Showing posts with label கண்கள்-காதுகளின் வர்ணனை;வீரைக் கவிராஜர். Show all posts
Showing posts with label கண்கள்-காதுகளின் வர்ணனை;வீரைக் கவிராஜர். Show all posts

செளந்தர்யலஹரி 57 & 58



த்ருவா த்ராகீயஸ்யா தரதளித நீலோத் பலருசா
தவீயாம்ஸம் தீநம் ஸ்நபய க்ருபயா மாமபி சிவே
அநேநாயம் தந்யோ பவதி ந ச தே ஹாநிரியதா
வநே வா ஹர்ம்யே வா ஸமகர நிபாதோ ஹிமகர:

மங்களங்களை அருள்பவளே!, சந்திரன் வனம் மற்றும் மாளிகை என்ற பேதம் இல்லாது எங்கும் சமமாகத் தன் கிரணங்களை வீசுவது போல, தீர்க்கமானதும், அன்றலர்ந்த நீலோத்பல புஷ்பத்தைப் போன்ற காந்தியுடையதுமான உன் கண்களின் கடாக்ஷ த்ருஷ்டியானது உன்னிலிருந்து விலகி தூரத்தில் இருப்பவனும், பாக்கியமில்லாதவனுமான என் மேலும் விழும்படி செய்வாயாக. இவ்வாறு செய்வதால் உனக்கு எந்த குறைவும் ஏற்படாது.


சந்திரனது கிரணங்கள் எப்படி எந்த வேற்றுமையும் பாராட்டாது எல்லா இடங்களிலும் குளிர்ச்சியுடைய ஒளியைப் பரவச் செய்கிறதோ அப்படியாக அன்னையவள் கருணை எவ்வித வித்தியாசமும் இல்லாது எல்லோருக்கும் அருள் தரக் கூடியது என்று கூறுகிறார் சங்கரர்.


சிவே - மங்களங்களை அருள்பவளே; த்ராகீயஸ்யா - அதிக நீளமுள்ள; தரதளித கொஞமாக மலர்ந்த; நீலோத்பல ருச - காந்தியுடைய நீலோத்பல மலர்; த்ருசா - கடாக்ஷ தீக்ஷண்யத்தால்; மாம் அபி - என்னையும்; க்ருபயா - கருணையால்; ஸ்நபய - ஸாநம் செய்தல்; அநேந - செய்வதால்; அயம் - அடியேன்; தந்யோ பவதி - க்ருதார்த்தனாக/உருப்படியாக ஆவான்; இயதா - இதனால்; தே - உனக்கு; ஹாநிர் ந ச - ஒருவித நஷ்டமும் இல்லை; ஹிமகர - சந்திரன்; வநே வா - காட்டிலும் சரி; ஹர்ம்யே வா - மாளிகையிலும் சரி; ஸமகர நிபாத: - கிரணங்களால் எங்கும் வியாபித்தல்


கவிராஜரது தமிழாக்கம் கீழே!

நெடியகண் கரிய நெய்தல்
நிறையருட் சலதி யெய்தாக்
கொடியனேன் பிறவித் துன்பக்
குறைகடல் கடந்து மூழ்க
விடினதிற் குறைவது உண்டோ
மெய்த்தவர்க் கொழிந்து றாதோ
கடிநகர் நிலவ காட்டிற்
காயுமே கருணை வாழ்வே.
-------------------------------------------------------------------------------------------



அராளம் தே பாலீயுகளம் அக்ராஜந்யதநயே
ந கேஷாம் ஆதத்தே குஸுமசர கோதண்ட குதுகம்
திரச்சீநோ யத்ர ச்ரவணபதம் உல்லங்க்ய விலஸத்
அபாங்கவ்யாஸங்கோ திசதி சரஸந்தாந திஷணாம்

மலையரசன் மகளே!, வளைவுடன் கூடிய உனது கண்களூக்கும் காதுக்கும் இடைப்பட்ட பிரதேசங்கள் இரண்டும், உனது காதுகள் வரையில் நீண்ட கண்களையே பாணங்களாகப் பூட்டிய மன்மதனுடைய வில் போன்று இருப்பதாக யாருக்குத்தான் தோன்றாது?.

முன்பே இங்கே அன்னையின் கண்கள், நாசி பகுதியை மன்மதனது வில்லுக்குச் சமமாக வர்ணித்தார். அதே போல் இப்பாடலில் அன்னையின் கண்கள், காது போன்றவற்றுடன் சொல்லியிருக்கிறார் ஆசார்யார். அன்னையின் கண்கள் நீண்டு, அகன்று இருக்கிறது என்பதை ச்ரவணபதம் உல்லங்க்ய என்று கூறுகிறார்.

அக்ராஜந்யதநயே - அக்ராஜந்ய தநயே - மலையரசன் மகளே; தே - உன்னுடைய; பாலீயுகளம் - கண்களுக்கும் காதுகளுக்கும் இடைப்பட்ட பிரதேசம் (பொட்டு என்று கூறும் இடம்); அராளம் - வளைந்த; குசுமசர - மன்மதனுடைய; கோதண்ட குதுகம் - வில்லின் அழகை; கேஷாம் - யாருக்கும்; ந ஆதத்தே - தோன்றச் செய்வதில்லை; யத்ர - அப்பகுதியில்; திரச்சீந: - கோணலாக; விலஸத் - தெரியும்; அபாங்கவ்யா - நீண்ட கடைக்கண் பார்வை; ச்ரவணபதம் - காதுகள்; உல்லங்க்ய - ஸமீபத்தில்; சர ஸ்ந்தாந திக்ஷணாம் - பாணம் பூட்டியது போன்ற; திசதி - தோன்றுதல்


கவிராஜரது தமிழாக்கம் கீழே!

கருங்குழல் நுதஏகட் பின்னற்
கவின்கடைக் கபோலந் தாழ்ந்த
அருகுழை கடந்த கண்ணின்
அயிற்கடை அனங்க சாப
நெருங்குறத் தொடுத்த ஏவின்
நிமிர்தலை யேய்க்கு மென்றால்
மருங்கில்பொற் றிருவே யாருன்
மதர்விழி பரவ வல்லார்.