
பதந்யாஸக்ரீடா பரிசயமிவாரப்து மநஸ:
ஸ்கலந்தஸ்தே கேலம் பவநகலஹம்ஸா ந ஜஹதி
அதஸ்தேஷாம் சிக்ஷாம் ஸுபக மணிமஞ்ஜீர ரணிதச்
சலாத் ஆசக்ஷாணம் சரணகமலம் சாருசரிதே
இங்கே 42ஆம் ஸ்லோகத்தில் அன்னையின் க்ரீடம் பற்றி ஆரம்பித்து இப்பாடலுடன் அன்னையின் அங்க வர்ணனை முடிவுக்கு வருகிறது. இனிவரும் ஸ்லோகங்கள் பொதுவான ஸ்தோத்ரங்களாக இருக்கும்.

கதாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிண-ஹரி ருத்ரேச்வரப்ருத:
சிவஸ் ஸ்வச்சச்சாயா கடித கபட ப்ரச்சதபட:
த்வதீயானாம் பாஸாம் ப்ரதிபலந ராகாருணதயா
சரீரீ ச்ருங்காரோ ரஸ இவ த்ருசாம் தோக்தி குதுகம்
தாயே!, லோகாதிகார புருஷர்களான ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன் ஆகியவர்கள் உனது சிம்மாசனத்தின் கால்களாக இருக்கிறார்கள். அந்த சிம்மாசனத்தில் மேல் விரிப்பாக வெண்மையான ஒளியுடைய ஸதாசிவன் இருந்தாலும் உன்னுடைய சிருங்காரமான சிகப்பான ஒளியின் காரணமாக அவரும் சிவப்பாகத் தோற்றமளித்து உனது கண்களுக்கு ஆனந்தத்தைக் கொடுக்கிறார்.
பிரம்மா முதலிய நால்வரும் லோகதத்தின் அதிகார புருஷர்களாக இருந்தாலும், அம்பிகையின் சமீபத்தில் இருந்து ஸேவை செய்யவேண்டுமென்கிற ஆசையில் அவளது கட்டில்கால்களாகவாவது இருக்க விரும்பி அவ்வாறு இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சதாசிவனுடைய மடியில் அன்னை வீற்றிருக்கிறதையே 'பஞ்சப்ரேதாசனா' கோலமாகச் சொல்கையில் மேல் விரிப்பாக சதாசிவன் இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. 'சிவாகாரே மஞ்சே', 'பரமசிவ பர்யங்க நிலயாம்' என்பதெல்லாம் இந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்ட கோலத்தை அடிப்படையாகக் கொண்டதே.
த்ருஹிண ஹரி ருத்ரேச்வர ப்ருத: - பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஈசானன் ஆகிய லோகாதிகார புருஷர்கள் உன்னுடைய மஞ்சத்தின் கால்களாக: கதா: ஆகிவிட்டார்கள்; சிவ: ஸதாசிவனார்; ஸ்வச்சச்சாயா கடித கபட ப்ரச்சத பட: மேல்விரிப்பு என்கிற வெண்மையான ரூபத்தில்; த்வதீயானாம் - உன்னுடைய; பாஸாம் - சிகப்பான ஒளி; ப்ரதிபலநராகா ருணதயா - ப்ரதிபலனாக சிகப்பாக மாறியது; சரீரீ - உருவமெடுத்த; ச்ருங்காரோ ரஸ இவ - ச்ருங்கார ரஸம் போல்; த்ருசாம் - உன் கண்களுக்கு; குதுகம் - ஆனந்தம்; தோக்தி - கொடுக்கிறார்.
வீரை கவிராஜரது மொழிப்பெயர்ப்பு கீழே!
மூவர்ம கேசன் முடிகொளு மஞ்சத் தொழிலாயும்
மேவிய படிகத் தனதொளி வெளிசூழ் திரையாயும்
ஓவறு செங்கேழ் விம்பம தின்பத் துருவாயும்
பாவைநி னகலா இறையொடு நின்னைப் பணிவாமே