செளந்தர்யலஹரி 91 & 92


பதந்யாஸக்ரீடா பரிசயமிவாரப்து மநஸ:
ஸ்கலந்தஸ்தே கேலம் பவநகலஹம்ஸா ந ஜஹதி
அதஸ்தேஷாம் சிக்ஷாம் ஸுபக மணிமஞ்ஜீர ரணிதச்
சலாத் ஆசக்ஷாணம் சரணகமலம் சாருசரிதே

அம்பிகே!, உன் இல்லத்திலிருக்கும் அன்னபக்ஷிகள் உன்னுடைய அழகிய நடையைக் கண்டு அம்மாதிரி தாமும் நடக்க கற்றுக்கொள்ளூம் எண்ணத்துடன் உன்னைப் பின்பற்றி நடக்கப் பழகுகின்றன. அவ்வாறு அவை உனது நடையழகைப் பின்பற்ற முயற்சிக்கையில் நீ அணிந்திருக்கும் பாதரசமணிகளின் இனிய சப்தமானது அந்த பக்ஷிகளுக்கு நடக்கச் சொல்லிக் கொடுப்பது போல இருக்கிறது.

கவிஞர்கள் அன்னபக்ஷியின் நடையை அழகிய பெண்களது நடைக்கு ஒப்பாகச் சொல்வது வழக்கம். இப்பாடலில் அன்னபக்ஷிகளே அன்னையிடத்தில் நடக்கக் கற்றுக் கொள்ளுவதாகக் கூறுவதன் மூலம் அன்னையின் நடையழகை சிறப்பாகக் கூறுகிறார். அன்னை காலில் அணிந்திருக்கும் தண்டை மற்றும் கொலுசுகளின் மூலம் ஏற்படும் சுநாதமானது அன்னையது நடையழகை பக்ஷிகளுக்கு கற்றுத்தருவது போல இருக்கிறதாம்.

இங்கே 42ஆம் ஸ்லோகத்தில் அன்னையின் க்ரீடம் பற்றி ஆரம்பித்து இப்பாடலுடன் அன்னையின் அங்க வர்ணனை முடிவுக்கு வருகிறது. இனிவரும் ஸ்லோகங்கள் பொதுவான ஸ்தோத்ரங்களாக இருக்கும்.

சாரு சரிதே - அழகிய சரித்திரத்தை உடையவளே!, தே பவந கலஹம்ஸா: உன் வீட்டிலிருக்கும் அன்ன பக்ஷிகள்; பதந்யாஸ க்ரீடா பரிசயம் - பாதங்களை அழகாக வைத்து நடக்க முயல்வதாக; ஆரப்து மநஸ: - ஆரம்பிப்பதாக நினைத்து;ஸ்கலந்த: - தடுமாறியபடி; தே கேலம் - உன்னைப் பின் தொடர்தலை; ந ஜஹதி - விடுவதில்லை; சரணகமலம் - பாதாரவிந்தங்கள்; ஸுபக மணி மஞ்ஜீர ரணிதச்சலாத் - அழகிய பாதரஸ மணிகளின் இனிய சப்தத்தின் மூலமாக; தேஷாம் சிக்ஷாம் - அந்த அன்னபக்ஷிகளுக்குச் சொல்லிக் கொடுப்பது; ஆசக்ஷாணம் இவ - சொல்வது போலிருக்கிறது.

கவிராஜரது மொழிப்பெயர்ப்பு கீழே!

நாடியுன தற்புத நடைத்தொழில்ப டிக்கும்
பேடைமட அன்னமொடு பேதநடை கூறும்
ஆடகம ணிப்பரிபு ரத்தரவம் அம்மே
ஏடவிழ்ம லர்ப்பதமி ரைக்குமறை போலும்.

********************************************************************************

கதாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிண-ஹரி ருத்ரேச்வரப்ருத:
சிவஸ் ஸ்வச்சச்சாயா கடித கபட ப்ரச்சதபட:
த்வதீயானாம் பாஸாம் ப்ரதிபலந ராகாருணதயா
சரீரீ ச்ருங்காரோ ரஸ இவ த்ருசாம் தோக்தி குதுகம்


தாயே!, லோகாதிகார புருஷர்களான ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன் ஆகியவர்கள் உனது சிம்மாசனத்தின் கால்களாக இருக்கிறார்கள். அந்த சிம்மாசனத்தில் மேல் விரிப்பாக வெண்மையான ஒளியுடைய ஸதாசிவன் இருந்தாலும் உன்னுடைய சிருங்காரமான சிகப்பான ஒளியின் காரணமாக அவரும் சிவப்பாகத் தோற்றமளித்து உனது கண்களுக்கு ஆனந்தத்தைக் கொடுக்கிறார்.


பிரம்மா முதலிய நால்வரும் லோகதத்தின் அதிகார புருஷர்களாக இருந்தாலும், அம்பிகையின் சமீபத்தில் இருந்து ஸேவை செய்யவேண்டுமென்கிற ஆசையில் அவளது கட்டில்கால்களாகவாவது இருக்க விரும்பி அவ்வாறு இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சதாசிவனுடைய மடியில் அன்னை வீற்றிருக்கிறதையே 'பஞ்சப்ரேதாசனா' கோலமாகச் சொல்கையில் மேல் விரிப்பாக சதாசிவன் இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. 'சிவாகாரே மஞ்சே', 'பரமசிவ பர்யங்க நிலயாம்' என்பதெல்லாம் இந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்ட கோலத்தை அடிப்படையாகக் கொண்டதே.


த்ருஹிண ஹரி ருத்ரேச்வர ப்ருத: - பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஈசானன் ஆகிய லோகாதிகார புருஷர்கள் உன்னுடைய மஞ்சத்தின் கால்களாக: கதா: ஆகிவிட்டார்கள்; சிவ: ஸதாசிவனார்; ஸ்வச்சச்சாயா கடித கபட ப்ரச்சத பட: மேல்விரிப்பு என்கிற வெண்மையான ரூபத்தில்; த்வதீயானாம் - உன்னுடைய; பாஸாம் - சிகப்பான ஒளி; ப்ரதிபலநராகா ருணதயா - ப்ரதிபலனாக சிகப்பாக மாறியது; சரீரீ - உருவமெடுத்த; ச்ருங்காரோ ரஸ இவ - ச்ருங்கார ரஸம் போல்; த்ருசாம் - உன் கண்களுக்கு; குதுகம் - ஆனந்தம்; தோக்தி - கொடுக்கிறார்.


வீரை கவிராஜரது மொழிப்பெயர்ப்பு கீழே!

மூவர்ம கேசன் முடிகொளு மஞ்சத் தொழிலாயும்
மேவிய படிகத் தனதொளி வெளிசூழ் திரையாயும்
ஓவறு செங்கேழ் விம்பம தின்பத் துருவாயும்
பாவைநி னகலா இறையொடு நின்னைப் பணிவாமே

2 comments:

குமரன் (Kumaran) said...

கவிராசரது மொழிபெயர்ப்பும் பொருளும்:

நாடி உனது அற்புத நடைத் தொழில் படிக்கும்
பேடை மட அன்னமொடு பேத நடை கூறும்
ஆடக மணிப்பரிபுரத்து அரவம் அம்மே
ஏடு அவிழ் மலர்ப் பதம் இரைக்கும் மறை போலும்

உனது நடையைக் கண்டு பேடை மட அன்னம் நடைத் தொழில் படிக்கும். அப்போது உன் பொன்னாலும் மணியாலும் ஆன சலங்கையிலிருந்து தோன்றும் ஒலி மறைகளானது உன் திருவடிகளைத் தொழுது இரைச்சல் இடுவதை ஒக்கும்.

மூவர் மகேசன் முடி கொளும் மஞ்சத் தொழிலாயும்
மேவிய படிகத் தனது ஒளி வெளி சூழ் திரையாயும்
ஓவறு செங்கேழ் விம்பம் அது இன்பத்து உருவாயும்
பாவை நின் அகலா இறையொடு நின்னைப் பணிவாமே

பிரமன், மால், ருத்திரன் என்னும் மூவருடன் மகேசனான சிவபெருமான் நீ ஆட்சி செய்யும் கட்டிலாகவும், கண்ணாடி போன்ற அந்த கட்டிலின் மேல் ஒளி வெளி சூழ்கின்ற திரையாகவும் (விரிப்பாகவும்), எங்கும் விளங்கும் சிவந்த உருவத்தினால் (உன்னுடைய உருவத்தினால்) சிவந்து அது இன்பமான உருவமாக விளங்கும்படியாகவும், பெண்ணே உன்னை என்றும் விட்டு அகலாமல் விளங்கும் இறைவரோடு உன்னைப் பணிவோம்.

('அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா' என்ற திருவாய்மொழி பாசுர வரி இங்கே நினைவிற்கு வருகிறது. 'உன்னை விட்டு ஒரு நொடியும் அகலமாட்டேன் என்று திருமகள் உன் மார்பில் உறைகின்றாள்' என்று அங்கே சொல்ல இங்கே தலைகீழாக 'உன்னை விட்டு ஒரு நொடியும் அகலமாட்டேன் என்று உன் கணவன் உன்னுடனே உறைகின்றான்' என்று சொல்லப்படுகிறது).

மெளலி (மதுரையம்பதி) said...

நன்றி குமரன். திருவாய்மொழியுடனான ஒப்புமை அருமை.