ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதிஹரி ஸபத்னோ விஹரதே
ரதே: பாதிவ்ரத்யம் சிதிலயதி ரம்யேண வபுஷா
சிரம் ஜீவந்நேவ க்ஷபித பசுபாசவ்யதிகர:
பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத் பஜநவாந்
அம்மா!, உன்னை பூஜிப்பவன் பிரம்மாவும், விஷ்ணுவும் கூட பொறாமைப்படக் கூடிய அளவில் கல்வியிலும், செல்வத்திலும், இன்பத்திலும் சிறந்து விளங்குகிறான். உன்னை பூஜிப்பவனது அழகு மன்மதனுக்கு ஒப்பாக இருப்பதால் ரதி தேவியையும் தடுமாறச் செய்யக் கூடியதாக இருப்பதால் மன்மதனும் கலங்குகிறான். உன் பக்தன் சிரஞ்சிவியாக இருந்து கொண்டு பசு, பாச ஸம்பந்தங்களிலிருந்து விடுபட்டவனாக ப்ரஹ்மானந்த ஸுகத்தை அனுபவிக்கிறான்.
பராசக்தியை வழிபடுவதன் மூலமாக அவளது கருணாகடாக்ஷத்தில் பக்தனுக்கு ஞானம், செல்வம், செளந்தர்யம் ஆகிய மூன்றும் தாமாகவே கிடைத்துவிடுகிறது என்கிறார் பகவத் பாதர். இவ்வாறு இந்த மூன்றையும் பெற்ற பக்தன் லோக சுகங்களை அனுபவித்து சிரஞ்சிவியாக இருந்து கொண்டே பரலோக செளக்கியத்திற்கு முடிவான பிரம்மானந்தத்தை இங்கேயே அடைந்துவிடுகிறானாம். பசு என்பது ஜீவன், பாசம் என்பது மாயை, அவித்யை. பாசத்தில் பாதிக்கப்பட்ட ஜீவனான பக்தன் பஞ்சபூதத்தால் ஆன உடலை தான் என்று எண்ணாது, தனக்கும் பிரம்மத்திற்கும் உள்ள ஐக்யத்தை உணர்ந்து பாசத்தில் இருந்து விலகி பசு நிலையிலிருந்து பசுபதியின் ஜ்யோதி ஸ்வரூபத்தில் மனதை லயிக்கச் செய்து ப்ரம்மானந்ததை அடைகிறான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையே ஜீவன் -முக்தி நிலை என்றழக்கப்படும்.
த்வத் பஜநவாந் - உன்னை உபாசிக்கிறவன்; ஸரஸ்வத்யா - சரஸ்வதியிருப்பதால்; லக்ஷ்ம்யா - லக்ஷ்மியிருப்பதால்; விதிஹரி ஸபத்ன - ப்ரம்ஹா, விஷ்ணு இவர்களுடைய அஸுயைக்கு இடமாக இருந்து கொண்டு; விஹரதே - ஆனந்தமாக காலம் கழிக்கிறான்; ரம்யேண வபுஷா - ஸுந்தரமான ரூபத்தால்; ரதே பாதிவ்ரத்யம் - ரதீ தேவியின் பதிவிரதத்தை; சிதிலயதி - தளரச் செய்திடுவான்; சிரம் ஜீவன்நேவ - சிரஞ்சீவியாக இருந்து கொண்டு;க்ஷபித பசுபாச வ்யாதிகர; - பசு-பாசம் ஆகியவற்றின் ஸம்பந்தத்தை போக்கியவனாக; பராநந்தாபிக்யம் - பிரம்மானந்தம் என்னும் ஸுகத்தை; ரஸயதி - அனுபவிக்கிறான்.
கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!
சுந்தரிநின் தொண்டர்தமைத் தோய்வதற்கு நாமகளும்
இந்திரையு மலரயன்மா லிடருழப்ப இரதியின்கண்
அந்தமில்பே ரழ்கொடுகற் பழித்துநெடு நாள்கழியச்
சிந்தையுறு பாசம்போய்ச் சிவமயத்தைச் சேர்குவரால்.
*********************************************************************************

ப்ரதீப ஜ்வாலாபி: திவஸகர நீராஜந விதி:
ஸுதாஸூதே: சந்த்ரோபலஜல லவைராக்யரசனா
ஸ்வகீயை ரம்போபி: ஸலில நிதி ஸெள்ஹித்யகரணம்
த்வதீயாபிர் வாக்பிஸ்தவ ஜநநி வாசாம் ஸ்துதிரியம்
தாயே!, உன்னுடைய வாக்குகளால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்ரத்தினால் நான் உன்னைத் துதிப்பது கை தீவட்டிகளின் ஜ்வாலையால் ஸுரியனுக்கு ஹாரத்தி செய்வது போலும், அம்ருதத்தை வர்ஷிக்கும் கிரணங்களையுடைய சந்திரனுக்கு சந்திர காந்த கல்லின் ஜலத் துளிகளால் அர்க்ய ப்ரதானம் செய்வதாகவும், ஜப நிதியாகிய ஸமுத்திர ராஜனுக்கு அவனுடையதான ஜலங்களாலேயே தர்ப்பணம் செய்வது போல இருக்கிறது.
இந்த கடைசி ஸ்லோகத்தில் ஆசார்யார் தாம் இந்த ஸ்லோகத்தை அம்பாளுடைய அனுக்ரஹத்தினாலேயே செய்ததாகவும், அதில் தாம் ஒரு கெளரவமும் கொள்ளவில்லை என்று தனது விநயத்தை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். ஸ்வகீயை: என்கிற பதத்தை ஸுர்யன், சந்திரன், ஸமுத்ரம் ஆகிய மூன்று இடத்திலும் சேர்த்தாலேயே இங்கே பொருள் வருகிறது. தீவட்டி ஜ்வாலையும் சூர்யனே; சந்திர காந்த கல்லின் ஜலத்திற்கு ஆதாரம் சந்திரனுடைய கதிர்களே; எல்லா நீர்கும் ஆதாரம் ஸமுத்ரமே; இதே போல சகல வாக்குகளுக்கும் அம்பிகையே ஜனனி என்று கூறுகிறார்.
ப்ரதீப ஜ்வாலாபி: - கைத் தீவட்டிகளின் ஜ்வாலையால்; திவஸகர நீராஜன விதி: - ஸுர்யனுக்கு ஹாரத்தி செய்வதுபோலும்; ஸுதாஸூதே: அம்ருதம் வர்ஷிக்கும் கிரணங்களிடைய சந்திரனுக்கு; சந்த்ரோபல ஜலவை: - சந்திர காந்த கல்லில் (சந்திர ஒளியால் ஏற்படும்) இருக்கும் நீர் போலவும்; ஸ்வகீயை: அம்போபி: தன்னுடைய ஜலத்தாலேயே; ஸலிலநிதி - நீருக்கு அதிபதியாகிய சமுத்திரத்துக்கு; ஸெளஹித்யகரணம் - தர்பணம் முதலியவைகளால் த்ருப்தி செய்வது போல;வாசாம் ஜநநி - வாக்குக்களுக்கு உத்பத்தி ஸ்தானமான தாயே; த்வதீயாபி - உன்னுடையதான; வாக்பி: வாக்குகளால் செய்யப்பட்ட; தவ இயம் ஸ்துதி: உன் பற்றிய இந்த ஸ்துதி;
கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!
ஆதவனுக் கவன்கிரணத் தங்கியைக்கொண்
டாலத்தி சுழற்ற லென்கோ
சீதமதிக் கவன்நிலவி னொழுகுசிலைப்
புனல்கொடுப சரிப்ப தென்கோ
மோதியமைக் கடல்வேந்தை அவன்புனலால்
முழுக்காட்டும் முறைமை யென்கோ
நீதருசொற் கவிகொடுனைப் பாடியனது
அருள்பெறுமென் நீதி அம்மே.
*****************************************************************************
ஸ்ரீ ஜகத்குரு சங்கர பகவத்பாத சரணாரவிந்தாப்யாம் நம:
ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுரஸுந்தர்யை நம:
ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுரஸுந்தர்யை நம:
******************************************************************************
2 வருஷங்கள் முன்பு ஆரம்பித்த வலைப்பூ இது. அம்பிகையை சரந்நவராத்ரிக்கு ஆவாஹனம் செய்யும் இன்றைய தினம் முடிவுக்கு வந்திருக்கிறது. தொடர்ந்து இங்கு வந்து பதிவுகளைப் படித்தவர்கள் எல்லோருக்கும், குறிப்பாக ஒவ்வொரு பதிவுகளுக்கும் வந்து வாழ்த்திய குமரன் மற்றும் சகோதரி கவிநயா ஆகியோருக்கு எனது நன்றிகள். கவிராஜரது மொழிபெயர்ப்புக்களை வெளியிட ஆரம்பித்தபின் குமரன் அவற்றை சந்தி பிரித்து பொருள் சொல்கிறார், அதற்கும் எனது நன்றிகள்.
அம்பிகை எல்லோருக்கும் அவரவர் மனோபிஷ்டங்களை அருள பிரார்த்திக்கிறேன்.
சுபமஸ்து