அன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6


முந்தைய பகுதி இங்கே!

திரு. கே.ஆர்.எஸ் பாடியிருப்பதை கேட்க, கீழே இருக்கும் ப்ளேயரை இயக்கவும்.

Annaikku_64_Upacha...


Annaikku_64_Upacha...


51. நடனம்

முகநயன விலாஸ லோல வேணீ
விவஸித நிர்ஜித லோல ப்ருங்கமாலா !
யுவஜன ஸுககாரி சாருலீலா:
பகவதி தே புரதோ நடந்தி பாலா:

முகம், கண் இவைகளின் அபிநயத்தால் அசைகின்ற வேணியின் விலாசம், வரிசையாகச் சுற்றிவடும் வண்டுகள் வரிசையை விட அழகான இருக்கிறது. நடனக் கலையில் சிறந்த மங்கையர் உம்முன் நடனமாடுவதை சமர்ப்பிக்கிறேன்.

ப்ரம தளிகுல துல்யா லோலதம் மில்ல பாரா:
ஸ்மிதமுக கமலோத்யத் திவ்ய லாவண்ய பூரா: !
அநுபமித ஸுவேஷா வாரயோஷா நடந்தி
பரப்ருத கலகண்ட்யா: தேவிதைன்யம் துநோது: !!

அழகானவர்களும், ஒப்பற்ற வேடம் பூண்டவர்களும், குயில் போன்ற குரலினிமை கொண்டவர்களுடைய நடனம் ஏழ்மையை அகற்றட்டும்.

52. வாத்யம்

டமரு டிண்டிம ஜர்ஜர ஜல்லரீ
ம்ருதுரவத்ர கடத்ர கடாதய: !
ஜடிதி ஜாங்க்ருத ஜரங்க்ருதை:
பஹுதயம் ஹ்ருதயம் ஸுகபந்துமே!!

டமரு, டிண்டிம, ஜாஜ்ர ஜல்லரீ, த்ரகடம் ஆகிய வாத்யங்களின் சப்தம் மனதைச் சுகப்படுத்தட்டும்.


நாட்டியம், நடனம், மற்றும் வாத்யங்களுக்கான உபசார பாடல் கீழே!

நவரசமும் காட்டியுன்னை போற்றுகின்ற நாட்டியமும் (51)
ஜதிகள்சேர்த்து துரிதகதியில் ஆடுகின்ற நடனங்களும் (52)
டமரு,டிண்டிம, கச்சபிகள் முழங்குகின்ற பேரொலியும் (53)
அத்தனையும் உனக்காக, ஆனந்தமாய் மகிழ்ந்திடுவாய்!

53. கானம்

விபஞ்சீஷு ஸப்தஸ்வரான் வாத யந்த்ய:
தவத்வாரி காயந்தி கந்தர்வ கன்யா: !
க்ஷணம் ஸாவ தானேன சித்தேன மாத:
ஸமா கர்ணய த்வம் மயா ப்ரார்த்திதாஸி: !!

கந்தர்வ கன்னியர்கள் வீணையில் கானம் செய்கின்றனர். அந்த இசை இனிமையை நானும் கேட்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

54. நர்த்தன அபிநயம்

அபிநய கமநீயைர் நர்த்தனைர் நர்த்தகீனாம்
க்ஷணமபி ரமயித்வா சேத ஏதத் த்வதீயம் !
ஸ்வய மஹதி சித்ரை: ந்ருத்த வாதித்ர கீதை:
பகவதி பவதீயம் மானஸம் ரஞ்ஜயாமி !!

நடன மாதர்கள் அழகான அபிநயத்தால் உங்களை மகிழ்விப்பது போல நானும் ந்ருத்த வாத்யங்களால் உங்களை மகிழ்விக்கிறேன்.

கந்தர்வர் இசைக்கின்ற இனிமையான கானங்களும் (54)
கங்காதரன்விளை யாடல்களை அபிநயிக்கும் நர்த்தனங்களும்
கொன்றைமலர் சூடுவோனின் இடமிருக்கும் கொற்றவையே
கடம்பவனப் பேரழகீ, கண்டுநீயும் களித்திடுவாய்!


55. ஸ்துதி

தவ தேவி குணானு வர்ணனே
சதுரா நோ சதுரான நாதய: !
ததிவஹை க முகோஷு ஜந்துஷு
ஸ்தவநம் கஸ்தவ கர்துமீ ச்வர: !!

நான்முகன் முதலான தேவர்களாலேயே உமது குணத்தை வர்ணிக்க முடியாதெனில், என் போன்ற ஒரு முகம் கொண்ட மனிதர்களால் எப்படி வர்ணிக்க இயலும்?

56. ப்ரதக்ஷிணம்

பதேபதேயத் பரிபுஜ கேப்ய:
ஸத்யோச்வ மேதாதி பலம் ததாதி !
தத்ஸர்வ பாப க்ஷயயேது பூதம்
ப்ரதக்ஷிணம் தே பரிதள் கரோமி !!
பிரதக்ஷிணம் செய்பவர்களது ஒவ்வொரு அடியிலும் 'அச்வ மேதப் பலம்' கிடைக்கும். எனவே பாபங்கள் தீரும் வகையில் நாற்புறமும் பிரதக்ஷிணம் செய்கிறேன்.

பிரம்மன்,விஷ்ணு, சிவனென்ற மூன்றுதிருமூர்த்திகளும்
அடிபணியும் அன்னையுன்னை அன்புடனே வணங்குகின்றோம்! (55)
எண்ணுகின்ற மனதாலும் சொல்லுகின்ற வாக்காலும்
செய்யுகின்ற செயலாலும் உன்னைவலம் வருகின்றோம்! (56)


57. நமஸ்காரம்

ரக்தோத்பலா ரக்தலதா ப்ரபாப்யாம்
த்வஜோர்த்வா லேகா குலிசாங்கிதாப்யாம் !
அசேஷ ப்ருந்தாரக வந்திதாப்யாம்
நமோ பவாநீ பதபங்கஜாப்யாம் !!

தேவர்களால் வணங்கப்படுகிற செந்தாமரை போன்ற பவாநியே உன் பாதகமலங்களில் நமஸ்கரிக்கிறேன்.

சின்னமணி நூபுரங்கள் செல்லமாக கிணுகிணுக்க
வண்ணமணி ரத்தினங்கள் வரிசையாக மினுமினுக்க
சிற்சபையில் சிலம்பொலிக்க சிவனுடனே நடனமிடும்
செந்தாமரைப் பாதங்கள் சிரம்தாழ்ந்து வணங்குகின்றோம்! (57)


58. புஷ்பாஞ்சலி

சரண நளினயுக்மம் பங்கஜை: பூஜயித்வா
கனக கமலாமாலாம் கண்ட தேசேர் பயித்வா !
சிரஸி விநிஹி தோயம் ரத்ன புஷ்பாஞ்சலிஸ்தே
ஹ்ருதய கமலமத்யே தேவி ஹர்ஷம் தநோது !!


கமலத்தால் பூஜித்து, கமலத்தை அணிவித்து, உன்னுடைய முடிமேல் நான் வைக்கும் ரத்ன புஷ்பாஞ்சலி, என்னுடைய இதயத்தில் சந்தோஷத்தை அளிக்கட்டும்.
பலநிறத்தில் மலர்பறித்து பிரியமாக சேகரித்து
சுகமளிக்கும் மலர்பறித்து வாசனையாய் சேகரித்து
முப்பத்து முக்கோடி தேவரெல்லாம் தொழும்தேவி
எங்களுக்கும் அருளவேண்டி அஞ்சலிகள் செய்யுகின்றோம்! (58)


59. அந்தப்புரம்


அதமணிமய மஞ்சகா பிராமே
கனகமய விதான ராஜமானே !
ப்ரஸதகரு தூபிதேஸ் மின்
பகவதி பவநேஸ்து தே நிவாஸ: !!

மணிமயமாஅன மஞ்சம்; அழகான விதானம்; அகரு, தூபம் புகை; இவையிருக்கும் அந்தப்புரம் வாருங்கள்.

வானளாவும் மாடங்கள் தாமரைத்த டாகங்கள்
துள்ளியோடும் புள்ளிமான்கள் கொஞ்சிக்கூவும் இளங்கிளிகள்
அழகழகாய் பலமணிகள் இரத்தினங்கள் இழைத்திருக்கும்
எழில்அந்தப் புரத்திற்கு வசங்கரியே எழுந்தருள்வாய்! (60)


60. கட்டில்

ஏதஸ்மின் மணிகசிதே ஸுவர்ண பீடே
த்ரைலோக்யா பயவரதெள நிதாய ஹஸ்தெள!
விஸ்தீர்ணே ம்ருதுலத ரோத்தரச் சதேஸ்மின்
பர்ங்கே கனகமயே நிஷீத மாத: !!

மூவுலகுக்கும் வரமளிப்பவளே!, விசாலமான, மேல்விரிப்புள்ள ரத்னக் கட்டிலில் வந்து அமருங்கள்.


வெண்தந்தம் இழைத்துவைத்து இரத்தினங்கள் பதித்துவைத்து
பட்டுமெத்தை விரித்துவைத்தவி சாலமான கட்டிலிலே
பெண்நிலவே பேரெழிலே சிரமபரி காரம்செய்து
கண்ணயர்ந்து ஓய்வெடுக்க கண்மணியே வந்தருள்வாய்! (60)


61. நலங்கு

தவதேவி ஸ்ரோஜ சின்னயோ:
பதயோர் நிர்ஜித பத்மராகயோ: !
அதிரக்த தரை ரலக்தை:
புனருக்தாம் ரசயாமி ரக்ததாம். !!

தாமரை அடையாளமுள்ளதும், பத்மராகம் போன்றதுமான உமது சிவந்த திருவடிகளுக்கு செம்பஞ்சுக் குழம்பினால் நலங்கிட்டு, மேலும் செம்மையாக்குகிறேன்.
செங்கமலங் களும்வணங்கும் மென்பிஞ்சுப் பதங்களுக்கு
செம்பஞ்சுக் குழம்பெடுத்து செஞ்சித்திர மாய்தீட்டி
பூந்தளிர்போல் பதங்களுக்கு பூப்போல எழில்கூட்டி
பூவைக்கு நலுங்கிடவே பூமகளே நீமகிழ்வாய்! (61)

62. வாய் கொப்புளித்தல்
அதமாத ருசீர வாஸிதம்
நிஜதாம்பூல ரஸேன ரஞ்சிதம் !
தபநீய மயேஹி பட்டகே
முககண்டூஷ ஜலம் விதியதாம் !!

வெட்டிவேர் வாசனையுடன், உமது தாம்பூல ரசத்தால் சிவந்து போன வாயிலுள்ள நீரை, இந்த பொற்கிண்ணத்தில் கொப்பளியுங்கள்.

63. சயனம்

க்ஷணமத ஜகதம்ப மஞ்சகேஸ்மின்
ம்ருதுதர தூலிகயா விராஜமானே !
அதிரஹஸி முதா சிவேன ஸார்த்தம்
ஸுகசயனம் குருதத்ர மாம் ஸ்மரந்தீ !!

மிக மென்மையான மெத்தையுடன் கூடிய கட்டிலில் சிவனாருடன் மகிழ்வுடன் படுத்துக் கொள்வீர்களாக.


வெட்டிவேர் வாசநீரால் வாய்தூய்மை செய்துகொண்டு (63)
கட்டியமண வாளனான முக்கண்ணன் ஈசனுடன்
எட்டிய திசைகளெல்லாம் ஏற்றிகீதம் பாடிவர
கட்டிலில் சேர்ந்திருந்து காப்பாற்ற வேண்டுமம்மா! (64)


64. த்யானம்
முக்தா குந்தேந்து கெளராம் மணிமய
மகுடரம் ரத்ன தாடங்க யுக்தாம்
அக்ஷஸ்ரக் புஷ்ப ஹஸ்தாம் அபய வரகராம்
சந்த்ர சூடாம் தரிணேத்ராம் !
நானாலங்கார யுக்தாம் ஸுரமகுட
மணித்யோதித ஸவர்ண பீடாம்
ஸானந்தம் ஸுப்ரஸன்னாம் த்ரிபுவன
ஜனனீம் ஸேதஸா சிந்தயாமி !!

முத்து, குந்தம், சந்திரனைப் போன்று சிவப்பு நிறம் கொண்டவளும், மணிக்கீரீடமுள்ளவளும், ரத்னத்தால் ஆன தோடுகளை அணிந்தவளும், ஜப-மாலை, புஷ்பத்தை கைகளில் ஏந்தியவளும், அபய-வரத முத்திரைகளை மற்ற கரங்களில் காட்டியும், சந்திரனைத் தலையில் சூடியவளும், மூன்று கண்களை உடையவளும், அலங்காரமான தேவர்களது மகுடத்தை தனது பாத பீடமாகக் கொண்டவளும், ஆனந்தமானவளும், மூவ்வுலக்கிற்குக்கும் தாயான தேவீ!, நான் உன்னை என் மனத்தில் தியானிக்கிறேன்.

க்ஷமை வேண்டல்
ஏஷா பக்த்யா தவ விரசிதா யாமயா தேவிபூஜா
ஸ்விக்ருத்யைநாம் ஸபதி கைலான் மேப்ராதான் க்ஷமஸ்வ !
ந்யூனம் யுத்தத்தவ கருணையா பூர்ண தாமேது ஸத்ய:
ஸானந்தம் மே ஹ்ருதய கமலே தேஸ்து நித்யன் நிவாஸ : !!

தேவி, நான் பக்தியுடன் மானஸீகப் பூஜை செய்கிறேன். அதை ஏற்று, என்னுடைய தவறுகளைப் பொறுத்துக் கொள்வாயாக. பூஜையில் ஏதேனும் குறையிருக்குமானால். அதை உனது கருணையால் பூர்த்தி செய்வாயாக. நீ எனது ஹ்ருதய கமலத்தில் என்றும் வாசம் செய்ய வேண்டும் தாயே!.

அன்போடு பணிவோடு செய்துவந்த உபசாரங்களில்
குற்றங்குறை இருந்தாலும் கோபிக்க லாகாதம்மா!
அறியாமை ஆண்டிருக்கும் அறியாத பிள்ளைகள்யாம்
தெரியாமற் செய்யும்பிழை பொறுப்பதுந்தன் கடமையாகும்!

கரியோனைப் பெற்றெடுத்த கமலாத்மிகையே, உமையே!
கருத்துடனே செய்துவந்த அறுபத்தி நான்கு உபசாரங்களையும் ஏற்று
கனிந்துமனம் மகிழ்ந்திடுவாய்! மலர்ந்துஅருள் புரிந்திடுவாய்!
கடைக்கண்ணால் பார்த்திடுவாய்! காப்பாற்ற வந்திடுவாய்!

*******************************************************************************
ஸ்ரீ ஜகத்குரு சரணாரவிந்தாப்யாம் நம:
ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுரஸுந்தர்யை நம:

*******************************************************************************

எனது வேண்டுகோளை ஏற்று ஒவ்வொரு உபசாரத்திற்கும் தமிழில் அழகாகப் பாடல்கள் எழுதிக் கொடுத்த சகோதரி கவிநயாவிற்கும், தானாக முன்வந்து பாடல்களைப் பாடிக் கொடுத்த திரு. கே.ஆர்.எஸ் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

படித்துப் பின்னூட்டமிட்ட, மற்றும் படித்து மட்டும் சென்ற எல்லோருக்கும் எனது நன்றிகள், மற்றும் வணக்கங்கள்.


அம்பிகை ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுர சுந்தரி பரபட்டாரிகா எல்லோருக்கும் அவரவர் மனோ-பீஷ்டங்களை அருள வேண்டிக் கொண்டு, இந்த வலைப் பூவை முடிக்கிறேன்.

சுபமஸ்து !!!

அன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -5


முந்தைய பகுதி இங்கே!


பாடல்களை திரு.. கே.ஆர்.எஸ் அவர்கள் பாடியிருக்கிறார், கேட்டுக் கொண்டே படிக்க, இதோ லிங்க்.

Annaikku_64_Upacha...


41. சாமரம்


சரதிந்து மரீசி கெளர வர்ணைர்
மணிமுத்து விலஸத் ஸுவர்ண தண்டை: !
ஜகதம்ப விசித்ர சாமரை ஸ்த்வம்
அஹமா நந்த பரேண விஜயாமி !!

சந்திரன் போன்ற வெண்மை நிறங்கொண்டதும், மணிமுத்துக்கள் விளங்கும் பொன் தண்டமுள்ளதுமாகிய அற்புத சாமரங்களை உமக்கு ஆனந்தத்தோடு அளிக்கிறேன்.

சந்திரனின் கதிரெடுத்து இந்திரவில் லாய்வளைத்து
மயிற்பீலி தனையெடுத்து கருத்துடனே கோர்த்துவிட்டு
தங்கத்தில் பிடியமைத்து செய்துவைத்த சாமரத்தால்
தென்காற்றாய் வீசிவிட தேவதையே மகிழ்ந்திடுவாய்! (41)

42. கண்ணாடி


மார்த்தாண்ட மண்டலநிபோ ஜகதம்ப யோயம்
பக்த்யா மயாமணிமயோ முகிரோர் பிதஸ்தே !
பூர்ணேந்து பிம்ப ருசிரம் வதனம் ஸ்வகீபமஸ்மின்

விலோக்ய விலோல விலோச நேஸ்வம் !!

சஞ்சலமான கண்கள் உடையவளே! நான், உனக்கு சூரியனைப் போன்ற ஒளி மிகுந்த கண்ணாடியைத் தருகிறேன். நீ, உன்னுடைய சந்திரன் போன்ற முகத்தை அதில் பார்ப்பாயாக.

பூப்போல திருமுகத்தில் பொன்போன்ற புன்னகையாம்
தேன்போல மொழியழகாம் தென்றல்போல் நடையழகாம்
அகிலத்தின் அழகெல்லாம் உன்னிடத்தில் ஒளிர்ந்திருக்க
கதிரவன்போல் கண்ணாடியில் கமலமுகம் பார்த்தருள்வாய்! (42)

43. நீராஜனம்


இந்த்ராதயோ நதிநதைர் மகுடப்ரதீயை
நீராஜயந்தி ஸததம் தவபாத பீடம் !
தஸ்மாதஹம்தவ ஸமஸ்த சரீர மேதந்
நீராஜயாமி ஜகதம்ப ஸஹஸ்ர தீபை: !!

இந்திரன் முதலான தேவர்கள் வணங்கும் போது, தங்களுடைய கிரீடமென்னும் தீபங்களால் உமக்கு நீராஜனம் செய்கிறார்கள். நான் உங்களுக்கு ஆயிரம் தீபங்களால் நீராஜனம் செய்கிறேனம்மா.


பட்டாடை சிவந்திருக்க பட்டுப்போல் தழுவிநிற்க
சிற்றாடைப் பெண்ணைபோல் சிரித்துநீயும் மகிழ்ந்திருக்க
எடுப்பான உன்தோற்றம் எழிலாகத் தெரிந்திடவே
அடுக்கடுக்காய் காட்டுகின்றோம் ஆயிரமாம் தீபங்கள்! (43)

44. குதிரைகள்

ப்ரியகதி ரதிதுங்கோ ரத்ன பல்யாண யுக்த
கனகமய விபூஷ ஸ்திக்த கம்பீர கோஷ: !
பகவதி கலிதோயம் வாஹனார்த்தம் மயாதே
துரக சத ஸமேத: வாயு வேகஸ் துரங்க: !!

ரத்ன சேணமும், பொன் ஆபரணங்களும் பூட்டி, கம்பீரமாய் கனைக்கின்ற, வாயுவேகமாகச் செல்லக்கூடிய நூற்றுக்கணக்கான குதிரைகளை உமக்கு வாகனமாக கல்பித்து அளிக்கிறேன்.

45. யானை

மதுகர வ்ருத கும்பந்யஸ்த ஸிந்தூர ரேணு:
கனக கலித கண்டா கிங்கிணீசோபி கண்ட: !
ச்ரவண யுகள சஞ்சக் சாமரோ மேகதுல்ய:
ஜனனி தவமுதேஸ்யான் மத்தமாதங்க ஏஷ !!

வண்டுகள் சூழ்ந்த மத்தகத்தில், சிந்தூரத் துளிகள் உள்ள, மேகம் போன்ற மதயானையை உமது பிரியத்துக்காக உம்மிடம் அளிக்கிறேன்.
46. ரதம்

த்ருததர துரகைர் விராஜமாநம்
மணிமய சக்ர சதுஷ்டயேன யுக்தம் !
கனகமய மும்விதான வந்தம்
பகவதி தே ஹிதரம் ஸமர்ப்பயாமி !!


வேகமாகச் செல்லும் குதிரைகள் பூட்டிய தங்கத்தேரை உமக்கு அர்ப்பணிக்கிறேன்.


குதிரை, யானை மற்றும் ரதங்கள் ஆகிய மூன்று உபசாரங்களுக்கான தமிழ் பாடல் கீழே!

ஆபரணங்கள் அலங்கரிக்கும் சேணமிட்ட குதிரைகளும் (44)
கருமேக நிறங்கொண்ட கம்பீர யானைகளும் (45)
காற்றைப்போல் புரவிகளைப் பூட்டிவிட்ட இரதங்களும் (46)
களிப்புடனே தருகின்றோம் கருணையுடன் ஏற்றருள்வாய்!

47. சதுரங்க சேனைகள்

ஹயகஜ ரதபத்தி சோப மானம்
திசிதிசி துந்துபி மேகநாத யுக்தம் !
அதிபஹு சதுரங்க ஸைன்ய மேதம்
பகவதி பக்தி பரேண தேர்ப்பயாமி !!

ரத, கஜ, துரக, பதாதிகளுடன், ஒவ்வொரு திக்கிலும் துந்துபி நாதம் முழங்க, நால்வகைப் படைகளையும் மிகுந்த பக்தியுடன் உமக்கு அளிக்கிறேன்.

48. கோட்டை

பரிகீ க்ருத ஸப்த ஸாகரம்
பஹுஸம்பத் ஸஹிதம் மயாம்பதே விபுலம் !
ப்ரபலம் தரணி தலாபிதம்
த்ருடதுர்க்கம் நிகிலம் ஸமர்ப்பயாமி !!

ஏழுகடல்களால் எழிலாய் சூழப்பட்டதும், மிகுந்த செல்வம் கொண்டதும், பரந்த பரப்பளவுள்ளதுமான பூமி என்னும் பெயருள்ள கோட்டையை உமக்கு அளிக்கிறேன்.
சதுரங்க சேனை, கோட்டை ஆகியவற்றுக்கான தமிழ் பாடல் கீழே!

சர்வலோக அரசியுனக்கு சதுரங்க சேனைகளும் (47)

கடல்சூழ்ந்த புவியிதுவும் புவிதாங்கும் செல்வங்களும்
கோட்டையென உன்குடைக்கீழ் நீயாள வேண்டுமென
பதம்பணிந்து கேட்கின்றோம் பரமேசீ கொண்டருள்வாய்! (48)

49. விசிறி

சதபத்ர யுதை: ஸ்வபாவ சிதை
அது ஸெரளப்ய யுதை: யராக: பீதை: !
ப்ரமரீ முகரீ கிருதை ரநந்தை:
வ்யஜனை ஸ்த்வாம் ஜகதம்ப விஜயாமி !!

குளிர்ச்சியுடையதும், நறுமணமுள்ளதும், புஷ்ப தூளிகளால் சிவந்ததும், வண்டுகள் ரீங்காரமிடுவதுமான விசிறியால் உங்களுக்கு வீசுகிறேன்.

50. நாட்டியம்

ப்ரமர லுலித லோல குந்தலாலீ
விகளித மால்ய விகீர்ண ரங்கபூமீ: !
இயமதி ருசிராநடீ நடந்தீ
தவஹ்ருதயே முதமாதநோது மாத: !!


வண்டுகள் மொய்ப்பதால் சஞ்சலமான குந்தளத்திலிருந்து விழுந்த புஷ்பங்கள் இறைந்து கிடக்கும் இடமே நாட்ய பூமி, அங்கு நடனமிடும் நடீ உனக்கு சந்தோஷம் அளிக்கட்டும்.

குளுமைதரும் மலர்களுடன் மணம்பரப்பும் விசிறிகொண்டு
பூந்தென்றல் போலமெல்ல வீசிடநீ மகிழ்ந்திடுவாய்! (49)
வாயுவேகம் விஞ்சுகின்ற எழில்வண்ணக் கொடிகளுடன்
இரத்தினப் பதாகைகளும் தந்திடநீ ஏற்றருள்வாய்!


நாட்டியத்திற்கான தமிழ் பாடல் அடுத்த பதிவில் வெளிவரும்.

அன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -4


முந்தைய பகுதி இங்கே!

பாடல்களை திரு.. கே.ஆர்.எஸ் அவர்கள் பாடியிருக்கிறார், கேட்டுக் கொண்டே படிக்க, இதோ லிங்க்.

Annaikku_64_Upacha...


31. தீர்த்தம்



க்ஷீர மேத திதமுத்த மோத்தமம்
ப்ராஜ்ய மாஜ்ய மிதமுஜ்வலம் மது !
மாதரே ததம்ருதோப மம்பய:
ஸம்ரமேண பரிபீய தாம்முஹு !!
பால், ருசியுள்ள தேன், அமிர்தம் ஆகிய இத்தீர்த்தங்களை அன்புடன் அளிக்கிறேன், அருந்துவாயாக.

32. கை அலம்புதல், சந்தனம் அளித்தல்

உஷ்ணோதகை: பானியகம் முகஞ்ச
ப்ரக்ஷால்ய மாத: கல தெளத பாத்ரே !
கர்பூர மிச்ரேண ஸகுங்குமேன
ஹஸ்தெள ஸமுத்வர்த்தய சந்தனேன !!


இந்த ஸ்வர்ண பாத்திரத்தில் கைகளையும், முகத்தையும் சுத்தம் செய்து கொள்ளுங்கள். குங்குமப்பூ கலந்த சந்தனத்தை கைகளில் பூசிக்கொள்ளுங்கள்.

குடிக்க தீர்த்தம், கை அலம்புதல் மற்றும் சந்தனம் அளித்தலுக்கு சகோதரி கவிநயாவின் பாடல்கள் கீழே!

மூலிகைகள் சேர்த்துவைத்த ருசிமிகுந்த நீரதனை
பசியாறு கையில்நீயும் தாகம்தீர பருகிடுவாய்! (31)
தங்கச்செம்பில் முகர்ந்துவைத்த சிந்துநதி நீரெடுத்து
தந்தக்கைகள் தூய்மைசெய்து சந்தனமும் பூசிக்கொள்வாய்! (32)


33. தீர்த்தம்


அதிசீத முசீரவாஸிதம் தபநீய கலசே நிவேசிதம் !
படபூதமிதம் ஜிதாமிருதம் சுசிகங்கா ஜலமம்ப-பீதயதாம் !!

சுத்தமான வடிகட்டிய வாஸனை பொருந்திய தங்கப்பாத்திரத்தில் உள்ள கங்கை நீரை அருந்துங்கள் தாயே!.

34. கனிவகைகள்

ஜம்ப்வாம்ர ரம்பா பலஸம்யுதானி
த்ராக்ஷா பழ க்ஷெளத்ர ஸமன்வதானி !
ஸநாரி கேளானி ஸதாடி மானி
பலானி தே தேவி ஸமர்ப்பயாமி !!

நாவல், மா, வாழை, திராக்ஷை, மாதுளை போன்ற கனிவகைகளை உங்களுக்குப் பிரியமுடன் அளிக்கிறேனம்மா.

கூச்மாண்ட கோசாதிகஸம் யுதாநி
ஜம்பீர நாரங்க ஸமன்விதாநி !
ஸபீஜபூராணி ஸபாதராணி
பலா நிதே தேவி ஸமர்ப்பயாமி !!

விளாம்பழம், எலுமிச்சை, சாரங்கம்(?), இலந்தைப்பழம் ஆகியவற்றையும் அளிக்கிறேனம்மா.

கனிவகைகள் மற்றும் தீர்த்தம் ஆகியவற்றுக்கான தமிழ்ப் பாடல் கிழே!

ஆகாய கங்கைநீரில் ஏலமிட்டு மணக்கவிட்டு
ஆகாரம் முடிந்ததுமே நீயருந்த வேண்டுகின்றோம்! (33)
முக்கனிகள், நாவல்,திராட்சை, கொய்யா,வி ளாம்பழமும்
இலந்தையுடன் மாதுளமும் முக்கண்ணியே ஏற்றருள்வாய்! (34)


35. தாம்பூலம்

கர்பூரேணயுதைர் லவங்க ஸஹிதை: தக்கோல சூர்ணான் விதை:
ஸுஸ்வாதுக்ர முகைர் ஸகெளராதிரை: கஸ்நிக்க ஜாதீபலை: !
மாத: கைதகபத்ர பாண்டுர்சிபி: தாம்பூல வல்லிதளை
ஸாநந்தம் முகமண்ட நார்த்த மதுலம் தாம்பூலமங்கீ குரு !!

பச்சைக்கர்பூரம், லவங்கம், தக்கோலம் சேர்க்கப்பட்ட வெளுப்பான வெற்றிலை, பாக்கை ஆனந்தமாக அளிக்கிறேன் தாயே!

தாம்பூல நிர்ஜித ஸுதப்த ஸுவர்ண வர்ணம்
ஸ்வர்ணாக்த பூகபலமெளக்திக சூர்ணயுக்தம் !
ஸெளவர்ண பாத்ர நிஹிதம் கதிரேண ஸார்த்தம்
தாம்பூலமம்ப வதனாம் புருஹே க்ருஹாண !!

ஸ்வர்ண பாத்திரத்தில் வைக்கப்பட்டுள்ள பொன் போன்ற பாக்குப் பொடியையும், முத்துச் சுண்ணாம்பையும் ஏற்றுக் கொள்ளுங்களம்மா.

36. கற்பூரவீடிகள்

ஏலா லவங்காதி ஸமன்விதானி
தக்கோல கற்பூர விமிச்ரிதானி !
தாம்பூல வல்லீதள ஸம்யுதானி
பூசானி தே தேவி ஸமர்ப்பயாமி !!


ஏலம், லவங்கம், பச்சைக்கற்பூரம், பாக்கு ஆகியவற்றை சேர்த்து மடித்த வெற்றிலையை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

தாம்பூலம், கற்பூர வீடிகளுக்கான தமிழ் பாடல் கீழே!

பசுங்கொழுந்து வெற்றிலையில் பச்சைக் கற்பூரமும்
இலவங்கம்,முத்துச் சுண்ணமுடன் வாசனைப்பாக்கும் சேர்த்து
பக்குவமாய் கூட்டிவைத்து பாங்காக மடித்துத்தர
பரிபுரையே தாம்பூலம் தரும்சிவப்பில் மகிழ்ந்திடுவாய்! (35, 36)

37. ஹாரத்தி

மஹதி கனக பாத்ரே ஸ்தாபயித்வா விசாலான்
டமரு ஸத்ருச ரூபான் பத்தகோதூம தீபான் !
பஹுக்ருத மதேஷு ந்யஸ்ய தீபான் ப்ரக்ருஷ்டான்
புவன ஜனனி குர்வே நித்ய மாரார்த்திகம் தே !!


உலக நாயகியே!, பொற்கிண்ணத்தில் உடுக்கை போன்று கோதுமை மாவால் செய்யப்பட்டுள்ள நெய்திரி கொண்ட தீபங்களால் தினமும் உமக்கு ஆரத்தி செய்கிறேன்.


38. ஹாரத்தி

ஸவிநயமத தத்வா ஜாத்யுக்மம் தரண்யாம்
ஸபதி சிரசித்ருத்வா பாத்ரமாரார்தி கஸ்ய !
முககமல ஸமீபே தேம்ப ஸார்த்தம் த்ரிவாரம்
ப்ரமயதிமயீ பூயாத்தே க்ருபார்த்ர: கடாக்ஷ !!


முழங்கால்களை பூமியில் வைத்து, ஹாரத்தி தட்டினை தலைமீது வைத்து உங்கள் முகத்தருகே மும்முறை சுற்றும்போது, உமது அருட்பார்வை என்மீது விழட்டும்.

இருவித ஹாரத்திக்குமான தமிழ் பாடல் கீழே!

புத்தரிசி ஊறவைத்து அச்சுவெல்லம் சேர்த்திடித்து
புத்துருக்கு நெய்ஊற்றி மாவிளக் காய்ஏற்றி (37)
தங்கத்தாம் பாளத்திலே கற்பூர தீபமேற்றி
தாயுன்னைச் சுற்றிவர தாரகையே அருள்புரிவாய்! (38)

39. தக்ஷிணை

அத பஹுமணி மிச்ரை: மெளக்தி கைஸ்த்வாம் விகீர்ய
த்ரிபுவன கமநீயை: புஜயித்வா ச வஸ்த்ரை: !
மிலித விவித முக்தாம் திவ்ய மாணிக்ய யுக்தாம்
ஜனனி கனக வ்ருஷ்டிம் தக்ஷிணாம் தே அர்ப்பயாமி !!

பல மணிகளுடன் கலந்த முத்துக்களை இறைத்து, முவ்வுலகிலும் அழகான வஸ்த்ரங்களால் அலங்கரித்து, பலவகை மாணிக்கங்களுடன் சுவர்ணத்தை தக்ஷிணையாகத் தருகிறேன்.

பசும்பொன்னால் பாளங்களும், முத்து,பவளம், மாணிக்கமும்,
புட்பராகம், மரகதமும் வைரம்,வை டூரியமும்,
கோமதக இரத்தினமும் வர்ணஜாலம் காட்டிவர
காணிக்கையாய் தருகின்றோம் கௌமாரி ஏற்றருள்வாய்! (39)

40. குடை

மாத: காஞ்சதண்ட மண்டடிதமிதம் பூர்ணேந்து பிம்பப்ரபம்
நானாரத்ன வீசோபுஹேம கலசம் லோகத்ரயாஹ்லாதகம் !
பாஸ்வன் மெளக்திக ஜாலிகாபரிவிருதம் ப்ரீத்யாத் மஹஸ்தேத்ருதம்
சத்ரம் தேபரிகல்பயாமி சிரஸி த்வஷ்ட்ராஸ் வயம் நிர்மிதம் !!

தங்கப் பிடியுள்ளதும், சந்திர காந்தி உள்ளதும், முத்துக்கள் வரிசையாகத் தொங்குவதுமான குடையை அன்புடன் அளிக்கிறேன்.

வெண்நிலவின் தண்மைதரும் வெண்பட்டுத் துணிபோர்த்தி
பெண்மகளின் மனம்மகிழ பொன்கம்பி யுடன்கோர்த்து
பனிமுத்துப் பரல்பதித்த வெண்கொற்றக் குடையதனை
கனிவுடனே பிடிக்கின்றோம் கற்பகமே குளிர்ந்தருள்வாய்! (40)

அன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -3


முந்தைய பகுதி இங்கே!


21. திலக பூஜை

மாத:பாலதே தவாதிவிமலே காஷ்மீர கல்தூரிகா
கர்பூராகருபி: கரோமி திலகம் தேஹேங்காரகம் தத: !
வக்ஷோஜாதீயக்ஷகர் கமரஸம் ஸிக்வாச புஷ்பத்ரவம்
பாதெள சந்தன லேபநாதிபிரஹம் ஸம்பூஜயாமி க்ரமாத் !!

நெற்றியில் குங்குமப்பூ, கஸ்தூரி, பச்சைகற்பூரம், அகரு முதலியவைகள் கலந்த கலவையால் திலகமிட்டு, மார்பிலும், பாதங்களிலும் சந்தனக் குழம்பைப் பூசி பூஜிக்கிறேன்.

கஸ்தூரி, குங்குமப்பூ, கற்பூரம் சேர்திலகம்
கன்னிநல்லாள் கனிவுடனே அணிந்துகொள்ள தந்துவிட்டு
உரைத்துவிட்ட சந்தனத்தை நெஞ்சகத்தில் பூசிவிட்டு
கரைத்தெடுத்து கொஞ்சமதை பாதங்களில் தடவிவிட்டு (21)

22. அக்ஷதார்ச்சனை

ரத்னாக்ஷதைஸ்தவாம் பரிபூஜையாமி
முக்தாபலைர் வாருசிரை ரவித்தை: !
அகண்டிதைர் தேவியவாதிபிர்வா
கம்பீர பாங்காங்கித தண்டுலைர்வா !!

ரத்னமயமான அக்ஷதைகளாலும், துவாரம் இல்லாத முத்துக்களாலும் முனை முறியாத குங்குமப் பூ கலந்த அரிசியாலும் உம்மை பூஜிக்கிறேன்.

நவநவமாய் நல்முத்து ஒளிவீசும் இரத்தினங்கள்
குங்குமப்பூ கலந்துவைத்த புத்தம்புது பச்சரிசி
அத்தனையும் சேர்த்தெடுத்து அன்புடனே அடிபணிந்து
அர்ச்சனைகள் செய்யுகின்றோம் அம்பிகையே ஏற்றருள்வாய்! (22)
23. சந்தனம்


ஜனனி சம்பக தைல மிதம் புரோ
மருகமதோபயுதம் படவாஸகம் !
ஸுரபி கந்த மிதஞ்ச சதுஸ்ஸமம்
ஸபதி ஸர்வமிதம் பரிக்ருஹ்யதாம் !!
தாயே!, சம்பக-தைலம், கஸ்தூரி வாசனைப் பொடி, வாஸனை கந்தம் முதலிய சந்தனாதி உபசாரங்களை ஏற்றுக்கொள்வாயாக.

24. ஸிந்தூரம்
ஸீமந்தேதே பகவதி மாயாஸாதரம் ந்யஸ்தமேதத்
ஸிந்தூரம் மே ஹ்ருதய கமலே ஹர்ஷ வர்ஷம் தநோதி !
பாலாதித்ய த்யுதிரிவ ஸதா வோஹிதா யஸ்யகாந்தி
ரத்தர்த்வாந்தம் ஹரதி ஸகலம் சேதஸா சிந்தயைவ !!

உமது வகிட்டில் நான் இட்ட ஸிந்தூரம் காணப்படுவது எல்லையில்லா சந்தோஷத்தைத் தருகிறது. பாலசூரியனைப் போல எனது மனத்திருளையும் போக்குகிறது.
சந்தனம், சிந்தூரம் ஆகிய இரண்டு உபசாரங்களுக்குமான தமிழ் பாடல் கீழே!

சண்பகத்தின் தைலமுடன் கஸ்தூரி சந்தனமும்
சண்டியுந்தன் மேனியிலே விலேபனம் செய்துவிட (23)
காரிருளாம் கூந்தலிடை கால்வாயாம் வகிட்டினிலே
இளங்கதிரைப் போல்விளங்கும் சிந்தூரம் இட்டுவிட (24)

25. புஷ்பம்
மந்தார குந்த கரவீர லவங்க புஷ்பை:
த்வாம் தேவி ஸந்ததமஹம் பரிபூஜயாமி !
ஜாதிஜபா வகுள சம்பக கேதகாதி
நாதவிதாதி குஸுமானி க தேநர்பயாமி !!

மந்தாரம், குருக்கத்தி, வைங்கம், அரளி புஷ்பங்களால் உங்களைப் பூஜிக்கிறேன். ஜாதிப்பூ செவ்வரத்தை, மகிழம்பூ, சம்பகப்பூ, தாழம்பூ முதலிய புஷ்பங்களால் உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.
மந்தாரை மலரோடு சாதி, சண்பகமும்
மகிழம்பூ, தாழம்பூ, முல்லை, மல்லிகையும்
மலைவாழை நாரெடுத்து மணமுடனே தொடுத்துவைக்க
மந்திர ரூபிணியே மாலைசூட்டி மகிழ்ந்திடுவாய்! (25)

26. புஷ்பார்ச்சனை
மாலதீ வகுள ஹேம புஷ்பிகா காஞ்சதார கரவீர கேதகை:
கர்ணிகார கிரிகர்ணி காதபி: புஜயாமி ஜகதம்ப தேவபு: !
பாரிஜாத சதபத்ர பாடலைர் மல்லிகா வகுள சம்பகாதிபி
அம்புஜை: ஸுகுஸுமைச்ச ஸாதகம் பூஜயாமி ஜகதம்பவபு: !!

அம்மா!, ஜாதிப்பூ, மகிழம்பூ, மந்தாரை, கொன்றை, முதலிய மலர்களாலும், பாரிஜாதம், தாமரை, பாடலம், மல்லிகை, சம்பகம் ஆகியவற்றாலும் உம்மைப் பூஜிக்கிறேன்.

நர்மதையின் நீர்பாய்ச்சி நந்தவனம் தான்அமைத்து
நறுமணங்கள் கமழுகின்ற பலமலர்கள் சேகரித்து
மருவோடு மருக்கொழுந்தும், பாரிஜாதம், பாடலமும்
தாமரையும் சேர்த்துச்செய்யும் பூசனைகள் ஏற்றருள்வாய்! (26)
27. தூபம்

லாக்ஷாஸம்மிளிதை: ஸிதாப்ரஸஹிதை: ஸ்ரீவாஸஸம் மிச்ரிதை:
கர்பூராகலிதை: சிரை: மதுயுதை: கோஷார்பிஷா லோடிதை: !
ஸ்ரீகண்டாகரு குக்குலுப்ரபிருதிபி: நானாவிதைர் வஸ்துபி:
தூபம் தே பரிகல்பயாமி ஜனனி ஸ்தேஹரத் த்வமங்கீ: !!

சந்தனம், கற்பூரம், அக்ரு, தேன், பசுநெய் இவற்றுடன் குக்குலூ முதலிய வாசனை பொருட்களைச் சேர்த்து தூபம் காட்டுகிறேன் தாயே.

28. நீராஜனம்

ரத்னாலங்கிருத ஹேமபாத்ர நிஹிதை: கோஸர்பிஷா லோடிகை:
தீபைர் தீர்க்கதராத்தகார பிதுரை: பாலார்க்க கோடிப்ரபை: !
ஆதாம் ரஜ்வலதுஜ்வல ப்ரவிலஸத் ரத்ன ப்ரதீபைஸ்ததா
மாதஸ்தவா மஹமாதராத நுதினம் நீராஜயாம் பூர்சகை: !!

தங்கப் பாத்திரத்தில், பசும் நெய்யால் நனைக்கப்பட்ட திரிகளையுடைய தீபங்களால் தினமும் உமக்கு நீராஜனம் செய்கிறேனம்மா.

தூபம் மற்றும் தீப உபசாரங்களுக்காக கவிநயா அவர்கள் எழுதியது கீழே!

சந்தனம், கற்பூரம், குக்குலுவும், அகரு சேர்த்து
செந்தணலில் புகைக்கவிட்டு சாம்பவிக்கு தூபமிட்டு (27)
பாதம்நாளம் கொண்டிருக்கும் தங்கபாத் திரங்களிலே
பசுநெய்யில் திரிநனைத்து பலவிதமாய் தீபமிட்டு (28)

29 நைவேத்யம்

மாதஸ்த்வாம் ததிதுக்தபாயஸ மஹாசால்யன்ன ஸந்தானிகா:
ஸூபாபூப ஸீதாக்ருதை: ஸவடகை: ஸக்ஷெளத்ர ரம்பாபலை
ஏலா ஜீரக ஹிங்கு நாகரநசாகுஸ்தும்பரீ ஸம்ஸ்க்ருதை
சாகைஸ்ஸாகமஹம் ஸுதாதி கரஸை: ஸந்தர்ப்பயாம் யர்சனை: !!

தயிர், பால், பாயஸம், சக்கரைப் பொங்கல் முதலியவைகளையும், பருப்பு, வடை, அதிரசம், தேன் கலந்த பழங்கள், ஏலக்காய், ஜீரகம் ஆகியவை சேர்த்துச் செய்யப்பட்டஉணவு வகைகளையும் உமக்கு அளிக்கிறேனம்மா.
பாலோடு பாயஸமும் சர்க்கரையில் பொங்கலிட்டு
தேனூறும் கனிகளுடன் செந்தேனும் கலந்துவிட்டு
பலவகையாய் சித்ரான்னம் பக்குவமாய் சமைத்துவைத்து
பக்தியுடன் படைக்கின்றோம் பத்மாக்ஷி உனக்காக! (29)

30. பக்ஷணங்கள்

ஸாபூப ஸூபததிதுக்த ஸிதாக்ருதானி
ஸுஸ்வாது பக்த பரமான்ன புரஸ்ஸராணி !
சாகோல்லஸன் மரிசி ஜீரக பால்ஹிகானி
பக்ஷ்யாணி புங்க்ஷ்வ ஜகதம்ப மயார்பிதானி !!


வடை, பருப்பு, சர்க்கரை, நெய் ஆகியவற்றால் செய்த ருசி மிக்க பக்ஷணங்களையும், மிளகு, ஜீரகம், குங்குமப்பூ சேர்த்த காய் வகைகளையும் அளிக்கிறேன், உண்ணவேண்டுமம்மா நீங்கள்.


லட்டோடு அதிரசமும் பருப்போடு இனிப்புருண்டை
வடையோடு பலப்பலவாய் பலகாரம் பட்சணங்கள்
பொடித்தவெல்லம் சேர்த்துச்செய்த திரட்டுப்பால் அத்தனையும்
தித்திப்பாய் தருகின்றோம் திரிபுரையே ஏற்றருள்வாய்! (30)
தமிழ்பாடல்களை திரு கே.ஆர்.எஸ் அவர்கள் பாடியிருக்கிறார். அந்த லிங்க் கிழே!.


Annaikku_64_Upacha...

அன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -2


முதல் பகுதி இங்கே!


11. தைலம்

ஏதம்பக தைலமம்ப விவிதை: புஷ்பைர் முஹுர் வாஸிதம்
ந்யஸ்தம் ரத்னமயே ஸுவர்ண சஷகேப்ருங்பைர் ப்ரமபிதர் விரதம் !
ஸாநநந்தம் சுரஸுந்தரீ ப்ரபிதோஹஸ்தைச் த்ருதம் தேமபா
கேசேஷுப்ரமரப்மேஷு ஸகலேஷ்வங்கேஷு சாலிப்பதே !!


ரத்னமிழைத்த பாத்திரத்தில் வைக்கப்பட்டிருப்பதும், வண்டுகளால் சூழப்பட்டதும், வாசனையுள்ளதுமான தைலத்தை உங்கள் உடம்பிலும், கூந்தலிலும் பூசிடுங்கள் தாயே!


12. வாஸனைப்பொடி ஸ்நானம்

மாத:குங்கும பங்கநிர்மிதமிதம் தேஹே தவோத் வர்த்தனம்
பக்த்யாஹம் கலயாமி ஹேமரஜஸா ஸ்ம்மீச்ரிதம் கேஸரை: !
கேசாநாமல கைர்விசோத்ய விசதான் கஸ்தூரி கோரஞ்சிதை:
ஸ்நானம் தே நவரத்னகும்ப ஸஹிதை ஸம்வ ஸீதேஷ்ணோதகை !!


குங்குமப் பூ, மகிழம்பூ முதலிய வாஸனைப் பொடிகளை உம் உடம்பிற்கு அர்ப்பணம் செய்கிறேன். உங்கள் கூந்தலை சிக்கெடுத்து வாரி, ரத்ன கலசங்களில் வைக்கப்பட்ட வெந்நீரால் ஸானம் செய்விக்கிறேன்.

மேலே இருக்கும் இரு உபசராங்களுக்கான கவிநயா அவர்களின் படைப்பு கீழே!

கார்முகிலின் நிறங்கொண்ட கூந்தலிலே தைலமிட்டு
தேன்மொழியாள் தேனினிய தேகத்திலும் தேய்த்துவிட்டு
வாசம்மிகு பொடியெடுத்து வாகாகக் குழைத்துவிட்டு
நேசமுடன் நீராட்ட நேரிழையே நீமகிழ்வாய்! (11)

பாலோடு பன்னீரால் பாவைக்கு அபிஷேகம்
தேனோடு தயிராலே தேவிக்கு அபிஷேகம்
பக்குவமாய்க் கனிந்திருக்கும் பழங்களுடன் செய்துவைத்த
பஞ்சாமிர் தத்தினாலே பசுங்கிளிக்கு அபிஷேகம்! (12)

அடிக்கரும்புச் சாறெடுத்து அம்பிகைக்கு அபிஷேகம்
இறைவியவள் இன்பமுற இளநீரால் அபிஷேகம்
சங்கடங்கள் விலகிடவே சர்க்கரையால் அபிஷேகம்
செய்யுகின்றோம் அன்புடனே பங்கயமே ஏற்றருள்வாய்! (12)

13. அபிஷேகம்

ததிதுக்த க்ருதை: ஸமக்ஷினாக:
ஸீதபாசர்கரையா ஸமன்விதை: !
ஸ்நபயாமி தவாஹ மாதராத்
ஜனனித்வாம் புநர்ஷ்ண வாரிபி: !!

தயிர், பால், நெய், தேன், வெள்ளைச் சர்க்கரை முதலியவைகளால் உமக்கு அபிஷேகம் செய்து, மறுபடியும் வெந்நீரால் ஸ்நானம் செய்விக்கிறேன்.

காவிரியில் நீர்முகர்ந்து கதகதப்பாய் சூடேற்றி
மான்விழியாள் மேனியினை மென்மையுடன் நீராட்ட
விடங்கொண்ட கண்டனைதம் வலங்கொண்ட பைங்கிளியே
நிலங்கொண்டு வணங்குகின்றோம் நிரந்தரியே மகிழ்ந்திடுவாய்! (13)

14. ரத்ன ஸ்வர்ணோதக ஸ்நானம்

ஏலாசீரஸுவாஸிதை ஸகுஸுமை: கங்காதி தீர்த்தோதகை:
மாணிக்யாமல மெளதிகாம்ருதரஸை: ஸவர்சை: ஸுவர்ணோதகை: !
மந்த்ரான் வைதீக தாந்த்ரிகான் பரிபடன் ஸானந்த மத்யாதராத்
ஸ்நானம் தேபரிகல்பயாமி ஜனனி ஸ்நேஹாத்வமங்கிகுரு: !!

ஏலக்காய், வெட்டிவேர், வாஸனை புஷ்பங்கள் ஆகியவற்றுடன் கூடிய, கங்காதி தீர்த்தங்கள், மாணிக்கம் ஆகிவை கலந்த சுவர்ண ஜலத்தால் வைதீக, தாந்த்ரீக மந்திரங்களைக் கூறி ஸ்நானம் செய்விக்கிறேன் அம்மா!.

மணம்மிகுந்த மலர்களுடன் குளிர்ச்சிதரும் குருவேரும்
குணம்மிகுந்த ஏலமுடன் புனிதகங்கை நீரிலிட்டு
மந்திரங்கள் ஜெபித்தபடி சுந்தரிக்கு நீராட்ட
சந்திரனும் நாணுகின்ற சதுர்முகியே மகிழ்ந்திடுவாய்! (14)

15. வஸ்த்ரம்


பாலார்க்க த்யுதி தாடிமீப குஸுமப்ரஸ்பர்த்தி ஸர்வோத்தமம்
மாதஸ்த்வம் பரிதேஹி திவ்யவஸனம் பக்த்யாமயா கல்பிதம் !
முத்தாபிர்க்ரதிதம் ஸுகஞ்சுகமிதம் ஸ்வீக்ருத்ய பீதப்ரபம்
தப்த ஸ்வர்ணஸமானவர்ண மதுலம் ப்ராவர்ண மங்கீ குரு !!


பாலசூர்யனின் வர்ணத்தில், மதுளம்பூ போன்ற சிவந்த பட்டாடைகளை உமக்கு அளிக்கிறேன். முத்துக்கள் சேர்க்கப்பட்ட தங்க நிறமுள்ள ரவிக்கையையும், உருக்கிய தங்கம் போன்ற மேலாடையையும் ஏற்றுக் கொள்வீர்களாக.

16. பாதுகை


நவரத்னமயே மயார்பிதே கமநீய தபநீய பாதுகே !
ஸவிலா ஸமிதம் பதத்வயம் க்ருபயாதேவி தயோர் விதியதாம் !!

நவரத்னமயமான அழகான பாதுகைகளை உமக்கு அளிக்கிறேன், அதில் உமது இருபாதங்களையும் அருள் கூர்ந்து வைத்து , அணியுங்கள் அம்பிகே!

கட்டித்தங்கம் வெட்டிவந்து கச்சிதமாய் நூலெடுத்து
சிப்பிகளைச் சேர்த்துவந்து முத்துகளைக் கோர்த்தெடுத்து
பொன்நிகர்த்த மேனிக்கு பொருத்தமான இரவிக்கை செய்ய
கண்நிகர்த்த காரிகையே களிப்புடனே அணிந்தருள்வாய்! (15)

செக்கர்வானம் அதுபோலே சிவந்திருக்கும் பட்டாடை
சொக்கர்பக்கம் வீற்றிருக்கும் சுந்தரியே உனக்காக
முத்துநவ ரத்தினங்கள் பதித்துவைத்த பாதுகைகள் (16)
வித்தாகி விளைவுமான நித்திலமே உனக்காக!

17. கூந்தல் ஒப்பனை

பஹுபி ரகரூ தூபை: ஸாத்ரம் தூபயித்வா
பகவதி தவ கோசான் கங்கதைர் மார்ஜயித்வா !
ஸுரபிபி ரரவந்தை: சம்பைகச் சார்ச்சயித்வா
ஜடிதி கனக ஸூத்ரை ஜூடயன் வேஷ்டயாமி !!

அகிற் புகையால் தூபங்காட்டி, கூந்தலை வாரி முடித்து, தாமரை, சம்பக மலர்களால் அர்ச்சித்து, ஸ்வர்ண சூத்திரத்தால் பின்னிக் கட்டிவிடுகிறேனம்மா.

காற்றோடு மணம்பரப்பும் மலர்களெல்லாம் ஏங்குகின்ற
மாற்றேதும் இல்லாத மங்கையுந்தன் கூந்தலுக்கு
அகிலோடு சாம்பிராணி புகைபோட்டு மணம்சேர்க்க
புவியோரைக் காக்கவந்த பூவிழியே நீமகிழ்வாய்! (17)

18. கண்களுக்கு மையிடல்

ஸெளவிராஞ்ஜன மிதமம்ப சக்ஷஷோஸ்தே
விந்யஸ்தம் கனக சலாகயா மயாயத் !
தந்நுனம் மலினமபி த்வதக்ஷி ஸங்காத்
ப்ரும்மேந்த்ராத்வ பிஷைணீய தாமியாய !!

அம்மா!, இந்த ஸெளவீராஞ்சன மையை ஸ்வர்ணக் குச்சியால் உமது கண்களுக்கு தீட்டியது கருப்பானாலும், இது உமது கண்களில் சேர்க்கையால் பிரம்மாதி தேவர்களால் விரும்பப்படுவதாகவே இருக்கிறது.


அகந்தொட்ட அன்னைக்கு அழகான பொற்கயிறால்
நிலந்தொட்டு நீண்டிருக்கும் எழிற்கூந்தல் பின்னலிட
கரந்தொட்டு பொற்கம்பி முனையினிலே மையெடுத்து
முகந்தொட்டு வாள்விழிக்கு மீன்போலே எழுதிவிட (18)

19. ஆபரணம்

மஞ்ஜீரே பதயோர் நிதாய ருசிராம்வின்யஸ்ய காஞ்சீம் கடெள
முக்தாஹார முரோஜயோ ரதுபமாம் நக்ஷத்ர மாலாம் கலே !
கோயூராணி புஜேஷா ரத்னவலயச் ரேணீம் கரேஷுக்ரமாத்
தாடங்கே தவகர்ணயோர்விததே சீர்ஷேச சூடாமணிம் !!

திருவடிகளில் பாதரசமும், இடுப்பில் ஒட்டியாணத்தையும், மார்பினில் முத்தாரமும், கழுத்துக்கு அட்டிகையும், தோள்களில் வாகுவலயங்களும், கைகளில் ரத்ன வளையல்களும், காதுகளில் அழகிய தோடுகளும்,தலையில் சூடாமணீயையும் அணிவிக்கிறேனம்மா.

இல்லாத கொடியிடையில் ஒய்யார ஒட்டியாணம்
இடைதாங்கும் மார்பகத்தில் தவழ்ந்திருக்க முத்தாரம்
சங்குக் கழுத்திற்கு சரியான அட்டிகையும்
வாழைத்தண்டு தோள்களுக்கு வாகு வலயங்களும்

இரட்சிக்கும் கரங்களுக்கு இரத்தினத்தால் கைவளைகள்
எழில்பொலியும் செவிகளுக்கு எடுப்பான காதணிகள்
முடிமீது சுடரொளியாய் அணிசெய்ய சூடாமணி
ஆசையுடன் அணிவிக்க அன்னைநீ மகிழ்ந்திடுவாய்! (19)

20. அலங்காரம்

தம்மில்லேதவ தேவி ஹேமகுஸுமான் யாதாய பாலஸ்தலே
முகதாராஜி விராஜமான திலகம் நாஸாபுடே மெளத்திகம் !
மாதாமெளத்திக ஜாலிகாஞ்ச குசயோ: ஸர்வாங்குளீஷுர்மிகா:
கட்யாம் காஞ்சன கிங்கிணீர் வினிததே ரத்னாவதம் ஸம்ச்ருதெள: !!

சொருக்கினில் மலர்கள் சூட்டி, நெற்றியில் திலகமிட்டு, மூக்கினில் புல்லாக்கு, மூக்குத்தி பொருத்தி, மார்புக்கு முத்து ஜாலங்களையும், விரல்களுக்கு மோதிரங்களையும் அணிவிக்கிறேன்.


பலநிறத்தில் புதுமலர்கள் கூந்தலிலே சூட்டிவிட்டு
பிறைநுதலில் சிறப்புடனே சிந்தூரத் திலகமிட்டு
சிமிழ்போன்ற நாசியிலே சிட்டுப்போல் புல்லாக்கும்
விதவிதமாய் மோதிரமும் வைஷ்ணவியே அணிந்தருள்வாய்! (20)
தமிழில் கவிநயா அவர்கள் எழுதியிருக்கும் பாடல்களை, திரு. கே.ஆர்.எஸ் அவர்கள் அழகாகப் பாடிய லிங்க் கீழே!.


Annaikku_64_Upacha...

அன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -1

ஆதி சங்கரரால் அன்னையின் மிது இயற்றப்பட்ட பல நூல்களில் இந்த சதுஷ்-சஷ்டி உபசார பூஜையும் ஒன்று. இதை பாராயணம் செய்வதே 64 உபசாரங்களுடன் செய்யும் பூஜைக்கு சமம் என்று ஆன்றோர் சொல்லக் கேட்டிருக்கிறேன். செளந்தர்ய லஹரியுடன் இந்த வலைப்பதிவை முடிக்க இருந்தேன். ஆனால் அம்பிகைக்கு இங்கேயே ஒரு பூஜையைச் செய்து முடிக்க நினைக்கிறேன். இந்த நவராத்ரி தினங்களில் சில பதிவுகளாக இந்த 64 உபசார ஸ்லோகங்களையும் பார்க்கலாம். 64 உபசாரங்களையும் தமிழில் சகோதரி கவிநயா அவர்கள் வர்ணித்திருக்கிறார்கள். இன்றிலிருந்து தொடராக விஜயதசமிக்குள் இதை முடிக்க முயல்கிறேன்.

******************************************************************************



1. ஸுப்ர பாதம்

உஷஸி மாகத மங்கள காயனை
ஜடிதி ஜாக்ருஹி ஜாக்ருஹி ஜாக்ருஸி!
அதிக்ருபார்த்ர கடாக்ஷ நிரீக்ஷணை:
ஜகதிதம் ஜகதம்பு ஸுகீ குரு !!

தாயே!, காலையில் பக்தர்கள் பாடும் கானத்தை கேட்டு சீக்கிரம் எழுந்து உலகிற்கு நன்மை அருள்வாயாக.

கவிநயா அவர்கள் எழுதிய சுப்ரபாதம் கிழே!

புள்ளினங்கள் பண்ணமைத்து பூபாளம் இசைத்திருக்க (1)
வெள்ளியதும் முளைத்ததம்மா வெண்ணிலவே எழுந்தருள்வாய்!
காதளவில் நீண்டிருக்கும் கண்ணிமைகள் மலர்ந்திடவே
சீதளமே புவியனைத்தும் சீர்பெறவே எழுந்தருள்வாய்!

2. மணிமண்டபம்

கனக மய விதர்தி சோபமானம் !
திசிதிசி பூர்ண ஸுவர்ண கும்ப யுக்தம்
மணிமய மண்டப மேஹி மாத:
மயிக்ருபபாஸு ஸமர்சனம் க்ருஹிதும் !!

நான் செய்யும் பூஜையை ஏற்றுக் கொள்ள மணிமண்டபத்திற்கு வாருங்கள் அம்பிகையே!.


3. மணிமய மாளிகை

கனக கலச சோபமான சீர்ஷம்
ஜலதர லம்பிஸமுல்லஸத் பதாகம் !
பகவதி தவ ஸந்நிவாஸ ஹேதோ
மணிமய மந்திர மேத தர்ப்பயாமி !!

இந்த மணிமண்டபம் தங்க கலசங்கள் கொண்டது. விண்ணளாவும் கொடிகள் பறக்கின்றன. இதில் வாசம் செய்ய வாருங்கள் தேவி.


மேலே இருக்கும் இரு உபசாரங்களுக்கு இணையான கவிநயா அவர்களின் படைப்பு கிழே!

செம்பொன்னால் வடிவமைத்து செய்துவைத்த மாளிகையில் (2)
ஆயிரமாம் தோரணங்கள் அர்த்தமணி மண்டபங்கள்
சேயிழையே உனக்கெனவே செதுக்கி வைத்த மண்டபத்தில் (3)
பார்முழுதும் போற்றிடவே வீற்றிருக்க வந்தருள்வாய்!

4. பல்லக்கு

தபமீயமயீ ஸுதூலிகா கமநீயா ம்ருதுலோத்தரச்சதா !
நவரத்ன விபூஷிதாமயா சிபிகேயம் ஜகதம்பதேர்பிதா !!

அழகானதும், மென்மையானதும், நவரத்னங்களால் இழைக்கப்பட்டதுமான பல்லக்கை உங்களுக்கு அளிக்கிறேன்.

கவிநயா அவர்களின் படைப்பு கிழே!

ஏற்றிவைத்த தீபங்கள் எழிலுடனே ஒளிர்ந்திருக்க
போற்றியுன்னை வேண்டிநிற்கும் பக்தர்மனம் களித்திருக்க
மாற்றும்மணம் மாறாத மலர்கள்அலங் கரித்திருக்க
காற்றேகும் பல்லக்கில் கற்பகமே எழுந்தருள்வாய்! (4)

5. ஸிம்ஹாசனம்

விவித குஸும கீர்ணே கோடி பாலார்க்க வர்ணே !
பகவதீ ரமணீயே ரத்ன ஸிம்ஹாஸனேஸ்மின்
உபவிச பதயுக்மம் ரத்ன பீடநிதாய !!


ஸுவர்ணமயமான மேடைமீது, கோடி சூர்யப் பிரகாசமான, அழகான ரத்ன சிம்மாசனத்தில் வந்து அமருங்கள் தாயே!


6. மேல் விமானம்

மணி மெளக்திக நிர்மிதம் மஹாந்தம் கனகஸ்தம்ப சதுஷ்ட்யேன யுக்தம் !
கமனீப தமம் பவானி துப்யம் நவமுல்லோச மஹம் ஸமர்ப்பயாமி !!

மணி முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க தூண்கள் தாங்கும் புத்தம் புது மேல் விமானத்தை உமக்கு அளிக்கிறேன்.

கவிநயா அவர்கள் தமிழில் செய்த சிம்மாசனம் மற்றும் மேல்விமான வர்ணனை கிழே!

தகதகக்கும் தங்கத்தில் தாங்கிநிற்க தூணமைத்து
பளபளத்து உளம்மயக்கும் முத்துவிதா னத்திலே (6)
ஜொலிஜொலிக்கும் இரத்தினங்கள் பதித்தசிம் மாசனத்தில்
கொலுவிருக்க வேண்டுகின்றோம் கோகிலமே வந்தருள்வாய்! (5)

7. பாத்யம்

தூர்வயா ஸரஸிஜான்வித விஷ்ணு
க்ராந்தயா ச ஸஹிதம் குஸுமாட்யம் !
பத்மயுக்ம ஸத்ருசேபத யுக்மே
பாத்ய மேத துரரீகுரு மாத: !!

தூர்வை, தாமரை, விஷ்ணுக்ராந்தி முதலிய புஷ்பங்கள் நிறைந்த பாத்யத்தை உமது பாதங்களில் அளிக்கிறேன். ஏற்றுக்கொள்வீர்களாக.


தாயுன்னைத் தாங்கிநிற்கும் தாமரையின் இதழெடுத்து
மாலவனின் பெயர்கொண்ட கிரந்திமலர் சேர்த்தெடுத்து
ஆய்ந்துஇன்னும் மலரெடுத்து தூயகங்கை நீரிலிட்டு
தேமலர்போல் தாளிணைகள் தூய்மைசெய்ய நீயருள்வாய்! (7)


8. அர்க்யம்

கந்த புஷ்ப யவஸர்ஷப தூர்வா
ஸம்யுதம் கிலகுசாக்ஷத மிச்ரம் !
ஹேம பாத்ர நிஹிதம் ஸஹரத்னை:
அர்க்யமேத துரரீகுரு மாத: !!


கந்த புஷ்பம் நவதான்யம், தூர்வை, எள்ளுகர்ப்பம் அக்ஷதௌ ஆகியவைகள் கலந்து தங்கக் கிண்ணத்தில் வைக்கப்பட்ட அர்க்யத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.

எண்ணுகின்ற எண்ணம்முதல் பண்ணுகின்ற செயல்வரைக்கும்
கண்ணுதலான் இடப்பாகம் கொண்டவளே உனக்கேயாம்
சந்தனத்தால் நீரெடுத்து சமர்ப்பணம் செய்யுகின்றோம்
சியாமளையே கோமளமே கருணையுடன் ஏற்றருள்வாய்! (8)

9. ஆசமனம்

ஜலஜத்யுதினா கரேணா ஜாதீ
பலதக்கோல லவங்க கந்த யுக்தை: !
அம்ருதை ரம்ருதை ரிவாதி சீதை:
பகவத்யாசமனம் விதீயதாம் !!

ஜாதிக்காய், கந்தம், லவங்கம் இவைகளுடன் கூடிய, அமிர்தம் போன்ற குளிர்ந்த ஜலத்தால் ஆசமனம் செய்யுங்கள் அம்மா!


10. மதுபர்க்கம்

நிஹிதம் கனகஸ்ய ஸம்புடே
பிஹிமே ரத்ன பிதானகேன யத்!
ததிதம் ஜகதம்ப தேர்பயிதம்
மதுபர்க்கம் ஜனனிப்ரக்ருஹ்யதாம்!!


தங்க ஸம்புடத்தில், ரத்ன மூடியால் மூடி வைக்கப்பட்ட மதுபர்க்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் தாயே!

ஆசமனம், மதுபர்க்கம் ஆகிய இரண்டிற்கும் கவிநயா அவர்கள் எழுதிய வர்ணனை கீழே!

ஏலமுடன் சாதிக்காய் சேர்த்திட்ட குளிர்நீரை
கோலஎழில் கொண்டவளே கொஞ்சம்நீ பருகிடுவாய் (9)
பாலோடு தேன்கலந்தே பொன்செம்பில் தருகின்றோம்
வேலாடும் விழியுடையாய் விருப்பமுடன் பருகிடுவாய்! (10)

தமிழில் கவிநயா அவர்கள் எழுதியிருக்கும் பாடல்களை, திரு. கே.ஆர்.எஸ் அவர்கள் அழகாகப் பாடிய லிங்க் கீழே!.



Annaikku_64_Upacha...

செளந்தர்யலஹரி 99 & 100



ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதிஹரி ஸபத்னோ விஹரதே
ரதே: பாதிவ்ரத்யம் சிதிலயதி ரம்யேண வபுஷா
சிரம் ஜீவந்நேவ க்ஷபித பசுபாசவ்யதிகர:
பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத் பஜநவாந்


அம்மா!, உன்னை பூஜிப்பவன் பிரம்மாவும், விஷ்ணுவும் கூட பொறாமைப்படக் கூடிய அளவில் கல்வியிலும், செல்வத்திலும், இன்பத்திலும் சிறந்து விளங்குகிறான். உன்னை பூஜிப்பவனது அழகு மன்மதனுக்கு ஒப்பாக இருப்பதால் ரதி தேவியையும் தடுமாறச் செய்யக் கூடியதாக இருப்பதால் மன்மதனும் கலங்குகிறான். உன் பக்தன் சிரஞ்சிவியாக இருந்து கொண்டு பசு, பாச ஸம்பந்தங்களிலிருந்து விடுபட்டவனாக ப்ரஹ்மானந்த ஸுகத்தை அனுபவிக்கிறான்.


பராசக்தியை வழிபடுவதன் மூலமாக அவளது கருணாகடாக்ஷத்தில் பக்தனுக்கு ஞானம், செல்வம், செளந்தர்யம் ஆகிய மூன்றும் தாமாகவே கிடைத்துவிடுகிறது என்கிறார் பகவத் பாதர். இவ்வாறு இந்த மூன்றையும் பெற்ற பக்தன் லோக சுகங்களை அனுபவித்து சிரஞ்சிவியாக இருந்து கொண்டே பரலோக செளக்கியத்திற்கு முடிவான பிரம்மானந்தத்தை இங்கேயே அடைந்துவிடுகிறானாம். பசு என்பது ஜீவன், பாசம் என்பது மாயை, அவித்யை. பாசத்தில் பாதிக்கப்பட்ட ஜீவனான பக்தன் பஞ்சபூதத்தால் ஆன உடலை தான் என்று எண்ணாது, தனக்கும் பிரம்மத்திற்கும் உள்ள ஐக்யத்தை உணர்ந்து பாசத்தில் இருந்து விலகி பசு நிலையிலிருந்து பசுபதியின் ஜ்யோதி ஸ்வரூபத்தில் மனதை லயிக்கச் செய்து ப்ரம்மானந்ததை அடைகிறான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையே ஜீவன் -முக்தி நிலை என்றழக்கப்படும்.


த்வத் பஜநவாந் - உன்னை உபாசிக்கிறவன்; ஸரஸ்வத்யா - சரஸ்வதியிருப்பதால்; லக்ஷ்ம்யா - லக்ஷ்மியிருப்பதால்; விதிஹரி ஸபத்ன - ப்ரம்ஹா, விஷ்ணு இவர்களுடைய அஸுயைக்கு இடமாக இருந்து கொண்டு; விஹரதே - ஆனந்தமாக காலம் கழிக்கிறான்; ரம்யேண வபுஷா - ஸுந்தரமான ரூபத்தால்; ரதே பாதிவ்ரத்யம் - ரதீ தேவியின் பதிவிரதத்தை; சிதிலயதி - தளரச் செய்திடுவான்; சிரம் ஜீவன்நேவ - சிரஞ்சீவியாக இருந்து கொண்டு;க்ஷபித பசுபாச வ்யாதிகர; - பசு-பாசம் ஆகியவற்றின் ஸம்பந்தத்தை போக்கியவனாக; பராநந்தாபிக்யம் - பிரம்மானந்தம் என்னும் ஸுகத்தை; ரஸயதி - அனுபவிக்கிறான்.


கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!


சுந்தரிநின் தொண்டர்தமைத் தோய்வதற்கு நாமகளும்
இந்திரையு மலரயன்மா லிடருழப்ப இரதியின்கண்
அந்தமில்பே ரழ்கொடுகற் பழித்துநெடு நாள்கழியச்
சிந்தையுறு பாசம்போய்ச் சிவமயத்தைச் சேர்குவரால்.



*********************************************************************************






ப்ரதீப ஜ்வாலாபி: திவஸகர நீராஜந விதி:
ஸுதாஸூதே: சந்த்ரோபலஜல லவைராக்யரசனா
ஸ்வகீயை ரம்போபி: ஸலில நிதி ஸெள்ஹித்யகரணம்
த்வதீயாபிர் வாக்பிஸ்தவ ஜநநி வாசாம் ஸ்துதிரியம்



தாயே!, உன்னுடைய வாக்குகளால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்ரத்தினால் நான் உன்னைத் துதிப்பது கை தீவட்டிகளின் ஜ்வாலையால் ஸுரியனுக்கு ஹாரத்தி செய்வது போலும், அம்ருதத்தை வர்ஷிக்கும் கிரணங்களையுடைய சந்திரனுக்கு சந்திர காந்த கல்லின் ஜலத் துளிகளால் அர்க்ய ப்ரதானம் செய்வதாகவும், ஜப நிதியாகிய ஸமுத்திர ராஜனுக்கு அவனுடையதான ஜலங்களாலேயே தர்ப்பணம் செய்வது போல இருக்கிறது.


இந்த கடைசி ஸ்லோகத்தில் ஆசார்யார் தாம் இந்த ஸ்லோகத்தை அம்பாளுடைய அனுக்ரஹத்தினாலேயே செய்ததாகவும், அதில் தாம் ஒரு கெளரவமும் கொள்ளவில்லை என்று தனது விநயத்தை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். ஸ்வகீயை: என்கிற பதத்தை ஸுர்யன், சந்திரன், ஸமுத்ரம் ஆகிய மூன்று இடத்திலும் சேர்த்தாலேயே இங்கே பொருள் வருகிறது. தீவட்டி ஜ்வாலையும் சூர்யனே; சந்திர காந்த கல்லின் ஜலத்திற்கு ஆதாரம் சந்திரனுடைய கதிர்களே; எல்லா நீர்கும் ஆதாரம் ஸமுத்ரமே; இதே போல சகல வாக்குகளுக்கும் அம்பிகையே ஜனனி என்று கூறுகிறார்.


ப்ரதீப ஜ்வாலாபி: - கைத் தீவட்டிகளின் ஜ்வாலையால்; திவஸகர நீராஜன விதி: - ஸுர்யனுக்கு ஹாரத்தி செய்வதுபோலும்; ஸுதாஸூதே: அம்ருதம் வர்ஷிக்கும் கிரணங்களிடைய சந்திரனுக்கு; சந்த்ரோபல ஜலவை: - சந்திர காந்த கல்லில் (சந்திர ஒளியால் ஏற்படும்) இருக்கும் நீர் போலவும்; ஸ்வகீயை: அம்போபி: தன்னுடைய ஜலத்தாலேயே; ஸலிலநிதி - நீருக்கு அதிபதியாகிய சமுத்திரத்துக்கு; ஸெளஹித்யகரணம் - தர்பணம் முதலியவைகளால் த்ருப்தி செய்வது போல;வாசாம் ஜநநி - வாக்குக்களுக்கு உத்பத்தி ஸ்தானமான தாயே; த்வதீயாபி - உன்னுடையதான; வாக்பி: வாக்குகளால் செய்யப்பட்ட; தவ இயம் ஸ்துதி: உன் பற்றிய இந்த ஸ்துதி;


கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!


ஆதவனுக் கவன்கிரணத் தங்கியைக்கொண்
டாலத்தி சுழற்ற லென்கோ
சீதமதிக் கவன்நிலவி னொழுகுசிலைப்
புனல்கொடுப சரிப்ப தென்கோ
மோதியமைக் கடல்வேந்தை அவன்புனலால்
முழுக்காட்டும் முறைமை யென்கோ
நீதருசொற் கவிகொடுனைப் பாடியனது
அருள்பெறுமென் நீதி அம்மே.



*****************************************************************************
ஸ்ரீ ஜகத்குரு சங்கர பகவத்பாத சரணாரவிந்தாப்யாம் நம:
ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுரஸுந்தர்யை நம:

******************************************************************************

2 வருஷங்கள் முன்பு ஆரம்பித்த வலைப்பூ இது. அம்பிகையை சரந்நவராத்ரிக்கு ஆவாஹனம் செய்யும் இன்றைய தினம் முடிவுக்கு வந்திருக்கிறது. தொடர்ந்து இங்கு வந்து பதிவுகளைப் படித்தவர்கள் எல்லோருக்கும், குறிப்பாக ஒவ்வொரு பதிவுகளுக்கும் வந்து வாழ்த்திய குமரன் மற்றும் சகோதரி கவிநயா ஆகியோருக்கு எனது நன்றிகள். கவிராஜரது மொழிபெயர்ப்புக்களை வெளியிட ஆரம்பித்தபின் குமரன் அவற்றை சந்தி பிரித்து பொருள் சொல்கிறார், அதற்கும் எனது நன்றிகள்.


அம்பிகை எல்லோருக்கும் அவரவர் மனோபிஷ்டங்களை அருள பிரார்த்திக்கிறேன்.


சுபமஸ்து