செளந்தர்யலஹரி 83 & 84


பராஜேதும் ருத்ரம் த்விகுண சரகர்பெள கிரிஸுதே
நிஷங்கெள ஜங்கே தே விஷமவிசிகோ பாடம் அக்ருத
யதக்ரே த்ருச்யந்தே தச சர பலா: பாதயுகளீ
நகாக்ரச்சத்மாந: ஸுரமகுட சணைக நிசிதா:

அம்மா!, உன்னுடையக கணுக்கால்களானது பரமசிவனை ஜெயிக்க மன்மதனால் செய்யப்பட்ட அம்பறாத்தூணிகள் மாதிரி இருக்கின்றன. அம்பறாத்தூணிகளின் முன்பாகத்தில் அம்புகளின் கூர்மை மிகுந்த நுனிகள் தெரிவது போல உனது பத்து கால் விரல்களிலிருக்கும் நகங்கள் மன்மதன்தனது பஞ்ச பாணங்களை இரட்டிப்பாக்கிக் கொண்டது போல இருக்கிறது, அந்த பத்து நகங்கள் உன் காலில் விழுந்து வணங்கும் தேவர்களது மகுடங்களால் தீட்டப்பட்டு கூர்மையுடன் இருக்கிறது.

மன்மதன் தன்னுடைய பஞ்சபாணங்களால் பரமசிவனை ஜெயிக்க முடியாததைப் பார்த்து, அவரை ஜெயிக்கத்தக்க பாணங்களையும், அந்த பாணங்களை வைக்கும் அம்பறாத்தூணியையும் ஏற்படித்திக் கொண்டதாகவும், அவ்வாறான பாணங்களும், அம்பராத்தூணியும் அன்னையின்கால்களும், அக்கால்களில் இருக்கும் நகங்களுமே என்று கூறியிருக்கிறார். ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமத்திலும், "இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மரதூணாப ஜங்கிகா' என்னும் நாமம் அன்னையின் கணுக்கால்களை மன்மதனது அம்பறாத்தூணியாகவே சொல்லியிருக்கிறது. இவ்வாறானஅம்பிகையின் கணுக்கால்களது அழகாலேயே பரமேஸ்வரனை பின்னர் ஒருமுறை ஜெயித்துவிட்டான் மன்மதன் என்று கூறுவதன் மூலமாக அன்னையின் கால் அழகினை விவரித்திருக்கிறார்.

கிரிஸுதே - மலையரசன் மகளே; விஷமவிசிக: - மன்மதன்; ருத்ரம் பராஜேதும் - பரமசிவனை ஜெயிக்க; த்விகுணசர கர்பெள - தன் பாணங்களை இரட்டித்து பத்து பாணங்களுடன்; நிஷங்கெள - அம்பறாத்தூணியாக; தே ஜங்கே - உன் கணுக்கால்கள்; அக்ருத - செய்தான்; பாடம் - நிச்சயம்; யத் அக்ரே - அவைகளின் முன்பாகத்தில்; பாத யுகளீ - இரண்டு பாதகளிலும்; நகாக் ரச்சத்மான:- விரல் நகங்களின் நுனிகள்; ஸுரமகுட - வணங்குகிற தேவர்களின் மகுடங்களே; சாணைக நிசிதா: - சாணைக் கற்களாகக் கொண்டு தீட்டப்பட்ட; தச சர பலா: - அந்த பத்து பாணங்களுடைய கூர்கள்; க்ருச்யந்தே - காணப்படுகிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

உம்பர்தொழுந் தொறுமகுடச் சாணை தீட்டி
ஒளிருநக நுணைக்கணையோர் ஐந்தும் ஐந்துஞ்
செம்பொன்மணிக் கணைக்காலாம் இணைப்பொற் றூணி
சேர்த்தன்றோ சிவன்பகைவேள் தீருகின்றான்
அம்பொருபத் தளித்தனையின் றன்று போல
ஐங்கணைதொட் டழியினது பழுதென் றன்றோ
வம்பமருங் கனதனப்பொற் றிருவே உன்றன்
மனவிரகின் செயலொருவர் மதிப்ப தன்றே

*********************************************************************************




ச்ருதீனாம் மூர்தானோ தததி தவ யெள சேகரதயா
மமாப்யேதெள மாத: சிரஸி தயயா தேஹி சரணெள
யயோ: பாத்யம் பாத: பசுபதி ஜடாஜுட தடிநீ
யயோர் லாக்ஷாலக்ஷ்மி: அருணஹரி சுடாமணிருசி:

தாயே!, எந்த சரணங்கள் வேதாந்தங்களுக்கு சிரத்தில் அணியும் அணிகலனாக விளங்குகிறதோ, எந்த சரணங்களின் பாதப்ரக்ஷாலனம் (பாதபூஜையின் போது பாதத்தில் வார்க்கும் நீர்) பரமசிவனது ஜடாமுடியிலிருக்கும் கங்கையால் நடைபெறுகிறதோ, எந்த சரணங்களில் விஷ்ணு தரித்துள்ள சூடாமணியின் ஒளியால் செம்பஞ்சுக் குழம்பு தீட்டிய நிறத்தை ஏற்படுத்துகிறதோ, அப்படியான உனது திவ்ய சரணங்களை எனது சிரஸிலும் தயவுசெய்து நீ வைப்பாயாக.

அம்பாளது சரணங்கள் வேதங்களாலும், பரமசிவனாலும், விஷ்ணுவாலும் சிரஸில் தரிக்கப்படுபவை என்றும், அதுபோலவே அம்பிகை தனது (சங்கரரது) சிரஸிலும் அம்பிகை தனது சரணங்களை வைக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அம்பிகையின் சரண-கமலங்களை ச்ருதிகளாகிய பெண்கள் தங்கள் தலையில் சூடும் புஷ்பங்களைப் போல எப்போதும் தலையில் வைத்திருப்பதாக கூறுவதால், வேதங்கள் அன்னையின் காலடியில் எப்போதும் இருப்பவை என்று கூறுகிறார். இதையே சஹஸ்ரநாமத்தில், ' ச்ருதி ஸீமந்த ஸிந்தூரீக்ருத பாதாப்ஜ தூளிகா' என்கிறது. அதாவது வேத மாதா, அன்னையின் காலடியில் நமஸ்காரம் செய்யும் போது அந்த சரணகமலங்களில் இருக்கும் சிவப்பு நிறமான மகரந்தத் துகள்கள் வேதமாதாவின் தலை வகிட்டில் படிந்து அங்கே தரிக்கப்படும் ஸிந்தூரமாகிறது என்கிறது.

மாத: தாயே; தவ - உன்னுடைய; யெள சரண - எந்த சரணங்களை; ச்ருதீனாம் மூர்தாந - வேதங்களுடைய சிரஸ்; சேகரதயா - சிரோ புஷணங்களாக; தததி - தரிக்கின்றனவோ; ஏதெள - அவை (அந்த சரணங்கள்); மம சிரஸி அபி - என்னுடைய சிரஸிலும்; தயயா - தயவு செய்து;தேஹி - வைப்பாயாக; யயோ: - எந்த சரணங்களுடைய; பாத்யம் பாத: - பாதோதக ஜலமானது; பசுபதி ஜடாஜூட தடிநீ - பரமசிவனுடைய ஜடையிலிருக்கும் கங்கையாகவும்; லாக்ஷாலக்ஷ்மி: - செம்பஞ்சுக்குழம்பின் ஒளியாக; அருண ஹரிசூடாமணி ருசி: விஷ்ணுவின் சூடாமணியிலிருந்து வரும் சிவந்த ஒளியாக இருக்கிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

உளமகிழ் மகிழ்நர் சென்னி
உறுநதி விளக்க மாயோன்
கிளர்முடிப் பதும ராகத்
கேழொளி செம்பஞ் சேய்க்கும்
முளரிநின் பதங்கள் வேத
முடியுறப் பதித்த தவ்வாறு
எளியஎன் தலைமேல் வைக்க
இரங்குவ தென்று தாயே.

4 comments:

Kavinaya said...

மஹிஷாசுர மர்த்தினி ஸ்தோத்திரத்திலும் அன்னையின் கால் விரல் நகங்கள் அவள் பாதகமலங்களில் பணியும் தேவர்களின் மகுடங்களின் ஒளி தெறித்து ரத்னம் போல் பிரகாசிப்பதாக வரும்.

//எளியஎன் தலைமேல் வைக்க
இரங்குவ தென்று தாயே.//

அப்படியே அருள வேண்டும் அம்மா.

படமெல்லாம் எப்படி பிடிக்கிறீங்க! வெகு அழகு! மிக்க நன்றி மௌலி.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி கவிக்கா.

படங்கள் எல்லாம் கூகிளார் உபயமே. முதலில் வலையேற்றியவர்களுக்கு எனது நன்றியை தெரிவிச்சுக்கறேன். :)

குமரன் (Kumaran) said...

சாணை என்று அதே சொல் இருமொழிகளிலும் ஒரே பொருளைக் குறிப்பது வியப்பு தான். :-)

கவிராசரது மொழிபெயர்ப்புகளும் அவற்றின் பொருளும்:

உம்பர் தொழும் தொறும் மகுடச் சாணை தீட்டி
ஒளிரும் நக நுணைக் கணை ஓர் ஐந்தும் ஐந்தும்
செம்பொன் மணிக் கணைக்காலாம் இணைப் பொற்றூணி
சேர்த்தன்றோ சிவன் பகை வேள் தீருகின்றான்
அம்பு ஒரு பத்து அளித்தனை இன்றன்று போல
ஐங்கணை தொட்டு அழியின் அது பழுது என்று அன்றோ
வம்பமரும் கன தன பொற்றிருவே உன்றன்
மன விரகின் செயல் ஒருவர் மதிப்பதன்றே

தேவர்கள் தொழும் போதெல்லாம் அவர்களின் மகுடங்களால் சாணை தீட்டப் பெற்று ஒளி வீசும் உன் நகங்கள் எனும் நுண்ணிய (கூர்மையான) அம்புகள் பத்தினையும் செம்பொன் மணி போல் ஒளிரும் உன் கணைக்கால்கள் எனும் பொன் தூணியில் சேர்த்து வைத்துத் தானே மதனவேள் சிவபெருமான் என்னும் பகையினை வெல்கின்றான். அன்று (உங்கள் திருமணத்திற்கு முன்னர்) ஐங்கணைகளை சிவபெருமான் மீது விட்டு அதன் விளைவாக மதனவேள் அழிந்தது போல் மீண்டும் நடந்தால் தீதாக முடியும் என்று தானே, அழகுடன் கூடிய பெரும் கொங்கைகளைக் கொண்ட பொற்றிருவே, மதனவேளுக்கு பத்து கணைகளை இப்போது அளித்தாய். உன்னுடைய மனத்தில் தோன்றும் எண்ணங்களை அறிந்தவர் எவரும் உளரோ?

உளம் மகிழ் மகிழ்நர் சென்னி
உறு நதி விளக்க மாயோன்
கிளர் முடிப் பதுமராக
முளரி நின் பதங்கள் வேத
முடியுறப் பதித்தது அவ்வாறு
எளிய என் தலை மேல் வைக்க
இரங்குவதென்று தாயே.

நடுவில் ஒரு வரி (நான்காவது வரி) விடுபட்டுவிட்டது போல் தோன்றுகிறது மௌலி. பார்த்துச் சொல்லுங்கள்.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கும் பொருளுக்கும் நன்றி குமரன்.

ஆமாம் குமரன், 4ஆம் வரியை "கேழொளி செம்பஞ் சேய்க்கும்" என்பதை விட்டுவிட்டேன். இப்போது பதிவிலும் திருத்திவிடுகிறேன். சுட்டியமைக்கு மிக்க நன்றி குமரன்.