செளந்தர்யலஹரி 89 & 90


நகைர் நாகத்ரீணாம் கரகமலஸங்கோச சசிபி:
தரூணாம் திவ்யானாம் ஹஸத இவ தே சண்டி சரணெள
பலாநி ஸ்வஸ்த்தேப்ய: கிஸலயகராக்ரேண தததாம்
தரித்ரேப்யோ பத்ராம் ச்ரியமநிசம் அன்ஹாய தததெள

சண்டிகே!, தேவலோகத்தில் உள்ள கற்பகம் முதலான வ்ருக்ஷங்கள்/மரங்கள் தங்களுடைய துளிராகிய கைகளினால் ஸ்வர்கலோகத்தில் சகல சம்பத்துடன் இருக்கும் தேவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுக்கின்றன. உன்னுடைய பாதங்களோ தரித்ரர்களுக்கும் சிறந்த ஐஸ்வர்யத்தை அளிக்கவல்லது. இதனாதானோ உன்னுடைய பாதங்களில் இருக்கும் நகங்களது ஒளி தேவ-தாருக்களைப் பரிஹாசிப்பது போன்று தெரிகிறது?. உன் பாத நகங்களின் ஒளியானது சந்திரனது ஒளிபோல தோன்றுவதால் தானோ தேவலோக ஸ்த்ரீகளது தாமரைப் பூ போன்ற கரங்கள், (சந்திரன் கண்ட தாமரை கூம்பிக் கொள்வது போல) உனது பாதம் கண்டதும் கூப்பிய கைகளுடன் வணங்குன்றனர்?.

அன்னை சண்ட-முண்டர்களை வதைத்த சண்டி ரூபமாக விளிக்கிறார் இப்பாடலில். அவளது சரணங்களை ஸ்வர்க்க லோகத்தில் இருக்கும் கல்பக விருக்ஷத்திற்கு (கேட்டவற்றை எல்லாம் கொடுக்குமாம் கற்பகமரம்) ஒப்பாகச் சொல்லி, அந்த கற்பக மரமாவது தேவர்களுக்கு மட்டுமே எல்லாம் தரும், ஆனால் அன்னையின் சரணங்கள், சாதாரணர்கள் கேட்பதை விட அதிகமாக எல்லாம் தரும் என்கிறார். இவ்வாறு அன்னையின் சரணங்கள் கற்பக மரங்களைவிட சிறப்பாக இருப்பதால் அம்மரங்களை அன்னையில் பாதங்களில் இருக்கும் நகங்கள் பரிஹாசம் செய்கிறதாம்.

கிஸலய - துளிர்களாகிய; கராக்ரேண - கை நுனிகளால்; ஸ்வஸ்த்தேப்ய: - ஸ்வர்கத்தில் வசிக்கும் தேவர்களுக்கு; பலாநி தததாம் - பலன்களைக் கொடுக்கும்; திவ்யானாம் தரூணாம் - தேவலோகத்தில் இருக்கும் சிறந்த மரங்கள் (கற்பகம் போன்றவை); தரித்ரேப்ய: - தரித்திரர்களுக்கும் கூட; பத்ராம் ச்ரியம் - சிறப்பான ஐச்வர்யத்தை; அநிசம் - எப்போதும்; அந்ஹாய - சீக்ரமாக;தததெள - கொடுக்கிற; தே சரணெள - உன் பாதங்கள்; நாகஸ்த்ரீணாம் - தேவலோக ஸ்த்ரீகளுடைய; கரகமல - கைகளாகிய தாமரைப் பூக்களை; ஸங்கோச சசிபி: - சந்திர ஒளியால் கூப்பிய; நகை: - நகங்களால்; ஹஸத: இவ - பரிஹாசம் செய்வது போல.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

அற்ற வர்க்கருள் செய்யும் மம்மைநின்
அற்பு தப்பத மம்பொன்நாடு
உற்ற வர்க்கருள் பொற்ற ருத்தர
ஊட நிந்தில மென்னவே
முற்று பொற்பர மாதர் கைத்தல
முண்ட கங்குவி வெண்நிலா
நற்றிற் றத்தொடு நாடி நாடிந
கைக்க வாளுகி ரென்பரே.
*******************************************************************************

ததானே தீநேப்ய: ச்ரியமநிசம் ஆசாநுஸத்ருசீம்
அமந்தம் ஸெளந்தர்ய ப்ரகர மகரந்தம் விகிரதி
தவாஸ்மிந் மந்தாரஸ்தபமஸுபதே யாது சரணே
நிமஜ்ஜந் மஜ்ஜீவ: கரணசரண: ஷட்சரணதாம்

தாயே!, எளியவர்களுக்கும்கூட ஆசைப்ப்பட்ட அளவு ஸம்பத்தை/செல்வத்தை எப்போதும் கொடுப்பதும், லாவண்யம் மிகுந்த கற்பக விருக்ஷங்களின் மகரந்தம் நிறைந்த பூக்களாலான பூங்கொத்துப் போன்ற அழகான உனது பாதங்களைச் சுற்றிவரும் வண்டாக எனது ஆத்மா இருக்க வேண்டுகிறேன்.

மகரந்தம் நிறைந்த மலர்களை வண்டுகள் சுற்றிவருவது சகஜம். அம்பிகையின் பாதங்களானது தேவலோக மலர்க் கொத்துப் போல இருப்பதாகச் சொல்லி, அதைச் சுற்றும் வண்டாக தன்னை ஏற்கவேண்டும் என்று கூறுகிறார் ஆசார்யார். வண்டுகளுக்கு ஆறு கால்கள் இருப்பதால் அதை 'ஷட்-சரணம்' என்று கூறுவார்கள். இங்கே தனது ஆத்மாவை வண்டாகச் சொல்லிக் கொள்வதன் மூலம் ஜீவனுக்கு உண்டான ஆறு கரணங்களை (பஞ்சேந்திரியங்கள் ஐந்தும் + மனஸ்) சரணங்களாகச் சொல்லி வண்டாகச் சொன்ன உதாரணத்தை விளக்குகிறார் தேதியூரார்.

தீநேப்ய: - எளியவர்கள்; ஆசானு ஸத்ருசீம் - அவர்கள் கோரியபடி; ச்ரியம் - செல்வத்தை; அநிசம் ததாநே - எப்போதும் கொடுப்பது; அமந்தம் - அதிகமான; ஸெளந்தர்ய ப்ரகரமகரந்தம் - லாவண்யமான/அழகான மகரந்தம்; விகிரதி - இறைக்கிறதும்; மந்தாரஸ்தபக ஸுபகே - கற்பக மரத்துப் மலர்களின் கொத்துப் போன்று அழகான; அஸ்மிந் தவ சரணே - உன்னுடைய இந்த பாத கமலங்களில்;நிமஜ்ஜந் - நன்கு மூழ்கினதான; கர சரண: - கரணங்களே கால்களாக உடைய; ஷட் சரணதாம் வண்டாக இருக்கும் தன்மையை; மஜ்ஜீவ: - என்னுடைய ஆத்மா; யாது - அடையட்டும்.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

அன்பினர்இ ரப்பதின் இரட்டியருள் செய்யும்
நின்பதத ருத்துணர்நி றைந்தொளிர்வ னப்பாம்
இன்பமுறு தேன்முழுகு மென்னியத வண்டின்
தன்புளக மெய்க்களி தழைக்கவருள் தாயே.

4 comments:

கவிநயா said...

//லாவண்யம் மிகுந்த கற்பக விருக்ஷங்களின் மகரந்தம் நிறைந்த பூக்களாலான பூங்கொத்துப் போன்ற அழகான உனது பாதங்களைச் சுற்றிவரும் வண்டாக எனது ஆத்மா இருக்க வேண்டுகிறேன்.//

நானும் அப்படியே வேண்டிக்கிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

எப்போதும் போல தவறாமல் வந்தமைக்கு நன்றிக்கா.

குமரன் (Kumaran) said...

கவிராசரின் பாடல்களும் பொருளும்:

அற்றவர்க்கு அருள் செய்யும் அம்மை நின்
அற்புதப் பதுமம் பொன் நாடு
உற்றவர்க்கு அருள் பொற்றரு தர
ஊட நித்திலம் என்னவே
முற்று பொற் பரமாதர் கைத்தல
முண்டகம் குவி வெண்ணிலா
நற்றிற்றத்தொடு நாடி நாடி
நகைக்க வாள் உகிர் என்பரே

அம்மையே! பொருள் அற்றவர்க்கு அருள் செய்யும் உனது அற்புதப் பதுமபாதங்கள். பொன்னாடாம் சுவர்க்கத்திற்குச் சென்றவர்களுக்கு அருள்பவை பொன் மரங்களான கற்பகத் தருக்கள். அவை முத்துகள் போல் ஒளி வீசுகின்றன. பொன் போல் விளங்கும் தேவமாதர்களின் கைத்தலம் என்னும் தாமரையைக் குவியச் செய்யும் வெண்ணிலா ஒன்று இருக்கிறது. கற்பகத் தருக்கள் என்னும் நித்திலத்தைக் கண்டு அந்த வெண்ணிலா நகைக்கின்றது. நாடிப் பார்த்தால் அந்த வெண்ணிலா உன் ஒளி வீசும் நகங்கள் என்று சொல்கிறார்கள்.

அன்பினர் இரப்பதின் இரட்டி அருள் செய்யும்
நின் பதத் தருத்துணர் நிறைந்தொளிர் வனப்பாம்
இன்பம் உறு தேன் முழுகும் என் இதய வண்டின்
தன் புளகம் மெய்க்களி தழைக்க அருள் தாயே.

அன்புடன் இரப்பவர்களுக்கு அவர்கள் வேண்டியதை விட இரட்டிப்பாக அருளும் நின் பாதத் தாமரையின் இனிமையான தேனில் முழுகும் என் இதய வண்டின் மெய்சிலிர்ப்பு என்றும் தழைத்திருக்க அருள்வாய் தாயே.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கும், பொருளுக்கும் நன்றி குமரன் ஐயா. :)