செளந்தர்யலஹரி 97 & 98


கிராமாஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீம் ஆகமவிதோ
ஹரே: பத்நீம் பத்மாம் ஹர ஸஹசரீம் அத்ரிநயாம்
துரீயா காபி த்வம் துரதிகமநிஸ்ஸீம மஹிமா

மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷீ

அம்பிகே!, ஆகம ரகஸ்யங்கள் தெரிந்தவர்கள் உன்னை பிரம்மனின் பத்னியான சரஸ்வதியென்றும், மஹாவிஷ்ணுவின் பத்னியான லக்ஷ்மியென்றும், அத்ரி மஹரிஷியின் புத்ரியான பார்வதீயென்றும் சொல்லுகிறார்கள். ஆனாலும் நீ இவர்களல்லாத துரீய ரூபமுடையவளும், வர்ணிக்க முடியாதவளும், அடையமுடியாத, எல்லையற்ற மஹிமையுடன் கூடியவளான மஹாமாயா ஸ்வரூபிணியாக, சர்வ ப்ரபஞ்சத்தையும் மோஹிக்கச் செய்து உலகனைத்தையும் ஆட்டுவிக்கிறாய்.

சரஸ்வதீ, லக்ஷ்மி, பார்வதீ என்னும் ரூபங்களைக் கடந்தவள் பராசக்தி. த்ரிமூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, பரமேஸ்வரனைக் காட்டிலும் மேலானவரான சதாசிவனுடைய பத்னியாக இருந்துகொண்டு சுத்த வித்யையில் அடங்கிய மஹா மாயா ஸ்வரூபிணியாக ஸகல ப்ரபஞ்சங்களையும் வழிநடத்துகிறாள் என்கிறார் பகவத் பாதர். 'நிஸ்ஸீம மஹிமா' என்பதற்கு கால, தேச, வஸ்துக்களுக்கு அப்பாற்பட்டவள் என்று பொருள்.

த்ருஹிண க்ருஹிணிம் - பிரம்மாவின் பத்னி; கிரமாஹுர் தேவீம் = கிராம் தேவீம் - வாக்தேவியான சரஸ்வதி; ஹரே: பத்நீம் - விஷ்ணு பத்னியான லக்ஷ்மி; ஹரஸசரீம் அத்ரி தநயாம் - ருத்ரனுடைய பத்னியான பார்வதி; ஆகமவித: ஆகம ரஹஸ்யங்கள் அறிந்தவர்கள்; ஆஹு: - சொல்கிறார்கள்; த்வம் - நீ; துரீயா - இவர்களல்லாத; காபி - வர்ணிக்க இயலாத; துரதிகம நிஸ்ஸீம மஹிமா - அடையமுடியாத எல்லையற்ற மஹிமைகளுடன் கூடியவளாய்; மஹாமாயா - மஹா மாயா ஸ்வரூபிணியாக; விச்வம் ப்ரமயஸி - சர்வ லோகங்களையும் ஆட்டுவிக்கிறாய்.


கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

வேதியர்க ளயன்நாவில் விஞ்சைமக ளென்றும்
சீதரன்றன் மணிமார்பிற் செழுங்கமலை யென்றும்
நாதரிடத் தரிவையென்று நாட்டுவரெண் ணடங்க
ஆதிபரன் மூலபரை யாமளையுன் மயக்கால்.

********************************************************************************




கதா காலே மாத: கதய கலிதாலக்தக ரஸம்
பிபேயம் வித்யார்த்தீ தவ சரண நிர்ணேஜநஜலம்
ப்ரக்ருத்யா மூகானாமபி ச கவிதாகாரணதயாகதா
தத்தே வாணீ முக-கமல-தாம்பூல ரஸதாம்

தாயே!, உனது காலில் பூசப்பட்டிருக்கும் செம்மையான் ரஸம் கலந்ததால் தாம்பூல ரஸம் போல் சிவந்திருக்கும் உனது பாதப்ரக்ஷாளன ஜலமானது ப்ரம்ஹஞானத்தை அடைய விரும்பும் எனக்கு எப்போது பருக கிடைக்கும் என்பதை கூறியருளுங்கள். பிறவியிலேயே ஊமையானவர்களுக்கும் கூட கவிதா சக்தியை உண்டாக்கும் ஸரஸ்வதியின் தாம்பூல ரஸத்திற்கு ஸமமான சக்தி உடைய உங்களது பாத தீர்த்தம் எப்போது எனது வாயில் சேரும்?.

கொல்லூரில் பிறவி ஊமைக்கு பேசும் திறம் மட்டுமின்றி கவிதை பாடும் திறனையும் அம்பிகை தனது பாத தீர்த்தத்தால் அளித்ததாகவும், அதனையே ஆசார்யார் இங்கு குறிப்பிடுகிறார் என்று அருணா-மோதினியில் சொல்லப்பட்டிருக்கிறது. பெண்கள் தங்கள் கால்களில் செம்மையான குழம்பினை அழகிற்காக இட்டுக் கொள்வார்கள். அன்னையின் அக்குழம்பு கலந்த பாத தீர்த்தமானது தாம்பூல ரஸத்தை ஒத்து இருப்பதாகவும், அதனை பிரஸாதமாக ஏற்றுக் கொண்டு உண்பதன் மூலமாக ப்ரம்மஞானத்தை அடைய முடியும் என்பதையும் கூறி அது தனக்கு என்று கிடைக்குமோ என்று ஏங்குகிறார் ஆசார்யார்.

கலிதா லக்தக ரஸம் - காலில் உள்ள செம்மை நிறத்தான அலங்காரம்; தவ சரண நிர்ணே ஜந ஜலம் - உனது பாதங்களை அலம்பிய நீரை; வித்யார்த்தீ - ப்ரஹ்மஞானத்தை/ப்ரஹ்ம வித்யயை அடைய விரும்பும் கதா காலே - எந்தக்காலத்தில்; பிபேயம் - சாப்பிடுவேன்; கதய தயை செய்து சொல்வாயா?; ப்ரக்ருத்யா - இயற்கையாக; மூகானாம் அபி - ஊமைக்குக் கூட; கவிதா காரணதயா - கவித்வத்தை அருளுவதால்; வாணீமுக கமல தாம்பூல ரஸதாம் - சரஸ்வதி தேவியின் வாயில் இருக்கும் தாம்பூல ரஸத்தின் தன்மை; கதா தத்தே - எப்போது அடைகிறதோ.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!


செய்ய பஞ்சுகு ழம்பெ ழும்புனல்
செல்வி நின்பத நல்கவே
துய்ய பங்கய வாணி தம்பல
ஊறல் துய்த்தசொல் வாணர்போல்
மையல் நெஞ்சுறு மூம ருங்கவி
வாண ராகிம லிந்ததால்
மெய்ய டங்கலு மூழ்கு முன்
கவி வீறு நாவில டங்குமோ.

3 comments:

Kavinaya said...

எல்லா ரூபங்களையும் கடந்த பராசக்தியின் செம்பிஞ்சுப் பாதம் தொட்ட தீர்த்தம் நமக்கும் கிடைக்க அவள் அருள் புரியட்டும். (பேராசைதான் இல்ல? :)

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றிக்கா. இந்த பேராசை பரவாயில்லைக்கா. :)

குமரன் (Kumaran) said...

கவிராசரது மொழிபெயர்ப்பும் பொருளும்:

வேதியர்கள் அயன் நாவில் விஞ்சை மகள் என்றும்
சீதரன் தன் மணிமார்பில் செழும் கமலை என்றும்
நாதர் இடத்து அரிவை என்றும் நாட்டுவர் எண் அடங்க
ஆதிபரன் மூலபரை யாமளை உன் மயக்கால்

ஆதிபராசக்தியான மூலபரையே! யாமளையே! உன்னுடைய மாயத்தால் மயங்கி வேதம் அறிந்த வேதியர்கள் பிரமன் நாவில் வித்தையின் மகளாக நீ இருக்கிறாய் என்றும், திருமாலின் மணிமார்பில் தாமரையாளாக நீ இருக்கிறாய் என்றும், சிவபெருமானின் இடப்பாகத்தில் இருக்கும் பெண் நீ என்றும் நாட்டுவார்கள்.

செய்ய பஞ்சு குழம்பு எழும் புனல்
செல்வி நின் பதம் நல்கவே
துய்ய பங்கய வாணி தம்பல
ஊறல் துய்த்த சொல் வாணர் போல்
மையல் நெஞ்சு உறு மூமரும் கவி
வாணராகி மலிந்ததால்
மெய் அடங்கலும் மூழ்கும் உன்
கவி வீறு நாவில் அடங்குமோ

தூய்மையான வெண்ணிறத் தாமரையில் வாழும் வாணியின் தாம்பூல ஊறலைப் பெற்ற சொல் வாணர் போல் தாமும் ஆக வேண்டும் என்று ஆசை நெஞ்சில் ஊறுகின்ற ஊமையரும் கவிவாணராக பெருகி நிற்கின்றார் என்றால் சிவந்த பஞ்சு குழம்பில் இருந்து எழும் நீரை செல்வியே உன் திருப்பாதம் நல்கினால் நா மட்டுமா உடல் முழுவதும் மூழ்கிவிடும்; பெருகும் கவிதை நாவில் மட்டும் அடங்குமா?