செளந்தர்யலஹரி 93 & 94



அராளா கேசேஷு ப்ரக்ருதி ஸரளா மந்த ஹஸிதே
சிரீஷாபா சித்தே த்ருஷதுபலசோபா குசதடே
ப்ருசம் தந்வீ மத்யே ப்ருதுருரஸிஜாரோஹவிஷயே
ஜகத் த்ராதும் சம்போர் ஜயதி கருணா காசிதருணா


அம்பிகே!, பரமசிவனுடௌய மனதுக்கும் வாக்குக்கும் கூட எட்டாத பரம கருணை இந்த உலகை ரக்ஷிப்பதற்காக அருணா என்றழைக்கப்படுகிற பராசக்தியாக வெற்றியுடன் விளங்குகிறாய். கருணா சக்தியானது உனது கூந்தலில் சுருளாகவும், புன்சிரிப்பில் இயற்கையான இனிமையாகவும் மனதில் வாகைப் பூவைப் போல மிருதுத்தன்மையானதாகவும், நிகில்களில்கல்லினுள் இருக்கும் ரத்தினத்தினத்தைப் போன்ற கடுமையானதாகவும், இடையில் மிகுந்த மெலினமாகவும், மார்பும், நிதம்பமும் பருமனாகவும் விளங்குகிறது.

'காருண்ய விக்ரஹா' என்னும் த்ரிசதியில் வரும் நாமத்தை நினைவுபடுத்துவதாக இந்த ஸ்லோகம் இருக்கிறது.கருணாரஸத்தை அருணவர்ணமாகச் சொல்லுவது வழக்கம் என்றும், அந்த கருணையானது மூர்த்தியாக வந்திருப்பது போல சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார் தேதியூரார்.

கேசேக்ஷு அராளா - கூந்தலில் சுருளாகவும்; மந்த ஹஸிதே - மந்தஹாசமான சிரிப்பில்; ப்ரக்ருதி ஸரளா - ஸ்வபாவமான ஸெளகுமார்யத்தோடும்; சித்தே - மனதில்; சிரீஷாபா - சிரீஷ குஸுமம் (வாகை மலர்)போல ம்ருதுவாகவும்; குசதடே - ஸ்தன ப்ரதேசத்தில்; த்ருஷதுபலசோபா - கருங்கல் போல கடினமாகவும்; மத்யே - மத்ய ப்ரதேசத்தில் (இடுப்பில்),ப்ருசம் தந்வீ - மிகவும் மெலிந்ததாகவும்; ரஸிஜாரோஹ - ஸ்தன ப்ரதேசத்திலும், நிதம்ப ப்ரதேசத்திலும்; ப்ருது: - பருத்ததாகவும்; அருணா - சரீரம் முழுவதும் சிவந்ததாகவுள்ள; சம்போ: - பரமேஸ்வரனுடைய; காசிக் கருணா - அழகுடைய கருணாமூர்த்தியான; ஜகத் த்ராதும் - லோகங்களைக் காப்பாற்றுவதற்காக; விஜயதே - வெற்றிகரமாக விளங்குகிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

ஒதியிருள் மூரலொளி உற்றகுழை வாக
மோதுமுலை யற்பஇடை முற்றுமு னிதம்பம்
ஆதிபர னின்னருள் திரண்டருண மாகு
மாதுநின்ம லர்ப்பதம னத்தெழுதி வைத்தேன்.

******************************************************************************



களங்க: கஸ்தூரி ரஜநிகரபிம்பம் ஜலமயம்
களாபி: கர்பூரைர் மரகத கரண்டம் நிபிடிதம்
அதஸ்த்வத் போகேந ப்ரதிதிநமிதம் ரிக்த குஹரம்
விதிர் பூயோபூயோ நிபிடயதி நூநம் தவ க்ருதே

தாயே!, சந்த்ர மண்டலமானது களங்கமாகிற கஸ்தூரியுடனும், சந்த்ர பிம்பம் தோற்றுவிக்கும் கலைகள் பச்சைக்கருபூரப் பொடிகளோடு நிரம்பிய மரகதச் சிமிழாக இருக்கிறது. இப்படி உன்னுடைய ஸ்நானத்திற்காக வைக்கப்பட்டிருக்கும் சாமக்கிரியைகளை நீ தினமும் உபயோகம் செய்வதால் காலியாகும் இந்தச் சிமிழை பிரம்மா மீண்டும் மீண்டும் உனக்காக நிரப்பி வைக்கிறார்.

கஸ்தூரி, பன்னீர், பச்சைக்கர்ப்பூரப்பொடி போன்றவை அம்பிகையின் ஸ்நான திரவியங்கள். இவைகளுடைய பெட்டியானது சந்திர மண்டலமாகவும், கஸ்தூரி கருப்பாகவும், பன்னீர் தளதளவென்றும், சந்திர கிரணங்கள் கர்பூரப்பொடிகளாகவும் வர்ணிக்கப்பட்டுள்ளன. சந்திரன் ஒரு பக்ஷத்தில் குறைந்தும், மற்றொரு பக்ஷத்தில் வளர்ந்தும் வருவது அன்னையின் ஸ்நானத்திற்கான திரவியங்கள் குறைவதற்கும், பிரம்மா அதை மீண்டும் இட்டு நிறப்புவதற்கும் உவமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

களங்க: சந்திர மண்டலத்தில் அழுக்குப் போன்று களங்கம் தெரிவது; கஸ்தூரீ - கஸ்தூரீ திரவியம்; ரஜநிகர பிம்பம் - சந்திர பிம்பம் போல தோன்றுவது; ஜலமயம் - பன்னீர்; களாபி: - கலைகள்; கர்பூரை: - பச்சைக் கர்பூரப் பொடிகளோடும்; நிபிடிதம் - நிரம்பிய; மரகத கரண்டம் - மரகதத்தால் செய்யப்பட்ட சிமிழ்; அத: - அக்காரணத்தால்; ப்ரதிதினம் - தினமும்;த்வத் போகேந - உன்னுடைய உபயோகத்தால்; ரிக்த குஹரம் - காலியாகும் சிமிழை; விதி: - பிரம்மா; பூயோபூயோ: மீண்டும் மீண்டும்; தவ க்ருதே - உனக்காக; நிபிடயதி - நிரப்பி வைக்கின்றார்; நூநம் - நிஜமே.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

தூயமதி மரகதச்செப் பொளிர்கலையுங்
களங்கமுநேர் சொல்லுங் காலைக்
காயுமதி தவளகருப் பூரசக
லத்தொடுகத் தூரி போலும்
நீ அருந்த அருந்தவவை குறைதொறுமவ்
விரண்டும் அயன் நிறைத்தல் போலும்
தேயுமது வளருமது திங்களொளி
தோவுனது செல்வ மம்மே.

8 comments:

துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்யோ!!!!

ரெண்டுமூணு நாளுக்கு முன்னாலேதான் ஒரு கோயிலில் அம்மன் பெயர் அராளகேசின்னு தெரிஞ்சது. அழகிய நீண்ட சுருண்ட கூந்தலை உடையவளாம்.

குளித்தலையில் ஒரு மலைமேல் கோயிலில் குடிகொண்டிருக்காளாம். இங்கே சென்னையில் பெஸண்ட்நகர் ரத்னகிரீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் மூலவர் சமுத்திரத்தில் இருந்து கிடைச்சார்ன்னு பிரதிஷ்டை செஞ்சாங்க. ரொம்ப நாள் அம்மன் இல்லாமலே இருந்துருக்கார். அதுக்கப்புறம் ஸ்ரீ பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்தான் அராளகேசியைச் செய்யச் சொல்லி இங்கே பிரதிஷ்டை செஞ்சாராம்.

எல்லாம் குருக்களிடம் விசாரிச்சுத் தெரிஞ்சுக்கிட்டதுதான்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க டீச்சர். இங்கு நீங்க வருவது இதே முதல் முறை. நன்றி. செளந்தர்யலஹரி முடியும் நேரத்தில் மூத்த பதிவரான நீங்கள் வந்தது மிக்க சந்தோஷம். :)

ஆமாம், நீங்கள் சொல்லியிருக்கும் ரத்னகிரீஸ்வரர் ஆலயம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

துளசி கோபால் said...

பின்னூட்டம் போட்டது வேணுமுன்னா முதல்முறையா இருக்கலாம். ஆனா....ரீடர்லே போட்டுவச்சுக்கிட்டு ஓசைப்படாமப் படிக்கிறவங்க பட்டியலில் நான் இருக்கேன்:-)

மெளலி (மதுரையம்பதி) said...

//ரீடர்லே போட்டுவச்சுக்கிட்டு ஓசைப்படாமப் படிக்கிறவங்க பட்டியலில் நான் இருக்கேன்:-)//

மிக்க மகிழ்ச்சி...நன்றி டீச்சர் :)

Kavinaya said...

அன்னையின் கருணா சக்தியை விதவிதமாக ஒப்பிட்டிருப்பது நல்லாருக்கு.

அராளகேசிங்கிற பேர் அழகா இருக்கு :)

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி கவிக்கா...

குமரன் (Kumaran) said...

கவிராசரின் மொழிபெயர்ப்பும் பொருளும்:

ஓதி இருள் மூரல் ஒளி உற்ற குழைவாக
மோது முலை அற்ப இடை முற்றும் முனி தம்பம்
ஆதி பரன் இன்னருள் திரண்டு அருணம் ஆகும்
மாது நின் மலர்ப்பதம் மனத்து எழுதி வைத்தேன்

உன் கூந்தலின் இருளாகவும் (அடர்த்தியாக இருப்பதால் இருண்டு கருத்து இருக்கின்றது) புன்னகையின் ஒளியாகவும் குழைந்த திருமேனியாகவும் திரண்டு ஒன்றையொன்று மோதும் திருமுலைகளாகவும் இல்லையெனும் படியான இடையாகவும் ஆதிபரனின் இன்னருளே திரண்டு அருணம் என்னும் உருவாக இருக்கின்றது. அன்னையே உன் மலர்ப்பதம் என் மனத்தே அழியாமல் எழுதி வைத்தேன்.

தூய மதி மரகதச் செப்பு ஒளிர் கலையும்
களங்கமும் நேர் சொல்லும் காலை
காயும் அதி தவள கருப்பூர
சகலத்தொடு கத்தூரி போலும்
நீ அருந்த அருந்த அவை குறை தொறும்
அவ்விரண்டும் அயன் நிறைத்தல் போலும்
தேயும் அது வளரும் அது திங்கள் ஒளி
இதோ உனது செல்வம் அம்மே

தாயே. உன் செல்வம் இத்தன்மையதோ? தூய்மையான நிலவு மரகதச் செப்பு போன்றது. அதிலிருந்து ஒளிரும் சந்திரகலைகளும் சந்திர களங்கமும் அந்தச் செப்பில் வைக்கப்பட்ட கருப்பூரப் பொடியும் கஸ்தூரியும் போன்றவை. மதி தேய்வதும் வளர்வதும் நீ அவற்றைப் புழங்க புழங்க அவை குறையவும் பிரமன் அவ்விரண்டையும் நிறைப்பதையும் போல் தோன்றுகின்றது.

குமரன் (Kumaran) said...

துளசியக்கா.

ஓசைப்படாம ரீடர்ல போட்டு படிச்சா வர்ற சுவையான பின்னூட்டங்கள் எல்லாம் படிக்க முடியாது ஆமாம். :-)

(போதும்டா சுய முதுகு தட்டல்ன்னு என் ம.சா. சொல்றது உங்களுக்குக் கேக்கலை தானே?)