செளந்தர்யலஹரி 85 & 86


நமோவகம் ப்ரூமோ நயநரமணீயாய பதயோ:
தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புடருசிரஸாலக்தகவதே
அஸுயத் யத்யந்தம் யதபிஹநனாய ஸ்ப்ருஹயதே
பசூனாம் ஈசாந: ப்ரமதவந கங்கேளிதரவே


தாயே!, எந்தப் பாதங்களால் உதைக்கப்படுவதற்கு உனது நந்தவனத்தில் இருக்கும் அசோக மரம் ஆசைப்படுகிறதோ அதைக்கண்டு, அப்பாதங்களின் ஸ்பரிசம் தனக்கு மட்டுமே உரியதென்று பரமசிவனே அஸூயைப்படும்படியானதும், கண்களுக்கு இனிமையும், செம்மையான குழம்பால் அலங்கரிக்கப்பட்டதுமான உனது சரணங்களுக்கு எனது நமஸ்காரங்களைக் கூறுகிறேன்.

உத்தம ஸ்த்ரீகளுடைய கால்களால் உதைக்கப்பட்டால் தான் அசோகமரமானது புஷ்பிக்கும் என்பர். அம்பாளுடைய நந்தவனத்தில் இருக்கும் அசோக மரமானது அவளுடைய பாத ஸ்பரிசத்திற்கு ஏங்குவதாகவும், அதைக்கண்ட பரமசிவன், கலஹ காலத்தில் தனக்கு மட்டுமே கிடைக்கும் அந்த பாத ஸ்பரிசத்தினை எதிர்பார்க்கும் அம்மரத்தின் மீது அஸூயை கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

தவ - உன்னுடைய; நயந ரமணீயாய - கண்களுக்கு ரமணீயமான/இனிமையான; ஸ்புர ருசிர ஸாலக் தகவதே - ஒளியுடன் விளங்குகிறதும், ஈரமான செம்பஞ்சுக் குழம்புடன் கூடிய; பத்யோ: அஸ்மை த்வந்த்வாய - இந்த இரு பாதங்களுக்கும், ந்மோவாகம் - நாம்ஸ்கார வார்த்தைகளை; ப்ரூம: சொல்லுகிறோம்;யத் அபிஹநனாய - எந்தப் பாதங்களால் உதையப்படுவதை; ஸ்ப்ருஹயதே - விரும்புகிற; ப்ரமதவந கங்கேளி தரவே - நந்தவனத்தில் இருக்கும் அசோக வ்ருக்ஷத்தின்; பசூனாம் ஈசன: - எல்லா ப்ராணிகளுக்கும் ஈசனான பரமேஸ்வரனும்; அத்யந்தம் அஸூயதி - அதிகமான பொறாமையுடன்

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

அரியமென் காவில் நீபுக்கு
அசோகினிற் பாத மேற்ற
உரியநம் பதத்தை யீதோ
உறுமெனப் பொறாது பெம்மான்
எரியுற மரத்தை நோக்கும்
இயல்பினைக் கேட்டும் யானுன்
வரிமலர்ப் பாதம் போற்றும்
வளமினி தினிது மாதே.

*********************************************************************************


ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலநமத வைலக்ஷ்ய நிமிதம்
லலாடே பர்த்தாரம் சரணகமலே தாடயதி தே
சிராத் அந்த: சல்யம் தஹனக்ருதம் உந்மூலிதவதா
துலாகோடி க்வாணை: கிலிகிலிதம் ஈசாநரிபுணா

அம்பிகே, விளையாட்டாக உனது பிறந்த வீட்டினைப் பற்றி ஏளனமாகச் சொன்ன பரமசிவனார், உன்னுடைய கோபத்தைக் கண்டு, என்ன செய்வதென்று தெரியாது உன்னை வணங்கிடுகிறார். அவ்வாறு வணங்கும் போது அவருடைய நெற்றியில் உன்னுடைய பாத கமலங்களில்பட்டு, உன்பாத 'சிலம்புகள் கிலி-கிலி'என்று ஒலியெழுப்புகின்றன. உன் பாதசிலம்புகள் ஏற்படுத்தும் அவ்வொலியானது மன்மதன் முன்பு ஒருமுறை சிவனாரின் நெற்றிக் கண்ணிலிருந்து வந்த நெருப்பினால் பஸ்மமானதால் கொண்டிருந்த பாணம் போன்ற பகையை தீர்த்துக் கொள்ளுவது போல சிரிப்பதாக இருக்கிறது.

அம்பாளிடத்து சரஸம் செய்வதாக எண்ணி அவளுக்குக் கோபம் உண்டாகும்படியாக அவளது பிறந்த் வீட்டினை இகழ்ந்த பரமன், அதனால் கோபம் கொண்ட அம்பிகையை சமாதானம் செய்யும் விதமாக மன்னிப்புக் கேட்டு அவளது பாதங்களில் நமஸ்கரிப்பதாகவும், அப்போது சிவனது நெற்றி அன்னையின் பாதங்களில்பட்டு, அவள்காலில் இருக்கும் பாத சிலம்புகள் ஒலியெழுப்புவதாகவும் சொல்கிறார். மஹா-பதிவிரதையான அம்பிகை தனது பர்த்தா நமஸ்கரிப்பது என்பது ச்ருங்கார சாஸ்த்ரங்களின் ரீதியை அனுசரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார். முன்பு ஒருமுறை பரமசிவன் மன்மதனை எரித்த காரணத்தால் மன்மதனுக்கு பரமசிவனிடத்து இருந்த பகையானது உடம்பில் தைத்த பாணம் போன்று இருந்ததாகக் கூறுகிறார். தன்னை எரித்த பரமன் நெற்றி நிலத்தில்பட வீழ்ந்து வணங்குவது கண்ட மன்மதன் தானே அவரை ஜெயித்தது போன்று சிரித்து மகிழ்வது போல அன்னையின் பாதசிலம்புள் ஒலிக்கிறது என்கிறார்.

ம்ருஷா - விளையாட்டாக; கோத்ரஸ்கலனம் - பிறந்த வீடு பற்றிய ஏளனம்; க்ருத்வா - செய்தது; அத வைலக்ஷ்ய நமிதம் - அதனால் ஏற்பட்ட கோபத்தைக் கண்டு என்ன செய்வதென; பர்த்தாரம் - கணவரான பரமசிவன்; லலாடே - நெற்றியில்; தே சரணகமலே - உன் பாத-கமலங்களில்; தாடயதி சதி - (பாதங்களின்) மேலே பட்டு; ஈசான ரிபுணா - ஈசனின் விரோதியான மன்மதனால்; தஹநக்ருதம் - நேத்ராக்னியால் எரித்ததால் ஏற்பட்ட; சிராத் - வெகுகாலமாக இருக்கும்; அந்த: சல்யம் - தனது மனதில் பாணமாகப் பதிந்த பகையை; உந்மூலிதவதா - வேரோடு எடுத்து; துலாகோடிக்வாணை: - கால் சிலம்பில் இருக்கும் சிறிய மணிகளால் எழும் சப்தத்தை; கிலிகிலிதம் - கிலி-கிலி என்ற சப்தம்;

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

மறும டந்தையை மொழிய நின்பத
மலர்வெ குண்டர னுதலிலோர்மு
றைய றைந்திட விழியி னும்பட
முத்ப ழம்பகை கருதிவேள்
இறையை வென்றனன் விழியை வென்றனன்
எனமு ழங்கிய குரலெனாது
அறைசி லம்பெழும் அரவ மென்பதன்
அருண மங்கல கமலையே.

7 comments:

Kavinaya said...

ச்வீட்! என் ச்செல்லமான அம்மாவுடைய பாத கமலங்களை நானும் வணங்கிக் கொள்கிறேன்.

நன்றி மௌலி.

மெளலி (மதுரையம்பதி) said...

தொடர்ந்து வந்து படிக்கறதுக்கு நன்றிகள்...கவிக்கா.

நவராத்ரியுடன் முடிக்க நினைத்திருக்கிறேன்...பார்க்கலாம் அன்னை அருளிருந்தால் முடியும்.

குமரன் (Kumaran) said...

கவிராசரின் மொழிபெயர்ப்பும் பொருளும்:

அரிய மென் காவில் நீ புக்கு
அசோகினில் பாதம் ஏற்ற
உரிய நம் பதத்தை ஈதோ
உறும் எனப் பொறாது பெம்மான்
எரியுற மரத்தை நோக்கும்
இயல்பினைக் கேட்டும் யான் உன்
வரிமலர்ப் பாதம் போற்றும்
வளம் இனிது இனிது மாதே

அருமையும் மென்மையுமான பூங்காவனத்தில் நீ புகுந்து அசோக மரத்தில் உன் பாதத்தை வைக்க, நமக்கே உரிய இந்தத் திருப்பதத்தை இந்த மரமா அடைகின்றது என்று பொறுக்க இயலாது பெம்மான் அந்த மரத்தை எரித்து விடும் படி நோக்குவார். அந்த இயல்பினைக் கேட்ட பின்னரும் அவரது சினத்தினைப் பற்றி எண்ணாது உனது மலர்ப்பாதத்தை அடைய வேண்டி நான் தினமும் போற்றுகின்றேன். இது என்ன வியப்பு? அவரது சினத்திலிருந்து நீ என்னைக் காப்பாய் என்ற துணிவு தான் காரணம்.

மறு மடந்தையை மொழிய நின் பத
மலர் வெகுண்டு அரன் நுதலில் ஓர் முறை
அறைந்திட விழியினும் பட
பழம் பகை கருதி வேள்
இறையை வென்றனன் விழியை வென்றனன்
என முழங்கிய குரல் எனாது
அறை சிலம்பெழும் அரவம் என்பது என்
அருண மங்கல கமலையே

குங்குமம் அணிந்த மங்கலத் தாமரைச்செல்வியே! உன்னைப் பற்றி சிவனார் குறை கூற அதனால் வெகுண்டு நீ சினம் கொள்ள அரன் உன் பாதங்களில் பணியும் போது உன் திருப்பாதங்களால் அவர் நெற்றியை விலக்கினாய்; அப்போது அந்த அறை நெற்றிக் கண்ணிலும் பட்டது. பழைய பகையைக் கருதியிருந்த மதன வேள் 'நான் இறைவனை வென்றேன். என்னை எரித்த நெற்றிக் கண்ணை வென்றேன்' என முழங்கிய குரலைப் போல் இருந்தது அங்கே எழுந்த சிலம்பின் ஓசை.

S.Muruganandam said...

அன்னையின் திருப்பாதமலர்களில் சமர்ப்பணம். குமரன் ஐயாவின் பொருளும் சக்கரைப் பந்தலில் தேன் மழை பெய்தது போல் உள்ளது.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கும் கைங்கர்யத்திற்கும் நன்றி குமரன். :)

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கும் கைங்கர்யத்திற்கும் நன்றி குமரன். :)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கைலாஷி ஐயா...நன்றி.