செளந்தர்யலஹரி 79 & 80


நிஸர்க்க க்ஷீணஸ்ய ஸ்தநதடபரேண க்லமஜுஷோ
நமந் மூர்தேர் நாரீதிலக சநகை: த்ருட்யத இவ
சிரம் தே மத்யஸ்ய த்ருடித தடிநீ தீரதருணா
ஸமாவஸ்த்தா ஸ்த்தேம்னோ பவது குசலம் சைலதநயே


பெண்குலத்தின் திலகமான சைல புத்ரியே!, இயற்கையிலேயே மெல்லியதான உன்னுடைய இடையானது ஸ்தநங்களின் பாரத்தைத் தாங்கும் ச்ரமத்துடன் கொஞ்சம் வளைந்து இருப்பதைப் பார்க்கையில்,ஆற்றின் இடிந்த கரையில் இருக்கும் மரக்கிளை சற்றே உடைந்து தொங்கி மெள்ள மெள்ள ஒடிந்து போய்விடுவது போல தோன்றுகிறது. அவ்வாறான ஆபத்து நேராமல் வெகுகாலம் க்ஷேமமாக இருக்க வேண்டுமென ப்ராத்திக்கிறேன்.

சாமுத்ரிகா லக்ஷணத்தின்படி சுந்தர ஸ்திரீகளது இடை மிகச் சிறிதானதாகச் சொல்லப்படும். அன்னையின் இடையும் அவ்வாறு இருப்பதாகச் சொல்லி, ஸ்தனத்தின் பாரத்தால் சற்றே வளைந்த உடலமைப்பினைக் கொண்டதாக இருக்கிறாள் என்று கூறுகிறார். இதனை அபிராமி அந்தாதியில் 'சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும், பென்னம் பெரிய முலையு முத்தாரமும்' என்று கூறியிருக்கிறார் பட்டர்.

நாரீதிலக - பெண்ணினத்தின் திலகமான; சைலதநயே - மலையரசன் மகளே; நிஸர்க்க க்ஷீணஸ்ய - ஸ்வபாவமாகவே மெலிந்த; ஸ்தந-தட-பரேண - நகில்களின் பாரத்தால்; க்லம ஜுஷ: - சிரமத்துடன்; நமந்மூர்த்தே: - (பாரத்தால்) வளைந்த ரூபத்துடன்; சநகை: - மெல்ல மெல்ல; த்ருட்யத இவ - ஒடிந்து போவது போல; த்ருடித - இடிந்த; தடிநீ தீர - நதிக்கரையிலுள்ள; தருணா - மரம்; ஸ்மாவஸ்தா - சமமான நிலையில்; ஸ்தேம்ன: இருக்கும்; தே மத்யஸ்ய - உன்னுடைய இடுப்பிற்கு; குசலம் - க்ஷேமமானது; சிரம் - நீண்ட காலம்; பவது - உண்டாகட்டும்.

கவிராஜரது மொழிபெயர்ப்பு:

தரைம டந்தை பரவு மங்கை
தனத டம்பொ றாதுநின்
திரும ருங்கு லறவ ளைந்து
சிறுகி மூவி ரேகையாய்
வரைபி ளந்தொ ரிடிக ரைக்குள்
வாழ்ம ரத்தொ டொத்ததால்
உரைக டந்து விடுமுன்
மற்றொ ருறுதி தேட நாடுமே

----------------------------------------------------------------------------------------


குசெள ஸத்யஸ் ஸ்வித்யத் தடிகடித கூர்பாஸ பிதுரெள
கஷந்தெள தோர்மூலே கநகலசாபெள கலயதா
தவ த்ராதும் பங்காத் அலமிதி வலக்நம் தநுபுவா
த்ரிதா நத்தம் தேவி த்ரிவளி லவலீவல்லிபிரிவ

தாயே!, உன்னதமானதும், கனத்த தங்கக் கலசங்கள் போன்றதுமான உனது ஸ்தனங்களை மன்மதன் உருவாக்கிய போது, அவைகளின் பாரத்தால் உன்னுடைய மெலிதான இடுப்பனது ஒடிந்து போகாமலிருப்பதற்காக இடுப்பினைச் சுற்றி வள்ளிக் கொடிகளால் மூன்று சுற்றுக்கள் சுற்றியது போல உனது இடுப்பிலிருக்கும் த்ரிவளியானது தோன்றுகிறது.

அன்னையின் ஸ்தனங்களை உருவாக்கியவன் என்பதாக மன்மதனைக் குறிப்பிடுவதன் மூலமாக படைக்கும் பிரம்மனை விலக்கி, அன்னையின் பக்தர்களில் சிறந்தவரும், பராசக்தியின் மைந்தனுமான (மன்மதனுக்கு மறுபடிஉயிர் கொடுத்த அன்னையாகிறாள்)மன்மதனையே அன்னையின் ரூபத்தை சமைத்தவனாகக் காட்டுகிறார் பகவத்பாதர். அன்னை தனது பதியான பரமசிவனுடைய ரூபத்தை எப்போதும் மனத்தில் எண்ணுவதால் ஸ்தனங்கள் விம்மிப் பருத்து தங்களைக் கட்டியிருக்கும் கச்சையை விலக்குவதாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது.

த்ரிவளி என்னும் மூன்று மடிப்புக்கள் பற்றி முன்பே சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு அந்த த்ரிவளியானது இடுப்பு முறிந்திடாது காப்பதற்காகப் போடப்பட்ட கட்டுப் போல இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. லலிதா ஸஹஸ்ர நாமத்தில் வரும் 'ஸ்தன-பார-தலன் - மத்ய பட்ட பந்த-வலித்ரயா' என்பதும் இந்தப் பொருளையே குறிப்பிடுகிறது.

ஸ்வித்யத் தடகடித கூர்பாஸ பிதுரெள - வேர்வையால் உடலில் ஒட்டிய கச்சையைக்; தோர்மூலே கஷந்தெள - கைகளின் அடிப்பாகத்தில் இருக்கும்; கநக கலசாபெள - தங்க கலசங்களொத்த; குசெள - உன் ஸ்தநங்கள்; கலயதா - செய்த; தநுபுவா - மன்மதன்; வலக்நம் - இடுப்பு;பங்காத் அலம் இதி - முழுவதும் ஒடிந்திடாது; த்ராதும் - காக்கும்; த்ரிவளி தவ வலக்நம் மூன்று வரிகளை/மடிப்புகளையுடைய உன்னுடைய இடுப்பு; லவலீவல்லிபி: - வள்ளிக் கொடிகளால்; த்ரிதா நத்தம் இவ மூன்று சுற்றுக்கள் சுற்றப்பட்டது போல இருக்கிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு:

வம்பைத் தொலைத்துதறி யிறுகிக் கனத்திளகி
வருபுடை நெருக்கி வளர்மாக்
கும்பக் கடாக்களிற் றினையனைய உனதுமுலை
கொடிதுகொடி தென்று வெருவா
அம்பொற் றனிக்கமல இறைபொறா திடையென
அழுத்துபூ ணென முனிவரோடு
உம்பர்க்கு முளமருள ஒளிகெழுமி ரேகைமூன்
றுலகமோ தெளிவ துமையே

செளந்தர்யலஹரி 77 & 78

யதேதத் காளிந்தீ தநுதர தரங்காக்ருதி சிவே
க்ருசே மத்யே கிஞ்சிஜ் ஜநநி தவ யத்பாதி ஸுதியாம்
விமர்தாத் அந்யோந்யம் குச கலசயோரந்தரகதம்
தநூபூதம் வ்யோம ப்ரவிசதிவ நாபிம் குஹரிணீம்


மங்கள ஸ்வரூபியே! அம்மா, உன்னுடைய மெலிந்த இடையில் யமுனா நதியின் மிக மெல்லிய அலைகள் போன்ற ஞானிகளுக்குப் புலப்படும் ரோமாவளி,நாபியில் முடிவடைகிறது. இது எப்படியிருக்கிறதென்றால், பர்வதங்கள் போன்ற இரு நிகில்களிடயே அகப்பட்ட வானம் நாபியாகிய குகையில் புகுவது போல இருக்கிறது.

காளிந்தீ என்பது யமுனா நதியின் இன்னொரு பெயர், இதன் நிறம் கருமை. இந்த நதியின் சிற்றலைகள் போன்றிருக்கிறதாம் அன்னையின் ரோமாவளி. நீல நிறமான வானம், மலையொத்தஸ்தனங்களினுடே உராய்வதால் ஸுக்ஷ்மமான சக்தியுடன் சென்று நாபியாகிய குகையில் சேர்கிறதாக வர்ணிக்கப்படுகிறது. மன்மதனை எரித்த பரமேஸ்வரனுக்கு காம விகாரத்தை உண்டுபண்ணக்கூடியஅழகுடையது தேவியின் நாபி என்பதே இந்த ஸ்லோகத்தில் சொல்வது.

சிவே - மங்கள ரூபியே; ஜனனி - தாயே; தவ க்ருசே மத்யே - உன்னுடைய மெல்லியதான் இடையில்; யத் ஏதத் - யாதொரு; காளிந்தீ தநூதர தரங்காக்ருதி - யமுனையின் மிகவும் மெல்லியதான அலை போன்ற ரூபத்துடன் கூடிய;கிஞ்சித் - சிறிய வஸ்துவான ரோமாவளி; ஸுதியாம் - நல்லறிவுள்ளவர்களுக்கு/ஞானிகளுக்கு; யத் பாதி - எது புலப்படுகிறதோ அது; குச கலசயோ: - உன்னுடைய கலசங்கள் போன்ற ஸ்தனங்களின்; அந்தரகதம் - நடுவிலுள்ள;அந்யோந்ய விமர்தாத் - அந்த ஸ்தனங்கள் உரைவதால்; தநூபூதம் - அதி சூக்ஷ்மமான; வ்யோம - நில நிறமான வானம்; குஹரிணீம் நாபிம் - குகையோடு கூடிய நாபியை; ப்ரவிசத் இவ - ப்ரவேசிக்கிறது போலிருக்கிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு:

முளரி மாதுன் முலையி னோடு
முலைநெ ருக்க இடையில்வான்
வெளியில் நீல மோடி யுந்தி
வியன்மு ழைக்குள் நுழையவெ
தெளியு நீரில் யமுனை நீவு
சிறுத ரங்க மனையபெ
ரொளியின் ஞால மருளு மீது
ரோம ரேகை யென்னவெ
---------------------------------------------------------------------------------------------

ஸ்திரோ கங்காவர்த்த: ஸ்தந முகுளரோமாவளி லதா
கலாவாலம் குண்டம் குஸுமசரதோ-ஜோஹுத புஜ:
ரதேர் லீலாகாரம் கிமபி தவ நாபிர் கிரிஸுதே
பிலத்வாரம் ஸித்தே: கிரிசநயனானாம் விஜயதே

மலையரசன் பெண்ணே!, உன்னுடைய நாபியானது அசையாது இருக்கும் கங்கை நீரின் சுழலா? இல்லை, நகில்களாகிய மொட்டுக்களுடன் கூடிய ரோம வரிசையான கொடியின் கிழங்கு இருக்கும் (விளைநிலத்துப்) பாத்தியா?, அல்லது மன்மதனுடைய ஒளியான அக்னியின் ஹோம குண்டமா?, இல்லையென்றால் ரதி வசிக்கும் வீடா?, அல்லது பரமசிவனது யோகம் சித்திக்கும் குகையின் துவாரமா?. இவை என்னவென்றும் சொல்ல முடியாத அழகுடையதாக விளங்குகிறது.

நாபியானது சுழல் மாதிரி வட்டமான வடிவோடு, ஆழம் தெரியாததாக இருப்பதால் அதற்கு கங்கையின் நீர்ச்சுழல் உவமையாகச் சொல்லி, அந்த நீர்ச்சுழல் நகர்வது போல இல்லாமல் ஸ்திரமாக சலனமின்றி இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். நாபியை விளைநிலத்துப் பாத்தியாகச் சொல்லி, அதில் முளைத்துக் கிளம்பிய ரோமங்களான கொடியில் ஸ்தனங்களான மொட்டுக்களும் இருப்பதாகச் சொல்லப்படுவது "நாப்யால வாலரோமாவளி லதாபலகுசத்வயீ" என்ற லலிதா சஹஸ்ர நாமத்தை நினைவுக்கு கொண்டுவருகிறது. லலிதையின் இந்த நாமத்தில் ஸ்தனங்களை ரோமக் கொடியின் பழங்களாகச் சொல்லியிருப்பர் வாக்தேவிகள். யோகிகள் தபஸ் செய்ய குகைகளிலோ அல்லது நிலத்தில் இருக்கும் பெரிய த்வாரங்களிலோ அமர்ந்திருப்பர்,அது போல பரமசிவன் அமர்ந்து அன்னையின் செளந்தர்ய தரிசனத்திற்கு தபஸ் செய்யும் இடமாக அன்னையின் நாபியைச் சொல்லியிருக்கிறார்.

நாபியை ஹோமங்களுக்கு ஆதாரமான ஹோம குண்டமாக தியானிப்பது வழக்கம். ஞானாக்னியைக் கொண்டு ஸகல பாபங்களுக்கும் காரணமான அக்ஞானத்தைச் சுட்டெரிக்கும் சக்தி உள்ளவர்களாகிறார்கள் ஞானிகள் என்று தேதியூரார் சொல்கிறார்.

கிரிஸுதே - பார்வதி; தவ நாபி - உன்னுடைய நாபியானது; ஸ்திர: - சலனமில்லாத; கங்காவர்த: - கங்கா நதியின் ஜலத்திலிருக்கும் சுழல் போல; ஸ்தன முகுள ரோமாவளி லதா - ஸ்தனங்களாகிய மொட்டுக்களோடு கூடிய ரோமாவளியாகிறகொடியின்; கலாவாலம் - பாத்தி போல்; குஸுமசரதேஜோஹுத புஜ: - மன்மதனுடைய தேஜஸாகிற அக்னியின்; குண்டம் - ஹோம குண்டம்; ரதே:லீலாகாரம் - ரதி தேவி விலாசம் செய்யும் இல்லம் போல; கிரிச நயனானாம் - பரமசிவனது கண்களுக்கு;ஸித்தே: - தபஸ் ஸித்திக்கு; பிலத்வாரம் - பூமியில் இருக்கும் குகை போன்ற த்வாரம்; கிமபி - வர்ணிக்க இயலாத அழகுடன்; விஜயதே - விளங்குகிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு:

தூய கங்கை நிலைப டைத்த
சுழித னத்து முகையினால்
ஆய துங்க ரோம வல்லி
ஆல வாலம் விரகவேள்
தீய ரும்பும் ஓம குண்டம்
இறைவர் செங்க ணிடைவிடா
மேய கஞ்ச மடுவி னுந்தி
வேறு ரைத்தென் விமலையே.

செளந்தர்யலஹரி 75 & 76



தவ ஸ்தந்யம் மந்யே தரணிதரகந்யே ஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வதமிவ
தயாவத்யா தத்தம் த்ரவிடசிசுராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரெளடானாம் அஜநி கமநீய: கவயிதா

அம்பிகே!, உன்னுடைய ஸ்தன்யமானது ஹ்ருதயத்திலிருந்து உண்டான க்ஷீர ஸமுத்ரம் போலவும், ஸாரஸ்வத ப்ரவாஹம் போலவும் பெருகுகின்றது என்று நினைக்கிறேன். ஏனென்றால் உன்னால் கருணையுடன் கொடுக்கப்பட்ட அந்தப் பாலைப் பருகிய த்ராவிட தேசத்து சிசு ஒருவன் ப்ரஸித்தர்களான கவிகளும் மெச்சும்படியான கவியாக ஆகிவிட்டானன்றோ!.

பால் வெண்மையாக இருப்பதால் அதற்கு ஸரஸ்வதி சம்பந்தமென்றும், மதுரமாக/இனிமையாக இருப்பதால் அம்ருதத்துடன் சம்பந்தமும் சொல்லப்பட்டிருக்கிறது. த்ராவிட தேசத்தில் பிறந்த ஒருவருக்கு அம்பிகையின் ஸ்தன்யத்தின் பானத்தால் ஸரஸ்வதீ கடாக்ஷம் ஏற்பட்டு எல்லோருடனும் கொண்டாடப்படும் அளவில் மிகப் பெரிய கவிஞன் ஆனான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் சொல்லப்பட்ட த்ராவிட சிசு யார் என்பது நிச்சயமாகச் சொல்ல இயலவில்லை. சங்கரர் தம்மைத் தானே அப்படிக் கூறியுள்ளார் என்று சிலரும், இன்னும் சிலர் திருஞான சம்பந்தரைச் சொல்லியிருப்பதாகவும் கூறுகின்றனர்.

விநயம் என்பதின் பொருளான ஆசார்யாள்,தம்மைத் தாமே இப்படி சிறந்த கவியாகிவிட்டேன் என்று சொல்லிக் கொள்வாரா என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. அதே சமயத்தில் இந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருப்பது திருஞான சம்பந்தர் என்றால் அவரதுகாலத்திற்குப் பிறகு சங்கரர் காலம் என்றாகிறது. இதிலும் குழப்பமே மிஞ்சுகிறது. இது பற்றி சங்கர விஜயங்களிலும் ஏதும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பல்வேறு காலகட்டத்தில் செளந்தர்ய லஹரிக்கு பாஷ்யம் எழுதிய பலரும் பலவிதகேள்விகளை எழுப்பி அதற்கு பதிலும் சொல்லியிருக்கிறார்கள். அவற்றை எல்லாம் தொகுத்துத் தனியாக மதுரையம்பதியில் இடுவதாக இருக்கிறேன்.

தரணிதரகந்யே - பார்வதி தேவியே; தவ ஸ்தந்யம் - உன் ஸ்தனங்களில்; ஹ்ருதயத: ஹ்ருதயத்திலிருந்து உண்டான; பய: பாராவார: க்ஷீர ஸமுத்ரம் போன்ற; ஸாரஸ்வதமிவ - ஸரஸ்வதீ மயமான; பரிவஹதி - பெருகுகின்றது; மந்யே - நினைக்கிறேன்;யத் - ஏனெனில்; தயாவத்யா - கருணையுடன் கூடிய உன்னால்; தத்தம் - கொடுக்கப்பட்ட; தவ (ஸ்தந்யம்) - உன்னுடைய பாலை; த்ரவிட சிசு: த்ராவிட தேசத்துக் குழந்தை; ஆஸ்வாத்ய - சாப்பிட்டு; ப்ரெளடானாம் கவீனாம் - பிரசித்தி பெற்ற கவிகளுக்கிணையாக; கமநீய: கவயிதா- அழகிய கவிதைகளைச் செய்பவனாக; அஜநி: - ஆகியிருக்கிறான்.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே:

தருண மங்கலை உனது சிந்தை
தழைந்த பாலமு தூறினால்
அருண கொங்கையி லதுபெ ருங்கவி
அலைநெ டுங்கட லாகுமே
வருன நன்குறு கவுணி யன்சிறு
மதலை அம்புயல் பருகியே
பொருள்ந யம்பெறு கவிதை யென்றொரு
புனித மாரிபொ ழிந்ததே.

--------------------------------------------------------------------------------------------

ஹரக்ரோதஜ்வாலா-வலிபி ரவலீடேன வபுஷா
கபீரே தே நாபீஸரஸி க்ருதஸங்கோ மனஸிஜா
ஸமுத்தஸ்தெள தஸ்மாத் அசலதநயே தூமலதிகா
ஜநஸ்தாம் ஜாநீதே தவ ஜநநி ரோமாவளிரிதி

பார்வதி!, பரமசிவனின் நேத்ராக்னியால் எரிக்கப்பட்ட மன்மதன், அதிலிருந்து தன்னை காத்துக் கொள்வதற்காக உனது நாபியாகிய மடுவில் குதித்த போது, அதிலிருந்து உண்டான புகையை உன்னுடைய ரோமாவளிகள் என்று ஜனங்கள் வர்ணித்துச் சொல்கின்றனர்.

உடலில் நாபியும் மன்மத ஸ்தானமாகச் சொல்வது வழக்கம். ஆகவே, உடல் எரிகையில் மன்மதன் அந்த பேராபத்தில் இருந்து தப்பித்து தன்னுடலைக் காக்க குளம் போன்ற அன்னையின் நாபியில் விழுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சாதாரணமாக எரியும் தணலில்/கங்கு போன்றவற்றில்நீரை தெளிக்கையில் புகை கிளம்பும். அந்த புகையை அன்னையின் ரோமங்களாக வர்ணிப்பதாகச் சொல்கிறார்.

அசலதநயே - பார்வதி தேவியே; மநஸிஜ: மன்மதன்; ஹரக்ரோத ஜ்வாலாவலிபி: - பரமசிவனது கோபாக்னி ஜ்வாலையினால்; - அவலீடேந் வபுஷா - சூழப்பட்ட உடலுடன்; கபீரே - ஆழமான; தே நாபீஸரஸி - உன்னுடைய நாபியாகும் மடுவில்; க்ருதஸங்க: - முழுகினான்;தஸ்மாத் - எரிகின்ற அவனது உடல் உனது நாபி என்னும் ஸரஸில் விழுந்தவுடன்; தூம லதிகா - புகையானது கொடிபோல; ஸமுத்தஸ்தெள - கிளம்பியது; தாம் - அதை; ஜநநி - தாயே; தவ ரோமாவளிரிதி - உன்னுடைய ரோமாவளியாக; ஜாநீதே - வர்ணிக்கிறார்கள்.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே:

மூல மேநின் மகிழ்நர் கோப
முதுக னற்பொ ருதுவேள்
கோல நாபி மடுவி னிற்கு
எரிப்ப வந்த வெம்மையான்
மேல வாவு தூம ரேகை
வேரே ழுங்கொ ழுந்தையோ
நீல ரோம ரேகை யென்று
நீள்நி லங்கு றிப்பதே.