ஹிமாநீஹந்தவ்யம் ஹிமகிரி நிவாஸைக சதுரெள
நிசாயாம் நித்ராணம் நிசி சரமபாகே ச விசதெள
வரம் லக்ஷ்மீபாத்ரம் ச்ரியமதைஸ்ருஜந்தெள ஸமயீனாம்
ஸரோஜம் த்வத்பாதெள ஜநநி ஜயத: சித்ரமிஹ கிம்
தாயே!, பனிமலையிலேயே இருக்கக்கூடியவையும், இரவு, பகல், ஸந்த்யாகாலம் போன்ற எல்லா காலத்திலும் மலர்ந்து இருப்பதும், ஸமயாசாரமுடைய பக்தர்களுக்கு லக்ஷ்மியைக் கொடுக்கக்கூடியதுமான உனது பாதங்கள், பனியில் நாசமடைந்தும், இரவில் உறங்கியும், லக்ஷ்மி விரும்புகிற நேரத்தில் மட்டும் வந்து அமரும்படியான தாமரை மலரை ஜயித்து இருப்பதில் வியப்பில்லை.
அம்பிகையின் பாதங்களானது தாமரைப் புஷ்பத்தை விஞ்சிய அழகுடையது என்பது இந்த ஸ்லோகத்தில் உள்ள செய்தி. தாமரைப்பூ அதிக பனியில் கருகிவிடுமாம். சூரியனது கதிர் கண்டே மலரக்கூடியது தாமரை. தாமரைப் பூவில் லக்ஷ்மி வாசம் செய்வதாகச் சொல்வர். லக்ஷ்மியும் எப்போதும் தாமரையில் இருப்பதில்லையாம், தனக்கு இஷ்டமிருக்கையில்மட்டுமே வந்து அமர்கிறாளாம். இவ்வாறாக இரவில் மலராதும், பனியில் கருகியும், எப்போதாவது மஹா-லக்ஷ்மி அமரும் தாமரைப் பூவைவிட, அன்னையின் பாதங்கள் சிறப்பாக பனிமலையிலும், ஒருநாளின் எல்லா காலங்களிலும், தன்னைச் சரணடைந்தவர்களுக்கு எப்போதும் லக்ஷ்மி கடாக்ஷத்தைத் தருவதுமான தாமரை என்று ஒப்பு நோக்கிக் கூறியிருக்கிறார்.
ஹிமகிரி - பனிமலை; நிவஸைக சதுரெள - இருப்பிடத்தில் ஸாமர்த்தியமாகவும்; நிசி - இரவில்; சரமபாகே ச - அடுத்த ஸந்த்யா காலங்களிலும், பகலிலும்; விசதெள - மலர்ந்திருப்பதும், ஸமயினாம் - ஸமயாசாரமுள்ள பக்தர்களுக்கு; ச்ரியம் - லக்ஷ்மிகரத்தை; அதி ஸ்ருஜந்தெள - உண்டாக்குகிற; த்வத் பாதெள - உன் பாதங்கள்; ஹிமாநி ஹந்தவ்யம் - பனியில் நாசமாகிற; நிசாயாம் - இரவில்; நித்ராணாம் - உறங்குகின்ற; வரம் லக்ஷ்மி பாத்ரம் - லக்ஷ்மிக்கு விருப்பமான இடமான; ஸரோஜம் - தாமரைப் புஷ்பத்தை; ஜயத: - ஜயிக்கின்றது; இஹ சித்ரம் கிம் - ஆச்சர்யமென்ன?.
கவிராஜரது மொழிப்பெயர்ப்பு கீழே!
இமநெ டுங்கிரி உலவி யுங்கவின்
எழுநி ரந்தர மலருமேல்
அமர்பெ ருந்திரு அருளு நின்பத
அருண முண்டக மனையதோர்
கமல மென்பது பனியில் வெந்திதழ்
கரிய கங்குலின் முகுளமாய்
விமலை யின்திரு மனையெ னும்பெயர்
விளவ தொன்றல முதல்வியே.
*********************************************************************************

பதம் தே கீர்த்தீனாம் ப்ரபதம் அபதம் தேவி விபதாம்
கதம் நீதம் ஸத்பி: கடிநகமடீ கர்பர துலாம்
கதம் வா பாஹுப்யாம் உபயமநகாலே புரபிதா
யதாதாய ந்யஸ்தம் த்ருஷதி தயமாநேந மநஸா
தாயே!, கீர்த்தி/புகழுக்கு உரியதாகவும், ஆபத்துக்கள் அணுகமுடியாததாகவுமுள்ள உனது பாதங்களை, கடினமான ஆமையின் முதுகு ஓட்டிற்கு ஸமமானதாக கவிஞர்கள் எப்படித்தான் வர்ணித்தார்களோ?. பரம-தயவுடைய சிவனுக்கு உன்னுடனான விவாஹ காலத்தில் அதி-மிருதுவான உனது பாதங்களைகளை எடுத்து பாராங்கல்லான அம்மியில் வைக்க எப்படித்தான் மனது வந்ததோ?.
அம்பிகையின் பாதங்கள் பக்தர்களுக்கு புகழையும் அளித்து அவர்களுக்கு ஏற்படும் சகலவிதமான ஆபத்துக்களையும் போக்கவல்லது என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஸஹஸ்ரநாமத்தில், 'கூர்ம ப்ருஷ்ட ஜயிஷ்ணு ப்ரபாதன் விதா' என்று அம்பிகையின் அழகிய வளைந்த பாதங்களை ஆமையின் மேலிருக்கும் ஓட்டுக்குச் சமமாக வர்ணிக்கப்பட்டிருக்கிறதைச் சொல்கிறார். கல்யாணங்களில் சப்தபதியின் போது பெண்ணின் பாதத்தை தனது கைகளால் எடுத்து அம்மியின் மேல் வைத்து மந்திரங்கள் உச்சரிப்பர். அன்னை பராசக்தியின் ம்ருதுவான அக்கால்களை பரமசிவன் எப்படித்தான் அம்மிக்கல்லில் வைக்கத் துணிந்தாரோ என்று கேட்பதன் மூலமாக அன்னையின் பாதங்களது மென்மையை சிறப்பாகக் கூறுகிறார் ஆசார்யார்.
தேவி - அம்மா; கீர்த்தானாம் பதம் - கீர்த்திக்கு இடமான; விபதாம் அபதம் - ஆபத்துக்களுக்கு இடமில்லாத; தே - உன்; ப்ரபதம் - பாதத்தின் முன்பகுதி; ஸத்பி: - ஸாதுக்களால்/கவிஞர்களால்; கடின - கடினமான; கமடீகர்பர துலாம் - ஆமையின் மேல் இருக்கும் ஓடு; கதம் நீதம் - ஸமமாக எப்படிச் சொல்லப்பட்டது; தயமாநேந மநஸா - தயவோடு கூடிய மனசுள்ள;புரபிதா - பரமசிவனால்; உபயமநகாலே - உன்னுடைய விவாஹ/திருமண காலத்தில்; யத் - எந்தப் பாதங்களை; பஹுப்யாம் ஆதாய - கைகளால் எடுத்து; த்ருஷதி - அம்மியில்; கதம் வா ந்யஸ்தம் - எப்படித்தான் வைத்தாரோ?.
கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!
பஞ்ச ழுத்தினும் வாடு நின்பத
பங்க யத்தினை ஒப்பெனா
விஞ்சை கற்றவர் வம்பு றக்கம
டத்தை வீணில் வியப்பராம்
அஞ்ச னப்புயல் தங்கெ நின்வரர்
அம்மி மீதிலும் வைப்பராம்
வஞ்ச கக்கொடு நெஞ்ச ரத்தனை
வல்ல ரல்லர் நினைக்கினே.
7 comments:
//அம்பிகையின் பாதங்களானது தாமரைப் புஷ்பத்தை விஞ்சிய அழகுடையது என்பது இந்த ஸ்லோகத்தில் உள்ள செய்தி.//
அன்னையின் பாதாரவிந்தத்தில் சமர்ப்பணம்.
வருகைக்கு நன்றி கைலாஷி சார்.
//அன்னை பராசக்தியின் ம்ருதுவான அக்கால்களை பரமசிவன் எப்படித்தான் அம்மிக்கல்லில் வைக்கத் துணிந்தாரோ//
அதானே!
//பஞ்ச ழுத்தினும் வாடு நின்பதபங்க யத்தினை //
மெல்லிய பஞ்சால் அழுத்தினால் கூட வாடி விடுமாம் அம்மாவுடைய தாமரைப் பாதங்கள். எவ்வளவு அழகு! கவிதை, உவமை, பாதம், எல்லாம்தான்!
சொல்ல மறந்துட்டேன். முதல் படம் கண்ணையும் மனசையும் பறிக்குது. மிக்க நன்றி மௌலி.
வருகைக்கும், ரசிப்பிற்கும் நன்றிக்கா.
படம் எப்போதும் போல கூகிளார்தான். நன்றி முதலில் வலையேற்றியவருக்கே!
கவிராசரது மொழிபெயர்ப்பும் விளக்கமும்:
இம நெடுங்கிரி உலவியும் கவின்
எழு நிரந்தர மலரும் மேல்
அமர் பெருந்திரு அருளும் நின் பத
அருண முண்டகம் அனையதோர்
கமலம் என்பது பனியில் வெந்து இதழ்
கரிய கங்குலின் முகுளமாய்
விமலையின் திருமனை எனும் பெயர்
விளவது ஒன்றல முதல்வியே
முதல்வியே! குளிரில் சிறந்த இமய பெருமலையில் உலவியும் அழகுடன் எப்போதும் (இரவும் பகலும்) மலர்ந்திருப்பதும், என்றும் நிலையாக பெரும் செல்வம் அருளும், உன்னுடைய திருவடிகள் விரிந்த சிவந்த தாமரை மலர்கள் போன்றது என்று புகழ்வது சரி தானா? விமலையாம் திருமகளின் இல்லம் என்பது மட்டுமே தாமரைக்கும் உன் திருவடிகளுக்கும் உள்ள ஒற்றுமை. மற்ற படி கமலம் பனியில் வெந்து இதழ் கரிந்து விடும். கங்குலாம் இரவில் கூம்பி முகுளமாகிவிடும். அதனால் தாமரை போன்றது உன் திருவடிகள் என்று சொல்வது பொருத்தமில்லை.
பஞ்சு அழுத்தினும் வாடும் நின் பத
பங்கயத்தினை ஒப்பெனா
விஞ்சை கற்றவர் வம்புறக் கமடத்தை
வீணில் வியப்பராம்
அஞ்சனப் புயல் தங்கை நின் வரர்
அம்மி மீதிலும் வைப்பராம்
வஞ்சகக் கொடு நெஞ்சர் அத்தனை
வல்லர் அல்லர் நினைக்கினே
பஞ்சு அழுத்தினாலும் வாடும் உன் பாதத் தாமரைக்கு ஒப்பாக வித்தை கற்றவர்கள் வலிமையான ஆமையை வீணாக வியந்து கூறுகிறார்கள். கரிய மேனியை உடைய புயலாம் காளமேகப் பெருமாளின் தங்கையே! உன் கணவரோ அந்தப் பாதத்தை அம்மி மீதிலும் வைப்பாராம். வஞ்சகக் கொடு நெஞ்சர்கள் இவர்கள். உன் பாதத்தின் மென்மையை அறிய அத்தனை தூரம் இவர்களுக்கு வல்லமை இல்லை என்றே நினைத்துப் பார்த்தால் தோன்றுகிறது.
பதம் பிரித்தளித்தமைக்கும், பொருளுரைத்தமைக்கும் நன்றி குமரன்.
Post a Comment