சிவந்த ஒளியாக இருக்கிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

உளமகிழ் மகிழ்நர் சென்னி
உறுநதி விளக்க மாயோன்
கிளர்முடிப் பதும ராகத்
கேழொளி செம்பஞ் சேய்க்கும்
முளரிநின் பதங்கள் வேத
முடியுறப் பதித்த தவ்வாறு
எளியஎன் தலைமேல் வைக்க
இரங்குவ தென்று தாயே.

செளந்தர்யலஹரி 81 & 82



குருத்வம் விஸ்தாரம் க்ஷிதிதரபதி: பார்வதி நிஜாத்
நிதம்பாத் ஆச்சித்ய த்வயி ஹரண்ரூபேண நிததே
அதஸ்தே விஸ்தீர்ணோ குருயம் அசேஷாம் வஸுமதீம்
நிதம்ப ப்ராக் பார ஸ்த்தகயதி லகுத்வம் நயதி ச


தாயே!, உன்னுடைய நிதம்ப ப்ரதேசமானது அதன் பருமனாலும், விசாலத்தாலும் பூமியையே மறைத்து, பூமியை லேசான இருப்பதுபோல் செய்கிறது. இவ்வாறான பருமனையும், விசாலத்தையும் உன்னுடைய தகப்பனாராகிய மலையரசன்/ஹிமவான் தன்னுடைய அடிவாரத்தில் இருந்து எடுத்து உனக்கு ஸ்த்ரீதனச் சீராக அளித்தாற்போல இருக்கிறது.

இந்த ஸ்லோகத்தில் அன்னையின் நிதம்பத்தைச் சொல்லுகையில் அது பூமியை விடப் பெரியதாக, அதிக கனத்துடன் இருப்பதாகவும், அவ்வாறான அன்னையின் நிதம்பத்தால் பூமி லேசாக இருப்பதாகத் தோன்றுகிறது என்றும் சொல்லியிருக்கிறார். மேலும், மலையடிவாரத்தை மலையின் நிதம்பம் என்று கூறுவதையொட்டி மலையரசன் தனது அடிவாரத்தை தன்மகளான பார்வதிக்கு நிதம்பமாகக் கொள்ளசீதனம் கொடுத்துள்ளதாகக் கூறுகிறார்.


பார்வதீ - மலையரசன் மகளே!;க்ஷிதிதரபதி: - பர்வதராஜனாகிய உன் தந்தை; குருத்வம் - கனமான தன்மையுள்ள; விஸ்தாரம் - விசாலமானதான; நிஜாத் நிதம்பாத் - தன்னுடைய நிதம்ப ப்ரதேசத்திலிருந்து;ஆச்சித்ய - எடுத்து; த்வயி - உன்னிடத்தில்; ஹரணரூபேண - ஸ்த்ரீதனச் சீராக; நிததே - வைத்திருக்கிறார்; அத: - ஆகையால்; அயம் - இந்த; குரு: - பருத்த; விஸ்தீர்ண - விசாலமான; தே - உன்னுடைய;நிதம்ப ப்ராக்பார - நிதம்பத்தின் உருவமானது; அசேஷாம் வஸுமதீம் - பூமியின் எல்லா பாகத்தையும்; ஸ்தகயதி - மறைக்கிறது; லகு த்வம் நயதி ச - (பூமியை) லேசாக இருப்பது போல தோன்றச் செய்கிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

கொத்துவரி யலர்சோலை யிமயவெற் பரசன்மெய்க்
குலமலைப் பக்க மெனவாழ்
அத்தனைவி ரிந்தவக லத்தொடுபெ ரும்பாரம்
அடையவுன்நி தம்ப விடையே
எத்தனைபெ ரும்புவனம் இற்றாலும் அழிவிலை
இதற்கெனச் சேம நிதிபோல்
வைத்தது பரந்திடங் கொண்டுவகை யிடமற
வருத்தவோ மதுர அமுதே.


******************************************************************************



கரீந்த்ராணாம் சுண்டாந் கநககதளீ காண்ட படலீம் உபாப்யாம் ஊருப்யாம் உபயமபி நிர்ஜித்ய பவதி
ஸுவ்ருத்தாப்யாம் பத்யு: ப்ரணதி கடிநப்யாம் கிரிஸுதே
விதிஜ்ஞே ஜாநுப்யாம் விபுதகரிகும்பத்வயம் அஸி


அம்பிகே!, உன்னுடைய தொடைகளிரண்டும் கஜராஜங்களது துதிக்கைகளையும், தங்க வாழை மர தண்டுகளையும் விஞ்சிய சோபையுடன் கூடியதாக இருக்கிறது. உன்னுடைய முழங்கால்களில் இருக்கும் சில்லுகளோ மிகவும் உருட்சியாக, உனதுபதி பரமசிவனுக்கு நீ அடிக்கடி நமஸ்காரம் செய்வதால் மிகுந்த கடினமாகி, திக்கஜங்களைன் கும்பங்களைக் கூட ஜெயித்த பலத்துடன் விளங்குகின்றன.

அம்பிகை சகல சாஸ்த்ரார்த்தங்களையும் அறிந்தவளாதலால் தனக்கு எவ்வளவு மஹிமை இருந்த போதிலும், மஹா பதிவிரதையாக, தன் புருஷனான பரமசிவனுக்குச் செய்யவேண்டிய மரியாதைகளில் கொஞ்சமும் குறைவில்லாமல் நடந்து கொள்கிறாள்,என்பதை 'வித்ஜ்ஞே' என்ற சொல்லாலும், 'பத்யு: ப்ரணதிகடினாப்யாம்' என்பதாகவும் அறியத் தருகிறார். 'விதிஜ்ஞே' என்பதற்கு வேதார்த்தங்களை அனுஷ்டிக்கிறவளென்றும் சொல்லலாம்.

பவதி - அம்மா; கிரிஸுதே - மலையரசன் மகளே!; விதிஜ்ஞே - வேதார்த்தங்கள் அறிந்தவளே; கரீந்த்ராணாம் சுண்டாந் - கஜங்களின் தும்பிக்கைகளையும்; கநக கதளீகாண்ட படலீம் - தங்க வாழைமரத்து தண்டுகளையும்; உபயமபி - இரண்டையும்;உபாப்யாம் ஊருப்யாம் - உன் இரு தொடைகளால்; நிர்ஜித்ய - ஜெயித்து; ஸுவ்ருத்தாப்யாம் - நன்றாக திரண்ட; பத்யு: ப்ரணதி கடினாப்யாம் - புருஷனான பரமசிவனுக்கு அடிக்கடி நமஸ்காரம் செய்வதால் கடினமாகிய; ஜாநுப்யாம் - முழங்கால் சில்லுகள்;விபுதகரி கும்பத்வயம் - கஜங்களின் கும்பங்களை; நிர்ஜித்ய - ஜெயித்த; அஸி - விளங்குகிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

பொற்கதலி புறங்காட்டுங் குறங்கால் வேழப்
புழைக்கைதடிந் துஞ்சிவனைப் பணிந்து தேய்ந்த
வற்கடின முழந்தாளிற் கும்பஞ் சாய்த்து
மணிமருப்பைக் கனதனத்தால் வளைத்து மம்மே
நிற்கடின கோபமம ராமை கண்டோ
நித்தரதன் தொக்குரித்த துடுத்த நேயம்
பிற்கருதி யிவளுறுப்போ டுவமை வீறு.
பெற்றதிது என்னுமிந்தப் பெருமை கண்டோ.

செளந்தர்யலஹரி 79 & 80


நிஸர்க்க க்ஷீணஸ்ய ஸ்தநதடபரேண க்லமஜுஷோ
நமந் மூர்தேர் நாரீதிலக சநகை: த்ருட்யத இவ
சிரம் தே மத்யஸ்ய த்ருடித தடிநீ தீரதருணா
ஸமாவஸ்த்தா ஸ்த்தேம்னோ பவது குசலம் சைலதநயே


பெண்குலத்தின் திலகமான சைல புத்ரியே!, இயற்கையிலேயே மெல்லியதான உன்னுடைய இடையானது ஸ்தநங்களின் பாரத்தைத் தாங்கும் ச்ரமத்துடன் கொஞ்சம் வளைந்து இருப்பதைப் பார்க்கையில்,ஆற்றின் இடிந்த கரையில் இருக்கும் மரக்கிளை சற்றே உடைந்து தொங்கி மெள்ள மெள்ள ஒடிந்து போய்விடுவது போல தோன்றுகிறது. அவ்வாறான ஆபத்து நேராமல் வெகுகாலம் க்ஷேமமாக இருக்க வேண்டுமென ப்ராத்திக்கிறேன்.

சாமுத்ரிகா லக்ஷணத்தின்படி சுந்தர ஸ்திரீகளது இடை மிகச் சிறிதானதாகச் சொல்லப்படும். அன்னையின் இடையும் அவ்வாறு இருப்பதாகச் சொல்லி, ஸ்தனத்தின் பாரத்தால் சற்றே வளைந்த உடலமைப்பினைக் கொண்டதாக இருக்கிறாள் என்று கூறுகிறார். இதனை அபிராமி அந்தாதியில் 'சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும், பென்னம் பெரிய முலையு முத்தாரமும்' என்று கூறியிருக்கிறார் பட்டர்.

நாரீதிலக - பெண்ணினத்தின் திலகமான; சைலதநயே - மலையரசன் மகளே; நிஸர்க்க க்ஷீணஸ்ய - ஸ்வபாவமாகவே மெலிந்த; ஸ்தந-தட-பரேண - நகில்களின் பாரத்தால்; க்லம ஜுஷ: - சிரமத்துடன்; நமந்மூர்த்தே: - (பாரத்தால்) வளைந்த ரூபத்துடன்; சநகை: - மெல்ல மெல்ல; த்ருட்யத இவ - ஒடிந்து போவது போல; த்ருடித - இடிந்த; தடிநீ தீர - நதிக்கரையிலுள்ள; தருணா - மரம்; ஸ்மாவஸ்தா - சமமான நிலையில்; ஸ்தேம்ன: இருக்கும்; தே மத்யஸ்ய - உன்னுடைய இடுப்பிற்கு; குசலம் - க்ஷேமமானது; சிரம் - நீண்ட காலம்; பவது - உண்டாகட்டும்.

கவிராஜரது மொழிபெயர்ப்பு:

தரைம டந்தை பரவு மங்கை
தனத டம்பொ றாதுநின்
திரும ருங்கு லறவ ளைந்து
சிறுகி மூவி ரேகையாய்
வரைபி ளந்தொ ரிடிக ரைக்குள்
வாழ்ம ரத்தொ டொத்ததால்
உரைக டந்து விடுமுன்
மற்றொ ருறுதி தேட நாடுமே

----------------------------------------------------------------------------------------


குசெள ஸத்யஸ் ஸ்வித்யத் தடிகடித கூர்பாஸ பிதுரெள
கஷந்தெள தோர்மூலே கநகலசாபெள கலயதா
தவ த்ராதும் பங்காத் அலமிதி வலக்நம் தநுபுவா
த்ரிதா நத்தம் தேவி த்ரிவளி லவலீவல்லிபிரிவ

தாயே!, உன்னதமானதும், கனத்த தங்கக் கலசங்கள் போன்றதுமான உனது ஸ்தனங்களை மன்மதன் உருவாக்கிய போது, அவைகளின் பாரத்தால் உன்னுடைய மெலிதான இடுப்பனது ஒடிந்து போகாமலிருப்பதற்காக இடுப்பினைச் சுற்றி வள்ளிக் கொடிகளால் மூன்று சுற்றுக்கள் சுற்றியது போல உனது இடுப்பிலிருக்கும் த்ரிவளியானது தோன்றுகிறது.

அன்னையின் ஸ்தனங்களை உருவாக்கியவன் என்பதாக மன்மதனைக் குறிப்பிடுவதன் மூலமாக படைக்கும் பிரம்மனை விலக்கி, அன்னையின் பக்தர்களில் சிறந்தவரும், பராசக்தியின் மைந்தனுமான (மன்மதனுக்கு மறுபடிஉயிர் கொடுத்த அன்னையாகிறாள்)மன்மதனையே அன்னையின் ரூபத்தை சமைத்தவனாகக் காட்டுகிறார் பகவத்பாதர். அன்னை தனது பதியான பரமசிவனுடைய ரூபத்தை எப்போதும் மனத்தில் எண்ணுவதால் ஸ்தனங்கள் விம்மிப் பருத்து தங்களைக் கட்டியிருக்கும் கச்சையை விலக்குவதாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது.

த்ரிவளி என்னும் மூன்று மடிப்புக்கள் பற்றி முன்பே சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு அந்த த்ரிவளியானது இடுப்பு முறிந்திடாது காப்பதற்காகப் போடப்பட்ட கட்டுப் போல இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. லலிதா ஸஹஸ்ர நாமத்தில் வரும் 'ஸ்தன-பார-தலன் - மத்ய பட்ட பந்த-வலித்ரயா' என்பதும் இந்தப் பொருளையே குறிப்பிடுகிறது.

ஸ்வித்யத் தடகடித கூர்பாஸ பிதுரெள - வேர்வையால் உடலில் ஒட்டிய கச்சையைக்; தோர்மூலே கஷந்தெள - கைகளின் அடிப்பாகத்தில் இருக்கும்; கநக கலசாபெள - தங்க கலசங்களொத்த; குசெள - உன் ஸ்தநங்கள்; கலயதா - செய்த; தநுபுவா - மன்மதன்; வலக்நம் - இடுப்பு;பங்காத் அலம் இதி - முழுவதும் ஒடிந்திடாது; த்ராதும் - காக்கும்; த்ரிவளி தவ வலக்நம் மூன்று வரிகளை/மடிப்புகளையுடைய உன்னுடைய இடுப்பு; லவலீவல்லிபி: - வள்ளிக் கொடிகளால்; த்ரிதா நத்தம் இவ மூன்று சுற்றுக்கள் சுற்றப்பட்டது போல இருக்கிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு:

வம்பைத் தொலைத்துதறி யிறுகிக் கனத்திளகி
வருபுடை நெருக்கி வளர்மாக்
கும்பக் கடாக்களிற் றினையனைய உனதுமுலை
கொடிதுகொடி தென்று வெருவா
அம்பொற் றனிக்கமல இறைபொறா திடையென
அழுத்துபூ ணென முனிவரோடு
உம்பர்க்கு முளமருள ஒளிகெழுமி ரேகைமூன்
றுலகமோ தெளிவ துமையே

செளந்தர்யலஹரி 77 & 78

யதேதத் காளிந்தீ தநுதர தரங்காக்ருதி சிவே
க்ருசே மத்யே கிஞ்சிஜ் ஜநநி தவ யத்பாதி ஸுதியாம்
விமர்தாத் அந்யோந்யம் குச கலசயோரந்தரகதம்
தநூபூதம் வ்யோம ப்ரவிசதிவ நாபிம் குஹரிணீம்


மங்கள ஸ்வரூபியே! அம்மா, உன்னுடைய மெலிந்த இடையில் யமுனா நதியின் மிக மெல்லிய அலைகள் போன்ற ஞானிகளுக்குப் புலப்படும் ரோமாவளி,நாபியில் முடிவடைகிறது. இது எப்படியிருக்கிறதென்றால், பர்வதங்கள் போன்ற இரு நிகில்களிடயே அகப்பட்ட வானம் நாபியாகிய குகையில் புகுவது போல இருக்கிறது.

காளிந்தீ என்பது யமுனா நதியின் இன்னொரு பெயர், இதன் நிறம் கருமை. இந்த நதியின் சிற்றலைகள் போன்றிருக்கிறதாம் அன்னையின் ரோமாவளி. நீல நிறமான வானம், மலையொத்தஸ்தனங்களினுடே உராய்வதால் ஸுக்ஷ்மமான சக்தியுடன் சென்று நாபியாகிய குகையில் சேர்கிறதாக வர்ணிக்கப்படுகிறது. மன்மதனை எரித்த பரமேஸ்வரனுக்கு காம விகாரத்தை உண்டுபண்ணக்கூடியஅழகுடையது தேவியின் நாபி என்பதே இந்த ஸ்லோகத்தில் சொல்வது.

சிவே - மங்கள ரூபியே; ஜனனி - தாயே; தவ க்ருசே மத்யே - உன்னுடைய மெல்லியதான் இடையில்; யத் ஏதத் - யாதொரு; காளிந்தீ தநூதர தரங்காக்ருதி - யமுனையின் மிகவும் மெல்லியதான அலை போன்ற ரூபத்துடன் கூடிய;கிஞ்சித் - சிறிய வஸ்துவான ரோமாவளி; ஸுதியாம் - நல்லறிவுள்ளவர்களுக்கு/ஞானிகளுக்கு; யத் பாதி - எது புலப்படுகிறதோ அது; குச கலசயோ: - உன்னுடைய கலசங்கள் போன்ற ஸ்தனங்களின்; அந்தரகதம் - நடுவிலுள்ள;அந்யோந்ய விமர்தாத் - அந்த ஸ்தனங்கள் உரைவதால்; தநூபூதம் - அதி சூக்ஷ்மமான; வ்யோம - நில நிறமான வானம்; குஹரிணீம் நாபிம் - குகையோடு கூடிய நாபியை; ப்ரவிசத் இவ - ப்ரவேசிக்கிறது போலிருக்கிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு:

முளரி மாதுன் முலையி னோடு
முலைநெ ருக்க இடையில்வான்
வெளியில் நீல மோடி யுந்தி
வியன்மு ழைக்குள் நுழையவெ
தெளியு நீரில் யமுனை நீவு
சிறுத ரங்க மனையபெ
ரொளியின் ஞால மருளு மீது
ரோம ரேகை யென்னவெ
---------------------------------------------------------------------------------------------

ஸ்திரோ கங்காவர்த்த: ஸ்தந முகுளரோமாவளி லதா
கலாவாலம் குண்டம் குஸுமசரதோ-ஜோஹுத புஜ:
ரதேர் லீலாகாரம் கிமபி தவ நாபிர் கிரிஸுதே
பிலத்வாரம் ஸித்தே: கிரிசநயனானாம் விஜயதே

மலையரசன் பெண்ணே!, உன்னுடைய நாபியானது அசையாது இருக்கும் கங்கை நீரின் சுழலா? இல்லை, நகில்களாகிய மொட்டுக்களுடன் கூடிய ரோம வரிசையான கொடியின் கிழங்கு இருக்கும் (விளைநிலத்துப்) பாத்தியா?, அல்லது மன்மதனுடைய ஒளியான அக்னியின் ஹோம குண்டமா?, இல்லையென்றால் ரதி வசிக்கும் வீடா?, அல்லது பரமசிவனது யோகம் சித்திக்கும் குகையின் துவாரமா?. இவை என்னவென்றும் சொல்ல முடியாத அழகுடையதாக விளங்குகிறது.

நாபியானது சுழல் மாதிரி வட்டமான வடிவோடு, ஆழம் தெரியாததாக இருப்பதால் அதற்கு கங்கையின் நீர்ச்சுழல் உவமையாகச் சொல்லி, அந்த நீர்ச்சுழல் நகர்வது போல இல்லாமல் ஸ்திரமாக சலனமின்றி இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். நாபியை விளைநிலத்துப் பாத்தியாகச் சொல்லி, அதில் முளைத்துக் கிளம்பிய ரோமங்களான கொடியில் ஸ்தனங்களான மொட்டுக்களும் இருப்பதாகச் சொல்லப்படுவது "நாப்யால வாலரோமாவளி லதாபலகுசத்வயீ" என்ற லலிதா சஹஸ்ர நாமத்தை நினைவுக்கு கொண்டுவருகிறது. லலிதையின் இந்த நாமத்தில் ஸ்தனங்களை ரோமக் கொடியின் பழங்களாகச் சொல்லியிருப்பர் வாக்தேவிகள். யோகிகள் தபஸ் செய்ய குகைகளிலோ அல்லது நிலத்தில் இருக்கும் பெரிய த்வாரங்களிலோ அமர்ந்திருப்பர்,அது போல பரமசிவன் அமர்ந்து அன்னையின் செளந்தர்ய தரிசனத்திற்கு தபஸ் செய்யும் இடமாக அன்னையின் நாபியைச் சொல்லியிருக்கிறார்.

நாபியை ஹோமங்களுக்கு ஆதாரமான ஹோம குண்டமாக தியானிப்பது வழக்கம். ஞானாக்னியைக் கொண்டு ஸகல பாபங்களுக்கும் காரணமான அக்ஞானத்தைச் சுட்டெரிக்கும் சக்தி உள்ளவர்களாகிறார்கள் ஞானிகள் என்று தேதியூரார் சொல்கிறார்.

கிரிஸுதே - பார்வதி; தவ நாபி - உன்னுடைய நாபியானது; ஸ்திர: - சலனமில்லாத; கங்காவர்த: - கங்கா நதியின் ஜலத்திலிருக்கும் சுழல் போல; ஸ்தன முகுள ரோமாவளி லதா - ஸ்தனங்களாகிய மொட்டுக்களோடு கூடிய ரோமாவளியாகிறகொடியின்; கலாவாலம் - பாத்தி போல்; குஸுமசரதேஜோஹுத புஜ: - மன்மதனுடைய தேஜஸாகிற அக்னியின்; குண்டம் - ஹோம குண்டம்; ரதே:லீலாகாரம் - ரதி தேவி விலாசம் செய்யும் இல்லம் போல; கிரிச நயனானாம் - பரமசிவனது கண்களுக்கு;ஸித்தே: - தபஸ் ஸித்திக்கு; பிலத்வாரம் - பூமியில் இருக்கும் குகை போன்ற த்வாரம்; கிமபி - வர்ணிக்க இயலாத அழகுடன்; விஜயதே - விளங்குகிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு:

தூய கங்கை நிலைப டைத்த
சுழித னத்து முகையினால்
ஆய துங்க ரோம வல்லி
ஆல வாலம் விரகவேள்
தீய ரும்பும் ஓம குண்டம்
இறைவர் செங்க ணிடைவிடா
மேய கஞ்ச மடுவி னுந்தி
வேறு ரைத்தென் விமலையே.